"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, July 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 3

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வனத்துறை கேம்ப் தாண்டினோம். யானைகள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கவே தேவையில்லாமல் சுற்றிலும் அகழி...(காலை 9.20)



சுற்றிலும் நிஜமாகவே யானையை உள்ளே இறக்கிவிட்டால் தெரியாது. அந்த அளவு ஆழம், அகலம், கோவைப்பகுதியில் யானைக்கான அகழி (?) தோண்டி இருப்பதைப் பார்த்தால் வெள்ளாடு கூட தாண்டிக்குதித்துவிடும். அப்படி இருக்கும். இந்த குழிக்குள் தப்பித் தவறி நாம் விழுந்தால் வேறொருவர் துணையின்றி மேலே ஏற முடியாது :)  தாண்டிச் செல்ல இரண்டு குச்சிகளை கட்டி வைத்திருக்கின்றனர்.. சில சமயங்களில் அங்கே தேநீர் கிடைக்கும்.





அதைத்தாண்டியவுடன் சட்டென பாதை ஏதுமின்றி காலடிப்பாதை மட்டும்தான். இப்படியேதான் போகனுமோன்னு குழப்பம் வர நடந்தோம். ஆனால் நல்ல வேளையாக இது ஒரு குறுக்குப்பாதை.. பழைய பாதையுடன் இணைந்து விட்டது :)


வழியில் கண்ட வண்ண மலர்கள். நேரம் காலை 9.30




தொடர்ந்து நாங்கள் நடந்தபோது காலை 9.45 கீழ் கண்டவாறுதான் பாதையின் பாதிப்பகுதி இருக்கும். காய்ந்த இலைதழை கீழே கிடக்க, அவ்வப்போது பெய்யும் மழை அதை ஈரமாக்கி, இற்றுப்போகச் செய்ய சுற்றிலும் நெருக்கமாக மரங்கள் மனதை எளிதில் தன் வசமாக்கிவிடுகின்றன :)



படங்கள் எல்லாம் பொதிகை மலைப்பாதையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சான்றும், வரலாறும் முக்கியமல்லவா :) அதற்காக ஒன்று......






காலை 9.50 பாதையில் இது வரை நான் பார்த்திராத  மரத்தின் அடிப்பாக அமைப்பு, மரத்தின் அகலம் சுமார் 15 அடி முக்கோண உயரம் சுமார் 10 அடி,  உயரம் அண்ணாந்து பார்த்தால் தெரியவில்லை :) கூட்டல் குறி நிலத்தில் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரம் வேர் விட்டிருக்க புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.



10 மணிக்கு சிறிய நீரோடையை அடைந்தோம்.






நீளம் கருதி நாளை தொடர்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

Monday, July 8, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 2

இரயிலில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து நெடுமங்காடு ,விதுரா , ஊர்களின் வழியாக போனகாடு  செல்லும் பஸ் பிடிக்க, விசாரித்தபோது வர லேட்டாகும், அந்த பஸ்ஸில் சென்றால் போனாகாடு ஊரில் இரவு 9.30 க்கு இறக்கிவிடப்பட்டு தனியாக இருக்க வேண்டியதாகிவிடும்   , அதனால நாம நெடுமங்காடு போயிட்டு அங்கிருந்து கனெக்சன் பஸ் பிடித்தும் போகலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. நாங்கள் சென்ற மாலை வேலையில் நெடுமன்காடு,விதுரா  பஸ்தான் கிடைத்தது. விதுராவுக்குச் செல்லும்போது மணி இரவு 8.30 மணி...எனவே விதுராவில் இரவு தங்கினோம். ஓரிரு லாட்ஜ்கள்தாம் .. இங்கேயே தங்குவது உத்தமம். ஏனெனில் பலர் மலை அடிவாரத்துக்கு முந்தய நாள் இரவு சென்று தங்கினர்.  அங்கே வாசலில்தான் படுக்கவேண்டும். மழை பெய்தால் படுக்குமிடமெல்லாம் நனைந்து விடும், கூடவே குளிரும்..

அடுத்தநாள் காலை 6 மணிக்கு பஸ் இருப்பதாக செய்தி கிடைத்தது .. காலை 5.30 க்கே சென்று  காத்திருந்தோம் அங்கே உணவு இருக்குமா? இருக்காதா என்ற சந்தேகம் .. கூட வந்த நண்பர்களுக்கு :)  இல்லையென்றால் மலை ஏறும்போது என்ன செய்வது என்று ஆலோசனை செய்துவிட்டு, காலை 5.30 க்கே அருகில் உள்ள மெஸ்ஸில் அப்பமும், சுண்டல் குழம்பும் ஊற்றி அடித்துவிட்டு, காத்திருக்க 6.30 க்கு பஸ் வந்து சேர, போனாகாடு என்ற ஊரில் காலை 7.30 க்கு வந்து சேர்ந்தோம்.



இந்த ஊர்தான் நமக்கான போக்குவரத்தின் ஆதாரம். இங்கிருந்து சுமார் 2 கிமீ நடந்தால் வனத்துறை அலுவலகம் வரும். அங்கிருந்துதான் நமது பொதிகை மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் இயங்காத தொழிற்சாலை ஒன்று தென்பட.....



 ஜீப்கள், கார்கள் செல்கிற அளவிலான மண்பாதை..அரைமணி நேரம் நடக்க வனத்துறை அலுவலகம் அடைந்தோம்.




எங்களுக்கு முன்னதாக இரவே வந்து தங்கியவர்கள் வெள்ளைரவை உப்புமா டிபனாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க.. முன்பதிவு இரசீதுகளை பதிவு செய்து கொண்டோம். மதிய உணவு பார்சலாக கட்டிக்கொடுத்தனர். எங்களுடைய பைகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.. ஏதேனும் உற்சாகபானங்கள், இருக்கிறதா என்று பார்த்து அனுப்புகிறார்கள். காலை 9.மணிக்குத்தான் மேலே அதிரமலைக்குச் செல்ல அனுப்புகிறார்கள். அங்கே தங்கி அதற்கு மேல் அகஸ்தியர் கூடம் போகவேண்டும் :)

அலுவலகத்தில் இருந்து காலை 9.15 க்கு கொஞ்சதூரம் நடந்தவுடன் காட்சியளித்த பிள்ளையார்.. இவரை வழிபட்டு நகர்ந்தோம்.



Thursday, July 4, 2013

வேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்...

வருடம் தவறாமல் தீபாவளி பொங்கல் முத்து தாத்தா வந்துவிடுவார். அவருடைய முதல் விசிட் என் வீடுதான்.. வயிறாற விருந்திட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்புவேன்.  சமைத்ததில் முதல் பங்கே அவருக்குதான். குழந்தைகளே பரிமாறுவார்கள். 

நாங்கள் பயன்படுத்தும் டம்ளர் போன்றவைகள் தரப்படும். இயல்பாக கழுவி பயன்படுத்துவோம். இலையை அவரே எடுக்க எத்தனித்தால் அனுமதி இல்லை. நாங்கள் தான் எடுப்போம். அவர் மெள்ள மெள்ள வெளியேறும்போது வாசலில் நின்று மறையும் வரை பார்ப்போம். குழந்தைகளின் மனநிறைவு அளவற்றதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பெற்ற தந்தையை விட மனம் உயர்வாகவே நினைக்கும்.

காரணம்  என்னன்னு தெரியல... எல்லோரையும் சாமி, சாமி ந்னு க்கூப்பிடற வாஞ்சையா? முதுமை காரணமா, எதுவும் புரியலை... இப்படித்தான் சாதி என்கிற உணர்வு உள்ளுக்குள்ள பனித்திரை மாதிரி இருக்குது.. என் குழந்தைகளுக்கு சாதி என்பது என்னன்னு தெரியாது.... ஆனா மன அலைவரிசைக்கு ஒத்துவர்றவுங்க, வராதவங்கன்னு பிரித்துப் பார்க்கத் தெரியும். 

சுருக்கமாச் சொல்லனும்னா அசைவம் சாப்பிடறவங்க வேற சாதி.. சைவமா இருக்கிறவங்க நம்ம சாதி.. இத நான் சொல்லிக்கொடுக்கலை... எனக்கு அசைவம் சாப்பிடறவங்களோட ஒன்னா உட்கார்ந்து சைவம் சாப்பிடுவேன். அவர்களுக்கு தேவையானதை பரிமாறவும் செய்வேன். மனம் பற்று, பிடிப்புன்னு ஒட்டாமல் இருக்கிறது சாத்தியமாயிட்டுது.

சரி என் புள்ளைங்க பெரிசான வேற சாதியில கட்டி வைப்பயான்னு கேட்டா என்ன பதில் சொல்றது தெரியல ..அப்படி கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் என்னன்னு புரியல... சாதி சோறுபோடாது.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காசு இல்லாம இந்த உலகத்துல பிழைக்க முடியாது..  மாசம் இப்போதைக்கு இருபதாயிரம் இருந்தாத்தான் குடும்பம் தள்ள முடியும்..

வீட்டு வேலை எல்லாம் செஞ்சாகனும். ஆள்போடனும்னா இன்னும் பத்தாயிரம் சேத்து சம்பாதிக்கோனும். வீட்டு நிர்வாகம்,  காசு சம்பாதிக்கிறதுல உள்ள சிரமங்கள், நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற சுதந்திரம்னு எல்லாம் என் புள்ளைங்களுக்கு லேசுபாசா சொல்லித்தான் வளர்த்துகிட்டு வர்றேன்.

இவளுங்க வளர்ந்து குடும்பம் தள்றதுல உள்ள சவால்கள், வேறு சூழ்நிலை அங்கு வாழ்தலில் உள்ள அனுசரிப்பின் அவசியம் இதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டும் என் எதிர்ப்பார்ப்பு....சாதி முக்கியமில்லைதான்.

படிக்க ஹாஸ்டல்ல கொண்டு விடறன்னா பக்கிக நான் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு வீட்ல எங்களை மேய்ச்சுக்கிட்டு இருக்கிறாங்க... இதுக வளர்ந்து எல்லாம் புரிஞ்சுகிட்டு வேற சாதியிலதான் கட்டுவேன்னா கட்டி வச்சுற வேண்டியதுதான்.

நமக்கென்ன.. மாட்டுற ஐயரு பாடுதான் திண்டாட்டம் ...அவ்வளவு விபரமா இருப்பாங்கன்னுதான் நடவடிக்கைகளைப்பாத்தா தோணுது .

தர்மபுரி விசயத்த படிச்சவுடன் தோணுச்சு.. எழுதினேன்.

இளவரசன் மரணம் வருந்தத்தக்கது எனினும் அது கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இளவரசனோ, திவ்யாவோ ஆரம்பத்தில் இந்த அளவு எதிர்ப்பு வரும் என நினைத்திருக்க மாட்டார்கள். இடையில் அரசியல் புகுந்து பிரச்சினை பெரிதாகிவிட்டது உண்மைதான்... ஆனால் காதலுக்கு கண் இல்லை. சக்தியும் இல்லை போல.. இளவரசன் தற்கொலை எனில் கோழைத்தனமானது.. நம்பி வந்தவளை விட்டுட்டு போயிட்டது குற்றம்தான்... கொலை எனில் அடப்பரதேசி.. எங்கிட்டாவது ஓடிப்போயாவது பொழச்சு இருந்திருக்கலாமே.. அதொன்னும் கேவலம் இல்லையே? சில வருசம் கழிச்சு.. அல்லது எப்படியாவது திவ்யாவை பிக்கப் பண்ணி இருக்கலாமே.... ஏன் இப்படி மாட்டினேன்னு அங்கலாய்க்கத்தான் முடிகிறது.

சாதி என்பது வரும் தலைமுறையிடம் நாம் விதைக்காமல் இருந்தால் போதும். நம்மோடு அது மறைய வேண்டும். அரசும் சாதிகளை, சாதிக்கட்சிகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் போதும். மெள்ள மறைந்துவிடும்.... இதற்கு அரசியல், சாதிக்கட்சிகள் தயாராகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நம்மால் அது சாத்தியமாகும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

Friday, June 28, 2013

பொதிகை மலை பயணத்தொடர்...1


கடந்த 2013 ஜனவரி 15 முதல் மார்ச் 10 வரை பொதிகைமலையில் அமைந்த அகத்தியர்கூடத்திற்கு மலைப்பயணம் செய்வதற்காக கேரள அரசு அனுமதி அளிக்கும் என்ற செய்தியை நண்பர் இது என்ன என்ற மேல்விபரம் கேட்க என்னை அணுகி இருந்தார்..

எனக்கோ கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல். ஆனால் முதல்முறையாகச் செல்வதால் தனியாகச் செல்ல மனமில்லாமல் ஆர்வமுள்ள நண்பர்களை அடையாளம் காணுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டேன். இந்த அகத்தியர்மலை என்றும் பொதிகைமலை என்றும் அழைக்கப்படும் மலையைப்பற்றிய சில செய்திகளை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்ததால் தமிழகத்தில் உள்ள மலைப்பயணங்களைப் போல் பொதிகைமலைஇருக்காது. சிரமம் அதிகம் அதிகம் என்பது புரிந்தது :)

அட்டைகள் அதிகம் இருக்கும் என்ற விசயம் எனக்கு பழகிப்போனாலும், நண்பர்களுக்கு பயத்தை அளிக்க, போகலாமா? வேண்டாமா? என்று யோசனையில் ஒருவாரம் கழிந்தது. திடீர் முடிவாக முன்பதிவு செய்ய திருவனந்தபுரம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிளம்புவிட்டோம்..

யாத்திரை செல்பவர்கள் இதற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள  வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.

Office of the Wildlife Warden,
Wild life Division ,
Vattiyoorkkavu .P.O,
PTP Nagar,
Thiruvananthapuram.
Fax No. 0471-2360762
Phone No. 0471-  2360762


பிப்ரவரி 4ல் நேரில் சென்று காத்திருந்து பதிவு செய்தோம். பயணத்திற்கு இடம் இருந்த நாட்களோ இரண்டுதான், மார்ச் 7,8 அதிலும் மொத்தமாக ஐம்பது இடங்க்ள் மட்டுமே.பாக்கி :) மற்ற நாட்கள் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி.. அதிலும் ஒரு நபருக்கு 5 பேருக்கான முன்பதிவு டிக்கெட்...அனுமதிக்கட்டணம் 500..இதுதான் முன்பதிவுக்கான சரியான வழி... இன்னொரு முறையிலும் பதிவு செய்யலாமாம். அகத்தியர் கூடம் செல்லும் வழியில் காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும்.  நாங்கள் சென்ற போது காலை 8.45 அங்கிருந்த பாதுகாவலர் எங்களை என்போடு விசாரித்து இன்னும் ஒருமணிநேரம் ஆகும். உள்ளே அமைந்த கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ளச் சொன்னார். அந்த வேலையை முடித்து காத்திருந்தோம் ஒருவழியாய் 10.15 க்கு வனத்துறை அதிகாரி வர எங்கள் குழு 5 பேருக்கு, தலைக்கு 500 கட்டிவிட்டு இரசீது பெற்றுக்கொண்டு திரும்பினோம். ஒரு போட்ட்டோவும், அடையாளச் சான்று இரண்டு நகல் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.

நேரில் செல்ல முடியாதெனில் காணிதலத்தில் உள்ள செக்போஸ்டில் போனில் முன்பதிவு செய்து, பயண நாளன்று பணம் கட்டினால் பொதும் என்று பயணம் முடிந்து திரும்பும் போது அந்தப்பகுதி அன்பர் சொன்னார். இத்தகவலின் சாத்தியக்கூறுகள் எனக்குத் தெரியவில்லை.

டிக்க்ட் முன்பதிவின்போது அங்குள்ள ஆபீசரிடம் மலை ஏறி இறங்க எத்தனைநாள் ஆகும் என்று கேட்டதற்கு இரண்டு நாள் போதும். ஏற ஒருநாள் இறங்க ஒருநாள் போதும் என்ன இறங்கும்போது சற்று நேரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது மாலை 5.30 அல்லது 6 மணிக்கு வந்துவிடலாம். என்று சொன்னார். அவருக்கு பொதிகைமலை அடிவாரத்தில் உள்ள பஸ்டைமிங் நிலவரம் தெரியவில்லை. உத்தேசமாக 7 மணிக்கு இருக்கும் நிச்சயம் திருவனந்தபுரம் 9 அல்லது 9.30 க்கு வந்து சேர்ந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.

இதை எழுத வேண்டிய காரணம் பயணம் செல்வது இரயிலில் என்பதால், முன்பதிவு அவசியங்கள், வேலைகளை திட்டமிட்டு முடிக்க வேண்டிய அவசியங்கள் கருதி இந்த தகவல்களைச் சேகரித்து திரும்பினோம்.

இப்படித் தகவல்கொடுத்தது என்னவோ வனத்துறை அதிகாரி என்றாலும் அவர் அதிகாரி ரூபத்திலான அகத்தியர் என்பதை பயண இறுதியில்தான் தெரிந்தது.:)

Friday, May 31, 2013

பயனற்றதைப் பேசாதே 2...ஓஷோ

பயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே  கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.

எழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு,  தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)

தொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)

சரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

அமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)

அன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.

நம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.

மாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)


Tuesday, April 30, 2013

நம்மை பிணைக்கும் மாயச் சங்கிலி


சுமார் இருபது வருடங்களாக எனது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் ஒருவரை கவனித்து வந்திருக்கிறேன். அவர் சுய தொழில் செய்வதில் கைதேர்ந்தவர். தன்னிடம் முதலீடு அதிகம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதித்துவிடுவார். வாங்கிய கடனை, கொடுத்துவர்களுக்கு தேவைப்படும்போது தரமாட்டார். வட்டியை மட்டும் கொடுத்து பேசிச் சமாளித்துவிடுவார். தனது தொழிலின் பணத்தேவை பூர்த்தியான பின்னர்தான் மீதியை கொடுப்பார். கணக்கு வழக்கில் வாய்ப்பு கிடைத்தால் வேலையக் காண்பித்துவிடுவார்.

தனதுதொழில்களுக்கு ஒத்தாசையாக பிறரை கொண்டுவந்துவிடுவதிலும், அல்லது சிரமமான காரியங்களை அதன் பாசிட்டிவ் பகுதிகளை மட்டும் சொல்லி மெருகேற்றி செய்ய வைத்து பயன் அடைந்துவிடுவார்.

நான் பள்ளிப்பருவகாலத்திலிருந்தே அவரை கவனித்து வந்ததால் அவரின் வலை விரிப்புகளுக்கு சிக்காமல் கடந்துவிட்டேன். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திருப்தியாக விலகமாட்டர்கள். ஏதேனும் ஒரு சங்கடத்துடன் விலகுவார்கள்.

அவருக்கு இரு மகன்கள். அதிலும் அவரது மனைவிக்கு சற்று கர்வமும் கூட.. இரண்டு பெண்குழந்தை பெற்றவர்களைப் பார்த்தால் ”பாவம் இரண்டும் புள்ளையாப் போச்சு” என்பார். இந்த குடும்பம் பலதொழில்கள் செய்து இறுதியில் துணிக்கடை வைத்து செட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டு மகன்களுக்கும் தனித்தனிக்கடை.

காலச்சக்கரம் உருண்டோடியது, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியவன் திருமணமாகி தன் பெண்குழந்தையை வீட்டுக்கு அழைத்துவந்தார். அன்று இரவு சின்னமகன் வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம். எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்த செய்தி.

சற்று வேகமாக வந்ததால் நடந்த விபத்து. ஹெல்மெட் போட்டிருந்ததால் சின்னமகன் உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய சின்ன மகனை மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. உடனடியாக இருபதுஇலட்சம் பணம் கட்டியாக வேண்டியது ஆகிவிட்டது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

வழக்கம் போல் மனம் இதிலிருந்து வெளியே வந்து பிரச்சினையை தனக்கு பிடித்தமான கோணத்தில் அலச ஆரம்பித்துவிட்டது.

காசு காசு என்று அலைந்தவரை, அப்படிச் சேர்த்த காசை எப்படி பறிக்க வேண்டும் என்பது விதிக்குத் தெரியுமோ. இந்த விதி துல்லியமான கணக்கீடாக அமையும் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வேகமாக வந்ததல் நடந்த தற்செயல் விபத்துக்கு இந்த சாயம் பூசுகிறேன் என்பதல்ல.. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உள்ள பிணைப்பை உறுதி செய்து கொள்ளும் சம்பவம் இது. இந்த பிணைப்புதான் நாமாறியா மாயச் சங்கிலி :)

இந்த துல்லியமான கணக்கீட்டுக்கு பலிகடாவாக சின்ன மகன் அமையக்காரணம் என்ன?

போனபிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் என்றால் அது உண்மையாகக்கூட இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பிறவியில் செய்வதற்கு இந்த பிறவியிலேயே பலன் கிடைக்கும்போது போன பிறவிக்கு இப்போது பலனை அனுபவிப்பது வலிக்கின்றதே...

எந்தவகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்தவன் இப்போது அதே துன்பத்தை அனுபவித்தால் அர்த்தம் உண்டு. விபத்தில் சிக்கும் அந்த உயிர் துடிப்பதை நினைத்தாலே மனம் கலங்குகின்றது. எது எப்படி இருப்பினும் செய்கின்ற செயல்கள் நம்மையும் தொடர்ந்து நமது வாரிசுகளையும் நாம் அறியாமல் பாதிக்கும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இந்த தெளிவுக்காகவே இதைப்பகிர்ந்தேன்.

நான் யாரையாவது மனதளவில் உடலளவில் துன்புறுத்தி இருக்கின்றேனா என்பதில் கவனமாக இருக்கிறேன். பணம் என்னளவில் இழப்பானாலும் சரி..பிறருக்கு என்னால் இழப்பு என்று தவறு நேராவண்ணம் இன்று வரை காத்து வருகிறேன்.

செய்யும் செயல்கள், பேசும் வார்த்தைகள், எண்ணும் எண்ணம் இவற்றில் கவனமாக இருப்போம். நமது விதியை நிர்ணயிப்போம்