"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, August 18, 2023

வெகுமதி

வெகுமதி என்றால், பரிசு என்பது நாம் அனைவரும் அறிந்தே இருந்தாலும், அது பொருளாகவோ பணமாகவோதான் நிகழ்காலத்தில் உணரப்படுகிறது.

நமக்கு, பல்வேறு தொழில் சூழல், குடும்ப, சமூக சூழல் காரணங்களினால் அவ்வப்போது மனச்சோர்வு ஏற்படத்தான் செய்யும். அப்போதெல்லாம் மீண்டு வருவது எப்படி ?  ஒவ்வொருவரின் மனவலியும், ஒவ்வொருவிதம். இதற்கு, வெளியிலிருந்து வரும் உணவு, இசை, பாடல், ஆட்டம், பயணம் எல்லாம் அதை குறைந்த காலத்திற்கே மறக்க வைக்கும். 

மனம், தன்னிலைக்கு ஏற்றவாறு, வெளியிலிருந்து வரும் வார்த்தைகளை, எழுத்துக்களை தன்வயமாக எப்போது உணர்கிறதோ, அப்போது உற்சாகம் கொள்ளும். வெறுமனே, தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நம்மை மீட்டெடுக்காது. 

நம்மை மீட்டு எடுத்து, உற்சாகம் ஊட்டும் வார்த்தைகள் எப்படி இருக்கும் தெரியுமா? நம் மனதுக்கு முதலில் ஆறுதல் அளிக்கும். நாம் செய்த காரியங்கள், நம் குணங்களில் உள்ள நியாயங்களை முழுமையாக ஏற்று வெளிப்படுத்தும். நாம் செல்லும் வழி, தனி வழியாக தெரிகிறதே? சரிதானா என்ற ஐயம் தோன்றும்போது, சரியான வழிதான் என்று உணர்த்தும். பின்னர் அம்மனச்சோர்வில் இருந்து மீண்டு வருவது எப்படி என்ற பாதையை காட்டும்.

அப்படியான ஒரு கவிதை பகிர்தல்.



(William Arthur Ward - The Rewarding)               

இவையெல்லாம் கடினமானதுதான். ஆனாலும் இவை வாழ்வில் நமக்கு வெகுமதியை தருகின்றன. இதை அனுபவமே, உண்மையென உணர்த்தும்.

செயல் ஊக்கம் கொண்டவன், விழி மூடி சும்மாவிருக்க மாட்டான்.  விழிப்புணர்வு பெறுவோம். ஆற்றலை வளர்ப்போம்.

(நன்றி: விஜயா பதிப்பகத்தின் நலவாழ்வின் படிகள் நான்கு என்ற நூல். ஆசிரியர் பேரா.எம்.இராமலிங்கன் அவர்கள் நூலில் இருந்து கவிதை பகிர்வு)

Wednesday, June 22, 2022

மிர்தாதின் புத்தகம் 2

                                     வேலைக்காரன், எசமானனின் எசமான்


இப்படி சொன்னாலே, நம்மை முறைக்கும் பலர் உண்டு. 

இன்றைய பொருளாதார சூழலில், உடல் சார்ந்த வேலைகளில், வேலைக்காரனே, எசமான். இதுதான் இன்றைய பெரும்பான்மை நிலவரம். ஒரு வேலைக்காரனின் சிரமங்களை அறியாதவனல்ல, நான். அவனின் நியாயங்கள் தெரியாதவனல்ல, நான். 

ஆயினும், மிகச்சிறுபான்மையினரே எசமானின் வேலைக்காரனாக இருக்கிறார்கள். இவர்களே வருங்கால எசமானர்கள். 

இதன் பொருள், எசமானின் சொல்லுக்கு, ஆமாம் சாமி போட்டு, காலம் தள்ளுபவர்கள் என்பது அல்ல. 

எசமானின் நிறுவனத்திற்கு எது நல்லதோ, எசமானின் தொழிலுக்கு எது நல்லதோ. அதை தொய்வின்றி அனுதினமும் செய்து முடிப்பவனே, நல்ல வேலைக்காரன். வருங்கால எசமானன்.

சரி சரி. வேலைக்காரன் எசமானனின் எசமான் என்று சொன்னது யார்? நான் அல்ல. மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம்தான், இப்படி பேசுகிறது. 

இந்த நூல் தத்துவநூல் என்று யாரேனும் நினைத்திருந்தால், உங்கள் எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இது மிகெய்ல் நைமியின் வாழ்க்கை. சமூகத்திற்கு, தான் வாழ்ந்த வாழ்வை, எண்ணங்களை பகிர்ந்ததன் அடையாளம் மட்டுமே. இந்த வாழ்வின் மனநிலை நம்மால் அனுபவிக்க முடியுமா? முடியும். முடியவேண்டும் என்றுதான் மிகெய்ல் நைமி, இதை நூலாக எழுதி இருக்கிறார்.

இந்நூலின் பொருள், இதன் சொற்களில் இல்லை.  இதன் வாக்கியங்களில் இல்லை. இந்தப் புத்தகத்தின் பொருள் சொற்களுக்கு இடையிலும், இதன் வாக்கியங்களுக்கு இடையிலும், இதன் வரிகளுக்கு இடையிலும் இடைவெளிகளிலும் ஓடிக்கொண்டே இருக்கும்.  இந்த நூல் படிப்பதற்கன்று. அனுபவபூர்வமாக பருகுவதற்கே.

இங்கே சொற்கள் இரண்டாம்பட்சம்தான். வேறு ஏதோ ஒன்று (ஒருமை) முதன்மை பெற்றுவிடும். இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம், இது. மனதால் அன்று. புரிந்து கொள்ளப்பட வேண்டிய புத்தகம் அல்ல, இது. உணர வேண்டிய ஒன்று.  - இதெல்லாம் நான் சொன்னது அல்ல. ஓஷோ சொன்னது.

இந்த நூலை வெறுமனே படிக்க ஆரம்பியுங்கள். முன் கற்றவற்றை எல்லாம் பொருத்திப் பார்க்காது, படியுங்கள். இந்நூல், உங்களுக்கு தன்னைக் காட்டும்.

கண்ணதாசன் பதிப்பகம். மிர்தாதின் புத்தகம். (The Book of Mirdad - Mikhail Naimy)

தொடரும்.


Monday, June 20, 2022

மிர்தாதின் புத்தகம் -1




மனிதனுக்குள் பிளவுபட்டுக் கிடக்கும் இருமையை, இரண்டுபட்ட தன்மையை, அவன் உள்ளுணர்வில் கரைத்து, ஒருமைப்படுத்தி, அவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை, அவனுக்கு திரை நீக்கி காட்டும் சுய தரிசனத்திற்கான தூண்டுதல் முயற்சிதான்  மிர்தாதின் புத்தகம் என்கிற நூலின் சாரம். - இப்படித்தான் முன்னுரை சொல்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டும் எனில் இது தியான அனுபவத்தை, வார்த்தைகள் அற்ற நிலை எதுவோ, அதனை வார்த்தை ஆக்கும் முயற்சியினை, செய்கிறது. அந்த வார்த்தை அற்ற நிலைக்கு, நம்மை அழைத்துச் செல்லும்போது, பல தருணங்களில் நம் மனதை சம்மட்டியால் அடித்து இழுத்துச் செல்லும். மயிலிறகால் தடவியும் கூட்டிச் செல்லும்.  இந்த நூலை எத்தனை முறை படித்து, புரிந்து, உணர்ந்து கொண்டு எவ்வளவு பேசினாலும், அது கால்பங்கு அளவே பொருந்தும்.

இந்த நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கிற உத்தி, நம் மனதை, திகைப்பில் ஆழ்த்தி, உறைய வைக்கிற வேலையை செய்து கொண்டே வரும்.  மனம் திகைப்பதும், அதிலிருந்து மீள்வதும் சாதரண விசயம் என்று எண்ணலாம். ஆனால் மிர்தாத், நம் மனதை மீள முடியாத திகைப்பில் தொடர்ந்து ஆழ்த்திக் கொண்டே வருவார்.

நிகழ்வுகளில் கலக்கும் இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகள், இதனூடே பயணிக்கும் உண்மை, மற்றும் கற்பனை  பாத்திரங்கள். மனநிலை மாறுபாடுகள், இதனினூடே பிரபஞ்சத்தில், இந்த பூமியில், இந்த விண்ணில் உருவெடுத்திருக்கும் அனைத்தும் எப்படி வேண்டுமானாலும், உள்ளே கலந்து வரும். மாயஜால உலகில் நடப்பது போன்று, எந்த தர்க்கத்துக்கும் உட்படாததாகவே நகரும். உட்பட்டும் நகரும்.

மிர்தாத்தின் புத்தகத்தைப் பற்றி, எதுவுமே சொல்ல முடியாது என்கிற போதும், உடையத் தயாராய் இருக்கிற மனதை, சல்லி சல்லியாய் உடைத்து நொறுக்கும் தன்மையை கொண்டது, இந்த புத்தகம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

இந்நூலை பற்றி மனதில் பட்டதை எழுதும் எண்ணம் எனக்கு உண்டு. முழுக்க முழுக்க இது, எனக்கான புரிதல் மட்டுமே. ஒத்த கருத்துடையோராய் இருப்பின் உரையாடுவோம்.  மாற்றுக் கருத்து இருப்பின், நூலை உணர்வோடு படியுங்கள். உங்களுக்கு வேறு விதமான புரிதலை நிச்சயம், இந்தப் புத்தகம் கொடுக்கும். அதுவும் முழுக்கவே சரியாகத்தான் இருக்கும்.

இந்தப் புத்தகம் இப்புவியில் உள்ள 780 கோடி பேரால் படிக்கப்படுமாயின், அதே எண்ணிக்கையிலான புரிதல்களை தரும் என்பதே உண்மை.

வார்த்தை என்பது,  சுட்டிக் காட்ட  விரும்பும், பொருளை உணர்த்தும் குறியீடு மட்டுமே.  அந்த பொருளின் முழு பண்பை, அந்த சொல் முழுமையாய் எப்போதும் உணர்த்தாது.

கல் என்ற சொல், கல்லின் கனத்தை உணர்த்தாது. தென்னை என்ற சொல், அதன் உயரத்தை பயன்பாட்டையும் உணர்த்தாது. முல்லை, அதன் வெண்மையையோ, அளவையோ, நறுமணத்தையோ உணர்த்தாது. இன்பம் என்ற சொல் தனக்குப் பின்னால் எத்தனை கதைகளை ஒவ்வொருத்தருக்கும் வைத்திருக்கிறது? அப்படி இருக்கையில் உங்கள் இன்பத்தை நான் எப்படி உணர முடியும்?

 ஒரு சொல், சொல்லப்பட்ட உடனே, எழுதப்பட்ட உடனே, அவற்றின் பண்புகள் அனைத்தையும், நம் அனுபவ அறிவின் காரணமாக, அந்தச் சொற்களின் மீது ஏற்றி உணர்ந்து கொள்கிறோம்.

 - மிர்தாதின் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் புவியரசுவின் வார்த்தைகள் மேலே.

இங்கே சொற்கள் முக்கியம் அல்ல.
சொற்களால் என்ன அதிர்வு பிறக்கிறது என்பதே முக்கியம் - மிர்தாத்

வார்த்தைகள் என்னுடையவை. அதற்கான அர்த்தம் உன்னுடையவை - ஓஷோ

நடைமுறை வாழ்க்கையில் அது தொழிலாகட்டும், குடும்பமாகட்டும், நட்புகள் ஆகட்டும். நம் வார்த்தை, நாம் நினைத்த பொருளை/அதிர்வினை அப்படியே சம்பந்தப்பட்டவருக்கு கொண்டு சேர்க்கிறதா என்பதை, சற்றே சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். குறைந்த அளவாக, கருத்திற்கு நெருக்கமாகவேனும் கொண்டு செல்கிறதா என்று பார்ப்போம். 

( தொடரும் )



Tuesday, May 5, 2020

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

 குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கறாங்க, எப்போதிருந்து அடம் பிடிக்க பழகிக் கொள்றாங்க என்று பார்த்தோம்ன்னா, சின்ன வயசுல இருந்தே, நடக்க ஆரம்பிச்சதில இருந்தே இதெல்லாம் கத்துக்குவாங்க. 

 குழந்தை வளர்ப்பில் அழும்போது, நம்ம போய், உடனே குழந்தையைக் கவனிக்கறோம். அதன் அழுகை வந்து, ஒரு சமயம் பசியா இருக்கலாம், இல்லை, குழந்தைக்கு தூக்கம் வர்றதுக்கான ஒரு அறிகுறியா இருக்கலாம், வயிற்று வலியா இருக்கலாம். அதெல்லாம் நம்ம சரியா தொடர்ந்து கவனிக்கும்போது, அதை நம்ம, காரணம் கண்டு பிடித்து தீர்க்க முடியும். இதை விட்டுவிடலாம்.

 ஆனால், நம்ம வெளியே கடைக்குப் போறோம். குழந்தை வந்து, ஒரு பொம்மை கேட்குது. சரி, அந்த பொம்மையை வாங்கிக் கொடுக்கிறோம். இன்னொரு பொம்மை கேட்குது.  என்ன நினைக்கிறோம்? ஒரு பொம்மை போதும். இல்லை, ஒரு chocolate போதும், அப்படின்னு நினைக்கும்போது, ஒண்ணு போதும் கண்ணா, அடுத்தமுறை வரும்போது, நம்ம  இன்னொண்ணு வாங்கிக்கலாம்னு, சொல்றோம். நம் குழந்தை, கேட்க மாட்டேங்குது. கடையில சத்தம் போடுது, அழுவுது, எல்லா ரகளையும் பண்ணுது. இல்லை, கீழே விழுந்து, தரையில புரண்டு, ஆட்டம் போடுது. தந்திரத்தை வெளிப்படுத்துகிறது.

அப்ப, நம்ம என்ன பண்ணணும்? 

அதற்கு முன்னரே நீ கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறாய்  என்கிற மெல்லிய உணர்வினை குழந்தைக்கு ஏற்படுத்தி இருக்கணும். அதையும் மீறி ஒரு குழந்தை அடம் பண்ணும்போதோ, குறைந்தபட்ச சமுதாய ஒழுங்கினை மீறும்போதோ, உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடாது. ஆனால் பதில் நடவடிக்கை (respond) மேற்கொள்ளலாம். எப்படி?

 எப்பவுமே ஒரு தவறான நடத்தைகளை, குழந்தைகள்  எப்படி கத்துக்கிறாங்கன்னா, அந்தக் குழந்தை தவறினை செய்யும்போது, பெற்றோர், குழந்தையின் அலட்டலுக்கு பயந்து போயி, இல்லை, அதீத செல்லம் கொஞ்சுவதால் குழந்தைக்கு அடிபணிந்து விடுகிறோம். இதிலிருந்து குழந்தை, தான் செய்த தவறினை சரி என்பதாக கற்றுக் கொள்கிறது.

இப்படி குழந்தை கத்துக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணும்னா, குழந்தையின் அந்த கவன ஈர்ப்பு, அடுத்தவர்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடிய செயல்களில் இறங்கி, அடம் பண்ணும்போது,  நம் குழந்தையை, அந்தக் கடையிலிருந்து தூக்கிட்டு, நம் வீட்டுக்கு வந்துரலாம்.  குழந்தை கேட்பதை பூர்த்தி செய்தே ஆகவேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

 வீட்ல ஏதாவது அடம் பண்ணுச்சுன்னா,  நாம் அதை அலட்சியம் பண்ணணும். எல்லா குழந்தைகளுமே அதிகபட்சம் ஒரு மூணு நாலு நிமிஷம், அல்லது  பத்து நிமிஷம் அழுதுட்டு, தானா அடங்கிடும். அப்படி அடங்கவில்லை எனில், குழந்தையை,  ஒரு அறைக்குள் விட்டு, நாமும் கூட போய் இருக்கணும். ஆனால் கதவை சாத்திரலாம். அதன் பொருள் குழந்தையின் உதவிக்கு தாத்தா, பாட்டி, அம்மாவோ அப்பாவோ என யாரும் வர மாட்டார்கள். வர சாத்தியம் இல்லை. என்பதை சொல்லாமல் உணர்த்தி விடவேண்டும்.

 நீ வேணும்கிறவரைக்கும் அழுதுக்கோ, நீ அழுது முடிச்சதுக்கு அப்புறமா, அம்மா/அப்பா கிட்ட வந்தா போதும். நான், உனக்காக இங்கதான் இருப்பேன், ஆனால்,  நீ அழுது காரியத்தை சாதிக்கணும்னு நெனச்சா, அந்த வேலை எங்கிட்ட நடக்காது அப்படிங்கிறதை இயல்பாக சொல்லிவிட வேண்டும். நம்மிடம் வெறுப்போ, கோபமோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இந்த respondதான் மிக முக்கியம். இந்தப் பக்குவம் நமக்குத்தான் வரணும். இப்படி ஓரிரு முறை நடந்தாலே குழந்தை புரிந்து கொண்டு அடம் பிடிப்பதை விட்டுவிடுவார்கள்.

பக்குவமில்லாத எதிர்வினைன்னா என்னவாக இருக்கமுடியும்?  நம் குழந்தை மீது, பதில் கோபம் காட்டறது, அடிக்கிறதுங்கிறது எல்லாம் குழந்தைக்கான தண்டனையாக மாறிவிடும்.  இது ஓரளவிற்கு, அப்போதைக்கு பயன் தந்தால் கூட, நாளடைவில,   அம்மா என்ன பண்ணுவாங்க, ஏதாவது குறும்பு பண்ணினால், அடிக்கத்தானே போறாங்க, அப்படின்ற ஒரு தான்தோன்றித்தனம் வந்துரும், குழந்தைகளுக்கு. அப்புறம் திருத்துவது கடினம். தானாத் திருந்தினாத்தான் உண்டு.

குழந்தையை குழந்தையா இருக்க விடுங்க என்பதை வேற ஏரியா. குழந்தையா இருக்காம அடம்பிடிச்சு, பெரிய மனுசனா மாற, குழந்தை முயற்சிக்கும்போது என்ன செய்யலாம்ன்ற நடைமுறை பகிர்வுதான் இது.

சரி. இது குழந்தைகளுக்கு மட்டும்தானா? பெரியவர்களுக்கு பொருந்துமா என்றால் திருமணமான பெண்களுக்கு நன்கு பயன்படும். கூட்டுக் குடும்பமாக இருப்பின் நன்கு வேலை செய்யும். கணவனை வீட்டுக்குள் விட்டு.....

சரி, ஆண்களுக்கு? வாய்ப்பில்லை ராசா. சொன்னபடி கேட்கவும்.

Thursday, December 5, 2019

சமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது!

வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி சித்த மருத்துவர் க.மதுகார்த்திஷ்: சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகளை அனைவரும் கண்ணை மூடியபடி பின்பற்ற முயற்சிக்கின்றனர்; அதனால் ஆரோக்கியம் கிடைக்காது; ஆபத்து தான் கிடைக்கும்.

உடல் பருமன் பிரச்னைக்கு, எலுமிச்சை சாறு, வெந்நீர், தேன் கலந்து குடிக்க வேண்டும் என, 'வீடியோ' படத்துடன் செய்தி வருகிறது. எலுமிச்சை சாறுடன் வெந்நீர் சேரும் போது, அமிலமாக மாறி, தொடர்ச்சியாக அருந்தும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். தேனை எதனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. கையில் ஊற்றி, நக்கி தான் சாப்பிட வேண்டும். 

சிறு தானியங்களை தினமும் சாப்பிட்டால், உடல் வலு பெறும் என்கின்றனர். உண்மை தான் என்றாலும், அதை சரியாக, பக்குவமாக தயாரித்து சாப்பிடாவிட்டால், ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். சிறு தானியங்களை, எட்டு - பத்து மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். அவை எல்லாவற்றையும், ஒன்றாக கலந்தும் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு சிறு தானியத்திற்கும், வெவ்வேறு குணங்கள் உள்ளன; ஒவ்வொன்றையும், தனித்தனியாகத் தான் சாப்பிட வேண்டும். 

செக்கு எண்ணெய் தான் நல்லது என்கின்றனர். நல்லது தான். ஆனால், அதிக உடல் உழைப்பாளர்களுக்குத் தான், அது நல்லது. அதில் அடர்த்தி அதிகம் என்பதால், எளிதில் ஜீரணம் ஆகாது. ஒவ்வொரு பருவ நிலைக்கும், வெவ்வேறு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். குளிர் காலத்தில் கடலை எண்ணெய்; கோடை காலத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். 

ஓமம், கருஞ்சீரகம், வெந்தயத்தை வறுத்து, பொடித்து சாப்பிட்டு வந்தால், எந்த வயிற்றுப் பிரச்னையும் வராது என்கின்றனர்; அதுவும் தவறு. கருஞ்சீரகம், அதிக உஷ்ணமானது. தினமும் பயன்படுத்தினால், எதிர் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். 

ஆப்பிள் சிடார் வினிகர், இஞ்சிச் சாறு, பூண்டுச்சாறு சேர்த்து குடித்தால், மாரடைப்பு அபாயம் நீங்கி விடும் என, சமூக வலைதளங்களில், இஷ்டத்திற்கு பலர் தகவல் பரப்புகின்றனர். அது தவறு. வினிகர், நம் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதல்ல. 

இது போன்ற இயற்கை மருத்துவத்தை நாடி, ஆங்கில மருத்துவம் அல்லது பிற மருத்துவத்தை கைவிட்டவர்கள், மரணம் அடைந்து உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. எந்த உணவாக இருந்தாலும், எளிதில் ஜீரணம் ஆக வேண்டும்; மலச் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்; சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவ வேண்டும். தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனைபடியே, இயற்கை பொருட்களை மருந்தாக பயன்படுத்த வேண்டும்!

Monday, November 18, 2019

5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.


      ஜோதிஜின் புதிய புத்தகமான 5 முதலாளிகளின் கதை, amazon pen to publish 2019 Tamil competition போட்டியில் பங்கெடுப்பதற்காகவே எழுதப்பட்டிருதது. Kindle E-book ஆக மட்டுமே வெளியாகி இருப்பதால் முதன்முறையாய் Kindle for Pc மூலம் வாசிக்க வேண்டியதாகிவிட்டது.

      ஒரு முதலாளி, தனது வெற்றிக்கான வாய்ப்பினை, ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி கண்டுபிடித்து, அதனைத் தன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என்கிற, தன் குணத்தையே அனுபவமாக எழுதி இருக்கிறார். இந்தப்புத்தகம் அவரது பலவருட தொழில் அனுபவங்களின் காரணமாக, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த வழிகாட்டியாய் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

      அடுத்த தலைமுறை என்பது நடுத்தர மக்களான குடிசைச் சமூகம் என்று ஜோதிஜியினால் வர்ணிக்கப்பட்ட, நம் இக்கால இளம் சிறுதொழில் முனைவோர் என்பதாகக் கொண்டால், இப்புத்தகம் அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

      இரவு என்ற ஒன்று இருப்பதால்தான் பகலைப்பற்றியும், ஒளியைப் பற்றியும், அதன் தேவையைப் பற்றியும் பேச நேரிடுகிறது. ஒளியின் அவசியத்திற்கு, இரவைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஆனால் உலகம் நம்மை எதிர்மறையாளன் என்றே முத்திரை குத்தும். பாதையில் உள்ள பள்ளங்களைப் பற்றிப் பேசுவது, இலக்கினை நோக்கிய பயணம் வெற்றியாக முடிய வேண்டும் என்ற அடங்கவொண்ணா ஆர்வம் மட்டுமே காரணம். ஜோதிஜியின் எழுத்துகளில் இதைக் காண்கிறேன்.

      இன்றைய காலகட்டம், வாழ்க்கை என்பது பணம் சார்ந்து, சற்று கடினமாக மாறிவிட்ட சூழலிலும் கூட, சொந்த உழைப்பினால் சேர்த்த முதலீடு இல்லாமல், எதாவது பரம்பரை அல்லது தாய்தந்தையரின் சொத்தினை விற்றுவரும் பணம், அல்லது யாரிடமோ மிகைப்படுத்திக் கூறி, முதலீட்டினை கவர்ந்து ஆரம்பிக்கப்படும் தொழில்கள் எனத் புதியன துவங்கப்படும் காலமாக மாறிவிட்டது.

  அதேசமயம், ஏற்கனவே அந்தந்தத் துறையில் இருப்பவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தி, புதிய இயந்திரங்கள், புதிய கட்டமைப்பு என்று ஆரம்பித்தாலும் பழையதுக்கு மாற்று அல்லது நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்தல் என்றே மாற்றங்களைச் செய்து கொண்டும் இருக்கின்றனர். இது மற்றவர்கள் பார்வையில் அசுர வளர்ச்சி என்பதாகவே தோன்றுகிறது.

      இத்தகைய இன்றைய சூழலில், புதிய தொழில்முனைவோரை வரவேற்று, நீங்கள் நூலுக்குள் செல்லும்போது, ஆரம்பிக்கவேண்டிய இடம் கடைசி அத்தியாயம். அதை, முதலில் ஒருமுறை படித்துவிட்டு, பின்னர் நூலை முதலில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். இப்போது கடைசி அத்தியாயம் மூலம் ஜோதிஜி திருப்பூர் பனியன் தொழிலின் மீதும், புதிய தொழில் முனைவோர்களின் மீதும் கொண்டுள்ள அக்கறை எளிதில் விளங்கும்.

      சுமார் இருபது முப்பது வருடங்களுக்கு முன் இருந்த திருப்பூரை நூல் கண்முன்னே நிறுத்திவிடுகிறது. பணியிடங்களில் காமம் என்பது இப்போது சற்று நாகரீகமடைந்து பணியிடத்திற்கு வெளியே என்பதாக  வரவேற்கத்தகுந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டது. காரணம் Buyerரின் விதிமுறைகள் பின்பற்றுவதற்காகவும், நிர்வாகக் காரணங்களுக்காகம் எல்லா இடங்களிலும் Camera மாட்டி இருப்பது, முக்கிய மாற்றம்.

        தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் Buyerரின் விதிமுறைகள், அதற்கான ஆடை உற்பத்திச் சூழல், இன்ன பிற வசதிகள் நிறைவேற்றுவது என்பது வேப்பங்காயாக இருந்தகாலம் நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போதோ, வசதிகளை விரும்பி ஏற்படுத்தி, Buyer வருவாரா என்று காத்திருக்கும் காலமாக மாறிவிட்ட சூழலில், புதிய தொழில் முனைவோர், தன்னை எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது. 

    எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை, பகலை, ஒளியைச் சொல்வதற்காக இரவினைப்பற்றி விளக்குவதுபோன்று சொல்லியிருக்கிறார். இந்த, தவிர்க்கப்பட வேண்டிய மனப்பான்மை, குணங்கள் என்பவை, பனியன் தொழிலுக்கு மட்டுமானதல்ல, எந்தத் தொழிலானாலும் பொருந்தும்.

   கூடவே, நாம் தொழில் செய்ய இறங்கும் களமான திருப்பூர், திடீரென வளர்ந்த நகரம். திட்டமிடப்பட்டு வளர்ந்ததல்ல. அதற்குச் சற்றும் குறையாத நம் அரசுகள், தொழிலுக்குச் செய்து கொடுக்கும் வசதிகள். அதை கேட்டு வாங்கும் அமைப்புகளுக்குள் கட்சிகள் புகுந்துகொண்டு ஒற்றுமையின்றி குரல் ஓங்கி ஒலிக்காவண்ணம் பார்த்துக் கொள்கின்றன.

    இதையெல்லாம் மீறி தொழிலின் வளர்ச்சிக்கான நடைமுறைகள், குறிப்பாக ஏமாற்றும் பையர்களிடம் பணம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்கள், எச்சரிக்கைகள் என இளம்தலைமுறையினரின் பாய்ச்சல்கள்தான் திருப்பூர் மீண்டும் முன்னைவிட உத்வேகத்தோடு எழும் என்ற நம்பிக்கையை, நமக்கு மிச்சம் வைக்கின்றது.

திருப்பூரின் தொழிலில், அப்படியே தொடர்கிற இரண்டாம் தலைமுறையினர் மிகக்குறைவு. ஆனால் புதிய தலைமுறையினர் வருகை அதிகம். அவர்களின் வெற்றி சதவீதம் அதிகரிக்கவேண்டும் என்ற அக்கறையை மட்டுமே, இந்த நூலில் நான் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், எந்தவடிவிலேனும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.

5 முதலாளிகளின் கதையை வாங்கிப் படிக்க இதை அழுத்தவும்.

5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by [ஜோதிஜி, Jothi G, Ganesan, Jothi]

நிகழ்காலத்தில்சிவா