முடிந்தவரை நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்
அதன் காரணமாகவே அவர் எழுத்துகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
ஒரு சில கருத்துகளில் வேறுவேறு பார்வை எனக்கும் அவருக்கும் இருந்தாலும் பல இடங்களிலும் இவர் ஒரு மிகச்சரியான நபர் என நான் சொல்வதும் வழக்கம், என் இந்த முடிவு இவரது எழுத்துக்களை மட்டும் வைத்தே :))
நான் இவரது இடுகையில் இட்ட ஒரு பின்னூட்டம், எச்சரிக்கை பாணியில் எழுதிய அவரது இடுகையை நான் தவறாக புரிந்து கொண்டது போல் எழுதி இருக்கிறார். நிச்சயமாக இல்லை.
ஒருவர் போலி எனத் தெரிந்தால் தைரியமாக வெளியே சொல்லலாம், அதைவிடுத்து கிசுகிசு பாணியில் எழுதும்போது அதன் நம்பகத்தன்மை குறைந்து போகிறது. இது ஒரு மனநோயாகவும் நமக்கு மாறிவிடும்.
மதுகுடிப்பதும், புகைபிடிப்பதும் தவறு எனச் சொல்வது அவசியமில்லை, அனைவருக்கும் தெரிந்தேதான் அந்தப் பழக்கத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மாறாக உடலை, உயிரை, மனதை வளமாக வைத்துக்கொள்வது எப்படி எனச் சொன்னால் அதனுள் அடங்கி விடும் மது புகை பற்றிய கருத்துகள் :))
போலிச் சாமியார்களை மோப்பம்பிடித்து முகத்திரை கிழிக்க பதிவுலகில் பல நண்பர்கள் உண்டு. ஏற்கனவே நிறைய நண்பர்களால் செய்ய முடிந்ததை நண்பர் ஓம்கார் செய்ய வேண்டியதே இல்லை.
காரணம் ஆன்மிகம் என்றால் என்ன என சரியாக சொல்ல என்னளவில் பதிவுலகில் சரியான நபர் இல்லை. வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் ஓம்கார் இருப்பதாக நான் நினைத்ததால் சுருக்கமான பின்னூட்டம் இட்டேன்.
மேற்கண்ட என் எண்ணம் தவறு என சொல்வதுபோல் இன்றைய அவரது இடுகை அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.:))
நான் ஆசிரியன் அல்ல., மாணவனே.. அன்றாட குடும்பவாழ்வில் பொருளாதார வளங்களை பெற வேண்டும். அந்த முயற்சியில் மனதை எப்படி பேரன்புடன் வைத்துக் கொள்வது என்பதை பலதையும் படித்து, கேட்டு அசைப்போட்டுக்கொண்டு இருப்பவன்.
என் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் அதை வெளிப்படுத்துவதே என் விருப்பம், இதன் மூலம் எனக்கு நான் உண்மையாக இருக்கிறேனா என சோதித்துக் கொள்வதுதான்.
சரி அவரது இடுகை இரண்டு நாளில் அவராலேயே நீக்கப்படும் என்பதாலும், பின்னூட்ட வாய்ப்பு இல்லை என்பதாலும், பொதுவில் வைக்கப்பட்ட விசயத்தை பொதுவிலேயே நானும் வைக்கிறேன்.
அவரது இந்தக்கட்டுரையை வருங்காலத்தில் அவரது கட்டுரைகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் சுட்டிக்காட்டவும், முன்னேற்றம் இருந்தால் பாராட்டவும் பயன்படும் என்பதால் என் வலையில் சேமித்திருக்கிறேன்.
***********************************************டிஸ்கி: ஆரோக்கியமான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
*************************************************
நான் ’பகவான்’ அல்ல...! - நீண்ட பதிவு
“After J________ and V____________.
Now Nithya____________.
Swami Omkar, when is your turn.? ”
இது போன்ற மின்னஞ்சல்கள் மற்றும் பின்னூட்டங்கள் இங்கே வருகிறது. மேற்கண்ட விஷயங்களை பற்றி விளக்க அல்ல இந்த பதிவு.
கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். இது கேள்வி அல்ல. இது ஒரு மனநோய். இது போன்ற வரிகளை எழுதும் மனநோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளிக்கவே விரும்புகிறேன்.
இன்னும் பலர் என்னை வேறு வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். பொது வெளியில் பேசுவதால் ஒருவரை விமர்சிக்கலாம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. அப்படி அல்ல. சுயமரியாதை என்ற ஒரு எல்லையை மீறி யாரும் செயல்பட முடியாது. விமர்சனங்களுக்கு நான் செவி சாய்ப்பதில்லை. அது எல்லை மீறும் பொழுது விளக்கம் செய்ய வேண்டி உள்ளது.
முக்கியமான சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இவ்வாறு எழுதுகிறேன்.
என்னை பற்றி என்றும் வெளிப்படுத்தியதில்லை. என் தாய் தந்தையர் அல்லது எனது பிறப்பு இவை எதுவும் பலருக்கு தெரியாது. என்னை என்றும் நான் சன்யாசி என்றோ, இன்ன மரபில் வந்தவன் என்றோ, இன்ன பெயர் என்றோ கூறிக்கொண்டது இல்லை. நான் சாமியாரோ,சத்குருவோ, யோகியோ கிடையாது. நீங்களே என்னை அனுமானித்து என்னை தவறாக கூறினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதை தவிர எனக்கு வேறு பணிகளோ தொழிலோ கிடையாது. பொருள் சேர்ப்பது என் நோக்கம் அல்ல. அறிவு என்ற ஒரே தளத்தில் மட்டுமே வாழ்கிறேன். அறிவை பயன்படுத்தி பொருள் சேர்க்கிறேன். அறிவை பயன்படுத்து என் அனுபவங்களை விரிவாக்குகிறேன்.
இறையருளால் எனக்கு சில அறிவு கிடைத்திருக்கிறது. அதை அனுபவத்தால் உணர்ந்து பிறருக்கு பகிர்ந்து அளிக்கிறேன். இதுவே எனது வாழ்வியல் சூழலாக இருக்கிறது. எனது சுகங்களை வளர்த்துக்கொள்ள எவரிடமும் நான் பணம் கேட்டது, வாங்குவது கிடையாது. என் அறிவால் பங்கு சந்தை மூலமோ, அறிவு சார்ந்த ஆய்வுகள் மூலமோ எனக்கு அளிக்கப்படும் வெகுமதியை மீண்டும் பிறருக்கு விழிப்புணர்வு வழங்கும் பணியிலேயே செலவிடுகிறேன். நான் வழங்கும் பயிற்சியில் வந்து அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும், நான் பணம் பண்ணும் நோக்கில் செயல்படுகிறேனா என்று. என் அறிவுசார் உழைப்புக்கு உண்டான விலையை அடுத்த விழிப்புணர்வு பணியே நிர்ணயம் செய்கிறது.
சொகுசுகாரில் பவனி வந்தும் நட்சத்திர ஹோட்டலில் தங்கியும் ஆன்மீகம் பரப்புபவன் அல்ல. என்னை அனுகி என்னை புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள். அல்லது விட்டு விலகுங்கள்.
பங்குசந்தையில் ஜோதிடம் பலிக்குமா என கேட்பவருக்கு அதைபற்றி நீண்ட கட்டுரையை எழுதுகிறேன். அதற்கு முன் பலமுறை பங்குசந்தையை பலர் இருக்கும் சபைகளில் கணித்து அதை பலர் முன் நிரூபணம் செய்தும் காட்டி இருக்கிறேன். குறைந்தபட்சம் அதைபற்றி தெரிந்துகொண்டாவது விமர்ச்சிக்க துவங்குங்கள். நிரூபணம் செய்யாது எதையும் நான் வெளியிடுவதில்லை. நிரூபிக்கப்படாத உண்மைகளை நான் என்னுடனேயே வைத்துக்கொள்கிறேன்.
பொத்தானை தட்டி இணையத்தில் என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இவர் அப்படி பணம் செய்கிறார் என சிலர் கூறுவது எனக்கு சிரிப்பாக இருக்கிறது.
அறியாமையின் உச்சம் அல்லவா அவர்கள்? இந்த அறிவாளிகளின் பள்ளியின் தலமையாசிரியர் சிலர் கேட்கிறார்கள் காவியுடையில் ஒருவர் பாலியல் உறவு கொள்ளலாமா ? என்பதை போன்றும் மதம் அசுத்தமாகிவிட்டது என்றும் புலம்புகிறார்கள்.
முதலில் உங்களுக்கு காவி உடை என்றால் என்ன என தெரியுமா?
இந்திய கலாச்சாரத்தில் ஆன்மீகவாதிகளுக்கு உடை உண்டா?
காவி கட்டினால் கல்யாணம் செய்யக்கூடாதா?
நீங்களே சில கட்டமைப்பை வைத்துக்கொண்டு பிறரை குற்றம் சாட்டுவது அறியாமையின் உச்சம் தானே?
முதலில் நம் கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து ஒரு தவறான நபரின் ஆபாச வீடியோவை பார்த்து முட்டாள்தனமாக கூச்சல் போட்டு பயனில்லை. தவறு உங்கள் அறியாமையில் இருக்கிறது.
ஆன்மீகவாழ்க்கை என்பது காடுகளில் வாழ்வதோ துறவு போன்றவையோ இல்லை. ஆன்மீகவாழ்வு என்பது பேரன்புடன் உங்களுக்கு தெரிந்த நல்ல அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளவது. மேலும் தவறான விஷயங்களை பற்றி எச்சரிப்பது.
மேற்கண்ட வரியில் பேரன்புடன் என கூறி இருக்கிறேன். உங்கள் குடும்பத்தார், நண்பர்கள் இவர்களுடனேயே உங்களால் பகிர்ந்துகொள்ள முடியும்.
பேரன்பு இருந்தால் தான் சக மனிதனையும் அனைத்து உலக உயிர்களிடமும் இவ்வாறு இருக்க முடியும்.
இவற்றை பிறருக்கு பகிர்ந்துகொள்ளவே நான் செயல்படுகிறேன். ஆன்மீகத்தை பகிர்ந்துகொள்வதில் என் அனுபவம் மட்டும் போதுமானதே தவிர என் பின்புலமும், நான் யார் என்பதும் தேவையற்றது.
ஒரு புதிய ஊருக்கு செல்லுகிறீர்கள். எந்த பாதை சுலபம், எங்கே பேருந்துகிடைக்கும் என கூறும் வழிப்போக்கனின் அக்கறைதான் தேவையே தவிர அவன் சுய சரிதை நமக்கு தேவை இல்லை.
அதனால் தான் சொல்லுகிறேன் எனது ஆன்மீக பின்புலம் என்ன. எனது குரு யார் என எவ்விஷயத்தையும் விவரிப்பது தேவையற்றது. என் சுயசரிதையை விட என் அனுபவங்கள் உங்களுக்கு பயன்படலாம்.
எனது முழு பெயர் யாருக்கும் தெரியாது என்பதே உண்மை. நான் யாருக்கும் குரு அல்ல, நான் யாருக்கும் சிஷ்யனும் அல்ல...!
எப்பொழுது நான் குருவாகிறேனோ அங்கே நான் பிறரைவிட மேலானவன் என்ற அஹங்காரம் வந்துவிடுகிறது. நான் சிஷ்யன் ஆகும்பொழுது குரு என்பவருக்கு நான் அஹங்கார பொருளாகிறேன்.
நான் ஆசிரியன், என்னிடம் பயிபவர்கள் மாணவர்கள். இவ்வாறே நான் அவர்களை அழைக்கிறேன்.
மாணவனுக்கு ஆசிரியன் நிரந்தரமானவன் அல்ல. நாளை வேறு ஒரு ஆசிரியன் அவருக்கு மற்றதை கற்றுக்கொடுக்கலாம்.
ஸ்வாமி ஓம்கார் என்பது என் பெயரல்ல என பலமுறை பின்னூட்டத்தில் கூறி இருக்கிறேன். மீண்டும் இங்கே சொல்லுகிறேன். இது உங்களுக்காக நான் எற்படுத்திய அடையாளம்.
இந்த உடல் செயல் இழக்கும் இறுதி நாள் வரை என் பெயரை நான் கூறப்போவது இல்லை.
என்னை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள். என் சுயமரியாதை தடுமாறாத வரை எப்படி கூப்பிட்டாலும் செவி சாய்ப்பேன்.
பெயரில் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆலம் விதை என்று கூறிவிட்டால் போதுமே? நம் ஆட்கள் விழுதுவரை சென்றுவிடுவார்களே..!
நான் இன்னாரின் வழி வருகிறேன், அவர் எனக்கு தெரிந்தவர் என என்னை வைத்து உங்களிடம் அஹங்காரம் எற்றிக்கொள்ளும் இவ்வகை முயற்சிக்கு ஒத்துழைக்க மாட்டேன்.
என் தன்பட்ட ஆன்மீக அனுபவங்களை ஸ்ரீசக்ர புரியில் பகிர்ந்துகொள்ளும் சூழலில் மிகவும் வருத்தபட்டேன். அதற்கு பிறகு அதை செய்யவும் இல்லை.
வேடிக்கையின் உச்சகட்டம், நம் ஆட்கள் பிரம்மச்சரியம் பற்றி பேசுகிறார்கள்.
பிரம்மச்சரியம் என்றால் என்ன தெரியுமா?
அதையே முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சிக்காதவர்கள் அதைபற்றி கூறும் பொழுது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. காந்தி இருந்த வரட்டு பிரம்மச்சரியத்தையும், சிலர் செய்யும் காமக்கொரோதங்களையும் மட்டுமே கண்டவர்கள் பிரம்மச்சரியம் என்றால் எப்படி புரிந்துகொள்வார்கள்.?
உணவு உண்பவன் உணவை பற்றி பேசுவதைவிட...
பட்டினி கிடப்பவன் உணவை பற்றி பேசுவதைவிட..
விரதம் இருப்பவன் உணவை பற்றி பேசுவதைவிட............
உணவே இல்லாமல் வாழ்பவன் உணவை
பற்றி பேசினால் தானே உணவுக்கு சிறப்பு?
குழந்தைகளும் பெண்களும் படிக்கும் இந்த தளத்தில் பிரம்மச்சரியத்தை பற்றி மேலும் விவாதிக்க தயாரில்லை.
இந்த வலைதளத்தில் கடந்த ஒருவருடங்களாகவும், செப்டம்பர் 2009 முதலும் தீவிரமாக “வரம்” தரும் விஷயத்தை பற்றி விழிப்புணர்வு பதிவு பல எழுதி உள்ளேன். அப்பொழுது எல்லாம் ஒரு சின்ன பாராட்டு கூட இல்லை. போலிகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் விழிப்புணர்வு பதிவுகள் இவர்களுக்கு கண்களில் தெரிவதில்லை. போலி ஜோதிடர்கள், தவறான நபர்கள் என்ற வகைபடுத்தலில் நான் எழுதியவற்றை இவர்கள் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்.
வரம் தரும் அவதார புருஷரை பற்றி நான் எழுதியதற்கு சக பதிவர் ஒருவர் ஒரு படி மேலே சென்று பின்வரும் பின்னூட்டத்தை பகிர்ந்தார்.
\\தமிழ்நாட்டில் எத்தனையோ தீர்க்க வேண்டிய பிரச்சினை, பொதுமக்கள் நலம் பேணுதல் இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி மேல்தான்
கவனம் இருக்கும், நாம நல்லாட்சி மட்டும் நடக்கும்னு நம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்..
ம்ம்ம்ம்.....!!!!/
அவர் சொல்ல வருவது நான் எதோ வரம் தருபவருக்கு தொழில் போட்டியாக செயல்பட்டேன் என்பது போல இருக்கிறது.
(** அப்படிச் சொல்ல நிச்சயம் நான் நித்தியானந்தாவின் தொழிலில் பங்குதாரர் இல்லை:)))**)
அப்பொழுது நான் இதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை. தற்சமயம் பதில் சொல்ல தேவையும் இல்லை...! அனைத்தும் அவருக்கே விளங்கி இருக்கும். அவரும் வரம் தருபவரை சாடி கட்டுரை எழுதிவிட்டார்.
குறைந்த பட்சம் நீங்கள் அன்று கூறினீர்கள் இன்று நடக்கிறது என்றும் கூற இவர்கள் தயாரில்லை. அதைவிடுத்து நீயும் அது தானா என கேட்கும் மனநோய் மட்டும் வளர்த்துக்கொள்ளுகிறார்கள். உங்களின் நோயால் என்னை போன்று விழிப்புணர்வு அளிப்பவர்களை அழித்துவிடாதீர்கள் என வேண்டுகொள் விடுக்கவே இந்த பதிவு.
டிஸ்கி :
1) இரண்டு நாட்கள் மட்டுமே இந்த கட்டுரை வலையில் இருக்கும். ’என் சுய’ விளக்கத்திற்கான வலைதளம் இல்லை. இந்த ஒரு முறை பயன்படுத்துவதற்கு நான் வெட்கப்படுகிறேன். காரணம் இது swamiomkar.in அல்ல..!
2) இதில் வரும் பின்னூட்டங்களை நான் வெளியிடப்போவதில்லை. அது நல்ல பின்னூட்டமோ விமர்சனமோ எதுவாக இருந்தாலும் வெளியிடப்படாது.
ஆனால் எனக்கு கருத்துக்களை கூற விரும்பினால் பின்னூட்டம் மூலமோ மின்னஞ்சல் மூலமோ கூறுங்கள்.
தொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:11 PM
Thursday, March 4, 2010
நலல அறிமுகம். நன்றாக எடுத்து இயம்பி உள்ளீர். வாழ்த்துக்கள்
ReplyDelete