"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label பின்னூட்டம். Show all posts
Showing posts with label பின்னூட்டம். Show all posts

Thursday, March 4, 2010

பேரன்பும்..... மனநோயும்...

பதிவுலகில் நான் மதிக்கும் நண்பர்களுள் ஒருவர் ஸ்வாமி ஓம்கார்
முடிந்தவரை நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்

Wednesday, November 25, 2009

வலையுலக நட்பும், கருத்துச் சுதந்திரமும்.

வலையுலகில் பலவித இடுகைகளை படிக்கிறோம். படிக்கிற இடுகை ஒரு கவிதை, கதை, குறித்தான இடுகையாக இருக்கும்போது, அதில் பதிவரின் எண்ண ஓட்டம் தெரிகிறது. அதற்கு பின்னூட்டம் சூப்பர், நல்லா இருக்கு அவ்வளவுதான். அங்கே விவாததிற்கு இடமே இல்லை.

சாதி, ஆன்மீகம், மதம், நாத்திகம், அரசியல்,காமம் சார்ந்த இடுகைகள் வரும்போது விவாதத்திற்கு உள்ளாகக் கூடிய வகையில்தான் கருத்துகள் அமையும். விவாதமும் தவிர்க்க முடியாதது.

இது போன்ற இடுகைகளை நான் படிக்கும்போது முதலில் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதைத்தான் கவனிக்கிறேன்,

அது கடுமையாக எதிர்க்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு ஜால்ராவா? இல்லை கிண்டல் அடிக்கிறதா? ஆராய்கிறதா? எடுத்துக்கொண்ட கருத்தை நிறுவுகிறதா? சமுதாயத்தில் தனது கருத்தை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறதா என்று இடுகையைப் பற்றி படித்து முடிவுக்கு வருகிறேன்.

கடுமையாக எதிர்க்கிறது, நிறைகளைச் சுட்டிக் காட்டாமல் குறைகளையே பெரிது படுத்தி பேசுகிறது என்றால் அங்கே நமது குரல் எடுபடாது. குரல் கொடுத்தாலும் கடுமையான ஆட்சேபனைகள் நிச்சயம் வரும். எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே விலகிவிடுகிறேன்.மாறாக ஒத்த கருத்துடைய அந்த நண்பர்களின் பின்னூட்டங்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்து இரசிக்கிறேன்.

உதாரணமாக ஆன்மீகம் சார்ந்து எழுதக்கூடிய அன்பர்களிடையே தானகவே ஒரு குழுபோல் அமைந்துவிடும். தினசரி வந்து படிக்கும் நண்பர்கள் மற்றும் எழுதும் பதிவரிடையே கருத்தளவில், மனதளவில் ஒரு நெருக்கம் ஏற்பட்டுவிடும். அப்போது இடையில் புகும் மாற்றுக் கருத்துடைய நண்பர் தொடர்ந்து படிப்பவராக இருந்தாலும், தாங்கமுடியாமல் ஒருகட்டத்தில் எதிர்க் கருத்தை அங்கு பதிவு செய்ய முயலும்போது அது அவரைப் பொறுத்து சரியானதாகவே இருந்தாலும், மற்ற அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் அவர் சொல்ல வந்ததும் மறைக்கப்பட்டு, பின்னூட்டமிட்ட நண்பரின் மீது குழுவாக பாய்ச்சல் நிச்சயம்.

இது சூழ்நிலையையே கெடுத்துவிடுகிறது. இவர்களுக்கும் பாடம் போய்விடும், அவருக்கும் எதிர்ப்பை திரும்பவும் எதிர்க்க, கருத்தை வலியுறுத்த என மனநிம்மதி போய்விடும்.

இது ஆன்மீகம் மட்டுமல்ல, அனைத்துத் துறையினருக்கும் பொருந்தும், கணினி தொழில்நுட்ப விளக்கம் தரும் நண்பரின் நோக்கம் புரிந்து கொள்ளாது அங்கு தமிழில் குற்றம் கண்டுபிடிக்கிறார் ஒரு நண்பர்.

இந்த சூழ்நிலையை நான் எப்படி எதிர்கொள்கிறேன் என்றால் இடுகையின் நோக்கம் புரிந்தது. ஆக்கபூர்வமான நோக்கம் எனில் சிறு குறைகளாக என் மனதிற்கு பட்டதை (பிழைதிருத்தத்தை கூட) தனி மடலிடுவேன், நிறைவுகளை பாராட்டி விடுவேன். முக்கிய நோக்கத்தைப் புறக்கணித்து குறைகளை பெரிது படுத்தும்போது எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விடுகிறது. இடுகையின் நோக்கம் திசை திருப்பப்பட்டு பின்னர் வந்து படிப்பவரின் மனோநிலையை குழப்பம் அடையச் செய்து விடுகிறது.

அதற்காக தவறை அனுமதிக்க வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை. அந்தத் தவறு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அவரிடம் தெரிவித்துவிட்டு என் தளத்தில் தனித் தலைப்பிட்டு எதிர்கருத்தை பதிவு செய்கிறேன். அப்போது அவர்கள் மனநிலையும் கெடுவதில்லை, எழுதும் எனக்கும் மனநிறைவு ஏற்பட்டுவிடும்.

இதனால் என்னுடைய பின்னூட்டம் எங்கு இருந்தாலும் பெரும்பாலும் பாராட்டியே இருக்கும், சிறு நகைச்சுவை இருக்கலாம். அதிகமாக இடுகையின் மையத்தை விட்டு விலகி பின்னூட்டமிடுவதில்லை அதனால் கும்மிக்கு நான் எதிரானவன் அல்ல, மனதை ரிலாக்ஸ் பண்ண சில சமயங்களில் கும்மியும் தேவைதான். அதற்கான இடுகை எது எனபதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்றே சொல்ல வருகிறேன்.  

இடுகைகளின் தரத்தை முடிவு செய்து அதற்கேற்றவாறு பின்னூட்டமிடுவது பதிவரிடையே நட்பை இன்னும் பலப்படுத்தும், பிணைப்பை ஏற்படுத்தும்.

வலையுலகில் நட்பு முக்கியமா, என் கருத்து முக்கியமா எனும்போது என்கருத்தை வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நட்பு என்பது விரிசல் வந்தால் மீண்டும் மனதளவில் ஒட்டாது. வாயளவில்தான் நட்பு இருக்கும். எனவே பின்னூட்டத்தில் எனது பாணியாக இதைக் கடைபிடித்து வருகிறேன்.

சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் உங்களது கருத்தா......நட்பா.. உங்கள் விருப்பம்.!!!

வாழ்த்துகள்..