"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, September 18, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5

டெல்லி சென்றடைந்தவுடன் அங்கிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று பேருந்துகளில் பிர்லாமந்திர் சென்றடைந்தோம். அங்கு முன்பதிவு செய்ததில் ஏதோ குழப்பம்போல. குறைவான அறைகளே கிடைத்தது. இருப்பதை வைத்து எல்லோரும் சமாளித்துக்கொள்ள, நான் இரயிலிலேயே குளித்துவிட்டதால் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

கோவில் வளாகத்தினுள் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே இருந்தது. மெட்டல் டிடெக்டர் வைத்து நம்மை பரிசோதனை செய்தபின்னரே உள்ளே அனுமதித்தனர்.அறைகளில் ஓய்வெடுத்த நண்பர்கள் வந்தவுடன் உணவருந்திவிட்டு கோவிலை முழுவதும் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

கோவிலைப்பற்றிய எளிமையான குறிப்புகள்

தமிழ்நாட்டில் கடவுளாக கல்லான் ஆன சிற்பங்களை பார்த்து பார்த்து பழகிய மனம் அங்கு இருந்த விநாயகர் சதுர்த்தி கலர் பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது.கோவிலினுள் பெரிய ஈர்ப்பு எனக்கு ஏற்படவில்லை.

ஆனால் நான் மட்டும் தான் இப்படி:) அங்குவந்த பக்தர்கள் மிகுந்த பக்தி உணர்வோடு வணங்கி சென்றனர். மென்மையான சப்தத்துடன் கோவிலில் பஜன் ஒலி கேட்டுக்கொண்டு இருந்தது. சரி இன்னும் சிலமுறைகள் வந்தால் நம் மனதும் பழகி, அமைதியாகவிடும். எனக்குப்பிடித்தமாதிரி வேணும் அப்படிங்கறது விட்டுட்டு இருக்கிறத விரும்பும் என மனதில் பட்டது.


இங்கே காலை உணவுக்காக தமிழ்நாட்டு உணவுவகையில் தேர்ந்த சமையல் குழுவினர் எங்களோடு இணைந்து கொண்டனர். இனி பயணம் முழுவதும் எங்களோடு இவர்கள் எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வேனில் பின் தொடர்வார்கள். வேளாவேளைக்கு சுடச்சுட உணவு பரிமாறுவது குழுவின் பொறுப்பாளர் ராஜூ பொறுப்பு. (தனியே சென்றால் கிடைப்பதை உண்ண வேண்டும்.)

இவரோடு பின்னர் பேச்சுக்கொடுத்தபோது குறைந்தபட்சம் 25 நபர் அதிகபட்சம் எத்தனைபேர்க்கு வேண்டுமானாலும்  உணவு ஏற்பாடு செய்யமுடியும். அதுமட்டுமில்லாமல் எந்த மாநில உணவுவகையும் சுவையாக சமைத்துப் பரிமாற முடியும் என்றார். தேவையுள்ளவர்கள் அலைபேசி 099102655027 (ராஜு)பயன்படுத்திக்கொள்ளுங்கள்:)

இதுபோன்ற மதிய உணவுக்குப்பின் அக்சர்தாம் சென்றோம். தனியாக சென்றால் மெட்ரோ இரயில் வசதியும் இருக்கிறது. நாங்கள் சென்றபோது மதியம் நேரம் 2.00 . அந்த கோவிலை சுற்றிப்பார்த்து 4.30 மணிக்குத் திரும்ப வேண்டும் என அமைப்பாளர் அறிவித்தார்.

ஸ்வாமி நாராயண் கோவில் நூறு ஏக்கரில் ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.உள்ளே சுற்றிப்பார்க்க இங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம். இது தலைநகர் டில்லிக்கு மிகவும் அவசியம் தான். உள்ளே சென்றால் கோவிலின் பிரமாண்ட்மும், வேலைப்பாடுகளும் பிரமிக்க வைத்தன. உள்ளே புகைப்படம் எடுக்க முடியாது.

சலவைக்கற்கள்  இந்தக்கோவிலில் பெரும்பங்கு வகிக்கிறது.  இந்த கோவில் மேல்கூரைகளில் காணப்படும் வேலைப்பாடுகள் மீண்டும் மீண்டும் காணத்தூண்டியது. டெல்லி சுற்றுலா வருபவர்கள் பார்க்கவேண்டியதில் முக்கியமானது இந்த கோவில் என்றால் அது மிகையில்லை.

இதுபோக  உள்ளே கண்காட்சி ஒன்று உண்டு அதைப்பார்க்க தனிக்கட்டணம், தனியாக இரண்டு மணிநேரம் தேவைப்படும். மூன்று பேருந்துகளில் 140 பேர் வந்திருந்தோம். மாலை 4.15க்கே நாங்கள் திரும்ப வந்து காத்திருந்தோம்.

பயணிகளில் ஒருவரைக் காணவில்லை. செல்போன் தொடர்பு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் அவரை அழைக்கவும் முடியவில்லை.


பயணநிகழ்ச்சி உதவியாளர்கள் நால்வர் நான்கு திசைகளில் பிரிந்து அவரை தேட ஆரம்பித்தன்ர். நேரம் 5.25 ஆயிற்று, அவர் வரவில்லை. ஒருவழியாக 5.30க்கு ஒரு மஞ்சள் தொப்பி தெரிய, தேடப்பட்ட நண்பர் வந்துசேர்ந்தார்.

கூட இருந்த நண்பர்கள் ”ஏங்க இப்படி பண்ணுறீங்க, ஒருமணிநேரம் லேட்டா வந்தா எப்படி? சொல்லிட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை, உங்களை காணாம இங்க எல்லாரும் பதட்டப்பட்டு போயிட்டோம்”, என்று சொல்ல ”ஏய்யா ஆறுமணி நேரம் சுற்றிப்பார்க்க வேண்டிய கோவிலில் கொண்டு வந்துவிட்டு, இரண்டரை மணிநேரத்தில் வாங்கன்னா எப்படி வர்றது?.. பணம் கட்டி  வர்றது எதுக்கு? பாத்துட்டுத்தான் வருவேன்” என்று எதிர்த்துப்பேசினார்.

நான் நடுவே புகுந்து ”அய்யா சொல்லிட்டு போனீங்கன்னா உங்களை இரவுப்பயணத்திற்கு 10.00 மணிக்கு இரயில்நிலையம் வரச்சொல்லிவிட்டு நாங்கள் முன்னதாக இண்டியா கேட் சென்று இருப்போம். உங்களுக்காக இங்கே 139 பேர் பதட்டத்தோடு இருந்தோம்.  அதைத் தவிர்த்திருக்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்தக்கோவில் பயணத்திட்டத்தில் ஒரு
அறிமுகம்தான். குழுவோடு போகும்போது அவர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுத்தால்தான் பயணம் சிறப்பாக இருக்கும்” என சொல்ல நினைத்து அருகே சென்றேன்.

”லேட்டா வந்தவரு எதோ ஸ்கூல்ல ஹெட்மாஸ்ட்டராமா!!” என அருகில் ஒரு நண்பர் குரல் கேட்க, வாயை மூடிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டேன். இவருகிட்ட படிக்கிற பசங்க நிலைமை??

ஒருவழியாக கிளம்பிச் சென்ற இடம் இண்டியாகேட். போய்ச் சேரும்போது இருட்டத் தொடங்கிவிட்டது. நாங்கள் சென்றது அகஸ்ட் 4 ந்தேதி என்பதால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகமாகவே இருந்தது.

நன்கு இருட்டத் தொடங்கியதும்  இரவு உணவு அருகே உள்ள பூங்காவில் ராஜூ குழுவினரால்  சுடசுட உணவு பரிமாறப்பட்டது.  

இரவு 9 மணிக்கு பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சேர்ந்தோம். சரியான நேரத்திற்கு இரயில் வர அனைவரும் ஏறி தூங்கியபடியே ஹரித்துவாரை அடைந்தபோது காலை மணி ஆறு.. ...

பயணம் தொடரும்..
நிகழ்காலத்தில் சிவா

10 comments:

  1. பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது.கோவிலினுள் பெரிய ஈர்ப்பு எனக்கு ஏற்படவில்லை

    மாமனாரும் இதையே தான் சொன்னார் சிவா.

    ReplyDelete
  2. மத அடையாளங்களாக கோயில் இருந்தாலும் இப்படிப்பட்ட கோயில்கள் வரலாற்றுச் சின்னங்களாகவும் விளங்குகின்றன.

    ReplyDelete
  3. நண்பரே! சரியா எழுதி இருக்கீங்க! பயணம் செய்யும் போது ஏடாகூடமான ஆட்கள் வந்து நமது திட்டங்களை தவிடுபொடி ஆக்கி விடுவார்கள். அவர் குறைஞ்ச பட்சம் மன்னிப்பும் கேட்காமல் இருந்தாரா? என்ன தலைமை ஆசிரியர் அவர்!

    பதிவு அருமை...தொடருங்கள்..நானும் ஒட்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. //பயணிகளில் ஒருவரைக் காணவில்லை. செல்போன் தொடர்பு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்பதால் அவரை அழைக்கவும் முடியவில்லை.//

    அதெப்படீங்க, எல்லா டூர் குழுவிலயும் இவர் வந்து சேந்துக்கிறார்?

    பதிவு மிகவும் நன்றாக இருக்கிறதுங்க. உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  5. //கலர் பொம்மைகள் போல் இருந்த உருவங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது//

    அந்த அந்த ஊரில் இருக்கும் மக்களின் நிறத்திலேயே இறைவனின் உருவ சிலை இருக்கிறது.

    தமிழர்களுக்கு வெண்மையான விக்ரஹங்கள் ஈர்க்காது :)))

    ReplyDelete
  6. இது போன்ற சுற்றுலாக்கள் கும்பலோடு செல்லும் போது இது போன்ற அவசரங்கள் தான் நம்மை படுத்தி எடுக்கும். வயதானவர்களுக்கு இது பொக்கிஷம். பாதுகாப்பனதும் கூட. மீண்டும் ஒரு முறை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வர வாய்ப்பு அமையட்டும்.

    ReplyDelete
  7. எங்களையும் கூட்டிச் சென்றது போல் உணர்ந்தேன்

    \\”லேட்டா வந்தவரு எதோ ஸ்கூல்ல ஹெட்மாஸ்ட்டராமா!!” என அருகில் ஒரு நண்பர் குரல் கேட்க, வாயை மூடிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டேன். இவருகிட்ட படிக்கிற பசங்க நிலைமை??\\

    தங்களின் பதிவிடும் பாங்கு பிடித்திருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளேன்

    ஒவ்வொரு பொதுநிகழ்வுகளிலும் இது போன்ற ஓரிருவர் இருப்பதைத் தவிர்க்கமுடியாது.

    ஆனால் நாம் “ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்”.

    சொல்லவேண்டிவரினும் தவிர்த்தல் தங்களின் அகத்தழகை இன்னும் உயர்த்திக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை

    ReplyDelete
  8. //சொல்லவேண்டிவரினும் தவிர்த்தல் தங்களின் அகத்தழகை இன்னும் உயர்த்திக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை//

    நன்றி வானவன்யோகி.,

    நான் இந்த நிகழ்வை இங்கே குறிப்பிட்ட காரணம் எந்தசூழ்நிலையிலும் இதைப்படிக்கும் நம்மில் ஒருவர் இதுபோன்று நடந்து பிறருக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணம்தான்:)

    ReplyDelete
  9. அருமை...தொடருங்கள்..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)