எதிரே வரும் குதிரைகள் உரசும். அல்லது நம் குதிரை செல்லும்போது நமது கால் பக்கவாட்டில் பாறைகள், இரும்பு பைப் தடுப்பில் மோத வாய்ப்பு உண்டு. அதனால் இரண்டு கால்களையும் சமயத்திற்கு ஏற்றாற்போல் உள்ளடக்கி, மேலே தூக்கி சமாளித்துக்கொள்ள வேண்டும். இன்னும் எதிரே மோத வரும் குதிரையை தள்ளிக்கூட விடவேண்டி வரும்:)
நடந்து வருகிறவர்கள் நிறையவே இருந்தனர். அவர்கள் மீதும் குதிரைகள் மோதின. அவர்கள் கையில் தடியை வைத்துக்கொண்டு ஓரளவு சமாளித்து வந்தனர். வயதானவர்கள் கூட 14 கி.மீ நடந்தே வருகின்றனர்.
மலை ஏறும்போதே குதிரைகள் பாதையின் விளிம்பில் இயல்பாக நடந்து செல்கின்றன. அப்போது எங்கே சரிவில் விழுந்துவிடுவோமோ என நமக்கு சற்று கலக்கமாகத்தான் இருக்கும்:). ஆனால் எது பற்றியும் கவலைப்படாமல் நான் குதிரை மீது அமர்ந்திருந்தேன். ஏனெனில் நம்மை விட குதிரைகள் இந்த விசயத்தில் புத்திசாலிகளே. எந்தக்குதிரையும் இடறவோ, தடுமாறவோ இல்லை. விளிம்பில் நடக்கும்போது வேறு குதிரை வந்து மோதினால்கூட எளிதாகச் சமாளித்துக்கொண்டன. தொடர்ந்து 7 கிமீ சென்றதும் வருகின்ற இடம் ராம்பாரா. இந்த இடத்தில் குதிரைக்கு வெல்லம் வாங்கித்தந்தனர். குதிரையின் உணவே அந்த வெல்லம்தான். இது எந்த அளவுக்கு சக்தி தருகிறது எனப்பாருங்கள் !!
இடையில் சிறு சாரல் மழை பெய்ய கீழிருந்தே ஜெர்கின் போட்டு கொண்டு சென்ற்தால் நனையவில்லை. சுமார் 20 நிமிட ஓய்விற்குப் பின் குதிரை மற்றும் குதிரைக்காரனின் செலவுகளை நமது பங்களிப்பாக கொடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தோம்.
இதற்குமேல் இயற்கையின் அற்புதங்கள் தான் ஆட்சி செய்தன. மரங்கள் அற்ற பசுமை புல்வெளிகளுடன் பனிஆறுகள் அருவிகளாய் கொட்டிக்கொண்டிருக்க பார்க்க இரு கண்கள் போதவில்லை.
சமதளப்பகுதியும் அவ்வப்போது வரும்:)
மெள்ள மெள்ள உயரே ஏறிச் சென்றடைந்தோம். குதிரைக்காரன் நாங்கள் வரவேண்டிய இடத்தைக் அடையாளம் காட்டி விட மேலே ஏறிச் சென்றோம். கோவிலின் மேலே சென்றவுடன் நிறைய கடைகள் இருந்தன. பூசைச் சாமன்கள் தேவையானதை வாங்கிக்கொள்ளலாம்.
இந்தப் பயணத்தில் நான் எங்குமே பார்த்திராத வகையில் நமது தமிழ்நாட்டுக்கோவிலின் அமைப்பில் பார்த்தவுடன் மனதில் அப்படியே பதிந்தது. கருவறையினுள் இருந்த இரண்டடி உயரமுள்ள கோவிலின் பின்னணியில் இருக்கும் உயர்ந்த இரு மலைகளின் பிரதிபோல் அமைந்த கேதார்நாத் ஆண்டவரைத் தரிசித்து விட்டு வெளியே வந்தோம். இங்கும் நமது வலையுலக இளவலின் அனுபவத்தைப் படித்துவிடுங்கள்:))
கோவிலின் சுற்றுப்பிரகார மதிலில் நான் கண்டது.....
இமயமலையின் மடியில் எங்கோ அமைந்திருக்கின்ற கேதர்நாத் என்கிற திருத்தலத்தில் அமைந்த இறைவனை தேவார திருப்பதிகங்களாக 1300 ஆண்டுகளுக்கு முன்னதாக பாடியுள்ளனரே? பாதை வசதிகூட இல்லாத காலத்தில் கால்நடையாகவோ, குதிரையிலோ சிரமப்பட்டு எப்படி வந்து சேர்ந்தனர். இந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஏன் வரவேண்டும்? தன் உயிரை பணயம் வைத்து தமிழகம் எங்கே, கேதார்நாத் எங்கே இங்கே வரவைத்தது எது? என்ன தேடுதலோடு இங்கே வந்தனர்? இதை எல்லாம் நாம் யோசித்துப்பார்க்கவாவது ஒருமுறையாவது ஒவ்வொரு தமிழனும் இங்கே வரவேண்டும். பக்தி இரண்டாம்பட்சமாக இருந்தாலும் பரவாயில்லை.
அடையாளமற்று இருக்க, வாழ முயற்சித்துக்கொண்டு இருந்தாலும், இந்த கல்வெட்டைப்பார்த்தவுடன் நானும் தமிழன், என் மொழி பேசியவன் இவ்வளவு தூரத்தில், உயரத்தில் வந்து இந்த அகண்ட பாரத தேசத்தில் மற்றவர்களுக்கு முன்னதாக பாடல் பாடி அருள் உலகிற்கான தனது கடமையைச் செய்திருக்கின்றனரே, எதை எதிர்பார்த்து இப்படி பாடல்கள் பாடினார்கள்?, தமிழனுக்கு தேவையான அனைத்தையும் தன்னுள் இந்த மொழி வைத்திருந்ததே காரணம் என பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.
தமிழனைத் தமிழன் காப்பாற்றாவிட்டாலும், தமிழ் அவனை நிச்சயம் காப்பாற்றியே தீரும்...
பயணம் தொடரும்.
தமிழா தமிழா...நாளும் உன் நாளே.. :)
ReplyDeleteஅடையாளமற்று இருக்க, வாழ முயற்சித்துக்கொண்டு இருந்தாலும், இந்த கல்வெட்டைப்பார்த்தவுடன் நானும் தமிழன், என் மொழி பேசியவன் இவ்வளவு தூரத்தில், உயரத்தில் வந்து இந்த அகண்ட பாரத தேசத்தில் மற்றவர்களுக்கு முன்னதாக பாடல் பாடி அருள் உலகிற்கான தனது கடமையைச் செய்திருக்கின்றனரே, எதை எதிர்பார்த்து இப்படி பாடல்கள் பாடினார்கள்?, தமிழனுக்கு தேவையான அனைத்தையும் தன்னுள் இந்த மொழி வைத்திருந்ததே காரணம் என பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.
ReplyDelete.....ரொம்ப சந்தோஷமான செய்தி - அதுவும் படங்களுடன் பார்த்தது மகிழ்ச்சி. மிக்க நன்றி.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
ReplyDelete