”காதலிப்பதே என் தொழில்’ என்று வெண்பா முடிய வேண்டும். ஆனால் பாடல் அகத்துறைப்பாடலாக அதாவது ஆண்-பெண் காதல் பற்றிப் பாடும் பாடலாக இருக்கக் கூடாது” என்று நிபந்தனையுடன் பாடலைக் கேட்டார்.
அதற்கு கவனகர் திரு.இராமையாபிள்ளை சற்றும் தடுமாறாமல் புன்னகையோடு பாடிய வெண்பா இதுதான்
‘சங்கத் தமிழைத் தடையின்றிக் கற்றறிந்தே
மங்காப் புகழுடனே வாழ்ந்திங்கே-இங்கிதமாய்
ஓதல் உணர்தல் உடைய புலவர்களைக்
காதலிப்ப தேஎன் தொழில்’
பாராட்டுகள் குவிந்தன. தந்தையிடம் இராம.கனகசுப்புரத்தினம் வியப்புடன் கேட்கிறார். “எப்படிச் சிக்கலாகக் கேள்வி கேட்டாலும் உடனே உரிய குறளை எடுத்து நீட்டுகிறீர்களே, எப்படி அய்யா முடிகிறது?”
”அப்பா, திருக்குறளை வெறுமனே மனப்பாடம் செய்து வைத்திருக்கவில்லை. என் உயிருடன் உணர்வுடன் கலந்து இருக்கிறது. அது மட்டுமல்ல, திருக்குறளுக்குள் இன்னும் திருவள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மீது அன்பு வைத்து, நம் உயிருடனும் உணர்வுடனும் அவரோடு கலந்து விட்டால் அவையோர் எந்த கேள்வி கேட்டாலும், அவரே பதிலைக் கூறிவிடுவார். நாம் வெறும் கருவியாய் இருந்து வேடிக்கை பார்த்தால் போதும். என்றார்.