"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, September 20, 2009

பொன்னுச்சாமியின் புலம்பல்

என்றைக்கும் இல்லாத சத்தம் , விளம்பர பாடல்கள் காதில் விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன், எங்கும் எந்த ஸ்பீக்கரையும் காணோம்

பகல் பொழுதில் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ்நிலையம் பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்,

சுற்றும் முற்றும் பார்த்தேன். பாடல் தொடர்ந்து காதில் விழுந்தது.மேலிருந்து சத்தம் வந்ததால் நிமிர்ந்து பார்த்தேன்

பாதையின் வலதுபுறம் இரண்டு மாடிக் கட்டடம், மொட்டை மாடியில் பத்தடிக்கு பத்தடி அளவில் பெரிய திரை, அது திரையா அல்லது டிவியா என சரியாக தெரியவில்லை.

எங்கள் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள், சரி தீபாவளி நெருங்கிவிட்டது, அதனால் துணி,நகை விற்பனையகங்கள் விளம்பரம் செய்தால்தான் வாடிக்கையாளாரை ஈர்க்க முடியும் என்று நினைத்தபடியே சென்றுவிட்டேன்,

பனியன் உற்பத்தி துறை வேலைகள் அலைக்கழிக்க ஒருவழியாய் முடித்து அலுவலகம் திரும்பினேன், இரவு வர, பணி முடிந்தது, அப்போதுதான் பார்த்தேன்

பொன்னுசாமி சற்றே காலை இழுத்து இழுத்து நடந்து வந்தார், போகும்போது நன்றாகத்தானே போனார்,??

”ஏனுங்ன்னா, என்னாச்சுங்க,.. ”

”ஒன்னுமில்லைங்கைய்யா, டவுனுக்குள்ளார போகும்போது ஒரு மொப்பட்க்காரன் மேலே கொண்டு வந்து வண்டிய விட்டுடான்ங்ய்யா.. கீழ விழுந்ததுல சுளுக்கு மாதிரி ஆயிப்போச்சுங்க.”

“ஆசுபத்திரிக்கு போனிங்களா..”

”ஆமாங்கய்யா எக்ஸ்ரே எடுத்து பார்த்து ஒன்னுமில்லை அப்படினு சொல்லிட்டாங்க, தசைப்பிடிப்புன்னு ஆயின்மெண்ட் கொடுத்திருக்காங்க”

”எப்படி ஆச்சு, வண்டியிலெ போகும்போது எச்சரிக்கையாத்தானே போவீங்க?”

நா போயி என்ன பண்றதுங்க, எதிரில வர்றவுங்க பார்த்து வரோணுமில்ல,”

அப்படி என்ன ஆச்சு?”

”மொபட்டுக்காரன் ஒருத்தன் மேல பார்த்துக்கிட்டே வந்து எம்மேல உட்டுட்டானுங்..”

”மேலயா” என்றேன்.  “ரோட்டப்பார்க்காம மேல பார்த்தானா !!”

”மேல ஏதோ புதுப்படப்பாட்டு கேட்டுதுங்க, மாடிமேல இருக்கிற டிவிய பாத்துக்கிட்டே எம்மேல வந்து ஏறிட்டானுங்..”

“என்ன கவருமெண்டோ இத்தனை நாளா போஸ்டர் வச்சு குப்புற அடிச்சு விழ வெச்சானுக, இப்ப பல்டியே அடிக்கிற மாதிரி பெரிய டிவி விளம்பரம், என்ன லாஜிக்கோ தெரியலீங்க.”என்றவாறே உள்ளே சென்றார்.

யோசித்தபடியே வீடு திரும்பினேன்

10 comments:

  1. //“என்ன கவருமெண்டோ இத்தனை நாளா போஸ்டர் வச்சு குப்புற அடிச்சு விழ வெச்சானுக, இப்ப பல்டியே அடிக்கிற மாதிரி பெரிய டிவி விளம்பரம், என்ன லாஜிக்கோ தெரியலீங்க.”//

    இவற்றையெல்லாம் வளர்ச்சி, மாற்றம் என்று எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்; தவிர்க்க இயலும் என்று நினைக்கிறீர்களா? தவிர்க்கும் தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. எப்பிடியோ நீங்க பத்திரமா போயிட்டீங்கதானே!!

    அதுதான் நம்பி அண்ணன் வளர்ச்சி, மாற்றம்னு எடுத்துக்கச் சொல்லிட்டாரே....

    ஆனா ஒடம்புல புதுசா ஒரு கட்டி முளைச்சா வளர்ச்சி, மாற்றம்னு ஒத்துக்க முடியுமா... கேன்சர்னு பதற வேண்டியதா இருக்கே.

    //என்ன கவருமெண்டோ//
    அட... ஏனுங் சிவா... இது வெக்கிறதுக்கும் கரைக்டா மாமூல் போயிருதுங்க

    எம் ஃபிரண்டு திருப்பூர்ல ஹோர்டிங் பிசினஸ் பண்ணி படாத பாடு பட்டுட்டு, இப்போ சூலூர்ல மாட்டுப்பண்ண ஆரம்பிச்சுட்டாருங்க

    ReplyDelete
  3. ம் எல்லா நாட்டிலும் பெரிய மின்னனு காட்சிப் பெட்டியில் பொது இடத்தில் விளம்பரம் போடுவது நடைமுறைதான்.

    ReplyDelete
  4. அ. நம்பி said...



    \\இவற்றையெல்லாம் வளர்ச்சி, மாற்றம் என்று எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்; தவிர்க்க இயலும் என்று நினைக்கிறீர்களா? தவிர்க்கும் தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.\\

    விளைவுகளைப் பற்றி கவலைப்படாத வளர்ச்சி என்கிறேன். உள்ளூர் தொலைக்காட்சி, நாளிதழ் விளம்பரங்கள் வாடிக்கையாளரை வீட்டுக்குள் சென்று அடைகின்றன.

    ஆனால் இவ்வகை விளம்பரங்கள் பொதுவில் இரைச்சலாக இருக்கும்போது, அருகில் உள்ள பூக்கடை வியாபாரி கூட இனி ஒரு மாதத்திற்கு சத்தம் போட்டுதான் பேசவேண்டியிருக்கிறது,

    ஒரு திருட்டு வழிப்பறி நடந்தால்கூட எந்த அளவில்
    மற்றவர்களால் உணரப்படும் எனப்து கேள்விக்குரியதே!

    ஆனால் இவற்றை தவிர்க்க இயலாது என்பதே உண்மை, தமிழனின் சகிப்புத்தன்மைதான் உலகறிந்ததே :))

    ReplyDelete
  5. கதிர் - ஈரோடு said...

    //என்ன கவருமெண்டோ//
    அட... ஏனுங் சிவா... இது வெக்கிறதுக்கும் கரைக்டா மாமூல் போயிருதுங்க

    அது இல்லாத அரசுத்துறை ஏதுங்க மாப்பு :))

    இந்த இரைச்சலான சூழ்நிலையை இன்னும் பலநாட்கள் பொறுத்துக்கொள்ள வேண்டிய பொன்னுச்சாமி போன்ற அப்பாவிகளின் நிலையை எண்ணியே ஆதங்கப்படுகிறேன்

    ReplyDelete
  6. \\கோவி.கண்ணன் said...

    ம் எல்லா நாட்டிலும் பெரிய மின்னனு காட்சிப் பெட்டியில் பொது இடத்தில் விளம்பரம் போடுவது நடைமுறைதான்.\\

    பொது இடத்தில் விளம்பரம் சரிதான், போக்குவரத்து மிகுந்த சாலையில் நகரும் விளம்பரப்படங்கள் தேவையா என்பதே என் ஆதங்கம் :(

    ReplyDelete
  7. உங்கள் அனுபவம் பராவாயில்லை. அவராவது மேலே ரசித்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்து மோதுகிறார்.


    காந்தி நகர் போன்ற அகன்ற சாலைகளில் முந்துகிறேன் என்று மூச்சை நிறுத்து முயற்சிப்பவர்களையும், மெதுவாக செல்ல வேண்டும் என்ற போதும் பின்னால் வருபவர்களின் தொடர்ச்சியான பாம் பாம் நம்மை பயமுறுத்துவதும், சாலை விதிப்படி முறைப்படி செல்ல முயற்சிக்கும் போது தடால் என்று உள்ளே குறுக்கே வந்து நம்மை மண்ணில் கும்பிட வைப்பவர்களும் இவர்கள் அணைவருமே நல்ல கண்ணியமான ஆடைகளும் கவரக்கூடிய தோற்றமுமாகத்தான் இருக்கிறார்கள்.


    தினந்தோறும் செத்து செத்து வடிவேல் விளையாண்ட விளையாட்டை விளையாட வேண்டி இருக்கிறது.

    அதுவும் தேவியர்களுடன் வரும் போது சில சமயம் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் கூட வந்து விடும் போலிருக்கிறது.


    பெரியவர் நடைமுறை என்று எளிதாகச் சொல்லிவிட்டார்.

    நாம் நடக்க முடியாத வாழ்க்கை அமைந்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது.

    ReplyDelete
  8. \\தினந்தோறும் செத்து செத்து வடிவேல் விளையாண்ட விளையாட்டை விளையாட வேண்டி இருக்கிறது.

    அதுவும் தேவியர்களுடன் வரும் போது சில சமயம் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் கூட வந்து விடும் போலிருக்கிறது.

    நாம் நடக்க முடியாத வாழ்க்கை அமைந்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது.\\

    இப்படியெல்லாம் யோசித்தால் நம்ம ஊரில் வண்டி ஓட்டமுடியாது, ஊரோடு ஒத்து வாழவேண்டியதுதான் :)))

    பயப்படாமல் கலக்குங்க :))

    ReplyDelete
  9. சிவாண்ணே!

    நலம் தானே?

    ReplyDelete
  10. நல்லாயிருக்கேங்க வெயிலான்

    சென்னை கதைப்பட்டறை பற்றி ஏதாவது உண்டா !!

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)