"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, October 12, 2009

ருசியான சிக்கன் வேண்டுமா ?

நோயால் செத்த கோழிகளை விற்கும் கும்பல் : உடுமலை அருகே சிக்கியது

உடுமலை: பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் இறந்த கோழிகளை சேகரித்து அவற்றை ஓட்டல்களுக்கு விற்கும் கும்பலைச் சேர்ந்தவரை உடுமலை பகுதியில் விவசாயிகள் வளைத்து பிடித்தனர்

.பண்ணைகளில் நோய்த் தாக்குதல் மற்றும் இதர காரணங்களால் இறக்கும் கோழிகளை ஆள் நடமாட் டம் இல்லாத பகுதிகளில் வீசுகின்றனர். அவற்றை சேகரித்து, ஓட் டல்களில் குறைந்த விலைக்கு விற்பதை ஒரு கும்பல் தொழிலாக செய்கிறது.

பெதப்பம்பட்டி அருகிலுள்ள மாலக்கோவில் பிரிவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நேற்று அதிகாலை மர்மநபர், இறந்த கோழிகளை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விவசாயிகள் சென்று விசாரித்துள்ளனர். இறந்து பல நாட்களான 200க்கு மேற்பட்ட கோழிகள் சேகரித்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபரை விவசாயிகள் நன்கு "கவனித்தனர்'. இதில், காயமடைந்த நபர், தனது ஊர் பல்லடம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் என்றும், பெயர் பாண்டியன் என்றும் தெரிவித்துள்ளார்.



அவர் விவசாயிகளிடம் கூறியதாவது: உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு இறந்த கோழிகளை சேகரித்து குறைந்த விலைக்கு விற்கிறோம். சேகரிக்கும் இறந்த கோழிகளை தூய்மைப்படுத்தி "பேக்' செய்து ஓட்டல்களுக்கு விற்பனை செய்வோம்.வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறந்த கோழி இறைச்சி கிலோ 20 ரூபாய்க்கு ஓட்டல்களுக்கு "டோர் டெலிவரி' செய்ததால் எங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.இவ்வாறு, பாண்டியன் தெரிவித்துள்ளார். பாண்டியன் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குடிமங்கலம் போலீசுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.


பலத்த டிமாண்ட்: பாண்டியன் சிக்கியவுடன் விவசாயிகள் அவரிடமிருந்த மொபைல்போனை கைப்பற்றினர். அரை மணி நேரத்திற்குள் திருப்பூர், பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளை சேர்ந்த ஓட்டல்களிலிருந்து, "சிக்கன் என்ன ஆயிற்று?' என தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகளையும், இறந்த கோழி இறைச்சிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட ஓட்டல் பெயர்களையும் விவசாயிகள் குறித்துக் கொண்டனர்.

நன்றி; தினமலர் 12.10.2009

Saturday, October 10, 2009

உருவ வழிபாடு ஏன்?

உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.

இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies

இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்


முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.

அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்


ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

---வேதாத்திரி மகரிஷி,

தொடரும்



டிஸ்கி; வேதாத்திரி மகரிஷி அவர்களின் இந்த கட்டுரை எளிமையாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அமைந்துள்ளதாக நான் எண்ணுவதால் இன்னும் சில பகுதிகள் தொடரும்.

Tuesday, October 6, 2009

பணமும் பெரியாரும்... பாரதியும்....

பணம் நமது வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிவிட்டது.,

திறமைகள் இருந்தும், தகுந்த தொழிலோ, வேலையோ செய்தும் போதுமான பணம் வருவதில்லை. ஏன்?

பணம் வரும் வழிதான் என்ன? இதில் நம் பங்கு என்ன?

பணத்தின் மீது பற்றும் அக்கறையும் வைத்துக் கேட்டால்தான் பணம் வரும்.





தந்தை பெரியார் ஒரு மாபெரும் அறிஞர். அவர் இந்த பணவிசயத்தில் மிக சரியாகவும், தெளிவாகவும் சிந்தித்தார். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் அவர் முதலில் கேட்கும் கேள்வி. “ புத்தகம் எத்தனை ரூபாய்க்கு விற்றது?” என்பதுதான்.

மக்கள் அவரிடம் நினைவுக்குறிப்பில் கையொப்பம் கேட்டால்கூட. ‘இருபத்தி ஐந்துகாசு’ இன்றைய கணக்குப்படி இருபத்தி ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம், வாங்கிக்கொண்டுதான் கையொப்பம் இடுவார்.

பணத்தின்மீதும் ஒருகண் வைத்திருந்தார். இன்று அவர் தேடி சேர்த்து வைத்த சொத்து நீங்கள் அறிந்ததுதான்.

நேர்வழியில் பணம் சம்பாதிக்க தொழில் செய்யும்போது பணத்தின் மீதே கண்ணாக இருக்க வேண்டும்,


பாரதியார் பணம் சேர்ப்பது குறித்து கணப்பொழுதேனும் சிந்தித்திருக்கவில்லை. அவரது துணைவியார் பக்கத்துவீட்டில் கடனாக வாங்கி வைத்திருந்த அரிசியையே, “காக்கை குருவி எங்கள் சாதி..” என்று பாடியபடி முற்றத்தில் சிதறவிட்டுக் குருவிகள் தின்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர். ஆனால் எண்ணத்தை முறைப்படி வானத்தில் அனுப்பாமல் வறுமையில் உழன்றார். இதில் தவறேதும் இல்லை என்றாலும் பணம் சம்பாதிக்கும் நுட்பத்தை அவர் கைக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

பணத்தை உணர்ந்து மதிப்போம், வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.

Sunday, October 4, 2009

முருகக் கடவுள் தலைமைச் சித்தர்


ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.

தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.

வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்;இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை.

முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

Friday, September 25, 2009

நாய் வளர்த்ததும், கண்கள் பனித்ததும்

நாய், பூனை என செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம், ரொம்ப உயர்ந்தரகம் என்கிற அளவில் நினைத்து விடாதீர்கள்,

சாதரண கிராமத்தில் கிடைக்கக்கூடிய பழகிய நாய், பூனை அவற்றின் குட்டிகளை பார்க்க பார்க்க, வளர்த்த வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு செயலில் இறங்கிவிடுவேன்

இப்போது அல்ல, சின்ன வயதில், 12 அல்லது 13 வயது இருக்கும்,

நாய்க்குட்டி வளர்த்தும்போது அதைப் பராமரிப்பது தனிசுகம்,அது உணவுக்காக நம்மை எதிர்பார்ப்பதும் வாலை ஆட்டிக்கொண்டு நம்மோடு உறவாடுவதால் ஏற்படும் மகிழ்ச்சியும் அலாதியானது. அது ஒரு தனி சுகம்.

எனக்கு கிடைக்கிற உணவு, பால் ஆகியவற்றை அதனோடு பகிர்ந்து கொள்வேன், இதற்கிடையில் கிணற்றில் நீந்தப்போகும்போது நாய்குட்டியை உடன் கூட்டிச்சென்று, அதைத் தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு, அப்புறம்தான் நான் குதிப்பேன்.

நாம் நீச்சல் பழகும்போது, கத்தாளைமுட்டி, என்கிற கத்தாளையின் காய்ந்த தண்டுப்பகுதி, சுரைப்பொரடை என்கிற காய்ந்த சுரைக்காய் ஆகியனவற்றை முதுகில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகியது உண்டு,

நாய்க்குட்டியோ எந்த உதவியும் இல்லாமலே இயற்கையாகவே நீந்தும். அது மட்டுமில்லாமல் இரவு திண்ணையில் நான் தூங்கும்போது , அது அருகிலேயே வாசற்படியில் தூங்கும், அதிகாலையில் பார்த்தால் எனது போர்வைக்குள் படுத்துக்கொண்டிருக்கும்,

அதற்கு ஆரம்பத்தில் பெயர் வைத்ததுதான் வேடிக்கை, எந்தப்பெயரும் தோன்றாமல், ஏனோ எனக்கு பிடித்தது எனத் தோன்றிய மணி என்கிற பெயரை வைத்தேன்

என் தந்தை சற்று கண்டிப்பானவர், எனவே அவர் பணிக்கு சென்ற பின்னர்தான் இந்த நாய்க்குட்டியுடன் கொஞ்சல் எல்லாம்
.
அவர் இருந்தால் அமைதியாக இருப்பேன், நாயும்தான்

மணி,மணி,மணி... என்று அழைத்தால் போதும், எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும், அப்படி ஒருநாள் அழைத்து உணவிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள் பின்னால் வந்து நின்ற என் தந்தையார் ’திமிரப்பாரு..’ என்றபடியே என் முதுகில் ஒரு சாத்து சாத்தினார்,

காரணம் புரியாமல் விழித்தேன்,

அப்புறம்தான் தெரிந்தது. அவரது வேலை செய்யும் இடத்தில் அவரது சுருக்கமான பெயர் மணி என்பது :))

அன்றிலிருந்து நாயின் பெயர் ’ஏய்’ தான்,


அப்போது ஒரு நாய்க்கு பெயர் வைப்பதில் இத்தனை விசயங்கள் அடங்கி உள்ளதா !!!
இந்த சுதந்திரம்கூட நமக்கு வாய்க்கவில்லையே என அந்த வயதில் வருத்தப்பட்டது உண்டு

இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன், காரணம் சிவா என்கிற என்பெயர் குறித்துதான். அவ்வப்போது ஏதோ தகுந்த காரணத்தோடுதான் பெயர் அமைந்திருக்கிறது என நினைத்து கொள்வேன்,

என் நண்பரால் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு அன்றாடம் அழைத்து மகிழும் வகையில் அமைந்தது கண்டு உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.

நண்பர் ஓம்கார் தினமும் என்னை கவனித்துக்கொண்டும், அழைத்து மகிழ்வதும் நான் பெற்றபேறுதான் :) ஏனோ இன்னும் நெருக்கமாக உணர்கிறேன். மேலதிக விவரங்களுக்கு





இதை சிவனின் திருவிளையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்கிறேன்.

கண்கள் பனிக்க இதயம் கனக்க      சிவா

Wednesday, September 23, 2009

பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்

காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரம், குளித்துவிட்டு தயாராகி காலை உணவுக்காக காத்திருப்பேன், குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மும்முரமும் சேர்ந்து கொள்ள, கிடைக்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் இணயத்தில் மேய்வது வழக்கம்,






அப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னவள் வந்து "அப்பா தோசையப் பிச்சுப் போட்டுக்கொடுங்க" என்று அழைக்க

"அம்மாகிட்ட போயேன்,"


"ஏன் உன்னால பிச்சுப் போட்ட்டுக்கொடுக்க முடியாதா?"


"இல்ல, சுவாரசியமா படிச்சிட்டு இருந்தேன், அதனாலதான்ன்..."


"இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது, பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய், இந்த பம்மாத்தெல்லாம் இங்க வேகாது...."


"சரிங்ங்ங்..."

சட்டென சின்னவளின் தட்டில் இருந்த தோசையை பிய்த்து போட்டேன், மகளின் முகத்தில் உருவான புன்முறுவல் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.

என் மகளுக்கு ஒரு இனிய நிகழ்வை கொடுத்த நிறைவு ஏற்பட்டது.

மேற்கண்ட உரையாடல் எனக்கும் யாருக்கும் இடையே நடந்திருக்கும், சரியாக ஊகித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
'அம்மாகிட்ட போயேன்' என்று சொல்லலாம் என மனதுள் எண்ணம் எழுந்துவிட்டது, வாய்வரை வந்து சொல்லாக மாறவேண்டியதுதான் பாக்கி...

உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது, விளைவு நீங்கள் அறிந்ததே ,

இது அனைத்தும் நடந்தது விநாடிக்கும் மிகக்குறைவான நேரத்தில்தான்.


இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.


பல்வேறு செயல்களின் ஊடேயும் இப்படி மனதைக் கேள்வி கேட்டுப்பாருங்கள்,

விளைவுகளை பின்னூட்டமிடுங்கள், சாதக பாதகங்களை அலசுவோம்.

சிந்திப்பதுடன் செயல்படுவோம்

வாழ்த்துக்கள்,