"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, January 24, 2011

சதுரகிரி மலைப் பயணம். பகுதி 1

சதுரகிரி மலைப்பயணத்தின் முன்னதாக என் மனநிலை என்ன என்பதை கொஞ்சம் நினைவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன். சதுரகிரி பற்றி ஆனந்தவிகடன் முக்கியத்துவம் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. இதற்குமுன் சதுரகிரியைப்பற்றி எனக்குத் தெரியாது. சதுரகிரி மலை குறித்த வரலாறு படிக்க படிக்க வியப்பே மேலிட்டது.

சித்தர்பெருமக்கள் மனிதர்களின் கால்படாத, இயற்கை செல்வங்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் தங்கி மனிதகுலத்திற்கு தங்களின் பங்களிப்பை செயல்படுத்திய வரலாற்று நிகழ்வுகள் பல செவி வழியாகவும், பாடல்கள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் இவைகளுக்கு சான்று இருக்கிறதா என்கிற தர்கக அறிவு யோசிக்கத்தான் செய்கிறது.

அவர்கள் கண்டுபிடித்த பல்வேறுவகையான மூலிகைகள், அவைகளின் பயன்கள் எல்லாம் உண்மைத்தன்மை வாய்ந்ததா என்றால் என்னளவில் சரியானவையே.

சுஜாதா தனது கேள்வி பதில் ஒன்றில் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டது எதிரி நாட்டவர் சீன எல்லைக்குள் வரக்கூடாது என்பதற்குத்தான். ஆனால் அவர்களுக்கு  எதிர்காலத்தில் வான் வழியாக பறந்து எளிதாக எதிரிகள் தாக்கலாம் என்கிற அளவில் விஞ்ஞானம் வளரும் என நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. தற்போது அந்த பெருஞ்சுவர் காட்சிப்பொருளாகவும், உலக அதிசயமாகவும் மட்டுமே விளங்குகிறது. ஆக கட்டப்பட்ட நோக்கம் வேறு, அது பயன்படுகின்ற நோக்கம் வேறாக இருக்கிறது.

அதுபோல் தற்போதய பொதுநலம் கருதாத சுயநலம் மிகுந்தஅரசியலில், பணம் என்பது பண்டமாற்றத்தின் அடையாளம் என்பது போய், எதற்கு என தெரியாமல் கோடி,கோடியாய்ச் சேர்த்து வைத்து வாழும் தற்காலத்துக்கு சித்தர்கள் தந்த மூலிகைத் தகவல்கள் தேவையானதாக இருக்கிறதா என்பது ஆய்வுக்கு உரியதே.

சித்தர் பெருமக்கள் வாழ்ந்த காலத்தில் உண்ண  உணவு, இருக்க இடம், உடுக்க உடை இவை மட்டுமே அத்தியாவசியமாக இருந்தது. மனம் மாசுபடாமல் இருந்த வெள்ளந்தியான மக்கள் வாழ்ந்த காலத்தில் கல்வி, கேள்வி, கலைகள் வள்ர்ச்சி அடைந்த காலகட்டத்தில், அவர்களின் உள்தேடுதல் அதிகமாகி, இறை சக்தியை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்படி அவர்கள் உணரும் விதத்திற்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்கிற கருணை உள்ளத்தோடு, அன்போடு, தான் பெற்றதை இவ்வையகம் பெறவேண்டும் என்கிற பெருநோக்கோடு, கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையிலும் தான் உணர்ந்ததை, அனுபவித்ததை பாடல்களாக நமக்கு தந்து சென்றனர்.

ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொருவிதம். எனவே இறைஉணர்வு பெற பலவேறு வழிமுறைகள் தேவை என்பதை உணர்ந்து அந்த வழிமுறைகளை தான் கண்டவாறு, அனுபவித்து உணர்ந்தவாறு பலரும் சொல்லி இருக்கின்றனர். 

அந்த வழிமுறைகள் தற்காலத்தில் தேவையா என்றால் அவைகள் அமுதமாக இருக்கலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் தகுதிவாய்ந்த பாத்திரமாக நாம் இருக்கிறோமா எனபதே என்னுள் எழும் கேள்வி.

சித்தர்கள் சொல்லியவை எல்லாம் தகுதியானவரை தரம் உயர்த்துவது, எவரையும் தகுதிப்படுத்தவும் வல்ல படிப்படியான வழிமுறைகள் தாம். இதற்கு நாம் காலிப்பாத்திரமாய் இருக்கவேண்டும். மிகுந்த கணக்கீடுகளோடு சித்தர் பெருமக்களை அணுகும்போது நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.

சித்தர்களின் மூலிகைக்குறிப்புகள் உண்மைகள் விரவி இருந்தபோதும்,  அவற்றின்  தேவை இப்போது அவசியம் இல்லை என்பதே என் எண்ணம். வெறுமனே உடல்நலம் என்றால் சரிதான். இறைஉணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் மனதையும் உடலையும் செம்மைப்படுத்தவென உள்ள மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான வாழ்க்கை முறையோ, மனநிலையோ நம்மிடம் தற்சமயம் இல்லை எனப் பொதுவாகச் சொல்லலாம்.

எனவே சதுரகிரி குறித்து என் மனதில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றியே பயணத்தை 24.12.2010 அன்று தொடங்கினேன்..



பயணம் தொடரும்...
நிகழ்காலத்தில் சிவா

11 comments:

  1. தொடர்ந்து எழுதுங்க... நல்லா இருக்குதுங்க

    ReplyDelete
  2. ஆர்வத்தை உண்டாக்கி உள்ளது ஆரம்பம். தொடருங்கள்.

    ReplyDelete
  3. இது போன்ற எழுத்து நடையில் எழுதி சில சமயம் ஆச்சரியப்படுத்தி விடுறீங்க. சுஜாதா சொன்ன வார்த்தைகளை படித்து யோசித்துக் கொண்டுருககின்றேன்.

    வருகின்ற வெள்ளிக்கிழமை திருப்பூரில் புத்தக கண்காட்சி சிவா?

    ReplyDelete
  4. சித்ரா, தமிழ் உதயம் தொடர்ந்து எழுத எனக்கு உற்சாகமூட்டுவதற்கு நன்றியும் வாழ்த்துகளும்...

    ReplyDelete
  5. புத்தகக்கண்காட்சி 18 தேதி முதல் 26 தேதி வரை..

    எழுத்து நடை என்பது சும்மா மனதில் தோன்றுவதை முடிந்தவரை எழுத்தில் கொண்டு வர முயற்சிப்பதுதான்..

    ஆனால் உங்கள் எழுத்தில் பத்தில் ஒரு பாகம்தான் என்னுடையது..ஹஹ்ஹா

    ReplyDelete
  6. சதுரகிரிக்கு போகவேண்டும் என்பது என்னுடைய எண்ணக்கிடக்கையும் கூட...

    உங்களை மானசீகமாய் தொடர்ந்து விட்டு அப்புறம் தனியே சென்றுகொள்கிறேன்....!

    ReplyDelete
  7. சந்தன மஹாலிங்கத்துக்கு அரோஹரா..!

    ReplyDelete
  8. ///சித்தர்கள் சொல்லியவை எல்லாம் தகுதியானவரை தரம் உயர்த்துவது, எவரையும் தகுதிப்படுத்தவும் வல்ல படிப்படியான வழிமுறைகள் தாம். இதற்கு நாம் காலிப்பாத்திரமாய் இருக்கவேண்டும். மிகுந்த கணக்கீடுகளோடு சித்தர் பெருமக்களை அணுகும்போது நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.

    சித்தர்களின் மூலிகைக்குறிப்புகள் உண்மைகள் விரவி இருந்தபோதும், அவற்றின் தேவை இப்போது அவசியம் இல்லை என்பதே என் எண்ணம். வெறுமனே உடல்நலம் என்றால் சரிதான். இறைஉணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் மனதையும் உடலையும் செம்மைப்படுத்தவென உள்ள மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான வாழ்க்கை முறையோ, மனநிலையோ நம்மிடம் தற்சமயம் இல்லை எனப் பொதுவாகச் சொல்லலாம்///சித்தர்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும்,பேரறிவையும்,அவர்களின் செயல்பாடுகளையும், உங்களுடைய சாதாரண சிற்றறிவினால் ஆராய முற்பட்டால்,குருடர்கள் யானையை தடவிப்பார்த்து விளக்குமாறு,தூண்,சுவர்,முறம்,உலக்கை என்றும் அவர்கள் தடவிப் பார்த்த இடத்துக்குத் தக்கவாறு கூறுவது போல அமையும்.கொஞ்சம் நான் கடுமையாக கூறுவதாக உணர்ந்தால் மன்னிக்கவும்.ஏனென்றால் சித்தர்கள் எழுதியுள்ள நூல்களைப் படித்து முடிக்கவே ,பல பிறவிகள் வேண்டும்.அவற்றை செய்து பார்க்க பல நூறு பிறவிகள் வேண்டும் எனில் இந்த ஒரு பிறவியில் நீங்கள் எத்தனை சித்தர் நூல்களைப் படித்துவிட்டு இப்படி எழுதுகிறீகள்.மீண்டும் சந்திப்போம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. \\சித்தர்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும்,பேரறிவையும்,அவர்களின் செயல்பாடுகளையும், உங்களுடைய சாதாரண சிற்றறிவினால் ஆராய முற்பட்டால்,குருடர்கள் யானையை தடவிப் பார்த்த இடத்துக்குத் தக்கவாறு கூறுவது போல அமையும்.\\

    உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்...எனக்குத் தெரிந்த அளவு சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான்...


    \\கொஞ்சம் நான் கடுமையாக கூறுவதாக உணர்ந்தால் மன்னிக்கவும்.\\

    நண்பர்களுக்குள் மன்னிப்பு எதற்கு..:))) இந்த இடுகை வணிக ரீதியான இந்த உலகை, பெரும்பான்மையினரை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்காக எழுதப்பட்டது. தங்களைப்போன்ற தீவிர ஆன்மீக பயிற்சியாளாருக்கானது அல்ல...

    எனெனில் உங்களின் இடுகைகள் தொடர்ந்து படித்தே வருகிறேன். அவை சாதராண நடையில் இல்லாது ஏகாந்த மனநிலையில் இருந்து தானக வருகிற வார்த்தைகளாக இருக்கும்,

    நான் எழுதுவது ஆன்மீகம் குறித்த அதிகம் தெரியாதவர்களுக்காக அறிமுகம் மட்டுமே.....

    ReplyDelete
  10. கொஞ்சம் அதிகக் கடுமையாக கூறிவிட்டேனோ என்று என் மனம் வருந்துகிறது.நல்ல புண்ணிய காரியம் புரிந்து வரும் தாங்கள் தவறான கருத்தைக் கூறிவிடக் கூடாது என்றே நான் அவ்வாறு எழுதினேன்.மேன்மேலும் தங்கள் கட்டுரைகள் நலம் புரியட்டும்.பல குப்பை வலைப் பூக்களுக்கு இடையே தங்களைப் போல நல்ல வலைத் தளங்களைப் பார்த்தால் மகிழ்ச்சி வரும்.எமக்குப் பிடித்த வலைத் தளங்களில் உங்கள் வலைத் தளமும் ஒன்று.இறையருள் உங்களுக்கு பூரணமாக உண்டாகட்டும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. வருத்தம் ஏதும் வேண்டாம் திரு.சாமீ அழகப்பன் அவர்களே..

    தாங்கள் என் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை ஏற்கனவே உணர்ந்துள்ளேன்:)

    வாழ்த்துகள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)