"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, March 14, 2009

கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்.......

தவறு செய்வது மனித இயல்பு. . ஆனால் அதற்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கி அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுஅல்ல. ஆனால் வழக்கத்தில் இருப்பது இதுதான்.

அதேபோல் தன் தவறுகளை நியாயப்படுத்துவத்தில் எந்தப் பயனும் இல்லை. தற்காலிகப் பலன் இருக்கலாம். அது முன்னேற்றத்திற்கு உரியதாக இருக்காது. மனம் ஒரு தவறுக்கு ஏதாவதுஒரு சமாதானத்தைதான் எப்போதும் சொல்லும். அதனால் யாரும் தன் தவறை, குறைபாடுகளை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

நாமாக நடக்கும்போது கல்லில் மோதி விட்டு, ‘கல் இடித்துவிட்டது’ என்கிறோம். கல்லை இந்த நிகழ்வுக்கு பொறுப்பாக்கி நாம் தப்பித்துக்கொள்கிறோம்.இதே போலத்தான் ’முள் குத்திவிட்டது’ ‘செறுப்பு கடித்துவிட்டது’ என்பவையெல்லாம்.

இப்படி உயிரற்ற பொருட்கள் சம்பந்தபடும்போது, அது நம் குணத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அமையும். ஆனால் மனிதர்கள் சம்பந்தபடும்போதுபிரச்சனை ஆரம்பிக்கிறது. சண்டை, கருத்துவேறுபாடு, என மனித உறவுகள் இனிமை கெடுகிறது.

"இந்த செயலை இப்படி செய்திருக்கவேண்டும்.உன்னால்தான் கெட்டுப்போச்சு...."

என தவறை பிறர்மீது சுமத்தி தாக்குதலை தொடங்கி வைப்போம்.

நாம் கண்காணித்து வழிகாட்டி இருக்கவேண்டும். அல்லது முதலிலேயே தகுந்த ஆலோசனை கூறியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு தவறை பிறர் மீது சுமத்துவதால் என்ன பலன்..?.

முடிவை அமைதியாக ஏற்று, இழப்பையும் தாங்கிக்கொண்டு, இதிலிருந்து தேவையானதைக் கற்றுக்கொண்டு அடுத்தமுறை தவறில்லாமல் செயல்படவேண்டும்.

தவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறபோதே அந்த தவறின் தன்மை மறைந்துவிடுகிறது. ஏனென்றால், அதற்கு அசாத்தியத் துணிச்சலும், பரந்த மனப்பான்மையும் தேவைப்படுகிறது. இதுவே ஆன்மபலம் . இவை நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

நாம் தவறு செய்வது இயற்கை ஆனால் எப்போது ’தவறு’ என்று உணர்ந்து, ஏற்றுக் கொள்கிறோமோ அந்த நொடியிலேயே அத்தவறில் இருந்து நாம் விடுதலை அடைகிறோம். இதற்கு ஒரு ஆழ்ந்த சுயபரிசோதனை தேவைப்படுகிறது இதைத்தான் introspection என்கிறோம்.

என்ன படிச்சிட்டீங்களா? எவ்வளவு நாளைக்குத்தான் வெளியிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது?

கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்.......

மீண்டும் சந்திப்போம்.

நன்றி: கருத்து-இறையன்புவின் ஏழாவது அறிவு- நூலில் இருந்து

Friday, March 13, 2009

பணமும் கடவுளும்

"பணத்தைக் கொடுப்பவன் கடவுளே என்கிறீர்,
படைத்தவன் மனிதனே, கொடுப்பவன் கடவுளோ?"

- வேதாத்திரி மகான்


நாம் பேச்சுவாக்கில் ”எல்லாம் கடவுள்
கொடுத்தது” என்று சொல்லுவோம்.
சில சமயத்தில் உபசாரத்திற்காகவும், சில சமயம்
உண்மையாகவும், சில சமயம் அடக்கி வாசிப்பதற்காகவும்
உபயோகப்படுத்துவோம்.
முயற்சி செய்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
கருத்தை வலியுறுத்துவதே இந்த கவி.
கூடவே கடவுள் சிந்தனையை விரிவாக்க வேண்டிய
அவசியமும் உள்ளடக்கி உள்ளது.

நன்றி; ஞானக்களஞ்சியம். வேதாத்திரி மகானின் கவிதைத் தொகுப்பு

Thursday, March 12, 2009

மயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....


அடுத்தது என்ன...? என்ற திகிலுடன் பார்த்த படம் இது.

உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்களேன்

Wednesday, March 11, 2009

சொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே

மனதளவில் நாம் தனிஆள் அல்ல. மிகப் பெரிய கூட்டம்.

நம் பெற்றோர், மனைவி--(சிலருக்கு மனைவிகள்) கணவன், காதலி,பிள்ளைகள், சொந்த பந்தங்கள், சுற்றத்தார், சுற்றியுள்ள குடித்தனக்காரர்கள்,மேலதிகாரி, முதலாளி, சகதொழிலாளி, நண்பர்கள், விரோதிகள், நமக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், கடன்காரர்கள்,எழுத்தாளர்கள், நடிகர்கள்,நடிகைகள் ... இப்படி பல்லாயிரக் கணக்கானோர்கள் நம் மனதினுள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படி தொண்ணூறு சதவீதம் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு. போனால் போகிறது என்று பத்து சதவீதமே நமக்கு.

முதலில், மனதில் உள்ள இந்த சந்தைகடை இரைச்சலை நிறுத்தவேண்டும்.

இதில் நம் குரல் எங்கே? எது? என கண்டுபிடிக்க வேண்டும்.

நம் மனதிற்கும் நமக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திக் கொள்ள,நம் மனம் நம்மைப் பற்றி உண்மை சொல்ல அனுமதிக்கவேண்டும். அதை ஏற்றுக் கொள்ளும் துணிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, ஓர் அழகிய இளம்பெண்ணும், ஆணும் கைகோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு தெருவில் செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
நம் மனம் அவர்களை பார்த்தவுடன் அவர்களை வெறுக்கும்; வாய்ப்பிருந்தால் வெளிப்படையாக கண்டிக்கவோ, கிண்டல் செய்யவோ தூண்டும்.

இதற்கு என்ன காரணம்?

உண்மையான காரணம் “இவ்வளவு அழகான பெண்ணுடன் இவன் சுற்றுகிறானே... நம்மால் முடியவில்லையே.... என்ற ஆதங்கமும் பொறாமையுமாகவுமே இருக்கும். ஆனால் மனம் வெளியே காட்டும் நடிப்பு, “இப்படி அலைந்தால் சமுதாயம் என்ன ஆகும்? ஒழுக்கம் கெட்டு விடாதா? என்பது போன்ற போலி சமுதாய அக்கறையாக இருக்கும்.

இது போன்ற உண்மைகளை உணர்ந்தால், உரிய பயிற்சிகளை மேற்கொண்டு மனதை செம்மைப்படுத்தி, சிறந்த நோக்கத்தோடு செயல் புரிய வைக்கமுடியும்.

எனவே, நம் மனம், நம்மிடம் உண்மை பேச வசதியாக இரைச்சலை குறைக்க வேண்டும். மனதோடு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.இதற்கு பல்வேறான எண்ணக் குறுக்கீடுகளை தடுக்கவேண்டும். அதற்கு எண்ணங்களை பின்னால் விரட்டிப் பழக வேண்டும்.

ஏதோ ஒன்றை படிக்கிறோம், அல்லது வேலை அல்லது பயிற்சி செய்கிறோம்; மனம் அதை விட்டு விலகி வேறு எங்கோ போய்விட்டது என வைத்துக் கொள்வோம். உடனே நம் சிந்தனையைப் பின்னோக்கித் திருப்ப வேண்டும்.

எந்த இடத்தில் விலகியது? எந்த குறுக்கீட்டால் விலகியது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடித்தபின் பயனுள்ள காரணத்திற்காக விலகியிருந்தால் பாராட்டிவிட்டு, மீண்டும் பழைய வேலையில் ஈடுபடுத்தவேண்டும். தேவையற்ற காரணத்திற்காக விலகியிருந்தால், இப்படி போகாதே என கண்டித்துவிட்டு, மீண்டும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுத்தவேண்டும்.

இப்படி தொடர்ந்து, விடாமல் கவனிக்கத் தொடங்கினால், நம் மனதினுள் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும்.

கண்காணிப்புடன் இருக்கும் முதலாளியிடம், வேலைக்காரன் ஒழுங்காக பணியாற்றுவது போல் மனம் விலகி சென்று அலையும் குறைந்து போகும். நம் கட்டளைக்கு கீழ்படிய ஆரம்பிக்கும்.

முடிவில் மனம் ஒரு வேலையிலிருந்து தப்பித்துச் செல்லும் வினாடியிலேயே,அதை கையுங் களவுமாகக் கண்டு பிடிக்கும் விழிப்புணர்வு alertness, நமக்கு வந்துவிடும். அப்புறம் இந்த சந்தை இரைச்சல் தானாகக் குறைந்துவிடும்.

நடப்பில் மட்டும் மனம் ஈடுபடும்.அமைதி ஆட்கொள்ளும். ஆற்றல் வளரும்.
முயற்சி செய்து பாருங்களேன்.



நன்றி; நினைவாற்றல் வளர...புத்தகத்திலிருந்து
நன்றி:கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம்.

Monday, March 9, 2009

தும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்

உடல் நலம், மனநலம் நன்றாக இருந்தால் நாம் சிறப்பாக செயல்படமுடியும். நமக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, சமுதாயத்திற்க்கு பாரம் இல்லாமல் இருக்கமுடியும். இருக்கவேண்டும். அதாங்க, மருத்துவமனைக்கு அன்றாடம் செல்வது நமக்கு தேவையா? அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம்,வலியை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

சரி வழிதான் என்ன? எண்ணெய் கொப்பளித்தல் !!!

எப்படி செய்வது?

தரமான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் சுமார் 15 மில்லி,வாயில் விட்டுக்கொள்ளுங்கள்.விழுங்கி விடாமல் வாயிலியே வைத்துக் கொள்ளுங்கள். பெரிதும் சிரமப்படாமல் அமைதியாக, மெதுவாக, வாயில் சப்பியவாறு,,வாய் முழுவதும் கலந்து திரியும்படி, வாய் வலிக்காமல் ஒரே சீராக கொப்பளியுங்கள். தாடை சற்று உயர்ந்தே இருக்கட்டும். தொண்டைக்குள் செல்லாமல், பற்களின் இடை வெளிகளுக்கு உள்ளாக எண்ணெய் சென்று வருமாறு பத்து முதல் பதினைந்து நிமிடம் கொப்பளியுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்து, ஐந்து நிமிடத்தில் எண்ணை நீர்த்து, நுரைத்து,வெண்மையாகி, கனம் குறைந்து எளிதாக பல் இடுக்குகளில் அலைந்து திரியும். பத்து நிமிடத்திற்க்கு பின் துப்பி விடுங்கள். பிறகு வாயை நீரால் நான்கைந்து முறை கொப்பளித்து தூய்மை செய்யுங்கள்.

என்ன பலன்?

இப்படி செய்வதால் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் கேடு விளைவிக்கும் கிருமிகள் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. விடியற்காலை,பல் தேய்த்த உடன், எண்ணெய் கொப்பளிப்பது சிறப்பு. அவசியமானால் மூன்று வேளையும் காலிவயிறாக இருக்கும்போது செய்யலாம். இதை நான் ஒரு மாதமாக தொடர்ந்து கடைப்பிடித்து உடல்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைத்ததால்தான் எழுதுகிறேன்.செய்து பார்த்து பலன் அடைந்தால் அதை பின்னூட்டம் இடுங்கள்.

நன்றி:வியத்தகு எண்ணெய் மருத்துவம். தமிழில்:கோ.கிருஸ்ணமூர்த்தி செல்வி பதிப்பகம்

நன்றி: எண்ணை கொப்பளித்தல், தாமோதரன். மனவளக்கலை பேராசிரியர், அன்புநெறி வெளியீடு திண்டுக்கல்

டிப்ஸ் உதவி: கவனகர் இராம.கனக சுப்புரத்தினம்

மெகா டி.வியில் காலை 7.30 முதல் 7.40 வரை பேசுவதை கண்டு பயன் பெறுங்கள்.

Sunday, March 1, 2009

லெப்ட்... ரைட்... லெப்ட்...ரைட்...

லெப்ட்... ரைட்... லெப்ட்...ரைட்

ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பின்போது கேட்கும் ஒலி. இதை இதுநாள்வரை ஒழுங்காக ஒரேசீராக நடைபயில கொடுக்கப்படும் குரலாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.

பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் நினைவாற்றல் வளர புத்தகம் படித்தபொழுது முழுவிளக்கம் கிடைத்தது.

”கட்டளைக்குக் கீழ்படிந்து நட” இதை பழக்கிவிட்டால் போதும்.நடக்கச் சொன்னால் நடப்பார்கள்;நிற்கச் சொன்னால் நிற்பார்கள்;பதுங்கச் சொன்னால் பதுங்குவார்கள்; பாய சொன்னால் பாய்வார்கள். தூக்கத்திலும் கூட அதே ஆயத்தநிலையில் இருப்பார்கள்.
உடலுக்கு தரும் இதே பயிற்சியை மனதிற்க்கு கொடுத்தால் நம் சொன்னபடியெல்லாம் மனம் கேட்க ஆரம்பித்துவிடும். அதைத்தான் ‘மந்திரப் பயிற்சி’ என்கிறோம்.
ஓம் முருகா ஓம்
ஓம் நமசிவாய…
ஓம் நமோ நாராயணாய..
இயேசுவே…
நபியே…..
இதில் மதம் முக்கியமில்லை. இது போன்று எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும்
அமைத்துக் கொள்ளுங்கள். ஓய்வாக இருக்கும் நேரத்தில் எல்லாம் அதை சொல்லிப்
பழக்குங்கள்.
இதற்கு மதமும் தடையல்ல, மொழியும் தடையல்ல
பேருந்தில் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.சிந்திப்பதற்கு ஏதும் உருப்படியான செய்தி இல்லையென்றால், உடனே “ஓம்……….” போன்ற மந்திரங்களை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.
படுக்கையில் படுத்து, தூக்கம் வராமல், மனம் அலைகிறதா? உடனே ஆரம்பித்துவிட வேண்டியதுதான். மனம் கட்டுக்குள் வரும்.
மனதை கட்டுப்படுத்துவதன் ஒரு கட்ட பயிற்சியே இது.

மிகச் சரியான விளக்கமாக என் மனதில் பதிந்தது