"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, January 1, 2011

ஆனந்தத்தின் பிரகடனம் - (ஈஷா)

மனிதன் எந்தவொரு செயலில் ஈடுபட்டு இருந்தாலும் அதன் அடிப்படை, எந்த விதத்திலாவது ‘தான்’ ஆனந்தமாக இருக்கவேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம்தான். ஆனால் குழந்தைகளையும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்த்தால் யார் ஆனந்தமாக இருக்கிறார்கள்.? ஏன்? :)

நீங்கள் கவனித்துப்பார்த்தால் சந்தோசம், ஆனந்தம் எதுவாக இருந்தாலும் எப்போழுதுமே அது உங்கள் உள்ளிலிருந்துதான்
வெளிப்பட்டு இருக்கிறது.  காரணம் வெளியே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றாலும் இந்த ஆனந்தத்திற்கு மூலம் நமக்குள்தான் இருக்கின்றது.



தற்போது நீங்கள் ஆனந்தமாக இருக்க பல நிபந்தனைகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டுமெனில் உலகமே நீங்கள் நினைத்தபடியும் சொல்கிறபடியும் நடக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்தவிதமாக பலதும் நடக்கவில்லை என்பதே உங்களின் ஒரே பிரச்சினை.

வெளிச்சூழ்நிலை என்பது ஒருபோதும் நீங்கள் நினைத்தவாறு நடக்காது. ஆனால் உள்நிலை பரிமாணமாவது நீங்கள் நினைத்தவாறு நடக்க வேண்டும் இல்லையா?

நீங்கள் நூறு சதவீதம் கட்டுப்பாட்டினைக் கொண்டு வர முடிகிற ஒரே இடம் உங்கள் உள்நிலைதான்.

ஆனந்தமும் இன்பமும் ஒன்றல்ல. இன்பம் என்பது எதையோ அல்லது யாரையோ சார்ந்தே இருக்கிறது. ஆனந்தம் எதையும் சார்ந்திருப்பதில்லை. அது உங்கள் இயற்கையான தன்மை. ஆனந்தம் என்பது வெளித்தூண்டுதல் இன்றி உங்களுக்குள் உணர்வது எனப் புரிந்து கொண்டால் போதும்.

ஆனந்தமாக இருந்தால் அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் அதனுள் இருக்கிறீர்கள் அவ்வளவே:) அமைதியும், மகிழ்ச்சியும் ஒருவது வாழ்வின் இறுதிக்குறிக்கோள்கள் அல்ல. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது
என்பது வாழ்வின் அடிப்படைத்தேவை. உரிமை

மகிழ்ச்சியை தேடுவதாக நம் செயல்கள் இல்லாமல், ஆனந்தத்தின் வெளிப்பாடாக நம் செயல்கள் இருக்குமாறு வாழ வேண்டும். அப்போது தேவைகளுக்கு ஏற்பவே செயல் செய்வீர்கள்.

 மகிழ்ச்சி என்பது ஆரம்பநிலை, நமது செயல்கள் உங்களது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தால், வாழ்க்கை மிகமிக வேறுபட்ட பரிமாணத்தில் நிகழும். இது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைச் சார்ந்து இல்லை. உங்கள் உள்நிலையைச் சார்ந்தே இருக்கிறது.

தனிமனிதன் ஆனந்தமாக இருக்க முடியுமே தவிர சூழ்நிலைகள் எப்போதும் ஆனந்தமாக இருப்பது என்பது சாத்தியங்கள் இல்லை. சூழ்நிலை என்பது உங்கள் ஒருவரால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவது அல்ல. ஒவ்வொரு கணத்திலும் நூறுவிதமான சக்திகள், காரணிகள் அதில் செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் உள்சூழ்நிலையை நிர்ணயிப்பதில் நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்.

உங்களுக்குள் உங்களால் உள்சூழ்நிலையை ஆனந்தமாக உருவாக்க முடியவில்லை என்றால் அன்றாடம் பல நூறு மனிதர்களைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலையை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?

சுற்றிலும் இருப்பவர்கள் முட்டாள்தனமாக இருக்கும்போது(அப்படி இருப்பதாக நீங்கள் நினைக்கும்போது) நீங்கள் புத்திசாலியாக இருப்பது மிகவும் தேவையாக இருக்கிறது.

எப்பொழுது உள்நிலையையும் வெளிச்சூழ்நிலையையும் சுகமாகவும் ஆனந்தமாகவும் வைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் என்று உங்களுக்கு புரிந்திருக்கிறதோ அப்போது வாழ்க்கையில் நீங்கள் எந்த செயல் செய்தாலும் ஒவ்வொரு க(ஷ)ணத்திலும், ஒவ்வொரு எண்ணத்திலும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு உணர்விலும் இதனை நாம் வெளிப்படுத்த வேண்டும்

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? என்பது உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.இந்த மொத்த உலகையும் புரிந்துகொண்டு எப்படி இயங்கவேண்டுமோ நீங்கள் ஏன் அப்படி இயங்கக்கூடாது?

உங்களுக்கு மற்றவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையின் கீழ் வாழ விருப்பமா? அல்லது உங்கள் சொந்த புரிந்து கொள்ளுதல் மற்றும் தகுதியின் கீழ் வாழ விருப்பமா?


இதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்கள் கையில்தான் உள்ளது:)

நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது மிக மிக ஏற்றுக்கொள்பவராக இருக்கிறீர்கள் இல்லையா? அதுமட்டுமல்ல. நீங்கள் எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்வீர்கள். ஏனென்றால் மறைப்பதற்கோ பயப்படுவதற்கோ எதுவுமில்லை.

ஆனந்தமாகவும் அமைதியாகவும் இருப்பது வாழ்வின் நோக்கமல்ல. இறுதியுமல்ல. அது வாழ்வின் ஆரம்பம்.............


புத்தாண்டு வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

3 comments:

  1. புத்தாண்டு தினத்தில் இந்த உண்மைகளை திரும்பத்திரும்ப பலமுறை படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்....

    இது உங்கள் வாழ்வில் முக்கியமான நாளாக மாறும்..

    பலருக்கும் சென்று சேர தமிழ்மணம், தமிழிஷில் ஓட்டு போடுங்களேன்

    ReplyDelete
  2. //உங்களுக்கு மற்றவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையின் கீழ் வாழ விருப்பமா? அல்லது உங்கள் சொந்த புரிந்து கொள்ளுதல் மற்றும் தகுதியின் கீழ் வாழ விருப்பமா?//

    அதி முக்கிய கேள்விகள்.

    ஆக்க பூர்வ சிந்தனைகளைக் கிளர்த்தும் கேள்விகள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Too good,

    ----

    Trip posts are really good,

    Naan ponappa gnanasambatha padam mattum thaan irunthathu, almost ellaa paadal karkkalum vilunthu
    Vittathu during my 3rd trip to kedar

    Really I am happy now after saw ur trip photos and new stones with devaram and sundarar image :)

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)