கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புவன் முட்டாள் என்பது ஒருபுறம்,
கருப்புசாமி, முண்டகக்கண்ணி, என்ற சிறு தெய்வங்கள் முன்னால் வேப்பிலை கட்டி ஆடுதல், வேல் குத்துதல், உருளுதல்,இருமுடி கட்டுதல், எருமை, ஆடு, கோழி,பன்றி போன்றவற்றை காணிக்கை தரும் பாமரக் கூத்துகள் மறுபுறம்.
நான்தான் கடவுள். நான்தான் இன்றைய தீர்க்கதரிசி, நான் தான் அவதாரம் என பிரமாண்ட கட்அவுட் விளம்பரதாரர்கள் இன்னொரு புறம்.
இயமம்,நியமம்,ஆசனம், பிராணாயாமம், தியானம் என பயிற்சி அளித்து மனித மனங்களை வளப்படுத்தும் குருமார்கள் ஒருபுறம்.
இவர்களின் உண்மை நிலை என்ன?
நாம் பின்பற்ற வேண்டிய சரியான மார்க்கம் எது? எவற்றை எல்லாம் விடவேண்டும்? இது குறித்து தெளிவு செய்வது கவனகர் முழக்கம் இதழின் கடமை.
நாத்திக வாதம் என்பது ஒரு எதிர்மறை வாதம். எதிர்மறை அணுகுமுறை என்பது ஒன்றை அழிப்பதற்குத்தான் உதவும். பிறப்பின் பெயரால் மக்களைப் பிரித்து வைத்து இழிவு படுத்தும் வருணாசிரம தர்மம் எனும் கொடுமையை அழிப்பதற்காக நாத்திகம் என்ற ஆயுதத்தைத் தந்தை பெரியார் கையில் எடுத்துப் பயன்படுத்தி முடிந்தவரை அழித்தார். தவறான கோட்பாட்டை அழிக்கும்போது சரியான கோட்பாட்டை காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வின் காரணாமாக திருக்குறளை அடையாளம் காட்டி, திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.
நாத்திக வாதத்த்தை ஞானிகள் ‘இருள்’ என்று கூறினர்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் - 243
என்கிறது தமிழ்மறை. இருள் சேர்ந்த இன்னா உலகம்தான் இறை மறுப்பு உலகம்.
’அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெல்லாம்
இருள்நெறி என எனக்கு இயம்பிய சிவமே..’ என்பார் வள்ளல் பெருந்தகை.
அடுத்து கடவுளுக்கு கொடைவிழா என்றும் குலதெய்வ வழிபாடு என விலங்குகளை பலியிட்டு ஆடும் வெறியாட்டம், உடலை வருத்திச் செய்யும் அலகு குத்துதல் போன்ற முரட்டுத்தனமான வழிபாடுகள், எல்லாவிதமான காணிக்கைகள் என அறிவுத் தெளிவு இல்லாத மன உண்ர்வால் செய்யப்படும் மூடச் செயல்கள். மதவாதிகளை வாழவைப்பவை இந்த மூடத்தனமான சடங்குகளே. இதை ஞானிகள் ‘மருள்’ எனக் குறிப்பிடுவார்கள். மருள் என்றால் மயக்கம் எனப்பொருள்.
ஆனால் தப்பித்தவறிக்கூட இந்த மயக்கம் தெளியவிடாமல் வைத்திருப்பார்கள் மடாதிபதிகள் மற்றும் போலிச் சாமியார்கள். அரசியல் நடத்தும் அதிகார வர்க்கமும், அறிவில்லாத செல்வந்தர் கூட்டமும் இதற்கு துணையாய் இருப்பார்கள்.
பொதுவாக
வறுமை அதிகம் உள்ள நாட்டில், சமுதாய அமைப்பும் அரசமைப்பும் தன்னைக் காப்பாற்றாத நிலையில் தன்னம்பிக்கையை இழந்து ‘ கடவுளாவது நம்மைக் காப்பாற்ற மாட்டாரா’ என்ற ஏக்கத்தில் கேள்விப்பட்ட வழிகளின் பின்னால், கேள்விப்பட்ட சாமியார்களின் பின்னால் பாமரர்கள் செல்லும் வழிதான் மருள்வழி
( தொடரும் )
நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ் மே 2002