"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, September 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி - 8

மழை மீண்டும் ஆரம்பித்தது...அடுத்த வந்த அன்பர்களுக்கு வழிவிட்டு இறங்க ஆரம்பித்தோம். ஏறும்போது இருந்ததை விட பாதைகளில் நீர் வரத்து அதிகம் இருந்தது. பாறைகளில் வழுக்கும் தன்மை இல்லாததால் தைரியமாக இறங்க ஆரம்பித்தோம். படத்தில் சற்று கவனமாகப் பார்த்தால் மட்டுமே மஞ்சள் கோடு அடையாளம் தெரியும்... இப்போது தான் கேமிராவை வெளியே எடுத்து ஒருவிதமாக மழையில் நனையாமல் சமாளித்து புகைப்படம் எடுத்தேன்.

Saturday, August 31, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி - 7

மலையின் உச்சியில் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாவண்ணம் சுற்றிலும் மழைமேகம் சூழ்ந்திருக்க, அய்யன் திருமேனி அமைந்த இடத்தில் மட்டும் சற்று மழை நின்று, சாரல் மட்டும்  அடித்துக்கொண்டே இருந்தது.

எங்களுக்கு முன்னதாக வந்த கேரள அன்பர்கள், அய்யன் திருமேனியில் இருந்த முந்தய நாளைய மாலைகளை எடுத்து சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தனர். எங்கள் குழு நண்பர்கள் யாருக்குமே, இந்த விதமாக அய்யன் திருமேனியை அலங்கரிக்க வேண்டியது இருக்கும் என்பதை அறியாததால் ஊதுபத்தி, எண்ணெய் என மிகச்சில பொருள்களையே கொண்டு வந்திருந்தோம்.

Monday, July 15, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6


விடிந்தும், மழை பெய்கிற சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. குளிரில் எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்தோம்.  அருகில் பாத்ரூம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கே செல்ல அன்பர்களின் குடையைப் பயன்படுத்திக் கொண்டு, கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத்திற்கு காலை 7.45 க்கு வந்து உணவருந்தினோம். தொடர்மழை  அகத்தியரைத் தரிசிக்க, மழை காரணமாக யாத்திரீகர்கள்,  மேலே செல்லத் தயக்கம் காட்டினார்கள்.

உடன் வந்த நான்கு நண்பர்களிடம் கலந்து பேசியபோது வந்தது வந்துட்டோம். ரிஸ்க் எடுப்போம். அதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே....என்று உற்சாகத்தோடு அனைவரும் சொல்ல.. அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு,  கொண்டுவந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினோம். எங்களுக்கு முன்னதாக  ஐந்தாறு பேர் ஒருகுழுவாக மேலே கிளம்பிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்ற தகவலும் உற்சாகத்தைத் தர ஏறத் துவங்கினோம்.

கூட வந்த நண்பர்கள் இருவர்  மழைகோட் எதுவும் எடுத்துவரவே இல்லை. அவர்களும் நனைந்து கொண்டே ஏற காமிராவை நனையாமல் எடுத்துச் செல்வதே சிரமம் ஆகிவிட்டது.  போட்டோக்கள் எதுவும் எடுக்கவில்லை. ஒருமணிநேரம் மலைகளின் ஊடாக பயணம். பின்னர் புல்வெளிகளின் ஊடான பாதை...பாறைக்கற்கள் என பயணம் தொடர்ந்தது.

மேலே செல்லச் செல்ல ஒற்றையடிப்பாதையாக மாறியதோடு மழைநீர் வழிந்தோடி வரும் பாதையாகவும் மாறியது..எங்களின் கால்தடங்கள் மழைநீரினுள்..எங்கே கால் வைக்கிறோம் என்பது தெரியாது. நிதானமாக நடக்கத் துவங்கினோம்.   எதிரே நான்கு நபர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மேலே செல்லமுடியாது.. மழைநீரின் அளவு கூடிவிட்டது.  திரும்புகிறோம். நீங்களும் திரும்புவது நல்லது என்றார்கள். சரி.. உங்களின் அறிவுரைகள கவனத்தில் கொள்கிறோம். கவனமாகச் செல்கிறோம். முடியவில்லை எனில் திரும்பிவிடுகிறோம் என்ற உறுதியைக் கொடுத்து  தொடர்ந்தோம்.

செங்குத்தான சில இடங்களில் மழைநீர் அருவிபோல் சுமார் மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் இருந்து கொட்ட...நெஞ்சு முகம் எல்லாம் அருவிநீர் கொட்ட... சுமார் 100 அடி தூரத்திற்கு கால்வைப்பதற்கு எந்தப்பிடிப்பும் இல்லாத சரிவில் ஏறினோம். இந்த இடத்தில் பயந்துதான் எதிரே வந்தவர்கள் திரும்பியது புரிந்தது. துணிச்சலோடு ஒவ்வொருவராக கைகொடுத்து மேலே ஏறிச்சென்றோம். காலடித்தடமும் தெரியாத நிலை.... சுற்றிலும் மழைத்தூவல் பனிப்படர்ந்தாற்போல் பார்வையை மறைத்தது.  அகத்திய மலை எந்தத் திசையில் இருக்கிறது எப்படி போகவேண்டும் என்றும் தெரியாது. மிக முக்கியமாக பாதை பிரிகிறது என்று சந்தேகிக்கும் இடங்களில் மஞ்சள் பெயிண்ட் மார்க் பண்ணி இருந்தனர். ஆனால் மழைநீர் வரத்தில் அந்த பெயிண்ட் அடையாளம் முழுமையாகவே தெரியவில்லை.

எதிரே எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் மழைநீரை..சிறு வெள்ளத்தை எதிர்கொண்டேதான் போகவேண்டி இருந்தது.கரணம் தப்பினால் எதுவும் நடக்கும் என்ற நிலை.... எதிரே வந்தவர்களின் எச்சரிக்கை புரிய ,கூடுதல் கவனத்துடன் சென்றோம். மழைநீரின் கலங்கல் ஏதுமின்றி பளிங்கு போல் நுரைத்து வந்து கொண்டிருக்க..அதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பாக இது வழக்கமான பாதையில் வரக்கூடிய நீர் வரத்துதான்... வெள்ளமோ, எதிர்பாரத நீர்வரத்தோ இல்லை என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே ..சென்றோம்....கிட்டத்தட்ட அரைமணிநேர பயணம் இப்படித்தான் இருந்தது.

இந்த அனுபவம் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்த மனநிலை....இயற்கையோடு ஒன்றிய அனுபவம் நான் இதுவரை அனுபவித்திராத ஒன்று..தீம்பார்க்குகளில் நீர்விளையாட்டுகள் எத்தனை ஈடுபட்டாலும் இயற்கை அன்னையின் மடியில் விளையாடுகிற இன்பம் வார்த்தைகளினால் விளக்க இயலாததாக இருந்தது. மேலும் மேலும் உற்சாகம் உந்தித்தள்ள தொடர்ந்து முன்னேறினோம்.

                                                படம் ...தினமணிதளத்திலிருந்து


இடையில் பரந்த அகன்ற நீர்ப்பரப்பு ஒன்றினை கடக்க வேண்டியதாக இருந்தது. மேலிருந்து அருவிகள் வந்து இங்கே ஒன்று சேர்ந்து தேங்கி பின் அருவியாய் கீழே கொட்டிக்கொண்டு இருந்தது. இதைத் தாண்டியவுடன் அகத்தியர் மலை பாறைப்பகுதிகள் வந்தன.. மூன்று இடங்களில் இரும்புக்கயிறு கட்டி இருந்தனர். இவைகள் நான் கற்பனை செய்து வைத்திருந்தபடி செங்குத்தாக இல்லை... 45 டிகிரி கோணத்தில் பெரிய பரந்த பாறைப்பகுதி, அதைக்கடக்க கயிறு இல்லையெனில் சிரமம்தான்..

                                          படம் தினமணி இணைப்பிலிருந்து




எங்களுக்கு மேலாக சிலர் நடுங்கிக்கொண்டே நின்றிருக்க.. அகத்தியர் திரு உருவச் சிலை அமைந்த இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தோம். மலை உச்சி என்பதால் காற்று தங்கு தடையின்றிவீச...தூறல்கள் ஊசிபோல் உடலில் விழ.. எங்களுக்கு முன்னதாக சென்ற அன்பர்கள், அகத்தியர் திருமேனிக்கு அபிசேகங்கள் செய்யத் தயாராயினர்.

தினமணியின் இணைப்பிலிருந்து மேலும் சில படங்கள்


தினமலர் இணைப்பிலிருந்து சில படங்கள்


 சின்ன இடைவேளைக்குப் பின் தொடர்வோம்

நிகழ்காலத்தில் சிவா




Sunday, July 14, 2013

பொதிகை மலை பயணத் தொடர் பகுதி 5

பகல் 12.00 மணி அளவில் மரங்கள் அடர்ந்த பகுதிகளைத் தாண்டி புல்வெளியை அடைந்தோம். லேசாக மழை துளிக்க ஆரம்பித்தது. காற்றில் ஈரப்பதம்  அதிகமாகி குளிரெடுக்கத் தொடங்கியது.. 



பக்கவாட்டுப் பகுதிகளின் காட்சிகள்







மழை வேகமாக வருவது போல மிரட்டிக்கொண்டே இருந்தது. முதுகில் சுமையைக் குறைப்பது ஒன்று தொடர்து நடக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும், கூடவே  பசி தாக்குப்பிடிக்கமுடியாமல் 12.30 க்கு சாப்பிட்டுவிட்டோம்,. தொடர்மழை பிடித்துக்கொண்டது. எங்கும் ஒதுங்கவும் முடியாது. மழையில் தெப்பலாக நனைந்து கொண்டே சென்றோம். உடைகள் அனைத்தும் நனைந்து விட்டன. மழைக்கோட்டு அணிந்திருந்தும் கழுத்து கைப்பகுதிகள நனைகிற அளவிற்கு மழை அடித்துப் பெய்தது. காலில் மாட்டியிருந்த ஷீவுக்குள் இருந்து நடக்க நடக்க தண்ணீர் வெளிவந்து கொண்டே இருந்து.  :)



தொடர்ந்து நடந்து இரண்டரை மணிக்கு அதிரமலை முகாம்க்கு சென்று சேர்ந்தோம். அனுமதி டிக்கெட்டை அங்கே உள்ள வனக்காவலரிடம் காட்டிவிட்டு, அங்கே பயன்படுத்த தகுதியற்றது என வனத்துறையினால் அறிவிக்கப்பட்ட கட்டிடத்தில் தங்கினோம். அருகிலேயே வனத்துறையினால் சில கொட்டகைகள் அமைக்கப்பட்டு தங்கும் வசதி ஏற்படுத்தி இருந்தார்கள்.

தினமணி வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் மேலே



இருப்பினும் அங்கே கடும் குளிர் காற்று வீசியதால் ரிஸ்க் எடுத்து கட்டிடத்துள் படுத்தோம். சிறிய கேண்டீன் உண்டு. அவர்களால் தரப்படும் மெனு,, கஞ்சி, பூரி சாப்பாடு உணவுகள் கிடைக்கும் அதற்கு கட்டணம் உண்டு.


நடுவில் இருப்பது அடியேன்.தொழில்துறை நண்பர்களுடன் (கீழே உள்ள படம் )

கேண்டீனில் அகத்தியரின் உருவப்படங்கள். பல்வேறு அபிசேகங்கள் நடக்கும் போது எடுத்தபடங்களின் தொகுப்பை வைத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இடைவெளியின்றி பெய்து கொண்டே இருந்தது.


வெளியே தலைகாட்ட முடியாத அளவு காற்றும் மழையும், தங்கியிருந்த கட்டிடமோ பக்கச் சுவர்களில் தண்ணீர் மேலிருந்து கொட்டிக்கொண்டு இருந்தது.. நனைந்து கொண்டே பின்னால் வந்த அன்பர்களும்  தங்கள் பங்குக்கு ஈரத்துணிகளை அங்கேயே போட்டனர். இலவச இணைப்பாக தங்கள் உடைகளில் ஒட்டியிருந்த அட்டைகளையும் அவர்களை அறியாமல் அங்கேயே உதிர்த்துவிட.... படுத்திருந்தவர்களையும் அவைகள் பதம் பார்க்கத் துவங்கின.

மொத்தத்தில் அன்றைய இரவு தூக்கம் சுத்தமாக இல்லை.. கொண்டுவந்திருந்த உடைகள் போர்வை எல்லாம் மழையால் நனைந்திருந்தன. காலையில் மழை இல்லாவிடில் மேலேதொடர்ந்து செல்லலாம். இல்லையெனில் இறங்கத் தொடங்கிவிடலாம் என முடிவு செய்து படுத்தோம்... எப்படியோ விடிந்தது.. மழை இன்னும் மெதுவாக பெய்துகொண்டேதான் இருந்தது.

நிகழ்காலத்தில் சிவா

Wednesday, July 10, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 4


காலை ஒன்பது மணிக்கு நடக்க ஆரம்பித்து பத்துமணி அளவில் சிறிய நீரோடையை அடைந்தோம். காலை 8 மணியில் இருந்து தொடர்ந்த நடை உடலில் வியர்வையையும், களைப்பையும் ஏற்படுத்த, குளிக்கலாம் என்கிற முடிவை எடுத்தோம்.  நீரில் கால்வைத்தால் ஐஸ்கட்டியாய் ஜில்லிப்பு :)

மூன்று நண்பர்கள் பின்வாங்க.. நானும் இன்னொருவரும் கண்ணை மூடிக்கொண்டு நீரில் விழுந்தோம். அருவிகளில் குளிப்பதற்கும், இது போன்ற நீரோடைகளில் குளிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

அருவிகளில் குளிப்பது ஒரு சுகம். தடதடவென உடலின் எல்லா இடங்களிலும் அடித்து விழும் நீர், அனைத்து வலிகளையும் சமமாக்கி, பரவச் செய்து, உள்ளிருந்து துடைத்துவிட்டாற் போல் சுத்தமாக்கிவிடும்.புத்துணர்ச்சியைத் தரும்,

ஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் :)

உணர்வுகளை மனம் எந்த முயற்சியும் இன்றி கவனிக்க ஆரம்பித்தது. தோலில் இருந்து உள்ளே எலும்பு வரை உள்ள தசைநார் கற்றைகளின் ஒவ்வொரு மில்லிமீட்டரும், ஒவ்வொரு அணுவும், தொடர்ந்து அதிர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அப்படி அதிர்வுகள் வெளியேற, வெளியேற மனமும் உடலும் ஒருசேர களைப்பு நீங்கி புத்துணர்ச்சி ஆவதை படிப்படியாக எளிதில் உணரவும் முடிந்தது. கண்ணை மூடி ஆனந்தமாக நீருக்குள் கிடந்தேன். கொஞ்சநேரம் ஆனதும் பழகிப்போனதாகவோ, மரத்துப்போனதாகவோ தெரியவில்லை.. நீரில் விழுந்த அந்த நொடிமுதல் பலநிமிடங்களும் இப்படியான உணர்வுகளே தொடர்ந்து நிலைத்து இருந்தது.

எங்களுக்குப்பின்னால் வந்தவர்கள் எங்களைத்தாண்டி நடக்க .. வெளியேறி தொடர்ந்தோம்.


பளிங்கு போன்ற நீரோடை... கண்டிப்பாக குளிக்க வேண்டிய இடம்.. ஏனோ பெரும்பாலானோர் கடந்து சென்றனர்.




முற்பகல் 10.20க்கு அடுத்த வனத்துறை கேம்ப்.. கிட்டத்தட்ட நாங்கள் நடந்த வந்த தூரம் போக இன்னும் அதிரமலைக்கு கேம்ப்க்கு 10 கிலோமீட்டரும், அதற்கு மேலாக அகத்தியர்மலைக்கு 5 கிலோமீட்டருமாக சுமார் 15 கிமீ இன்னும் போக வேண்டியிருக்கிறது. என்று காட்ட நடையை வேகப்படுத்தினோம்.



தொடர்ந்து நீரோடைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. எல்லாம் ஐந்து நிமிட நடை தூரம்தான்........நான்கு நீரோடைகளைத்தாண்டினோம். நேரம் முற்பகல் 11.00


முற்பகல் 11.30


கீழே கண்ட இடத்தை நாங்கள் கடந்தபோது முற்பகல் 11.35, இந்த இடம் பாறைகள் நிரம்பிய நீர்தேங்கி ஓடக்கூடிய பகுதி இடப்புறத்தில் பெரிய பரப்பளவாக விரிந்து இருக்க.. கால் நனையாமல் தாண்டிச் செல்லக்கூடிய நீளம், அகலம் அதிகமான பகுதி.. நாங்கள் சென்ற நாட்களிலும், அதற்கு முந்தய நாட்களிலும் மழை அதிகம் பெய்யாததால் நீரோட்டம் குறைவாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் திரும்ப வரும்போது இதே இடம் ஆறுபோல் பரந்துவிரிந்து இரண்டு அடி உயர நீர் பாய்ந்தோடிக்கொண்டு இருந்தது :)

நாளை தொடர்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

Tuesday, July 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 3

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வனத்துறை கேம்ப் தாண்டினோம். யானைகள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கவே தேவையில்லாமல் சுற்றிலும் அகழி...(காலை 9.20)



சுற்றிலும் நிஜமாகவே யானையை உள்ளே இறக்கிவிட்டால் தெரியாது. அந்த அளவு ஆழம், அகலம், கோவைப்பகுதியில் யானைக்கான அகழி (?) தோண்டி இருப்பதைப் பார்த்தால் வெள்ளாடு கூட தாண்டிக்குதித்துவிடும். அப்படி இருக்கும். இந்த குழிக்குள் தப்பித் தவறி நாம் விழுந்தால் வேறொருவர் துணையின்றி மேலே ஏற முடியாது :)  தாண்டிச் செல்ல இரண்டு குச்சிகளை கட்டி வைத்திருக்கின்றனர்.. சில சமயங்களில் அங்கே தேநீர் கிடைக்கும்.





அதைத்தாண்டியவுடன் சட்டென பாதை ஏதுமின்றி காலடிப்பாதை மட்டும்தான். இப்படியேதான் போகனுமோன்னு குழப்பம் வர நடந்தோம். ஆனால் நல்ல வேளையாக இது ஒரு குறுக்குப்பாதை.. பழைய பாதையுடன் இணைந்து விட்டது :)


வழியில் கண்ட வண்ண மலர்கள். நேரம் காலை 9.30




தொடர்ந்து நாங்கள் நடந்தபோது காலை 9.45 கீழ் கண்டவாறுதான் பாதையின் பாதிப்பகுதி இருக்கும். காய்ந்த இலைதழை கீழே கிடக்க, அவ்வப்போது பெய்யும் மழை அதை ஈரமாக்கி, இற்றுப்போகச் செய்ய சுற்றிலும் நெருக்கமாக மரங்கள் மனதை எளிதில் தன் வசமாக்கிவிடுகின்றன :)



படங்கள் எல்லாம் பொதிகை மலைப்பாதையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சான்றும், வரலாறும் முக்கியமல்லவா :) அதற்காக ஒன்று......






காலை 9.50 பாதையில் இது வரை நான் பார்த்திராத  மரத்தின் அடிப்பாக அமைப்பு, மரத்தின் அகலம் சுமார் 15 அடி முக்கோண உயரம் சுமார் 10 அடி,  உயரம் அண்ணாந்து பார்த்தால் தெரியவில்லை :) கூட்டல் குறி நிலத்தில் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரம் வேர் விட்டிருக்க புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.



10 மணிக்கு சிறிய நீரோடையை அடைந்தோம்.






நீளம் கருதி நாளை தொடர்வோம்.

நிகழ்காலத்தில் சிவா