"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 17, 2009

கடமையை செய்....... பலனை அனுபவிக்காதே

பதிவுலக நண்பர் கோவியாரின் தகவலின் பேரில் தோழர் சூர்யன் அவர்களின்
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்”
பதிவைப் படித்ததால் பதிலுக்கு இந்த பதிவு.

நமக்கு எளிமையாகத்தான் யோசிக்க வரும்.

நாலு வர்ணங்களும் ஆதியில் முழுக்க முழுக்க தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கி, குறிப்பிடப்பட்டது. இந்த தொழில் செய்வோர் இந்த வர்ணத்தினர் என நிர்வாக வசதிக்காக மனிதனால் உருவாக்கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில், பின்னர் வந்த மக்கள் கூட்டம் பிறப்பின் அடிப்படையில் சாதியாக, வர்ணமாக அறிந்தோ, அறியாமலோ மாற்றிவிட்டது. அதையே நாமும் பிடித்துக்கொண்டு இருக்காமல், சாதி மத இன வேறுபாடுகள் இன்றி, மனிதனை மனிதனாகவே மதித்து அவனுடைய இன்பத்திற்கு உதவியும், துன்பத்தை நீக்கவும் நம்மால் இயன்ற அளவு உதவி செயல்பட வேண்டும் என்பதே என் முந்தய இரு பதிவுகளின் நோக்கம்.

கீதையின் கருத்துக்களின் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. கீதையை புரிந்து கொள்வதில் தவறு இருக்கலாம். அது படிப்பவரின் மனோநிலையைப் பொறுத்தது.

மாற்று மதத்தினரை, சாதியினரை இழித்தும், பழித்தும் பேசுவதால் என்னபலன்? அவர்களின் வெறுப்பை, பதிலடியை ஏன் நாம் சம்பாதிக்க வேண்டும்?இரு தரப்பினருக்கும் என்ன கிடைக்கப்போகிறது? இது அவசியமே இல்லை.

விசயத்திற்கு வருகிறேன்.

\\யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகள் மூலம் கிடைக்கும் அனுபவம் அதே செயலை இன்னும் முன்னேறிய வடிவில் அடுத்த முறை செய்ய வைக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பு ஆகும். இதன்படி எந்த ஒரு வினையும், மனிதர்கள் செய்யும் வேலையும் அந்த வினையின், வேலையின் பலனை அனுபவிக்காமல், எதிர்பாராமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்தால்தான் அது நடந்தேறும். அடுத்த கட்டமாக வளர்ச்சியுறும். விரும்பினாலும், விரும்பாவிடிலும் இப்படித்தான் பிரபஞ்சம் இயங்குகிறது, இப்படித்தான் நமது சிந்தனை முறை இயங்குகிறது.\\-- இது சூரியனின் கருத்து.

கடமையை செய், பலனை எதிர்பாராதே என்றுதான் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதையே இக்காலத்திற்கேற்றவாறு நான் புரிந்துகொண்டவாறு சொல்லி இருக்கிறேன்.

இதில் கடமையை செய், பலனை அனுபவிக்காதே என்றா குறிப்பிட்டு இருக்கிறோம்? நண்பரின் பதிவில் இந்த தொனிதான் இருக்கிறது.

ஒன்றை எதிர்பாராமல் இருப்பது------ஒன்றை அனுபவிக்காமல் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது நண்பரே...

எதை செய்தாலும் அதற்கு நிச்சயம் விளைவு உண்டு. அதை அனுபவித்துதான் ஆக வேண்டும். இல்லையென்று நான் சொல்லவே இல்லை. உதாரணமாக என் முந்தய பதிவுக்கு பலனாக உங்கள் பதிவை நான் அனுபவிக்கிறேன், அதேபோல் தங்களின் பதிவுக்கு பலனாக என் பதிவை தாங்கள் அனுபவிக்கிறீர்கள்.

ஆனால் எதிர்பாராமல் இருப்பது என்பது, என் முந்தய பதிவை எழுதியபோது தமிழ் மணம் மகுடத்தில் இடம்பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து எழுதுவில்லை. விளக்கத்தை தெரிவிப்பதை என் கடமையாகவே செய்தேன்.

ஆனால் நடந்தது என்ன? தமிழ்மணம் மகுடத்தில் வாசகர் பரிந்துரையாக இரு நாட்களாக இடம் பிடித்துவிட்டது. இதுதான் எதிர்பாராமல் எழுதியதன் பலன். புரிகிறதா நண்பரே. இத்தனைக்கும் அடியேன் புதிய பதிவர்தான்.

வலையுலக நண்பர்களுக்கு நன்றிகள்.பதிவரைப் பார்க்காமல் பதிவின் உள்ளடக்கத்தை கவனித்து பாராட்டியதற்க்கு.

சாதரணமாக எதிர்பார்த்தால் சில பின்னூட்டங்களும், சற்று அதிக எண்ணிக்கையில் பதிவர் வருகையுமே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்த பலனோ மிகப் பெரியது.

’கடமையை செய், பலனை எதிர்பாராதே’ என்பதற்கு, பலனை எதிர்பார்க்காமல் சரியானபடி செயல்பட்டால், கிடைக்கவேண்டிய பலனைவிட அதிகமாக கிடைக்கும் என்பதற்க்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.

எதிலும் சல்லடைபோல் நல்லதை விட்டு அல்லதைப் பிடிக்காதீர்கள்.

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

9 comments:

  1. அறிவே தெய்வம் கூறுகிறார் : //நாலு வர்ணங்களும் ஆதியில் முழுக்க முழுக்க தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கி, குறிப்பிடப்பட்டது. இந்த தொழில் செய்வோர் இந்த வர்ணத்தினர் என நிர்வாக வசதிக்காக மனிதனால் உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில், பின்னர் வந்த மக்கள் கூட்டம் பிறப்பின் அடிப்படையில் சாதியாக, வர்ணமாக அறிந்தோ, அறியாமலோ மாற்றிவிட்டது.//

    அபத்தம், சுத்த அபத்தம். அர்த்தமற்ற வாதம். நீங்கள் குறிப்பிடும் அந்த மனிதர்கள் பார்ப்பனர்களே என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். தொழிலின் அடிப்படையில் வர்ணங்கள் உருவாக்கப்படவில்லை. வர்ணங்களை முதலில் உருவாக்கிய‌ பிறகே அதன்பின் ஒரே சமுதாயத்தின் மக்களை அவரவர் செய்த தொழிலின் அடிப்படையில் தரவாரியாக பிரிக்கப்பட்டு அதனுள் புகுத்தப்பட்டனர். இவை அத்தனையும் பார்ப்பனர்கள் பொதுமக்கள் மத்தியில் பிரிவினைகளை உண்டாக்கி அவர்களை சிறுமைபடுத்தி, அடிமைகளாக்கி சுரண்டி வாழ்வதறகாக‌ உருவாக்கிவிடப்பட்ட மாயாஜாலமே தவிர வேறொன்றுமில்லை அன்பரே.

    ReplyDelete
  2. அபத்தம், சுத்த அபத்தம். அர்த்தமற்ற வாதம். நீங்கள் குறிப்பிடும் அந்த மனிதர்கள் பார்ப்பனர்களே என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்.//

    ஆனால், கிருஷ்னரே பிற்படுத்தப்பட்ட கோனார் (யாதவ) சாதிக்காரர் ஆயிற்றே!!

    ReplyDelete
  3. \\தொழிலின் அடிப்படையில் வர்ணங்கள் உருவாக்கப்படவில்லை. வர்ணங்களை முதலில் உருவாக்கிய‌ பிறகே அதன்பின் ஒரே சமுதாயத்தின் மக்களை அவரவர் செய்த தொழிலின் அடிப்படையில் தரவாரியாக பிரிக்கப்பட்டு அதனுள் புகுத்தப்பட்டனர்.\\

    ஆக எப்படியோ தொழிலின் அடிப்படையில் தரவாரியாக பிரிக்கப்பட்டு புகுத்தப்பட்டாலும், சாதியை இன்று இருப்பது போல் பிறப்பின் அடிப்படையில் அன்று இல்லை என்பது உண்மைதானே.
    எதிர்கால நவீன காலத்தில் என் பெயர் 900,60,70,123
    என குறுப்பிட்டால் சாதியேது, மதமேது, என்னால்தான் என்கிற அரசியல் பிதற்றல்கள் ஏது.

    ReplyDelete
  4. வருக, நந்தவனத்தாரே.
    மனிதன் எல்லா முகமூடிகளையும் கழட்டி வீசிவிட்டு,
    மனிதனாக சிறப்பாக வாழ வேண்டும். உங்கள்
    பதிலை பாராட்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  5. //ஆக எப்படியோ தொழிலின் அடிப்படையில் தரவாரியாக பிரிக்கப்பட்டு புகுத்தப்பட்டாலும், "சாதியை இன்று இருப்பது போல் பிறப்பின் அடிப்படையில் அன்று இல்லை என்பது உண்மைதானே".//

    அந்த சாதிகளை உருவாக்கும்போதே, அதில் குறிப்பிடப்பட்டவர்கள் இனி பிறப்பிலேயே சாஸ்திரங்களில் எழுதப்பட எக்காலத்திலும் யாராலும் மாற்ற முடியாத அந்தந்த சட்டதிட்டங்களுக்கு கட்டுண்டவர்கள் என்கிற பொய்யைய் உலாவவிட்டதுதான் உண்மை.

    ReplyDelete
  6. திரு.மாசிலா...தங்களின் குழந்தைகளுக்கு சாதி ஒழிப்பை எப்படி கற்றுக் கொடுக்கப்போகிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா? முடிந்த போனதை பொய்யா, மெய்யா என தொடர்ந்து பேசுவதைவிட இது அனைவருக்கும் உபயோகமாக இருக்குமே...
    தங்களின் ப்ளாக் லின்ங் இருந்தால் அனுப்புங்க...

    ReplyDelete
  7. //எதிலும் சல்லடைபோல் நல்லதை விட்டு அல்லதைப் பிடிக்காதீர்கள்.//

    ரீப்பீட்டேய்

    ReplyDelete
  8. மனம் விரும்பாவிட்டாலும் உண்மையை சற்று
    அழுத்தமாக சொல்ல வேண்டியதாயிற்று
    வருகைக்கு நன்றி திரு வீரா..

    ReplyDelete
  9. கடமையைச் செய் - பலனி எதிர்பாராதே - விளைவை அனுபவி -நல்ல சிந்தனை

    நல்வாழ்த்த்கள் சிவசு

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)