"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, August 10, 2009

சரியை, கிரியை, யோகம், ஞானம்

பேரின்பத்தை உணர்வதற்கென்று நான்குவித மார்க்கங்கள் உள்ளன.

*சரியை மார்க்கம்

*கிரியை மார்க்கம்

*யோக மார்க்கம்

*ஞான மார்க்கம்

சரியை மார்க்கம்: சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை மார்க்கம்’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை. இந்த மார்க்கத்தின் வழியே மன வைராக்கியம் பெறலாம். சில சித்துவேலைகள் கைவரப் பெறலாம்.இந்த மார்க்கத்தின் வழியே உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை அவ்வளவு எளிதில் பெற இயலாது.

கல்கத்தாக் காளிகோவில் பூசாரியான இராம கிருஷ்ணபரமஹம்சரும், திருக்கடையூர் அபிராமி கோவில் பூசாரியான அபிராமப்பட்டரும்தான் நமக்குத் தெரிய இந்த மார்க்கத்தின் வழியே உயர்ஞானம் பெற்றதாகத் தெரிகிறது.

கிரியை மார்க்கம்

தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். பல்வேறு சக்கரங்கள் வரைதல், கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம். மெஸ்மரிசம்,ஹிப்னாடிசம் உள்ளிட்ட ஈர்ப்பு சக்திகள் இந்தப் பயிற்சிகளால் வரும். உயர்ந்த ஞானிகளின் அன்பை மானசீகமாகப் பெறலாம். சிறுதெய்வங்கள், குட்டிச்சைத்தான்கள் போன்றவற்றின் துணை பெறலாம். இந்த மார்க்கத்திலும் மனதின் ஆதிக்கம் இருப்பதால், உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை இதன் வழி பெறுதல் எளிய செயல் அல்ல.

சிலர் இதன் வழி அற்பக்காரியங்களைச் சாதித்துக் கொள்வார். ஆனால் இது நிலையானது அல்ல. யாகம், இரத்தப்பலி,யானைதானம்,என அலைபவர்கள் இந்த மார்க்கத்தை நம்பியிருப்பவர்களே.

அடுத்தது யோக மார்க்கம்,

ஆசனப் பயிற்சிகள் செய்து உடலை ஒழுங்கு செய்தல். மூச்சுப் பயிற்சிகள் செய்து மனத்தை ஒழுங்கு செய்தல்;இடைவிடாத தியானத்தால் உயிரை ஒழுங்கு செய்தல்; உள் ஒளியைக் காணும்வரை இடைவிடாது இந்த மார்க்கத்தின் ஒழுக்கங்களைப் பின்பற்றுதல்.

இது ஏறத்தாழ இறைஅனுபவத்திற்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும் ஓர் அற்புதமான மார்க்கம். ஆனால் நம்பத்தகுந்த குருநாதரின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே இந்த மார்க்கத்தில் முழு வெற்றியை அடைய முடியும். சகல சித்திகளும் கைகூடும் வாய்ப்பு உண்டு.

உண்ணல், உடுத்தல், காமஇன்பம் அனுபவித்தல் உள்ளிட்ட சிற்றின்ப நுகர்ச்சிகளில் நிறைவு காணாதோர் இந்த மார்க்கத்தில் மிக எளிதில் சறுக்கி விழ வாய்ப்பு உண்டு.



அடுத்தது ஞானமார்க்கம். எல்லோருக்கும் உகந்த மிக இனியமார்க்கம் இதுதான். தாயுமானவர் இந்த மார்க்கத்தைக் ’கனி’ எனப் பாராட்டுவார்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ என்பது அவரது கருத்து.

ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் என்ன தெரியுமா?

வற்றாத அன்பு,

குறையாத ஆனந்தம்,

கொடுத்து மகிழும் கொண்டாட்டம்,

குறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,

கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ வணங்கும் விசுவாசம்

இவைதாம் ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள்.

திருமணம் செய்து சிற்றின்பம் வழியே வருபவர்க்கும் இந்த மார்க்கம் பொருந்தும். காமத்தை விரும்பாத வள்ளலார், அவ்வையார் உள்ளிட்ட அத்தனை ஞானியர்க்கும் பொருந்தி வந்த மார்க்கம்.

மன இறுக்கத்துடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதா? அல்லது வழிகாட்டிய குருவின் வாலைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துப்பா பாடிக்கொண்டு திரிகிறீர்களா? இந்த மார்க்கத்தை உணர வாய்ப்பே இல்லை.

எல்லாம் வல்ல இறையாற்றலை மானசீகமாக சரணடைவதைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து வணங்க கூச வேண்டும்.

இந்த நான்குவகை மார்க்கங்களைப் பின்பற்றுவோர்க்கு எந்தெந்த வகையில் இறையாற்றல் துணைநிற்கும் என்பதைக் கூறும் ஞானநெறிப்பாடல் இதோ. (ஈசன் என்றால் இறை அவ்வளவுதான். உடனே உருவ வழிபாட்டில் சென்று விடாதீர்கள்)

’சரியையிலே ஈசன்

சட வடிவாய் நிற்பான்

கிரியையிலே மந்திரத்தில்

கிட்டி அருகிருப்பான்

ஊனமில்லா யோகத்தில்

உள் ஒளியாய் நிற்பான்

ஞானத்தில் தானாகுவான்!’


ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். இனி எந்த மார்க்கத்தில் செல்வது? என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள். அதற்குரிய தகுதிகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள விளையாட்டாய் முயற்சிசெய்யுங்கள்.

இவ்வளவுதான் ஆன்மீகம், இதை மையமாக வைத்துப் பார்த்தால் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆன்மீகத்தைப்பற்றி சொல்லும் விளக்கம் இவற்றிற்குள் நன்கு பொருந்தி வருவதை உணரலாம்.


நன்றி: கவனகர் முழக்கம் ஆகஸ்ட் 2002

13 comments:

  1. நல்ல கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள்..நன்றி ' நிகழ் காலத்தில்..'!

    ReplyDelete
  2. தாங்கள் செய்து கொண்டிருக்கும் பணிதான் நண்பரே:))

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  3. திரு நிகழ்காலம்...

    நீங்கள் நற்கருத்துகளை வெளிடுகிறீர்க்ள். அதை நாங்கள் விழியிடுகிறோம்.

    உங்கள் பதிவில் அதை இடுகையாக்கும் பொழுது இத்துடன் இதை சார்ந்த கருத்துக்களையும் வெளியிடலாமே?

    உதாரணமாக இந்த தலைப்பில் திருமூலர் குறைந்தது நூறு மந்திரத்தை(பாடலை) எழுதி இருக்கிறார். அதில் ஒன்றை இவற்றிற்கு உதாரணம் ஆக்கலாமே?

    இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.

    ReplyDelete
  4. /ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். இனி எந்த மார்க்கத்தில் செல்வது? என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள். அதற்குரிய தகுதிகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள விளையாட்டாய் முயற்சிசெய்யுங்கள்.//

    நான் மேலே குறிப்பிட்ட இதில் எதிலுமே இல்லை !

    //இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.//

    ஸ்வாமி சொன்னதுக்கு ரிப்பீட்டே,

    சிவா, சொந்தக் கருத்துக்களையும் இட்டு எழுதினால் சிறப்பாக இருக்கும், உங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு !

    ReplyDelete
  5. \\T.V.Radhakrishnan said...

    அருமையான பதிவு.\\

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  6. ஸ்வாமி ஓம்கார் said...

    \\ உங்கள் பதிவில் அதை இடுகையாக்கும் பொழுது இத்துடன் இதை சார்ந்த கருத்துக்களையும் வெளியிடலாமே?\\

    வருகைக்கும், வழிகாட்டுதலுக்கு நன்றி் ஸ்வாமி ஓம்கார் அவர்களே, முடிந்தவரை இனிமேல் அவ்வாறே வெளியிடுகிறேன்,

    \\உதாரணமாக இந்த தலைப்பில் திருமூலர் குறைந்தது நூறு மந்திரத்தை(பாடலை) எழுதி இருக்கிறார். அதில் ஒன்றை இவற்றிற்கு உதாரணம் ஆக்கலாமே?\\

    மன்னிக்கவும், எனக்கு அந்த அளவு நுட்பமான புலமை இல்லை. ஆனால் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் உண்டு.

    \\ இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.\\

    நிச்சயம் அப்பத்திரிக்கைக்கு ஏஜண்ட் இல்லை:))

    எனக்கு இடுகைக்காக நேரம் குறைவாகவே ஒதுக்க முடிவதாலும், எனக்கு மிகவும் ஒத்த கருத்துகள் அதில் இருப்பதாலும் அப்படியே நன்றியுடன் வெளியிடுகிறேன்.

    எதிர்காலத்தில்(?) மெருகூட்டுவோம்

    ReplyDelete
  7. கோவி.கண்ணன் said...

    \\ நான் மேலே குறிப்பிட்ட இதில் எதிலுமே இல்லை !\\

    ஆன்மீகத்தைப்பற்றி ஒரு தெளிவு வேண்டியவர்களுக்கு தான் இந்த சிந்தனை.
    ஏற்கனவே தெளிவாக உள்ளவர்களுக்கானது அல்ல:))

    அதுமட்டுமல்ல, ’காலத்தினுள்’ எல்லாம் அடக்கம்,
    ’காலம்’ இதையெல்லாம் கடந்தது.:))

    //இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.//

    ஸ்வாமி சொன்னதுக்கு ரிப்பீட்டே,

    சிவா, சொந்தக் கருத்துக்களையும் இட்டு எழுதினால் சிறப்பாக இருக்கும், உங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு !

    ’இதுதான் கோவியார்’ ஊக்கத்துக்கு நன்றி, செயலுக்கு கொண்டு வருகிறேன்’

    ReplyDelete
  8. Great !!! Greetings from Norway,,!!!
    http://worldtamilhinduforum.blogspot.com

    ReplyDelete
  9. வற்றாத அன்பு,

    குறையாத ஆனந்தம்,

    கொடுத்து மகிழும் கொண்டாட்டம்,

    குறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,

    கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ வணங்கும் விசுவாசம்//

    அருமையான விளக்கம்,சிவா.பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு மனதார மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. திரு.ஷண்முகப்ரியன்

    இந்த நிலை நமக்கு வாய்க்க வேண்டுமென்றுதான் இந்த பிரயத்தனம்

    இறையருள் கூட்டுவிக்கட்டும்

    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  11. Good one. Please read this book..
    http://www.vallalyaar.com/?p=409

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)