"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, July 4, 2013

வேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்...

வருடம் தவறாமல் தீபாவளி பொங்கல் முத்து தாத்தா வந்துவிடுவார். அவருடைய முதல் விசிட் என் வீடுதான்.. வயிறாற விருந்திட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்புவேன்.  சமைத்ததில் முதல் பங்கே அவருக்குதான். குழந்தைகளே பரிமாறுவார்கள். 

நாங்கள் பயன்படுத்தும் டம்ளர் போன்றவைகள் தரப்படும். இயல்பாக கழுவி பயன்படுத்துவோம். இலையை அவரே எடுக்க எத்தனித்தால் அனுமதி இல்லை. நாங்கள் தான் எடுப்போம். அவர் மெள்ள மெள்ள வெளியேறும்போது வாசலில் நின்று மறையும் வரை பார்ப்போம். குழந்தைகளின் மனநிறைவு அளவற்றதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பெற்ற தந்தையை விட மனம் உயர்வாகவே நினைக்கும்.

காரணம்  என்னன்னு தெரியல... எல்லோரையும் சாமி, சாமி ந்னு க்கூப்பிடற வாஞ்சையா? முதுமை காரணமா, எதுவும் புரியலை... இப்படித்தான் சாதி என்கிற உணர்வு உள்ளுக்குள்ள பனித்திரை மாதிரி இருக்குது.. என் குழந்தைகளுக்கு சாதி என்பது என்னன்னு தெரியாது.... ஆனா மன அலைவரிசைக்கு ஒத்துவர்றவுங்க, வராதவங்கன்னு பிரித்துப் பார்க்கத் தெரியும். 

சுருக்கமாச் சொல்லனும்னா அசைவம் சாப்பிடறவங்க வேற சாதி.. சைவமா இருக்கிறவங்க நம்ம சாதி.. இத நான் சொல்லிக்கொடுக்கலை... எனக்கு அசைவம் சாப்பிடறவங்களோட ஒன்னா உட்கார்ந்து சைவம் சாப்பிடுவேன். அவர்களுக்கு தேவையானதை பரிமாறவும் செய்வேன். மனம் பற்று, பிடிப்புன்னு ஒட்டாமல் இருக்கிறது சாத்தியமாயிட்டுது.

சரி என் புள்ளைங்க பெரிசான வேற சாதியில கட்டி வைப்பயான்னு கேட்டா என்ன பதில் சொல்றது தெரியல ..அப்படி கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் என்னன்னு புரியல... சாதி சோறுபோடாது.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காசு இல்லாம இந்த உலகத்துல பிழைக்க முடியாது..  மாசம் இப்போதைக்கு இருபதாயிரம் இருந்தாத்தான் குடும்பம் தள்ள முடியும்..

வீட்டு வேலை எல்லாம் செஞ்சாகனும். ஆள்போடனும்னா இன்னும் பத்தாயிரம் சேத்து சம்பாதிக்கோனும். வீட்டு நிர்வாகம்,  காசு சம்பாதிக்கிறதுல உள்ள சிரமங்கள், நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற சுதந்திரம்னு எல்லாம் என் புள்ளைங்களுக்கு லேசுபாசா சொல்லித்தான் வளர்த்துகிட்டு வர்றேன்.

இவளுங்க வளர்ந்து குடும்பம் தள்றதுல உள்ள சவால்கள், வேறு சூழ்நிலை அங்கு வாழ்தலில் உள்ள அனுசரிப்பின் அவசியம் இதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டும் என் எதிர்ப்பார்ப்பு....சாதி முக்கியமில்லைதான்.

படிக்க ஹாஸ்டல்ல கொண்டு விடறன்னா பக்கிக நான் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு வீட்ல எங்களை மேய்ச்சுக்கிட்டு இருக்கிறாங்க... இதுக வளர்ந்து எல்லாம் புரிஞ்சுகிட்டு வேற சாதியிலதான் கட்டுவேன்னா கட்டி வச்சுற வேண்டியதுதான்.

நமக்கென்ன.. மாட்டுற ஐயரு பாடுதான் திண்டாட்டம் ...அவ்வளவு விபரமா இருப்பாங்கன்னுதான் நடவடிக்கைகளைப்பாத்தா தோணுது .

தர்மபுரி விசயத்த படிச்சவுடன் தோணுச்சு.. எழுதினேன்.

இளவரசன் மரணம் வருந்தத்தக்கது எனினும் அது கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இளவரசனோ, திவ்யாவோ ஆரம்பத்தில் இந்த அளவு எதிர்ப்பு வரும் என நினைத்திருக்க மாட்டார்கள். இடையில் அரசியல் புகுந்து பிரச்சினை பெரிதாகிவிட்டது உண்மைதான்... ஆனால் காதலுக்கு கண் இல்லை. சக்தியும் இல்லை போல.. இளவரசன் தற்கொலை எனில் கோழைத்தனமானது.. நம்பி வந்தவளை விட்டுட்டு போயிட்டது குற்றம்தான்... கொலை எனில் அடப்பரதேசி.. எங்கிட்டாவது ஓடிப்போயாவது பொழச்சு இருந்திருக்கலாமே.. அதொன்னும் கேவலம் இல்லையே? சில வருசம் கழிச்சு.. அல்லது எப்படியாவது திவ்யாவை பிக்கப் பண்ணி இருக்கலாமே.... ஏன் இப்படி மாட்டினேன்னு அங்கலாய்க்கத்தான் முடிகிறது.

சாதி என்பது வரும் தலைமுறையிடம் நாம் விதைக்காமல் இருந்தால் போதும். நம்மோடு அது மறைய வேண்டும். அரசும் சாதிகளை, சாதிக்கட்சிகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் போதும். மெள்ள மறைந்துவிடும்.... இதற்கு அரசியல், சாதிக்கட்சிகள் தயாராகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நம்மால் அது சாத்தியமாகும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

4 comments:

  1. //இளவரசன் தற்கொலை எனில் கோழைத்தனமானது..//
    இரண்டு குடும்பங்களுக்கிடையில் மட்டும் பிரச்சினை என்றால் இப்படி சொல்லலாம். அத்தனை அரசியல் அழுத்தங்களும், சாதிக்கம்பெனி அழுத்தங்களும் அசாதாரணமானவை. அவற்றை அனுபவித்திராமல் அவை தரும் உணர்வுகளை எழுதிட இயலாது. கோழைத்தனம் என்று சொல்லி இளவரசன் மேல் குற்றம் சுமத்திட இங்கே எவ்வித முகாந்திரமுமில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக இங்கு பதிவு செய்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. அழுத்தங்கள் தேவையில்லாததுதான்,,,இங்கே இத்தனை எதிர்ப்புகளை மீறி ஜெயிக்கவோ பதுங்கவோ காதலுக்கு துணிவில்லை..ஏன் காதலித்தோம் என்று யோசிக்கிற அளவுக்கு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன, இந்தக் காதல் தீவீரமானது இல்லை என்பது என் கருத்து. கோழைத்தனம் என்பது குற்றமல்ல... இயல்பு....சாதனையாக்கி இருக்கவேண்டும்ம் என்று வருத்தத்துடன் தான் சொல்கிறேன், நன்றி ரிஷி.. வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  3. இளவரசன் இறந்துவிட்டானா? நான் இன்னும் பேப்பர் பார்க்கலை.சாதி அரசியலுக்கு இன்னொருவன் பலி.

    ReplyDelete
  4. இதுல வேற என்ன சொல்றதுக்கு இருக்கு....

    அவ்ளோ தான். நம்ம பிள்ளை வளர்ந்து கல்யாணத்துக்கான நேரம் வரும் போது, வேறு எந்த சாதி அல்லது சமூகத்து துணையோட இணைக்க வேண்டிய சூழ்நிலையோ, சந்தர்ப்பமோ அமைந்தால் அதை எந்த சலனமுமின்றி சந்தோஷமாக அமைத்துக் கொடுக்க வேண்டியது தான்.....

    இதில் சாதி சங்கங்கள் உள் நுழைவதை எவரும் ஏற்பது நல்லதல்ல. இன்றைக்கு அந்தந்த சாதி சங்கங்களின் கருத்துக்களை ஆதரிப்பவர்கள் நாளை தங்களுக்குத் தாங்களே குழி தோண்டிக் கொள்கின்றார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)