"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, November 25, 2009

வலையுலக நட்பும், கருத்துச் சுதந்திரமும்.

வலையுலகில் பலவித இடுகைகளை படிக்கிறோம். படிக்கிற இடுகை ஒரு கவிதை, கதை, குறித்தான இடுகையாக இருக்கும்போது, அதில் பதிவரின் எண்ண ஓட்டம் தெரிகிறது. அதற்கு பின்னூட்டம் சூப்பர், நல்லா இருக்கு அவ்வளவுதான். அங்கே விவாததிற்கு இடமே இல்லை.

சாதி, ஆன்மீகம், மதம், நாத்திகம், அரசியல்,காமம் சார்ந்த இடுகைகள் வரும்போது விவாதத்திற்கு உள்ளாகக் கூடிய வகையில்தான் கருத்துகள் அமையும். விவாதமும் தவிர்க்க முடியாதது.

இது போன்ற இடுகைகளை நான் படிக்கும்போது முதலில் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதைத்தான் கவனிக்கிறேன்,

அது கடுமையாக எதிர்க்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு ஜால்ராவா? இல்லை கிண்டல் அடிக்கிறதா? ஆராய்கிறதா? எடுத்துக்கொண்ட கருத்தை நிறுவுகிறதா? சமுதாயத்தில் தனது கருத்தை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறதா என்று இடுகையைப் பற்றி படித்து முடிவுக்கு வருகிறேன்.

கடுமையாக எதிர்க்கிறது, நிறைகளைச் சுட்டிக் காட்டாமல் குறைகளையே பெரிது படுத்தி பேசுகிறது என்றால் அங்கே நமது குரல் எடுபடாது. குரல் கொடுத்தாலும் கடுமையான ஆட்சேபனைகள் நிச்சயம் வரும். எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே விலகிவிடுகிறேன்.மாறாக ஒத்த கருத்துடைய அந்த நண்பர்களின் பின்னூட்டங்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்து இரசிக்கிறேன்.

உதாரணமாக ஆன்மீகம் சார்ந்து எழுதக்கூடிய அன்பர்களிடையே தானகவே ஒரு குழுபோல் அமைந்துவிடும். தினசரி வந்து படிக்கும் நண்பர்கள் மற்றும் எழுதும் பதிவரிடையே கருத்தளவில், மனதளவில் ஒரு நெருக்கம் ஏற்பட்டுவிடும். அப்போது இடையில் புகும் மாற்றுக் கருத்துடைய நண்பர் தொடர்ந்து படிப்பவராக இருந்தாலும், தாங்கமுடியாமல் ஒருகட்டத்தில் எதிர்க் கருத்தை அங்கு பதிவு செய்ய முயலும்போது அது அவரைப் பொறுத்து சரியானதாகவே இருந்தாலும், மற்ற அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் அவர் சொல்ல வந்ததும் மறைக்கப்பட்டு, பின்னூட்டமிட்ட நண்பரின் மீது குழுவாக பாய்ச்சல் நிச்சயம்.

இது சூழ்நிலையையே கெடுத்துவிடுகிறது. இவர்களுக்கும் பாடம் போய்விடும், அவருக்கும் எதிர்ப்பை திரும்பவும் எதிர்க்க, கருத்தை வலியுறுத்த என மனநிம்மதி போய்விடும்.

இது ஆன்மீகம் மட்டுமல்ல, அனைத்துத் துறையினருக்கும் பொருந்தும், கணினி தொழில்நுட்ப விளக்கம் தரும் நண்பரின் நோக்கம் புரிந்து கொள்ளாது அங்கு தமிழில் குற்றம் கண்டுபிடிக்கிறார் ஒரு நண்பர்.

இந்த சூழ்நிலையை நான் எப்படி எதிர்கொள்கிறேன் என்றால் இடுகையின் நோக்கம் புரிந்தது. ஆக்கபூர்வமான நோக்கம் எனில் சிறு குறைகளாக என் மனதிற்கு பட்டதை (பிழைதிருத்தத்தை கூட) தனி மடலிடுவேன், நிறைவுகளை பாராட்டி விடுவேன். முக்கிய நோக்கத்தைப் புறக்கணித்து குறைகளை பெரிது படுத்தும்போது எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விடுகிறது. இடுகையின் நோக்கம் திசை திருப்பப்பட்டு பின்னர் வந்து படிப்பவரின் மனோநிலையை குழப்பம் அடையச் செய்து விடுகிறது.

அதற்காக தவறை அனுமதிக்க வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை. அந்தத் தவறு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அவரிடம் தெரிவித்துவிட்டு என் தளத்தில் தனித் தலைப்பிட்டு எதிர்கருத்தை பதிவு செய்கிறேன். அப்போது அவர்கள் மனநிலையும் கெடுவதில்லை, எழுதும் எனக்கும் மனநிறைவு ஏற்பட்டுவிடும்.

இதனால் என்னுடைய பின்னூட்டம் எங்கு இருந்தாலும் பெரும்பாலும் பாராட்டியே இருக்கும், சிறு நகைச்சுவை இருக்கலாம். அதிகமாக இடுகையின் மையத்தை விட்டு விலகி பின்னூட்டமிடுவதில்லை அதனால் கும்மிக்கு நான் எதிரானவன் அல்ல, மனதை ரிலாக்ஸ் பண்ண சில சமயங்களில் கும்மியும் தேவைதான். அதற்கான இடுகை எது எனபதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்றே சொல்ல வருகிறேன்.  

இடுகைகளின் தரத்தை முடிவு செய்து அதற்கேற்றவாறு பின்னூட்டமிடுவது பதிவரிடையே நட்பை இன்னும் பலப்படுத்தும், பிணைப்பை ஏற்படுத்தும்.

வலையுலகில் நட்பு முக்கியமா, என் கருத்து முக்கியமா எனும்போது என்கருத்தை வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நட்பு என்பது விரிசல் வந்தால் மீண்டும் மனதளவில் ஒட்டாது. வாயளவில்தான் நட்பு இருக்கும். எனவே பின்னூட்டத்தில் எனது பாணியாக இதைக் கடைபிடித்து வருகிறேன்.

சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் உங்களது கருத்தா......நட்பா.. உங்கள் விருப்பம்.!!!

வாழ்த்துகள்..

20 comments:

  1. //சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் உங்களது கருத்தா......நட்பா.. உங்கள் விருப்பம்.!!!



    வாழ்த்துகள்..
    //

    நட்புக்காக கருத்தை வலியுறுத்தாமல் தவிர்கலாம், ஆனால் நட்புக்காக கருத்தை மாற்றிக் கொள்ளவோ,மறுக்கவோ தேவை இல்லை. நான் யாருக்காகவும் கருத்துகளை மாற்றிக் கொள்வதில்லை, உடன்பாடு இல்லாவிடில் நட்புக்காக என்பொருட்டும் தங்கள் கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றே சொல்லி இருக்கிறேன்.

    வேற்றுமையில் ஒற்றுமை போற்றப் படவேண்டிய ஒன்று ! கருத்தை மதித்தல் வேறு கருத்தை ஏற்றுக் கொள்வதென்பது வேறு. கருத்து பிடிக்காவிட்டாலும் சொல்லும் உரிமையை கொடுப்பது கருத்தை மதித்தல். மாற்றுக் கருத்தை எதிர்கருத்தாக பார்பது சிறுபிள்ளைத் தனமானது.

    நல்லா எழுதி இருக்கிங்க சிவசு

    ReplyDelete
  2. கோவி அவர்கள் நமது சாவி போன்றவர்கள். அதாவது சிந்தனையின் திறவுகோல். முக்கால் வாசி(?) உண்மையை சொல்லி இருக்கிறார்.

    இதற்கான உண்மையான கருத்தை வேறு ஒரு விருந்தினர் இங்கு உள்ளே வந்து "சொன்ன" பிறகு சிவா நான் மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  3. \\நட்புக்காக கருத்தை மாற்றிக் கொள்ளவோ,மறுக்கவோ தேவை இல்லை\\

    முழுக்க உடன்படுகிறேன்.,

    \\கருத்தை மதித்தல் வேறு, அதே கருத்தை ஏற்றுக் கொள்வதென்பது வேறு\\

    இதுவும் சரியே

    மாற்றுக்கருத்து நோக்கம் அதே, வழி வேறு, தோழமை உணர்வு இருக்கும்

    எதிர்கருத்து நோக்கமும் வேறு, வழியும் வேறு,
    வெறுப்பு தெரியும்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவியாரே

    மாற்றுக்கருத்ட்த்

    ReplyDelete
  4. //ஆன்மீகம் ............. அது அவரைப் பொறுத்து சரியானதாகவே இருந்தாலும், மற்ற அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.//

    இதை ஏற்றுக்கொள்கிறேன்.

    //என்னுடைய பின்னூட்டம் எங்கு இருந்தாலும் பெரும்பாலும் பாராட்டியே இருக்கும்//

    பாராட்டி பின்னூட்டம் போடுவது தவறில்லை நல்ல விஷயம் தான்.. அதற்காக எப்போதுமே பாராட்டி எந்த குறைகளையும் கூறாமல் இருந்தால் அதனால் ஒரு பயனுமில்லை.

    தற்போது பின்னூட்டங்களால் எந்த ஒரு ஆரோக்கியமான விவாதமும் நடப்பதில்லை... பெரும்பாலும் டெம்ப்ளேட் பாராட்டுகளாகவே உள்ளது இதனால் ஒரு பயனும் இல்லை.

    மாற்று கருத்தை கண்டால் அதை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும், அதே போல பதில் கூறுபவரும் மற்றவரும் நாகரீகமாக விவாதம் செய்ய வேண்டும். மாறி சென்றால் அதில் இருந்து விலகி கொள்ளலாம், அதற்காக எப்போது சூப்பர் அருமை கலக்கல் என்று கூறுவதில் அவரை எந்த விதத்த்திலும் முன்னேற்றாது, ஊக்கங்கள் இருக்கலாம் ஆனால் அவர் தன்னை எப்போதும் சரியாக எழுதுவதாக நினைத்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக அந்த பின்னூட்டங்கள் அமையும்.

    //வலையுலகில் நட்பு முக்கியமா, என் கருத்து முக்கியமா எனும்போது என்கருத்தை வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நட்பு என்பது விரிசல் வந்தால் மீண்டும் மனதளவில் ஒட்டாது. //

    நமது கருத்தை நியாயமாக கூறும் போது (உடன் நாகரீகமாக) அவர் ஏற்றுக்கொள்ளாமல் நட்பை முறித்தால் அப்படிப்பட்ட நட்பு அவசியமே இல்லை.. புரிந்து கொள்ளாத நட்பு போலியான ஒன்று.

    ReplyDelete
  5. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்

    பொது அரங்கத்தில் ஒரு கருத்தை எடுத்து வைக்கிறோம். அப்புறம் அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது, விமரிசனமே கூடாது என்று சொல்வதுபோல அல்லவா நட்பா கருத்தா என்ற கேள்வியும் இருக்கிறது ?

    மாறுபட்ட கருத்தையும் அதனதன் தரத்தில் ஏற்றுக் கொள்வதில் தான் நட்பின் பலமே இருக்கிறது. தவிர நட்பு என்பது ஒத்து ஊதுவதல்ல.

    ReplyDelete
  6. //மாற்று கருத்தை கண்டால் அதை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும், அதே போல பதில் கூறுபவரும் மற்றவரும் நாகரீகமாக விவாதம் செய்ய வேண்டும். மாறி சென்றால் அதில் இருந்து விலகி கொள்ளலாம். - கிரி//

    நல்ல கருத்து; உடன்படுகிறேன். (`கண்டிப்பாக' என்னும் சொல் தேவையா?)

    ReplyDelete
  7. ஒரு பதிவரை பல நாட்களாக படித்து வரும் பட்சத்தில் நமது கருத்துக்களை கூறுவதிலோ / அவரது கருத்துகளை புரிவதிலோ ஒரு பிரச்னையும் இருக்காது. திடீரென்று ஒருநாள் யாரையாவது படிக்கும்போது தடுமாறுவோம். அங்கே தான் எப்படி கையாளவேண்டும் என்று பிடிபடுவதில்லை.

    ReplyDelete
  8. //மணிகண்டன் said...
    ஒரு பதிவரை பல நாட்களாக படித்து வரும் பட்சத்தில் நமது கருத்துக்களை கூறுவதிலோ / அவரது கருத்துகளை புரிவதிலோ ஒரு பிரச்னையும் இருக்காது. திடீரென்று ஒருநாள் யாரையாவது படிக்கும்போது தடுமாறுவோம். அங்கே தான் எப்படி கையாளவேண்டும் என்று பிடிபடுவதில்லை.
    //

    மணி சரியாக பாயிண்டை பிடித்துவிட்டார். 100 க்கு 100 சரி

    ReplyDelete
  9. //அ. நம்பி said...கண்டிப்பாக' என்னும் சொல் தேவையா?//

    அவசியமில்லை, ஆனால் நாம் கூறினால் அவர் என்ன நினைத்து இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளாலாம். ஒருவேளை நாம் நினைத்து இருந்தது தவறு என்று அறிவோமானால் மாற்றி கொள்ளலாம், இல்லை என்றால் விட்டு விடலாம்.

    பொதுவாக நாம் நினைப்பதே சரி என்று கருதுவோம், அது இதை போல விவாதங்களால் அப்போது மாறவில்லை என்றாலும் பொறுமையாக யோசித்து பார்க்கும் போது புரியலாம். இது நம்மை நம் தவறுகளை சரி படுத்திக்கொள்ள உதவும்.

    ReplyDelete
  10. அன்பின் சிவசு

    அருமையான இடுகை - இடுகையின் நோக்கம் புரியாமல் திசை திருப்பக் கூடாது - கர்த்து ஏற்கத்தக்கதாக இல்லலை எனைல் மென்மையாக மாற்றுக்கருத்தினைத் தெரிவிக்கலாம். தவறில்லை.
    மொத்தத்தில் அருமையான இடுகை

    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete
  11. கிரி

    \\நமது கருத்தை நியாயமாக கூறும் போது (உடன் நாகரீகமாக) அவர் ஏற்றுக்கொள்ளாமல் நட்பை முறித்தால் அப்படிப்பட்ட நட்பு அவசியமே இல்லை..\\

    அப்படி நண்பர்கள் அதிகம் இல்லை என்பதாலேயே இந்த இடுகை இடவேண்டியது ஆயிற்று

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  12. //கிருஷ்ணமூர்த்தி said...

    அப்புறம் அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது, விமரிசனமே கூடாது என்று சொல்வதுபோல அல்லவா நட்பா கருத்தா என்ற கேள்வியும் இருக்கிறது ?//

    விமர்சனம் காட்டமாக அமைந்து விமர்சனத்தின் நோக்கம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறைதான்:))

    \மாறுபட்ட கருத்தையும் அதனதன் தரத்தில் ஏற்றுக் கொள்வதில் தான் நட்பின் பலமே இருக்கிறது. தவிர நட்பு என்பது ஒத்து ஊதுவதல்ல.\\

    இப்படி நட்புகள் அதிகமில்லை என்பதே என் கருத்து. இந்த பாணியில் இருந்தால் இன்னும் நண்பர்கள் அதிகமாகும். புரிதல் வந்தபின் விமர்சனம் அவர்களைப் பாதிக்காது.

    நன்றி கருத்துக்கும் வருகைக்கும் நண்பரே

    ReplyDelete
  13. மணிகண்டன்

    \\அங்கே தான் எப்படி கையாளவேண்டும் என்று பிடிபடுவதில்லை.\\

    இந்த இடுகைப்படி முயற்சித்துப் பாருங்களேன் நண்பரே

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணி..

    ReplyDelete
  14. கோவி.கண்ணன்



    \\மணி சரியாக பாயிண்டை பிடித்துவிட்டார். 100 க்கு 100 சரி\\

    அதுக்கப்புறம் போனஸ் மார்க் போட இதோ..:))

    நண்பர்களுக்குள் விமர்சனம் வந்தால் பிரச்சினை இல்லை.அது தெரிஞ்சதுதான். யார்கூட கருத்து வேறுபாடு வரும் என்றால் புதிய நண்பர்களுடன்தான்

    நம் நட்பு வட்டம் விரிய வேண்டாமா :)

    அல்லது நம் பதிவிற்கு வரும் புதிய நண்பர்களோடு பழ்கும்போது பிரச்சினை வராமல் இருக்கவே இந்த இடுகை. எனக்கும், கோவியார், மணிக்கும் இடையில் வரும் கருத்து வேறுபாடுகளுக்கு அல்ல..

    ReplyDelete
  15. \\அருமையான இடுகை - இடுகையின் நோக்கம் புரியாமல் திசை திருப்பக் கூடாது - கர்த்து ஏற்கத்தக்கதாக இல்லலை எனைல் மென்மையாக மாற்றுக்கருத்தினைத் தெரிவிக்கலாம். தவறில்லை.
    மொத்தத்தில் அருமையான இடுகை\\

    அன்பின் சீனா

    இடுகைகளைப் படித்து பின்னூட்டமிடுவதில் உங்களிடம் நாங்கள் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்.
    உதாரணம் இந்த பின்னூட்டம்.

    பத்தி பத்தியாக நான் எழுதியதை, அழகாக நான்கு வரிகளில் நறுக்கு தெரித்தாற்போல் எழுதி படிப்போரின் நெஞ்சில் பதியவைத்து விட்டீர்கள்.

    இதுவே அனுபவம், பண்பாடு, நாகரீகம்

    வணங்குகிறேன்., வாழ்த்துகள்

    ReplyDelete
  16. '''வலையுலகில் நட்பு முக்கியமா, என் கருத்து முக்கியமா எனும்போது என்கருத்தை வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நட்பு என்பது விரிசல் வந்தால் மீண்டும் மனதளவில் ஒட்டாது. வாயளவில்தான் நட்பு இருக்கும்''''நல்ல கருத்து

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர் அவர்களே

    ReplyDelete
  18. http://nizamroja01.blogspot.com/2009/10/blog-post_16.html

    ReplyDelete
  19. சரியாதான் சொல்லுரிங்க நண்பா,...

    ReplyDelete
  20. ராஜவம்சம், ஆ.ஞானசேகரன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)