"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, August 23, 2012

என்ன நடக்குது இங்கே - 4

ஆன்மீகம் என்பதை முழுமையாக புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில், ஏற்கனவே நாம் இந்த வலைதளத்தில் ஆன்மீகம் குறித்து கொஞ்சம் பேசி இருப்போம் அதன் தொடர்ச்சியாகவே இந்த இடுகைகளும் பயணிக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாகப்புரியும்.

இங்கு ஞானமார்க்கத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டு வருகிறது. பக்தி மார்க்கத்தை என்ன செய்வது என்றால் இன்றைய சமூச சூழ்நிலைக்கு ஏற்ப போற போக்கில புரிந்து எடுத்துக்கொள்ள முடிந்தால் கொஞ்சமா எடுத்துக்குங்க. இல்லைன்னா அதை பைபாஸ் பண்ணி போயிருங்க..,  போராட்டம் வேண்டாம், அதிக ஆராய்ச்சி வேண்டாம் என்பதே.,

 பக்தியோ, ஞானமார்க்கமோ மனதைத் தகுதிப்படுத்தாமல் வெற்றி சாத்தியமில்லை. அதற்கு மனதை தயார் படுத்தும் விதமாக மனம் எதுனுடனெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என உணர வேண்டும். இதற்கு விழிப்புடன் இருந்து தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை குறை கூறாமல், ஏன் வந்ததுன்னா.... அப்படின்னு தீர்ப்பு ஏதும் சொல்லாமலும்,  வந்த எண்ணத்தை கருமம் வந்துட்டுதேன்னு திட்டாமலும் ஒவ்வொரு எண்ணத்தையும் தொடர்ந்து சாட்சியாய் இருந்து கவனித்துவர வேண்டும். எழுதுவது எளிது. ஆனால் சிலநிமிடங்கள் கூட தொடர்ந்து செய்ய இயலாது என்பதுதான் உண்மை., மனம் தளராமல் முடிந்தவரை கவனித்து கவனித்து பழகவேண்டும்.

அப்போது கண்ணாடியின் மீது படர்ந்து பனித்திவலைகளைத் துடைத்துப்பார்ப்பது போல தன் மனதின் ஆழத்தில் மறைந்து இருக்கும் குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை  போன்றவைகளைக் கண்டு கொள்ள முடியும். இவற்றிற்கும் பக்திக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

 உடனடி விளைவாக இவைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் நம் மனதின் ஆற்றலை இழந்துகொண்டேதான் வருவோம். உபரியாக உடலும் பாதிக்கப்படும். மனம் இவற்றின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கிப் போராடிக்கொண்டு இருக்கும். இதைச் சரிசெய்ய, இயல்புக்கு வர உற்றுக்கவனித்தல் உதவும். மனதின்  உள்வாங்கும் திறன்,  பாராபட்சமின்றி அணுகும் திறன எல்லாமே சமநிலைக்கு வரும்.

மனதின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்துமுன் அதன் ஓட்டைகளை அடைத்து அதை செப்பனிடவேண்டியது அவசியம். தற்போதய ஆன்மீகரீதியான, யோகா சார்ந்த வழிமுறைகள் பெரும்பாலும்  இதை அதிகம் வலியுறுத்துவதில்லை.  பக்திவழியோ, ஞான வழியோ அவர்கள் தரும் குறிப்புகளுடன் நடக்கும்போது மனம் சக்தி பெற்று அமைதி அடைவதும், அதன் பின் இயல்பு வாழ்க்கையில் வழக்கம் போல சோர்வுற்று இருப்பதும் இதனால்தான்..

நம்முடைய அபிப்ராயங்கள், நம்பிக்கைகள் முடிவுகள் அனுபவங்கள் பிம்பங்கள் ஆகியவைகளை கொண்டுதான் நாம் அனைத்தையும் பார்த்து வருகிறோம். இவைகள் உண்மைநிலையை அவ்வாறே காட்டாமல் திரித்து ஒரு பொய்யான தோற்றத்தை உண்மை என தவறாககாட்டி வருகின்றன. உண்மைநிலையை நம்மால் கண்டுகொள்ள முடியாதபோதுதான் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுகின்றன். கூடவே குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றன.

உண்மைநிலையை மறைப்பதில் மனதின் தன்மைகள் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என உணருங்கள். ஆக ஒவ்வொன்றாக சரி செய்ய முயன்றால் கோபத்தை எப்படி தவிர்ப்பது? கவலையை எப்படி ஒழிப்பது, ? என்று தனித்தனியாக முயற்சித்தால் தற்காலிக வெற்றி மட்டுமே கிட்டும். நிரந்தரமான வெற்றி வேண்டுமானால் மனதை தன் அடையாளங்களில் இருந்து விலகி இருக்கப் பழக்கினால் கிடைக்கும்.

எழுதுவது போரடிக்கிறதா நண்பர்களே., நாலு ஜென்கதைகளைச் சொல்லி சம்பந்தமில்லாம இரண்டு நல்ல விசயங்களையும் சொன்னால் கட்டுரை சுவரசியமாகப் போகும். இவைகள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் என் தளத்தில் பகிரப்படும் விசயங்கள் சொற்பமாக சில இடங்களில் காணப்படலாம். ஆகவே புரியாதமாதிரி தோன்றினால் மீண்டும் மீண்டும் படியுங்கள்.,

தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

5 comments:

  1. நல்ல கருத்துக்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே! "நிரந்தரமான வெற்றி வேண்டுமானால் மனதை தன் அடையாளங்களில் இருந்து விலகி இருக்கப் பழக்கினால் கிடைக்கும்." என்ன அப்படியே விட்டுடீங்க? எப்படின்னு சொல்லிதர வேண்டாமா, நண்பா?

    ReplyDelete
    Replies
    1. அடையாளங்களில் இருந்து விலகி இருக்கப் பழக நேரம் வேண்டுமல்லவா? அதற்கான இடைவெளி இது. அப்படி பழகிவந்தால் அதன் பின்னர் பகிர்ந்து கொள்ளும் கருத்துகளை எளிதில் உள்வாங்க முடியும். தாமதிக்க இதுதான் காரணம்,.

      வெறுமனே தெரிந்து கொள்வது என்ற அளவில் இல்லாமல் செயல் வேண்டும் என்பதே என் அவா :)

      Delete
  3. வணக்கம் சகோ சிவா
    நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். நாம் பிடிக்கும், ஏற்கும் கருத்துகளைப் பாராட்வோம். உடன்படாத கருத்துகளை வெளிப்படையாக சொல்வோம்!!

    அந்த வகையில் தன் மன இயல்பான எண்ணங்களை புனிதப் போர்வை போர்த்தாமல் அவதானிக்க சொல்வது மிக நல்ல விடயம்.

    //இதற்கு விழிப்புடன் இருந்து தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை குறை கூறாமல், ஏன் வந்ததுன்னா.... அப்படின்னு தீர்ப்பு ஏதும் சொல்லாமலும், வந்த எண்ணத்தை கருமம் வந்துட்டுதேன்னு திட்டாமலும் ஒவ்வொரு எண்ணத்தையும் தொடர்ந்து சாட்சியாய் இருந்து கவனித்துவர வேண்டும். எழுதுவது எளிது. ஆனால் சிலநிமிடங்கள் கூட தொடர்ந்து செய்ய இயலாது என்பதுதான் உண்மை., மனம் தளராமல் முடிந்தவரை கவனித்து கவனித்து பழகவேண்டும்.//

    இதை நானும் செய்வது உண்டு.இயல்பான எண்னங்களை பிறர் என்ன நினைபார்களோ என பிறரிடம் மறைப்பது மட்டும் இல்லாமல் நம்மிடமே மறைக்கிறோம் என்பதே உண்மை. அருமை!!! 100% ஏற்கிறேன்
    *********

    //நம்முடைய அபிப்ராயங்கள், நம்பிக்கைகள் முடிவுகள் அனுபவங்கள் பிம்பங்கள் ஆகியவைகளை கொண்டுதான் நாம் அனைத்தையும் பார்த்து வருகிறோம். இவைகள் உண்மைநிலையை அவ்வாறே காட்டாமல் திரித்து ஒரு பொய்யான தோற்றத்தை உண்மை என தவறாககாட்டி வருகின்றன. உண்மைநிலையை நம்மால் கண்டுகொள்ள முடியாதபோதுதான் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுகின்றன். கூடவே குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றன.//

    இதில் கொஞ்சம் மாறுபடுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு என்பது என்பது தனிப்பட்ட அனுபவம்,கற்றல் சார்ந்தது[சார்பு உண்மை=relativism] . ஒரு சர்வ நிச்சய உண்மை [absolutism]என்பது பல விடயங்களில் இருக்காது என்பது நம் கருத்து.

    இந்த விவாதம் கூட பழமையானதே!!!

    http://en.wikipedia.org/wiki/Moral_absolutism
    vs
    http://en.wikipedia.org/wiki/Moral_relativism

    நாம் சார்பு நிலை உண்மை மீதே அதிகம் ஏற்க கூடியது என எண்ணுகிறோம்!!

    நன்றி






    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சார்வாகன்.,
      வரவுக்கும் கருத்துக்கும்.,:))

      இந்த தளத்தைப் பொறுத்தவரை குறைகள் சொன்னால் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அது உண்மையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதை அறிவேன்.

      சர்வ நிச்சய உண்மை இருக்காது அல்லது இருக்கலாம் என்பதே முன்முடிவுதான்.

      எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மையை மனம் உள்வாங்க நம் அபிப்ராயங்கள் தடையாக இருக்கின்ற்ன.

      பூமி தட்டை என்பது ஒரு காலத்திய உண்மை.
      சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்பதும் ஒரு காலத்திய உண்மை.
      பூமி உருண்டை என்பதும், சூரியனைச் சுற்றுகிறது என்பதும் தற்கால உண்மை., எதிர்காலம் எப்படி இருக்குமோ., இதெல்லாம் மனதிற்கு மட்டுமே.,

      உண்மையில், பூமியும் சூரியனும் தன் இயல்பில் எப்படி இருக்கின்றதோ அப்படி இருக்கின்றது. ஆக நாம்தான் குழப்பிக்கொள்கிறோம்.

      இணையம் தொழில் குடும்பம் என எல்லா இடங்களிலும் ஈகோ இன்றி சிந்தித்தால் ஓரளவிற்கேனும் உண்மையை நெருங்கலாம். மனம் அமைதியாக இருக்கும். சச்சரவுகள் குறைந்தால் அமைதியாக இருக்கலாம். மனம் அமைதியாக இருக்கும். இந்த கருத்துதான் அந்த வார்த்தைகளில் உள்ளடக்கி இருக்கிறது சார்வாகன்.....

      Delete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)