"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, September 16, 2009

திரு.கோவி.கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பாசத்துக்குரிய நண்பர் கோவியானந்தா, கோவியார், என்று நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கோவி கண்ணன் அவர்களுக்கு இன்று திருமணநாள்

பதினோராவது ஆண்டுதொடக்கம், ஆண்டு முழுவதும் இனிமையாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.

திரு.கோவி.கண்ணன் குடும்பத்தார் அனைவரும் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம்,  உயர்புகழ்,மெய்ஞானம் இவற்றில் ஓங்கி, நீடூழி வாழ வேண்டும்என குடும்பத்தினர், நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்




***********************************************
டிஸ்கி; நம்மால சமாளிக்க முடியாத இவரை சமாளித்துக்கொண்டிருக்கும்  அண்ணியாருக்கு கூடுதல் வாழ்த்துக்கள்
***********************************************

Friday, September 11, 2009

பாட்டுக்கேட்டுக்கிட்டே வேலை செய்வது.....

ஏற்றுமதி பனியன் தயாரிப்பு தொழிலில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. நிட்டிங், டையிங்,பிரிண்டிங், எம்ப்ராய்டரி இதுபோல இன்னும் பல துறைகள் உள்ளன.

அதில் ஒன்றுதான் தேவையான பிரிண்டிங் வரைபடத்தை கணினியில் மேம்படுத்தித் தருதல், அங்கு பணிநிமித்தம் சென்றேன், காலை 10.00 மணி இருக்கும் ,

மூன்று கணினிகள் உள்ள அலுவலகம், தொழிற்சாலையும் அதுதான்:))

எனக்குத்தேவையான டிசைனை மேம்படுத்த சென்றிருந்தேன். கணினியின் பின்புலத்தில் சினிமா பாடல்கள் பாடிக் கொண்டிருந்தது. எல்லா பாடல்களுமே நான் அதிகம் கேள்விப்படாதவை, எல்லாமே புதியவை.

சற்று சத்தமாகவே இருந்தது."என்ன தம்பி, வேலை செய்யும் போது கொஞ்சம் மெதுவாக சத்தம் வைக்கலாம் அல்லவா?" என்றேன்.

சிரித்துக் கொண்டே சத்தம் குறைத்து, பின்னர் வேலையில் ஈடுபட்டார்.

வேலையின் சலிப்பை போக்கிக்கொள்ள பாட்டுக்கேட்பதாக எடுத்துக்கொண்டேன்.

அந்த நபர் பாட்டை ஒழுங்கா கேட்பாரா !!

இல்லை வேலைய ஒழுங்கா செய்வாரா !!






சரி நான் கார் ஓட்டிப்பழகும்போது, பாட்டுக்கேட்டால் எப்படி கார் ஓட்டமுடியும், ரோட்டைப்பார்த்து எப்படி காரோட்டுவது என்று பயிற்றுவிக்கும் நண்பருடன் சண்டைக்கே போய்விட்டேன்.

ஆனால் இப்போது கார் ஓட்டும்போது ஏதேனும் பாட்டோ, உரையோ ஒலித்த வண்ணம் தான் இருக்கிறது.

இதெல்லாம் சரியா, தவறான்னு மனசு யோசிக்குது :)))

நீங்க எப்படி ?

உங்க மனசுல தோணுவதை சொல்லுங்க, அலசிப் பார்ப்போம் :)

Sunday, September 6, 2009

அனானியும் வேதாத்திரி மகானும்

நண்பர் ரவிஆதித்யா அவர்களது அந்த ”அனானி” யார்? சொல்லமுடியுமா? கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. மிகச் சரியான முறையில் விஞ்ஞானம் சொன்னதை அலசி இருந்தார்.


\\ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.\\

அதே சமயம் இறைநிலை என்பது பொருள் அல்ல,அதற்கு இந்த சூத்திரம் உதவாது.

சுலபமா யோசித்தால்கூட நாம் ஓட்டுகிற வாகனம், கீழே பூமி தாங்கி இருப்பதால்தான் பாதையில் ஓடுகிறது. ஒரு அடி உயரமா சக்கரம் நிலத்தில் படாமல் இருந்தால் ஓடாது, வெறும் சக்கரம்தான் சுற்றும், வாகனம் நகராது.

சரி பூமியின் எடையும், பருமனும் எவ்வளவு?
இதை எது தாங்கிக் கொண்டிருக்கிறது ?
பூமிக்கு கீழ் எந்த ரோடு சூரியனைச் சுற்றி வர போடப்பட்டிருக்கிறது ?
பூமி அதில் உருண்டு கொண்டு இருக்கிறதா ?
பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் மற்றும் சூரியனைச் சுற்றி வரும் வேகத்திற்கு காரணம் என்ன?

பதிலே கேள்விக்குரியதாக அமையும் அறிவியலில். 

சூன்யத்திற்கு காரணம் வேண்டியதில்லை, ஏனெனில் சூன்யமே காரணம், சூனியமே காரியமாகவும் மலர்கிறது, சூனியம் என்பது அனைத்துக்கும் மூலம், அதனுள் அனைத்தும் அடக்கம்.

இனி இதோ வேதாத்திரி மகானின் கருத்துக்கள்

“சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா?
அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் இரகசியம் என்ன?


மகானின் பதில்

”படுத்திருக்கிறீர்கள், நல்ல ஓய்வு, அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே...? ஏன் எழுந்திருக்கிறீர்கள்? உங்களுக்குள் மிகும் உடல்ஆற்றல் வேகம் தானகவே எழுந்திருக்கச் செய்கிறது.

சுத்தவெளி தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்தன்மை கொண்டது. அது எப்போதுமே தானாகவே விரிந்து கொண்டே இருக்குக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும், தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.”

எனக்கு மகானின் இக்கருத்து, முழுமையாக, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவானதாக இருக்கிறது. சுத்தவெளி என்ற இறைவெளி இதையே இறை என மதிக்கிறோம்.

இந்த கருத்தை நான் இடுகையாக்க தூண்டுதலாய் இருந்த நண்பர் ரவி ஆதித்யாவுக்கு  எனது நன்றிகள், வாழ்த்துக்கள்

Friday, September 4, 2009

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

ஆன்மீகத்தின் பெயரால் உலகில் எத்தனையோ மார்க்கங்கள் உருவாகி விட்டன. சைவம், வைணவம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சமணம், பெளத்தம், சாங்கியம், சீக்கியம், கிறித்துவம்,இஸ்லாம், திபேத்தியம்... இப்படி எண்ணற்ற மார்க்கங்கள்

எது உண்மையான முக்தியைக் கொடுக்கும் ?

ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையோரை குழப்பும் விசயம் இது.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்த்தால் இவற்றை இரண்டே இரண்டாக வகுத்து விடலாம்.
(1) இறைவனை உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளிமார்க்கம்,
(2) இறைவனை இல்லை என்று மறுக்கும் இருள்மார்க்கம்

உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளி மார்க்கத்தை சித்தாந்தம் என்று பொதுவாய் அழைக்கலாம்.

இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.

இந்த உடலை மெய் என்று போற்றுவது சித்தாந்தம்

இந்த உடலை பொய் என்று போற்றுவது வேதாந்தம்.

இந்த உலகம், சூரியன்,கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அண்ட சராசரம் அனைத்தும் உண்மை என்கிறது சித்தாந்தம்.

அத்தனையும் உண்மையல்ல, மாயையே என்கிறது வேதாந்தம்.

அது என்னும் பிரம்மம் நீயாக இருக்கிறாய்! என்று உள்ளே காட்டுவது சித்தாந்தம்.

நீ அதுவாய் இருக்கிறாய் என்று வெளியே தேடச் சொல்வது வேதாந்தம்

’அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே!’ என்று அருணாகிரிநாதப்பெருமான் பாடியதுபோல், ’கர்மவினையைக் கடவுள் நினைத்தால் கணப்பொழுதில் அழிக்கலாம்!‘ என்கிறது சித்தாந்தம்.

கர்ம வினையை யாரலும் அழிக்கமுடியாது, அதை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்!’ என்பது வேதாந்தம்.

நாம் மனது வைத்தால் இந்த ஒரே பிறவியில் முயன்று முக்தி பெறலாம்! என்கிறது சித்தாந்தம்.
பல பிறவிகள் எடுத்துப் படிப்படியாய்த் தான் முக்தியை அடைய முடியும் !’ என்கிறது வேதாந்தம்.

உள்ளே கடவுளைப் பார்க்கலாம் என்கிறது சித்தாந்தம்.
‘உலகையே கடவுளாகப்பார்’ என்று உபதேசிக்கிறது வேதாந்தம்.

’தொண்டு செய்தால் கண்டு கொள்வார்கள் மகான்கள்!’ என்கிறது சித்தாந்தம்.
தொடர்ந்து கடும்பயிற்சிகள், தவ முயற்சிகள், கடும் வைராக்கியம்,கடும் ஒழுக்கம் தேவை என்கிறது வேதாந்தம்.



நன்றி-அரங்கராச தேசிக சுவாமிகள், ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி

Monday, August 31, 2009

ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

நம் முன்னேற்றத்தை முடிவு செய்வது சோதிடமா? முன்வினைப்பதிவா?, முயற்சியா? விதிப்படிதான் எல்லாம் நிகழும் என்றால் முயற்சி எதற்கு?


இதை புரிந்து கொள்ள முதலில் நமது வாழ்க்கையை, மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை, மனம் கடந்த வாழ்க்கை என இருவிதமாக பிரித்துப்பார்ப்போம்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது அஞ்ஞான வாழ்க்கை , இவ் வாழ்க்கை இகலோகம் எனப்படும் இவ்வுலகத்தை சுற்றி, சார்ந்தே அமையும்.

கல்வி, தொழில், மனைவி, மக்கள், உறவினர் சமுதாயம், பொருள் சம்பாத்தியம், அந்தஸ்து, அதிகாரம், புகழ் என இப்பூமியைச் சுற்றியே பின்னப்பட்ட வாழ்க்கை ஆகும்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம்,அனாகதம், விசுக்தி என்னும் ஐந்து ஆதாரத்துக்குள்ளேயே வாழ்வது, அதாவது விசுக்தி என்னும் கண்டத்தைத் தாண்டாத வாழ்க்கை ஆகும்

அத்தகைய கண்டம் கடக்காத அஞ்ஞான வாழ்க்கைக்கு முன்வினைப்பதிவு, முன்னோர் வினை, சோதிடம், என்கணிதம்,வாஸ்து ,விதி, சமுதாயம், தெய்வங்கள் என சகலத்தடைகளும் உண்டு. இவைகளின் பாதிப்பு உண்டு.

இவைகளிலிருந்து விடுபட முயற்சி கண்டிப்பாக தேவை, எதிர்நீச்சல் வெற்றியைத் தரும். இதற்கு தன்னம்பிக்கை முன்னேற்ற பயிற்சிகள், இதர ஆன்மீக அமைப்புகள், வழிமுறைகள் ஓரளவு உதவும், இது குறித்த விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். இல்லாவிடில் சிக்கலே. இது மனதின் தன்மைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் வேறுபடும்.

வினைப்பதிவை நீக்கக்கூடிய வாழும் முறை,பரிகாரம், மனம் சார்ந்த பயிற்சிகள் போன்றவைகளினால் மேற்கண்ட தடைகளை கண்டிப்பாக குறைக்க அல்லது நீக்க முடியும்,

இந்த மனிதப்பிறப்பில், வாழ்வில், நமது தலைவிதியை நம் கையில் எடுத்து முயற்சியால் மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கும் மனமே மறைமுகமாக தடையாக இருக்கும். மனமே தலைவிதி எனலாம்.

இந்த மனதிற்கு உட்பட்ட வாழ்க்கைக்கு, முயற்சி நிச்சயம் உதவும்.

இதற்கு மனம் கடந்த வாழ்க்கை முறைக்கு உரிய வழிகளை பின்பற்ற வேண்டும்.





இனி  மனம் கடந்த வாழ்க்கை

மனம் கடந்த வாழ்க்கை என்பது ஞான வாழ்க்கை, இது இகலோகத்தை சார்ந்திருந்தாலும், பரலோகத்திற்குரிய எண்ணத்திலும், முயற்சியிலும் விடாமல் கவனம் வைத்திருக்கும் வாழ்க்கை ஆகும். திருமுறைகள்,மகான்கள் வழிபாடு, தவமுயற்சிகள் என்ற தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு வானத்தை நோக்கிய பயணமாக, வாழ்க்கை இருக்கும். இதில் மத வேறுபாடு கிடையாது.

மனம் கடந்த வாழ்க்கை என்பது விசுக்தி எனும் கண்டம் கடந்த
ஆக்ஞை, சகஸ்தரதளம் என்னும் ஆதாரங்களில் வாழும் தவ வாழ்க்கை ஆகும்.

இந்த ஞான வாழ்க்கைக்கு வந்தோர்க்கு சோதிடம்,விதி, முன்வினைப்பதிவு, சமுதாயம், தெய்வங்கள் போன்ற தடைகள் கிடையாது. மிச்சம், மீதி இருப்பதும் கரைந்து கொண்டே வரும். எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாது,

இதன் பின்னர் முயற்சி தேவைப்படுமா என்றால் இங்கு முயற்சிக்கு வேலையே கிடையாது, எதிர்நீச்சல் அவசியமே இல்லை. இதற்கு உதவுவதெல்லாம் ஞானியர் தொடர்பு, மந்திர உபாசனை, உடல் ஒழுக்கம், செயல் ஒழுக்கம் ஆகியவையே.

அறிவு தெளிவு அடைய அடையத்தான் அச்சம் விலகும், அத்தனை குழப்பங்களும் நீங்கும்

அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

மகான் ரமணர் மனம் கடந்த நிலையில் வெளிப்படுத்திய இவ் மஹாவாக்கியம் பொருள் இகவாழ்விற்கானதல்ல, இதை இப்புவி வாழ்வுடன் இதை பொருத்தி பார்த்தால் குழப்பமே மிஞ்சும்,

நீங்கள் மனம் கடந்த வாழ்விற்கு தயாராகிறீர்களா? உங்களுக்காக சொல்லப்பட்டதே இது. வினைகள் கழிந்து மேல்நிலை அடைய அடைய, பரலோக வாழ்வு நமக்கு எப்படி வாய்க்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது

ஆக பெரியோர்கள், ஞானியர் வாக்கினை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டுமானால் அவர்களின் மனோநிலைக்கு நம் மனம் செல்லவேண்டும்.

இல்லையெனில் நம் மனதின் தரத்தைக் கொண்டு எடைபோட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியாமல் முரண்பாடகத் தெரியும், ஆகவே தெளிவடைவோம். மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் வெற்றியடைவோம்.

மனம் கடந்த வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்போம்.

Saturday, August 29, 2009

மனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா..!!!

மிருகம் ஐந்தறிவு உள்ளது, மனிதனோ ஆறறிவு படைத்தவன், மிருகங்கள் உணவுக்காக
உணவை உற்பத்தி செய்ய தெரியாததால் பிற உயிரை கொன்று தின்கின்றன.

மனிதன் ருசிக்காக மிருகங்களை கொன்று தின்று வாழ்கிறான்.

அதே சமயம் சீவகாருண்யத்துடன் உயிர்களைப் பார்ப்பவர்களும் உண்டு.

இந்த காணொளியை என் முந்தய இடுகையில் க. தங்கமணி பிரபு பின்னூட்டத்தில் தெரிவித்த இணைப்பில் முதன்முதலாக பார்த்தேன். மனிதம் இவ்வளவு தாழ்ந்துவிட்டதா ? அதிர்ச்சியாக இருந்தது.

இங்கு ஒருபுறம் முகம் தெரியாத நண்பர்கள் ஒன்று சேர்ந்து செந்தில்நாதனை இயல்புக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறோம்.

கைக்கெட்டும் தூரத்தில் மனிதனை மனிதன் சத்தமிடக்கூட வாய்ப்பின்றி, காக்கை குருவியை சுடுவதுபோல் சுடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சுடப்பட்டவன் நிலையில் இருந்து பார்க்கிறேன்.

அவன் மனம் அந்த கணத்தில் என்ன பாடுபட்டிருக்கும் ?

வார்த்தைகள் எழும்ப மறுக்கின்றன…

எதைக் குற்றஞ் சொல்வது, மனிதன் இப்புவியில் வாழும் உரிமை பறிக்கப்பட்டதற்க்கு
அறிவியலையா, மதத்தையா, இனத்தையா, இது நமக்கு தேவைதானா?

கதிரின் இடுகை

நர்சிம்


இலங்கை இராணுவத்தின் கோரம் : மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்




பார்த்தால் மனம் பதைபதைக்கும் இந்த நிகழ்வுக்கு என்ன பதில் ? இதை அந்த நாடே அனுபவிக்கும், இயற்கைச் சட்டம் என்ன செய்கிறது என்று பார்க்கலாம் !