"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, November 10, 2010

இதுதான் திருப்பூர். 10.11.2010

தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னர் புதன்கிழமை வங்கிக்கு பணம் எடுக்க சென்றேன். சரியான கூட்டம். காலை 11 மணிக்கு சென்றேன். செக்கைக் கொடுத்து டோக்கன் வாங்கினேன்.  "அப்புறம் வாங்க பணம் குறைவாக இருக்குது". என வங்கி அலுவலர் சொல்ல அடிக்கடி சென்று பழக்கமானதால் சரி என  வந்து விட்டேன்.


திருப்பூரில் எப்போதுமே வருடாவருடம் தீபாவளிக்கு அனைத்து வங்கிகளிலுமே எல்லோரும் வரைமுறையற்ற வகையில் பணம் எடுப்பார்கள். அத்தனையும் போனஸ் கொடுப்பதற்காக,, இதனோடு தேதி மூன்று ஆனதால் சம்பளம் போட்டு விட்டிருப்பதால் அதையும் எடுக்க கூட்டம் நிரம்பியது, வழக்கமாக ஏடிஎம் ல் உள்ள பணம்  அனைவரும் காலையிலேயே மொய்க்க, சிலமணிநேரத்தில் காலி ஆகிவிட்டது. ஏடிஎம்மிற்கு வந்து ஏமாந்த கூட்டமும் வங்கிக்கே திரும்பியது,

அதுமட்டுமில்லை. கிளியரிங் சென்று வந்த காசோலைகளும் பெரும்பாலும் பணமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சுருக்கமா சொன்னால் அன்றைய தேதிக்கு எல்லா அக்கவுண்டுகளுமே காலியாக இருந்தது. சர்வசாதரணமாக ஒரு வங்கிக்கிளையில் மூன்று கோடி பண பட்டுவாடா நடந்தது.

 மீண்டும் இரண்டு மணிக்கு போனபோது கூட்டம் அதைவிட அதிகமாக இருநதது. இருந்த பணத்தை வைத்துக்கொண்டு மிகக்குறைந்த அளவு பணம் எடுப்பவர்களாக தேர்ந்தெடுத்து கொடுத்து, கூட்டத்தை குறைக்க முயற்சித்துக்கொண்டு இருந்தார் கேஷியர்.

கூட்டம் காரணமாக வழக்கமாக ஒரு கேஷியர் பணம் வாடிக்கையாளருக்கு கொடுப்பது போக, இன்று இரண்டுபேராக கொடுத்துக்கொண்டு இருந்தனர். இதற்கிடையில் முந்தய நாள் வங்கி சொல்லி வைத்த பணம் பேங்கிற்கு வந்து சேர்ந்து கால்வாசிப்பேருக்கே கொடுக்க முடிந்தது. இரண்டாவது முறையாக அருகில் உள்ள நகரவங்கிகளில் எதில் தேவையான பணம் இருக்கிறது என மேனேஜர் விசாரித்துக்கொண்டு இருந்தார். திருப்பூரில் எல்லா வங்கிகளிலும் இதே நிலைதான்:)

காத்திருந்த வாடிக்கையாளார்கள் சூடாகிக் கொண்டு இருந்தனர். எத்தனைதடவையா வரச்சொல்வீங்க, பேங்கிற்கு வந்தா இத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டியதா இருக்குது. பணம் இல்லைன்னு சொன்ன என்ன அர்த்தம். பேங்க எதுக்கு நடத்தறீங்க என ஆளாளுக்கு கேஷியரைச் சத்தம் போட ஆரம்பித்தனர்.

நானும் இன்னொரு நண்பரும் நாமெல்லாரும் பொருள்கள் வாங்கவேண்டும், துணி எடுக்கனும், ஊருக்கு போகனும் அப்படின்னு அவசரத்தில இருநதாலும் வங்கியின் சிரமத்தைப் புரிந்து கொண்டு அனுசரித்துப் பொறுமையாக போகவேண்டும். பணம் உறுதியாக கிடைக்கும்.சற்று காலதாமதம் ஆகும்.சத்தம்போட்டால் பணம் வராது,பெரிய தொகை எடுக்க வேண்டியவர்கள் பொறுமையாக இருக்கலாமே என சொன்னோம்.

ஏற்கனவே வங்கியில் வழக்கமாக தேவைப்படும் அளவு பணத்தைவிட மிக அதிகமாகவே வாங்கிவர ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் தேவை அதற்கும் அதிகமாகவே இருந்தது.

நாங்கள் சொன்னதை யாரும் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. கேஷ் கவுன்டர் அருகிலேயே கூட்டமாய், ஆவலாய் நெருக்கி அடித்துக்கொண்டு காத்திருந்தனர். சற்று தள்ளி காத்திருங்கள் என பலமுறை கேஷியர் கெஞ்சியும், மிரட்டியும் கேட்கவில்லை. ஒருவழியாய் என்நெம்பர் வர பணத்தை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்.

அடுத்த நாள் வேறு வேலையாக அதே வங்கிக்கிளைக்குச் செல்ல கேஷியர் நண்பர்  அமர்ந்திருந்தார். ”நேற்று எத்தனை மணி ஆயிற்று?” என கேட்டேன்.

”நேற்று இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது அனைவருக்கும் பணம்  கொடுக்க என்றார். கூடவே 45000 ரூபாய் சார்ட்டேஜ் என்றார். கூட்டத்தில் எப்படியோ 100 கட்டு ஒன்றுக்கு பதில் 500 கட்டு போய்விட்டது போல இருக்கிறது,  கஷ்டப்பட்டு ஒரு டெபாசிட் 50000 க்கு வைத்திருந்தேன். அதை எடுத்துப்போட்டு சரி செய்தேன் என்றார்.


வங்கியில் கேஷியர் பொறுப்பில் இருப்பவர் தவறு செய்தால் அவரே முழுப்பொறுப்பு. வங்கி எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளாது. ஆக இந்த வருட தீபாவளி பணம் எடுத்தவருக்கெல்லாம் கொண்டாட்டமாக இருக்க, பணம் கொடுத்த கேஷியருக்கோ (இழப்பில்) திண்டாட்டமாய் முடிந்தது. 

சரி பார்த்து கொடுக்க வேண்டியதுதானே எனலாம். ஆனால் அந்த டென்சனான சூழ்நிலையில் முன்னூறுக்கும் அதிகமான காசோலைப் பரிமாற்றம், மூன்று கோடி பட்டுவாடா செய்தால் புரியும் அதன் கஷ்டம். வாடிக்கையாளர்கள் சற்றே பொறுமை காத்திருந்தால் அவர் இன்னும் சற்று பொறுமையாக பணத்தை கையாண்டிருபார்ர். அப்போது இழப்பும் நேர்ந்திருக்காது.

உள்ளூர அவரின் வருத்தம் எனக்கும்  ஏற்பட்டது. வாடிக்கையாளரின் அவசரங்களைப்பற்றி சில வார்த்தைகள் ஆறுதலாகச் சொல்லி விடைபெற்றேன்.






நீங்கள் வங்கிக்கு போகும் நபராக இருந்தால் இதை மனதில் வைத்துக்கொண்டு சற்றே பொறுமை காக்கலாமே:)

17 comments:

  1. நல்ல பதிவு... பாவம் அந்த அதிகாரி.. அரசு அலுவலர் என்றாலே திமிர்பிடித்தவர்.. மக்களை மதிக்கத் தெரியாதவர் என்ற நிலைதான் உள்ளது.. அதில் உண்மை இல்லாமலும் இல்லை.. அப்படி ஒரு பெயரை அவர்கள் வாங்கி வைத்திருப்பதால்தான்.. இது போல சிலர் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.. இது போன்ற கூட்ட நாளில் விடுங்கள்.. மற்ற நாட்களில் அவர்கள் வாடிக்கையாளர்களை (அனைவரையும் அதிகம் பணம் பரிவர்த்தனை செய்பவர்களை மட்டுமல்லாமல்) மதித்து நடப்பவர்களாக இருந்தால்.. மக்கள் ஏன் இவ்வளவு கோவப்படுகிறார்கள்..

    ReplyDelete
  2. மற்ற நாட்களில் அவர்கள் வெட்டியரட்டை அடித்துக் கொண்டு அதனாலேயே தாமதம் செய்வதை நானே அனுபவித்திருக்கிறேன்.. இந்த நிலைக்கு இந்த இழப்புக்கு அந்த அதிகாரிதான் முழு பொறுப்பு மக்கள் அல்ல.. பணம் வாங்க வந்த அனைவரிடமும் முன்னர் அவர் நடந்து கொண்ட விதம் எல்லாம் சேர்த்து அவருக்கு இப்படி ஒரு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. முடிந்தால் அந்த வங்கி அதிகாரிக்கும் உங்கள் அறிவுரையைக் கூறுங்கள்..

    ReplyDelete
  3. கடைசி நேரத்தில் எல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று நினைப்பதனாலேயே இத்தனை அவஸ்தைகளும். மிக சிறந்த பதிவு.

    ReplyDelete
  4. அந்த கேஷியரோட நிலைமை ரொம்ப பாவம்தாங்க..

    அதேபோல கேஷியரா வேலை செய்றவங்களும் மக்களோட நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்கனும்.. நீங்க குறிப்பிட்ட நாளை சொல்ல வரல.. சாதாரண நாட்களில் பேங்குல வேலை செய்றவங்களால பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுத்தான் திரும்புவாங்க..

    நகர்புறங்களை விடுங்க.. அங்கேயெல்லாம் மக்கள் கொஞ்சம் உஷாராயிட்டாங்க.. கிராமப்புறங்கள்ல படிப்பறிவு இல்லாம, பேங்க் சிலிப்பை ஃபில் பண்ணத்தெரியாம திருதிருன்னு முழுச்சிட்டு நிறைய பேர் இருப்பாங்க்.. யார்கிட்டயாவது ஃபில் பண்ணிட்டு வருவாங்க.. அது தப்பா இருந்தா கெளண்டர்குள்ள உக்காந்திருக்கவங்க அவங்களை பேச்சர பேச்சிருக்கே.. பாவமா இருக்கும்..

    ReplyDelete
  5. மிக நல்ல பதிவு நண்பரே

    நாம் நடந்து கொள்ளும் முறையிலேயே நமது வாடிக்கையாளரும் நடந்து கொள்வார்கள். எங்களுடைய வங்கி ஒன்றில் நீண்ட காலமாக கேஷியராக உள்ளார். அவர் இந்து சகோதரர், எங்கள் கிராமத்தில் எல்லா மதத்தவரும் இருக்கிறொம் என்று சொன்னாலும் முஸ்லீம்கள் அதிகம், இருந்தாலும் நாங்கள் போனால் கரக்டாக பழைய ஆட்களை ஞாபகப்படுத்தில் பெயர் சொல்லி என்ன பாய், எப்படி இருக்கீங்க என்று ஒரு ஆத்மார்த்தமான அன்புடன் எங்களையும் மற்ற விவசாயிகளையும், விசாரிப்பார். அவர் அப்படி எல்லாம் நடந்து கொள்வதலாயே அவர் மீது எங்களுக்கு கோவம் வருவதில்லை. என்ன ராஜ் அண்ணன் எப்படி இருக்கீங்கன்னு கேட்டால் கூட்ட நேரத்திலையும், பாத்தீங்கள்ள எவ்வளவு கூட்டம்னு என்று கோபப்படாமல் சகஜமாக பேசுவார். அவர் எங்கள் கிராமத்துக்கு உட்பட்ட கிராமத்தில் இருக்கிறார் என்றாலும், வேறு எந்த கிளைகளுக்கும் செல்ல விரும்பாமல் இங்கேயே இருக்க நினைத்து அதிக நாள் இங்கேயே இருந்து மக்களுக்கு சிரித்த முகத்துடன் பணியாற்றி வருகிறர்.

    ReplyDelete
  6. அந்த கேஷியரின் நிலை மிகவும் பரிதாபத்திற்க்கு உரியது,,அதே சமயம் 100ரூ கட்டுக்கு பதில் 500ரூ கட்டு பணத்தை வாங்கிசென்ற அந்த நபரின் செயல் மிகவும் கீழ்த்தரமானது..இது போன்ற நபர்களால் தான் கூட்டநேரத்தில் வங்கி ஊழியர்கள் எல்லோர்மீதும் எரிந்து விழுகிறார்கள்..

    ReplyDelete
  7. நல்ல பதிவு
    நாம் நடந்து கொள்ளும் முறையிலேயே நமது வாடிக்கையாளரும் நடந்து கொள்வார்கள். // உண்மைதான்!

    ReplyDelete
  8. கிணற்று தண்ணியை வெள்ளமா அடித்து கொண்டு போக போகுது? எதற்கு இப்படி அவசரப்படுத்தி மொய்த்து கொண்டார்களோ? மொத்தத்துல அந்த காஷியர் ரொம்ப பாவம்....

    ReplyDelete
  9. நம்ம ஊர்ல வரிசைப்படி நிக்கீறதுங்கீறது ஏதோ இழிவான செயல்ங்கிற மனோபாவமா இருக்கு. எந்தக் கவுண்டரானாலும் கூட்டம்தான்.. பாவம் கேஷியர்.. எனினும் இம்மாதிரிச் சமயத்தில் மேலாளரோ, பாதுகாவலரோ அல்லது கேஷியரேவோ சற்றுக் கடுமையாக வரிசையில் நிற்கும்படி அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

    ReplyDelete
  10. பிரியமுடன் ரமேஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு பிரியமில்லாத வார்த்தைகளில் பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்களே!

    வங்கி ஊழியர்கள் அத்தனைபேரும் உத்தமர்கள், மக்கள் சேவைக்கென்றே பிறந்தவர்கள் என்று, ஒரு முன்னாள் வங்கி ஊழியனான நானே சொல்லிக் கொள்ளப் போவதில்லை. வங்கி ஊழியர்களும், இந்த ஜனத் தொகையில் இருந்து தான் வருகிறார்கள்.மொத்த ஜனத்தொகையில் என்னென்ன நல்ல, கெட்ட குணங்களைப் பார்க்க முடியுமோ, அதையே வங்கி ஊழியர் என்று மட்டுமில்லை, எந்த இடத்திலும் பார்க்க முடியும். (அரசு ஊழியர்களை மட்டும் இந்தப் பொதுமைப் படுத்துதலில் சேர்க்காதீர்கள்!)

    இங்கே காசாளர் மீது குற்றமில்லை! வாடிக்கையாளர்கள் மீது கூடக் குற்றம் சொல்ல மாட்டேன்! அந்தக் கிளை மேலாளருக்குக் கொஞ்சமாவது தொழில் தெரிந்திருந்தால், பண்டிகை நேரங்களில் எவ்வளவு ரொக்கம் திருப்பூர் மாதிரி நகரங்களில் தேவைப்படும் என்ற ஞானம் இருந்திருக்கும். முன்கூட்டியே ஏற்பாடு செய்து, நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். நிதித் துறையில் பணியாற்றுகிற கிளை நிர்வாகிகளுக்கு இந்த அடிப்படை ஞானம் கூட இல்லை என்பது தான் கசப்பான உண்மை. உள்ளூர் கிளை நிர்வாகி வாயில் விரல் சூப்பிக் கொண்டிருந்தாராமா?

    அடுத்து, வாடிக்கையாளர்கள்! கொஞ்சம் காத்திருந்தால், பணம் கிடைக்கும் என்று உத்தரவாதமிருந்தால், நிச்சயம் கோபப்பட்டிருக்க மாட்டார்கள். பத்துப் பேருக்குக் காசு கொடுத்தவுடனே ரொக்கம் காலி, அடுத்து எதோ ஒரு இடத்தில் இருந்து ரொக்கம் வந்தால் தான் தங்களுக்குப் பணம் கிடைக்கும் என்ற நிலையில் கொந்தளிப்பது இயல்பே! அவர்களை சமாதானப் படுத்தி, அவர்களைப் பொறுமையாக இருக்கும்படி கூட செய்யத் தெரியாதவர்கள், எதற்காக, கிளை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் என்று பதவியில் இருக்கிறார்களாம்?

    ReplyDelete
  11. மூன்று கோடி. மிகக்குறைவு. ஒரு நிறுவனமே எடுத்த தொகை ஏழு கோடி. கணக்குப் போட்டுக் கொள்ளுங்க.

    பின்னூட்டத்தில் வந்த இரண்டு தரப்பும் உண்மை தான். இது ஒரு வகையில் கேஷியர் என்பவர் சர்வாதிகாரி போலத்தான் செயல்படவேண்டும். இல்லாவிட்டால் இழப்பு அவருக்குத்தான்.

    உங்கள் பொறுமை நடைமுறை வாழ்க்கையிலும் இருப்பதற்கு வாழ்த்துகள் சிவா.

    ReplyDelete
  12. இது சம்பந்தமா நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க... இது பேங்க் ஆப் இந்தியாவில் நடந்தது....இதுவும் அதுவும் ஒண்ணா?

    ReplyDelete
  13. என்னுடைய பெயர் குறித்த தனிப்பட்ட விமர்சனங்கள் இங்கு தேவையில்லை நண்பரே...


    அரசு ஊழியர்களை மட்டும் இந்தப் பொதுமைப் படுத்துதலில் சேர்க்காதீர்கள் என்று சீறுகிறீர்கள்.. ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் பத்தி பத்தியாய் உங்கள் மேலதிகாரியைப் பற்றி குறை சொல்லியிருக்கிறீர்கள். அவரும் ஒரு அரசு ஊழியர்தானே.. அதனால் நான் வாதிடுவதற்கு ஒன்றும் இல்லை... அதே நேரம் அரசு ஊழியர்கள் அப்படி நடந்து கொள்வதால் ஒட்டுமொத்த சமூகமும் அப்படித்தான் இருக்கிறது என்று பொதுமைப்படுத்தாதீர்கள்..

    நீங்கள் ஒரு முன்னால் அரசு ஊழியன் என்பதை மறந்துவிட்டு.. எப்படி அவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்று யோசியுங்கள்... அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களிலும் பாதிப்புக்களையே அனுபவித்துவிட்டு அவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ள நாங்கள் ஒன்றும் மகாத்மாக்கள் அல்ல...

    ஒரு அரசு ஊழியருக்கு பாதிப்பு என்றவுடன் அந்த பாதிப்பை விளக்கி பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் உங்களுக்கு.. அந்தத் துறையிலேயே இருப்பதால் பொதுமக்கள் படும் அல்லல்கள் தெரியாமல் போக வாய்ப்பில்லை.. அதைப்பற்றி குறைந்தபட்சம் அரசு ஊழியர்கள் மத்தியிலாவது விவாதித்து அறிவுரை கூறியிருக்கிறீர்களா?

    ReplyDelete
  14. \\வெண் புரவி said...
    இது சம்பந்தமா நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க... இது பேங்க் ஆப் இந்தியாவில் நடந்தது....இதுவும் அதுவும் ஒண்ணா\\

    எல்லா வங்கியிலும் எல்லா கேஷியருமே பெரும்பாலும் டினாமினேசன் எழுதித்தான் பணம் தருகிறார்கள். அதுவும் ஆக்ஸிஸ் பேங்கில் அந்த டினாமினேசன் சரி
    என நாம் ஒத்துக்கொண்டதாக மீண்டும் கையெழுத்து வாங்கித்தான் தருகிறார்கள்.

    இந்த நிகழ்வில் கேமரா கைகொடுத்துவிட்டது. மேலும் டினாமினேசன் கை கொடுத்துவிட்டது.

    என் இடுகையின் நிகழ்வில் டினாமினேசன் எழுதியதிலேயே கோட்டை விட்டு விட்டார்போல.
    கண்டுபிடிக்கமுடியவில்லை...

    உங்களைப்போல நானும் தொழில் சூழ்நிலையில் அதிருப்தியாக உள்ளேன்:)

    ReplyDelete
  15. 45000

    ரொம்பக் கொடுமைங்க!

    ReplyDelete
  16. இதில் மக்களின் தவறு எதுவுமே இல்லை. யாரும் முன்கூட்டியே வந்து பணம் எடுக்கமுடியாது காரணம். சம்பளம், போனஸ் கடைசிலநேரத்தில்தான் கொடுக்கப்படுகிறது.

    வங்கிதான் சரியான முறையின் பிளான்செய்திருக்கவேண்டும். அந்த கேஷீயரின் செய்ததவறுக்கு வங்கியே பொறுப்பு. பாவம் அவர் மட்டும் என்னசெய்வார்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)