"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, May 17, 2009

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்

"மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனிதன் வணங்குகிறானே... மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கியுள்ளானே... இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.

தத்தாத்ரேயர் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.

தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!

நன்றி: தினமலர் - வாரமலர்

2 comments:

  1. முதலிலேயே படித்திருந்தாலும் அருமை.இதன் ஆழம் புரிய நமது நவீன மொழியில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்,சிவா.

    ReplyDelete
  2. \\ஷண்முகப்ரியன் said...

    முதலிலேயே படித்திருந்தாலும் அருமை.இதன் ஆழம் புரிய நமது நவீன மொழியில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்,சிவா.\\

    இதற்கு விளக்கம் உணர்வாக வர வேண்டிய ஓர் விசயம் இங்கே முக்கியப்படுத்தப்பட்டிருக்கிறது.

    மனம் கற்றுக்கொள்ளும் உணர்வோடு இருந்தால் இயற்கை நமக்கு தேவையானதை வழங்கி கொண்டே இருப்பதை உணரலாம். மனம் லேசாக லேசாக துன்பங்கள் போகும். வராது.இது ஆரம்பநிலைதான்.......இதையே நம்மில் பலர் உணரவோ அடையவோ முடிவதில்லை

    குரு நம் வாழ்வில் முக்கிய அங்கம். இதற்கு குருவின் பின்னே செல்லுதல் என்பதாக ஆகாது.
    நமக்கு பலதையும் உணர்த்தி கடைத்தேற்ற வல்லவரே அவர்.

    அதை உணரும் மனம் நமக்கு வாய்ப்பது இறையருள்,வினைப்பயன், இன்னும் பல.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)