"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, June 29, 2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு கடந்த 14.06.2009 நடைபெற்று கொண்டிருந்தபோது சிறு காலதாமதத்திற்கு பின்னரே நான் கலந்து கொள்ள முடிந்தது.,

‘நிகழ்காலத்தில்’ என என்னை அறிமுகப் படுத்திக் கொண்டபோது., சற்றே யார் என புரியாமல் இருந்த நண்பர்கள் ’அறிவே தெய்வம்’ என்றவுடன் சிரிப்புடன் இயல்பான நிலைக்கு வந்தார்கள்.,

வெயிலான் பரிசல் தலைமையில் நடந்த பதிவர் சந்திப்பு குறித்து ஏற்கனவே பரிசல் எழுதி விட்டதால் படங்கள் இங்கே




(ஈரவெங்காயம், நிகழ்காலத்தில், செந்தில்நாதன்,செல்வம், பரிசல், வெயிலான்,சிறப்பு விருந்தினர் வடகரைவேலன், க்ர்பால்)

அது என்னவோ திருப்பூரில் உள்ள பதிவர்களின் உள்ளூர் சந்திப்பு என்பதால் உரையாடல் பல தலைப்புகளுக்கு சென்றும் மீண்டும் தொழில் பற்றியதாகவே அமைந்துவிட்டது.

தொழிலின் தன்மை, அதன் காரணமாய் முதலாளிகளின் நடவடிக்கைகள், தொழிலாளிகளின் நடவடிக்கைகள் , அதன் காரணமாய் அமையும் தாமதமாக சரக்கு அனுப்புதல், மற்ற தொழில்களுக்கும், திருப்பூரின் தொழில் தன்மைக்கும் உள்ள வேறுபாடுகள் என வடகரை வேலன் அண்ணாச்சியும், ராமனும் நன்கு அலசினர்.

கடைசியாக கிர்பால் அவர்களின் கேமாராவினால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இடம்,தேநீர்,வடை,போண்டா அனைத்தும் ராமன் அவர்கள் ஏற்பாடு. அதற்கு நன்றிகள் பல.





நான், நடுவில் நண்பர் வெயிலான் , வலதுபுறம் இருப்பது ராமன்

Thursday, June 25, 2009

கல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை

கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது, ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார். அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.

பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:

‘ஐயா, நான் படிப்பறிவுஇல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது. எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி, கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன். எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’

ரப்பிமெண்டல் திகைத்தார். அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.

‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது. ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய். ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.

(இஸ்ரேல் நாட்டுக்கதை)

*******************************************************************************
நன்றி—ஞானப்புதையல் – முனைவர் எம்.இராமலிங்கன் – பூர்ணா பதிப்பகம்
*******************************************************************************

Friday, June 12, 2009

அன்பும் புறச் சாதனங்களும்--அகத்தூய்மை

தினமும் குளிப்பதனால்தான்

ஹரியை அடைய முடியுமெனில்


நீரில் வாழும் விலங்குகள்


ஹரியை அடைந்துவிட்டனவா?




பழங்களையும், கிழங்குகளையும் உண்டால்தான்


ஹரியை அடைய முடியுமெனில்


வெளவால்களும், குரங்குகளும்,


ஹரியை அடைந்து விட்டனவா?




துளசிச் செடியை வணங்குவதால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


நான் துளசித் தோட்டத்தையே வணங்குவேனே!




கல்லை வணங்குவதால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


நான் மலையையே வணங்குவேனே!




இலைகளையும் தழையையும் தின்றால்தான்


ஹரியை அடைய முடியுமெனில் ஆடுகள்


ஹரியை அடைந்து விட்டனவா?




பாலை மட்டும் அருந்தினால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


கன்றுகள் ஹரியை அடைந்துவிட்டனவா?




புறச் சாதனங்களால் அல்ல


உண்மையான அன்பினாலேயே


நந்தகோபனை அடைய இயலும்.




அன்னை மீராபாய்

*******************************************************************************
நன்றி—ஞானப்புதையல் – முனைவர் எம்.இராமலிங்கன் – பூர்ணா பதிப்பகம்
********************************************************************************
இறைநிலையை உணர மேற்கண்ட உடல்சுத்தம், சைவ உணவுமுறை,கோவில் வழிபாடு, போன்றவைகளெல்லாம் ஆரம்பநிலை வழிமுறைகளே. இதை உணர்ந்து செய்யலாம். இவை உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சரியான திசையில் நகர்த்திச் செல்லும்.

ஆனால் ’இதுவே ஆன்மீகவாழ்க்கை’ என நாம் இதிலேயே சிக்கிக் கொண்டு அன்பை உள்ளே உணராமல், உணர்ந்தது வெளியாகாமல், அதுவாகாமல் வாழ்வது பொருத்தமானது அல்ல. இதையே அன்னை வலியுறுத்துகின்றார்

Tuesday, June 9, 2009

கடவுள் நல்லவரா கெட்டவரா

காட்சி ஒன்று

தருமி மாதிரி ஏழையான ஒரு தீவிர கடவுள் பக்தன் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறான். அளவு கடந்த வறுமை,

வாழ்வில் வளம் பெற எல்லா வழிகளிலும் முயற்சித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. எந்நேரமும் இறைவனை நினைந்தபடி இருக்கும் அவன், இறைனிடமே கேட்க முடிவு செய்கிறான்.

ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும்,அப்பொழுதான் தான் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியாக வாழமுடியும். இதைப் பெறவேண்டி அன்றைய தினம் எந்த வேலைக்கும் செல்லாது பிரார்த்தனை செய்கிறான். இரவும் பிரார்த்தனை செய்துகொண்டே தூங்கி விடுகிறான். விடியற்காலையில் சப்தம் கேட்டு தூக்கத்திலிருந்து கண்விழித்துப் பார்க்கிறான்.

எதிரே பட்டுத்துணியில் கட்டப்பட்ட ஒரு மூட்டை, என்னவென்று அவிழ்த்துப் பார்க்கிறான் உள்ளே பணம் கட்டுக்கட்டாக, சரியாக ஒரு கோடி ரூபாய், இறைவனின் கருணையை எண்ணி வியந்து, மகிழ்கிறான்.

******************************************************************************************
காட்சி இரண்டு

கடவுள் தன் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றார், பின்னால் ஒரு பெரிய மூட்டை, எதிரே வந்த எமதர்மன் வணங்கி, என்ன இது என்றும் இல்லாத வழக்கமாய் பெரிய மூட்டையுடன் திரும்பிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார்,

அதற்கு கடவுள், ”அது வேறொன்றுமில்லை, என் பக்தன் ஒருவனுக்கு கொடுக்க பணம் கொண்டு சென்றேன். அவன் ஒரு கோடி வேண்டும் எனக் கேட்டான். கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டு இருக்கிறேன்.

நான் அவனுக்கு கொடுக்க நினைத்து கொண்டு சென்றதோ நூறு கோடி, பக்தன் கேட்டதை கொடுக்க வேண்டியது என் கடமை ஆதலால் வேறு வழியில்லாமல் கேட்ட ஒரு கோடியை கொடுத்துவிட்டு மீதி 99 கோடியை திருப்பிக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்,

*****************************************************************************************
முதல் காட்சியில் ஏதேனும் தவறு இருக்கிறதா? எல்லாம் நிறைவாகத்தானே நடந்தது.

ஆனால் இரண்டாவது காட்சியை படித்தவுடன் முதல் காட்சியில் மறைந்த இருந்த தவறு புரிகிறதா?



இதிலிருந்து என்ன தெரிகிறது? செயலுக்கு விளைவாக சரியானதை இறைநியதி நமக்கு வழங்கியே தீரும். நமக்கு வருவதை, நடப்பதை மனதின் சமநிலை மாறாமல், மன விரிவோடு ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

என்ன செய்தோம், என்ன கிடைத்தது எனப் பார்த்து செயலை ஒழுங்கு செய்வோம்,

எதிர்பார்ப்பு இன்றி சரியான முறையில் செயல்களை செய்யப் பழகிக்கொள்ளுங்கள், வரவேண்டியது தானாய் வரும். எதிர்பார்ப்பதைவிட பலமடங்கு அதிகமாய்.நிச்சயம் வரும்.

எதிர்பார்த்தால் நமக்கு வருவதை நாமே தடை செய்துவிடுகிறோம், பல சமயம் ஏமாற்றமும் அடைகிறோம்.

சிந்திப்போம், சந்திப்போம்

டிஸ்கி: நண்பர் ஓம்காரி்ன் இடுகைக்கும் இதற்கும் தொடர்பு உண்டு

Thursday, June 4, 2009

தன்னை உள்ளும் புறமும் திரும்பிப் பார்க்கும் சங்கிலித்தொடர்பதிவு

இந்த தொடர்பதிவு இணைய நண்பர்களிடம் வலைய வரும்போதே, நண்பர் கோவி கண்ணன் அவர்கள் மூலமாக தான் எனக்கு அழைப்பு வரும் என்பதில் மிகஉறுதியாய் இருந்தேன். (இது எதிர்பார்ப்பு அல்ல) நிச்சயமானதாய்..

அழைப்புக்கு நன்றி கோவியாரே

சரி, இது என் முறை, வாருங்கள்


1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிளாக்-ன் பெயர் அறிவே தெய்வம், தெய்வம் குறித்து நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியே இப்பெயர்.

கோவியார் தொடர்பதிவுக்கு அழைத்தபொழுது ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக்கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் மேலோங்கி, நடப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ளாமல் முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ (இதில் சோதிடம், எண்கணிதம் ஏதுமில்லை - கோவியாரே)


என் பெயர் சிவசுப்பிரமணியன். கொங்குமண்டலம் ஆனதால் இஷ்ட தெய்வம் முருகனின் பெயர் என்பதாக என் தந்தை சொல்லி இருக்கிறார். வால்பையன் சாட்டிங்கின்போது அண்ணா என்று என்னை அழைத்ததால், இங்கே வயது குறிப்பிடுகிறேன் 41

2.கடைசியாக அழுதது எப்போது..?

நான்கு வருடம் முன்., என் மனைவி இரண்டாவது குழந்தையை சுகப் பிரசவமாக பெற்று எடுத்தபோது, அவள் பட்ட உடல் வேதனையைப் பார்த்து..(இயல்பான வேதனைதான்., நம்மால்,நமக்காக இப்படி கஷ்டப்படுகிறாளே என்றுதான்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
பிடிக்கும், தலையெழுத்தையும் பிடிக்கும்

4.பிடித்த மதிய உணவு..

கிடைத்த சைவ உணவு, நாக்குக்கு அப்படித்தான் உத்தரவு போட்டு வைத்துள்ளேன்.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. முதலில் சாதரணமாக பழகுவேன். பின் அலைவரிசை ஒத்து வந்தால்தான் நெருக்கமாவேன்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியில்தான்., குளிக்கும்போது கொஞ்சம் தண்ணீரை ருசிப்பதுண்டு. அது அருவியில்தான் இனிமையாக அனுபவிக்க முடியும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..

பேசும் விதத்தை., மனதை., அது அவரைப் பற்றி கணிக்க உதவும். மனதளவில் நெருங்க உதவும்.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: தெரியவில்லை

பிடிக்காதது: கொஞ்சம் சோம்பேறித்தனம்


9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..

பிடித்த : குடும்ப நிர்வாகத்திற்கான உடல் உழைப்பு,

பிடிக்காத: குழந்தைகளின் குறும்பு எல்லை மீறும்போது கண்டிப்பது


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாரும் இல்லை.



11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?

பிரவுன் பேண்ட், லைட் வயலெட் சர்ட்


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..

எதுவுமில்லை. கணினியிலோ, தனியாகவோ பாட்டு கேட்பதில்லை. பழைய திரைப்பாடல்கள் பிடிக்கும்.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம் அல்லது கருப்பு, அப்போதுதான் பிற்ர் எளிதாகபடிக்க உதவியாக இருக்க முடியும்.

14.பிடித்த மணம்..

எல்லாமுமே., எதையும் மூக்கு ஏற்றுக்கொண்டாக வேண்டும். (விளையாடி ஓயும் என் குழந்தையின் வியர்வை மணம்)



15.நீங்க/உங்களால் அழைக்கப்படும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..

ஷண்முகப்ரியனின் 'படித்துறை' - ஆன்மீகம் குறித்த தெளிவான பார்வை இவரிடம் இருப்பதாக கருதுகிறேன். இவர் எழுத்தை படிக்கிறபோதே ஒரு நெருங்கிய உணர்வு ஏற்படுகிறது. இன்னும் நெருக்கமாகத்தான்.

சாஸ்திரம் பற்றிய திரட்டு - யோகம் பற்றி போதுமான அளவு அறிந்து வைத்துள்ளவர்.

அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.:)) (சும்மா)
இவரால் சமுதாயத்திற்கு நிறைய மாற்றங்கள் வரும் என உண்மையாக நினைப்பதால்.

நெஞ்சின் அலைகள்- தமிழில் பிரபஞ்ச அறிவியல் கோட்பாடுகளை கடுமையாக உழைத்து, அருமையாக கொடுத்துக் கொண்டு இருப்பவர். அதனாலேயே தனி இடம் இவருக்கு. (இந்த ஏரியாவ யாருமே தொடுவதில்லையே)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..

இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?

17.பிடித்த விளையாட்டு...

ஒரு காலில் நொண்டி அடிப்பது.., அறைக்குள்ளேயே ஏழு நிமிடம் தொடர்ந்தாற்போல் நொண்டியுடன் நடனம் ஆடிப் பாருங்களேன்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

நகைச்சுவைப் படங்கள்,

20.கடைசியாக பார்த்த படம்..

சூர்யாவின் காக்க.. காக்க..

21.பிடித்த பருவ காலம்...

இந்த உடலுக்கு வெயிற்காலம்

.22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

பிரமிள் அவ்ர்களின் சாது அப்பாதுரையின் தியான தாரா

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்

மாற்றுவதே இல்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...

பிடித்த சத்தம் : குழந்தைகளின் சிரிப்பு, பிடிக்காதது: யாரேனும் தவறுதலாக தடுக்கிவிழும்போது அதைப் பார்த்து சிரிப்பவர்களின் சிரிப்பு

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு

திருப்பதி, காளஹஸ்தி

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?

தெரியாத எதையும் ஓரளவிற்கேனும் தெரிந்து கொள்ள முயற்சிப்பது.

+ஞாபக மறதி?!

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியாத ஒரு விஷயம்..

மிகத்தெளிவான குறிப்புகள் கொடுத்தும், அதைப் பின்பற்றாத தொழில்துறை அன்பர்களின் செயல்கள்

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..

இல்லை, அல்லது மனம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..

மலை சார்ந்த இடங்கள்

30.எப்படி இருக்கணும்னு ஆசை..

மனம் என் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பது மட்டுமே

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...

வேறென்ன.. இணையத்தில் மேய்வதுதான்

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..

கிடைத்தற்கரிய வரம்

பிற்சேர்க்கை

33. தற்சமயம் உங்களிடம் உள்ள உறுதியான நம்பிக்கை குறித்து

எண்ண அலைகளுக்கு உள்ள ஆற்றல், அதனால் பேச்சில், எழுத்தில்,எண்ணத்தில் கவனம். உதாரணம் கோவி கண்ணன் என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது,

நான் இயல்பாக ஒரு வாரம் முன்னதாகவே உணர்ந்தேன்/எண்ணினேன், அவர் மனதில் அது தூண்டுதலாய் வெளிப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.இப்படி நான் நம்புகிறேன்.

Wednesday, June 3, 2009

முக்கரணத் தவம் -- பகவத் கீதை (17: 14-16)

தவம் என்பது
சரீரத்தால் செய்யப்படுவது,
வாக்கால் செய்யப்படுவது,
மனதால் செய்யப்படுவது

என்று மூவகைப்படும்.

பெரியோர்களுக்கும், குருக்களுக்கும்
செய்யும் சேவை, உடல்சுத்தம்,
ஒழுக்கம், பிரம்மச்சரியம், உயிர்களுக்கு
இம்சை உண்டாக்காமை (அஹிம்சை)
ஆகியன சரீரத்தால் செய்யப்படும் தவம்.

நல்ல நூல்கள் படிப்பது,
பிறரை துன்புறுத்தாமல் பேசுவது,
வாய்மை, பிறருக்கு சந்தோஷம்,
நலன் தரும் இனிய சொல் ஆகியன
நாவினால் செய்யப்படும் வாக்குத்தவம்.

உள்ளத்தில் அமைதி, அன்பு நிறைந்த
உள்ளம், மனதின் மவுன நிலை, தன்னடக்கம்
என்ற புலனடக்கம், ஆணவத்தை அகற்றி அடங்குதல்,
கருத்துத் தூய்மை இவை மனதால் செய்யும் தவம்.

நன்றி: ஞானப்புதையல்.- முனைவர் எம்.இராமலிங்கன், பூர்ணா பதிப்பகம்

இதை உங்களின் சிந்தனையோடு இணைத்துப் பாருங்கள்.
வாழ்வின் பல படிநிலைகளையும் முழுமையாக தவநிலையாக வாழச் சொல்கிறது.

அதில் ஓர் ஓரத்தில் ஒரு பகுதியாய் வருவது பெரியோர்களுக்கும், குருக்களுக்கும் செய்யும் சேவை,

தற்கால நடைமுறையில் பாருங்கள். பொதுவாக சமய ஆன்மீகப் பெரியவர்களுக்கு சேவை செய்வது மட்டுமே முழுஆன்மீகமாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அது மட்டுமல்ல நாத்திக நண்பர்களும் கீதை உருவாக்கப் பட்ட நோக்கமே பார்ப்பனர்களுக்கு அடிவருடத்தான் என்ற கருத்தையே உயர்த்திப் பிடிக்கின்றனர். மற்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் எதுவும் தருவதில்லை.

சரியாக புரிந்து கொள்ளாமல் பின்பற்றுவதாலும், அல்லது புரிய வைப்பவரை அடையாளம் காண இயலாதாலும், ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் இந்நிலையில் இருக்க வேண்டியதாகிறது.

காலஓட்டத்தில் நிலைத்துள்ள அனைத்துமத நூல்களும் சரியான செய்தியையே கொடுத்துள்ளன. ஆனால் அதை பின்பற்றுவோரும், எதிர்ப்போரும் சரியான முழுமையான பார்வை பார்ப்பதே இல்லை.

இதனால் மதமோதல்கள், என் மதமே பெரிது என்ற உண்ர்வு,எனநம் மன அமைதியை நாமே குலைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம்.

எதையும் சரியாக உணர முற்படுவோம். நிம்மதியாய் நிகழ்காலத்தில் இருப்போம்.