"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, January 13, 2010

எனக்குத் தேவை பணம், பதவி, புகழ்

சென்னை : "தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


அவர், மேலும் கூறியதாவது:தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பணியை எடுத்துக் கொள்வதற்கு முன், அப்பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், பல வேலைகளை திட்டமிடாமல் செய்து, மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, நிர்வாகம், சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், மோசமான பணியை செய்துள்ளது.


முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.

நன்றி தினமலர் 13.01.2010

Monday, January 11, 2010

நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்

நம்மை உயிர்ப்போடு காத்துநிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளாக தைமாதம் முதல்நாளை கொண்டாடுகிறோம்.

இந்த நல்ல நாளை வரவேற்று மகிழ்வோம்.



இதோ மகானின் பொங்கல் வாழ்த்து அவர் பாணியில் பொங்கலையும், உள்நோக்கிய மனோநிலையில் இருந்தும் நமக்கு வழங்கிய பாடல்

                      

                          சூட்சுமப் பொங்கல்

வெட்டவெளி என்ற பெரும் பானைக்குள்ளே

            வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி

அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்

         ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்

கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்

          கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்

தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது

         சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சமப் பொங்கல்

 

-- வேதாத்திரி மகரிஷி

வாழ்த்துகளுடன் 
நிகழ்காலத்தில் சிவா

Sunday, January 3, 2010

ஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடுகளுக்கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.



படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.


மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.


பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் "சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.


எலும்பு பவுடர் உரம்: வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர். மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -

நன்றி ; தினமலர்  3.1.2010
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6152

இனி நான் சைவம் என சொல்ல முடியாது போல் இருக்கு.:)))
கூடுதல் சத்து கிடைக்கும்னு நினைச்சுக்க வேண்டியதுதான் :(

Monday, December 28, 2009

வாழ்வில் பிரச்சினைகள் தேவையா?

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய்.தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”

கடவுள் உடனே, “ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்.” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை வெயில் காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப் பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே படுரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து,திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான். “மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்!, ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?”


கடவுள் புன்னகைத்தார்: “என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக் கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும். 

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. 

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!”

வேண்டாமடா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.


நன்றி: அத்தனைக்கும் ஆசைப்படு, ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம்

Friday, December 25, 2009

படித்ததில் பிடித்தது 25/12/09

நண்பர்களே, வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது...

நீங்களும் பாருங்களும். இதுவும் ஒரு அவசியமான தகவல்தான்.


நன்றி  -  திருத்தம் வலைப்பதிவு

வாழ்த்துகள்

Wednesday, December 23, 2009

பூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்


தமிழின் தனிச்சிறப்பு

பூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல் என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும், ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.

ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப் பூப்பறித்தல் என்று கூறுவர்.

தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.

மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல் என்று கூறுவர்.

சொன்னவர்; பேரா.அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்

பூப்பறித்தல் என்பதை மட்டுமே வழக்கமாக அனைத்துக்கும் பயன்படுத்தும் எனக்கு இவரின் தகவல் மனதில் பதிந்து விட்டது