
நண்பர் திரு.முக்கோணம் அவர்கள் எழுதியுள்ள சொற்களின் சக்தி இடுகையை படித்தவுடன் அதன் தொடர்ச்சியாக அதில் உள்ள நுட்பத்தை, வேதாத்திரி மகான் விளக்கிய வண்ணம் கொடுக்க விரும்பினேன். இதோ ஏன் அருட்காப்பு தேவை என்பதன் விளக்கம்.
அருட்காப்பு:
”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”
வெளி உலகில் ஒரே புழுதிமயம்,புகைமயம்,புழுக்கம், இதனால் நம் உடல் ஒழுங்கு பாதிப்படைகிறது. அந்த பாதிப்பால் நம் மன அமைதி கெடுகிறது. மனஇறுக்கம் (TENSION) அதிகமாகிறது.
நாம் இருக்கும் அறைக்குள் தூசி நுழையாமல், புகை வராமல், புழுக்கம் இல்லாமல் குளிர்வசதி (AIR CONDITION) செய்து கொண்டால் இந்தத் தொல்லைகளிலிருந்து நம்மளவில் விடுதலை பெறுகிறோம்.
அதேபோல் சமுதாய அமைப்பில் உள்ள சீர்கேடுகளால் பாதிக்கப்பெற்ற மக்கள், இறுகிய முகத்துடன், குழப்பமான எண்ணங்களுடன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது எரிச்சலுடன், பொறாமையுடன், புழுக்கத்துடன் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ண அலைகளின் தாக்குதலால் (THOUGHT POLUTION) நம்மை அறியாமலே நாம் மனப்பாதிப்பை அடைகிறோம்.
அந்தப் பாதிப்பிலிருந்து நம்மளவில் நாம் விடுதலை பெறவேண்டியே ‘அருட்காப்பு’ என்னும் AIR CONDITION ஐ மனவளக்கலை பயின்றவர்கள் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி போட்டுக் கொள்ளவேண்டும் என நான் சொல்லி வருகிறேன்.
அதே வேளையில் நம் செய்தியை உணராத, சமுதாயத்தின் மற்ற சகோதரர்கள் மத்தியில் உள்ள புழுதி,புகை,புழுக்கம் முதலிய புறக்குற்ற்ங்களையும், பொறாமை, சினம், குழப்பம் போன்ற அகக் குற்றங்களையும் நீக்கும் முயற்சியாக வாழ்த்து, தியானம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
நகரம், நாடு எனத் தொடங்கி, முடிவில் உலகமே அருட்காப்பு பெற்ற அமைதி உலகமாக மாற வேண்டும் என்பதுதான் எம் இலட்சியம்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !.
நன்றி-- வேதாத்திரி மகான்