"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, June 28, 2013

பொதிகை மலை பயணத்தொடர்...1


கடந்த 2013 ஜனவரி 15 முதல் மார்ச் 10 வரை பொதிகைமலையில் அமைந்த அகத்தியர்கூடத்திற்கு மலைப்பயணம் செய்வதற்காக கேரள அரசு அனுமதி அளிக்கும் என்ற செய்தியை நண்பர் இது என்ன என்ற மேல்விபரம் கேட்க என்னை அணுகி இருந்தார்..

எனக்கோ கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல். ஆனால் முதல்முறையாகச் செல்வதால் தனியாகச் செல்ல மனமில்லாமல் ஆர்வமுள்ள நண்பர்களை அடையாளம் காணுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டேன். இந்த அகத்தியர்மலை என்றும் பொதிகைமலை என்றும் அழைக்கப்படும் மலையைப்பற்றிய சில செய்திகளை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்ததால் தமிழகத்தில் உள்ள மலைப்பயணங்களைப் போல் பொதிகைமலைஇருக்காது. சிரமம் அதிகம் அதிகம் என்பது புரிந்தது :)

அட்டைகள் அதிகம் இருக்கும் என்ற விசயம் எனக்கு பழகிப்போனாலும், நண்பர்களுக்கு பயத்தை அளிக்க, போகலாமா? வேண்டாமா? என்று யோசனையில் ஒருவாரம் கழிந்தது. திடீர் முடிவாக முன்பதிவு செய்ய திருவனந்தபுரம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிளம்புவிட்டோம்..

யாத்திரை செல்பவர்கள் இதற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள  வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.

Office of the Wildlife Warden,
Wild life Division ,
Vattiyoorkkavu .P.O,
PTP Nagar,
Thiruvananthapuram.
Fax No. 0471-2360762
Phone No. 0471-  2360762


பிப்ரவரி 4ல் நேரில் சென்று காத்திருந்து பதிவு செய்தோம். பயணத்திற்கு இடம் இருந்த நாட்களோ இரண்டுதான், மார்ச் 7,8 அதிலும் மொத்தமாக ஐம்பது இடங்க்ள் மட்டுமே.பாக்கி :) மற்ற நாட்கள் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி.. அதிலும் ஒரு நபருக்கு 5 பேருக்கான முன்பதிவு டிக்கெட்...அனுமதிக்கட்டணம் 500..இதுதான் முன்பதிவுக்கான சரியான வழி... இன்னொரு முறையிலும் பதிவு செய்யலாமாம். அகத்தியர் கூடம் செல்லும் வழியில் காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும்.  நாங்கள் சென்ற போது காலை 8.45 அங்கிருந்த பாதுகாவலர் எங்களை என்போடு விசாரித்து இன்னும் ஒருமணிநேரம் ஆகும். உள்ளே அமைந்த கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ளச் சொன்னார். அந்த வேலையை முடித்து காத்திருந்தோம் ஒருவழியாய் 10.15 க்கு வனத்துறை அதிகாரி வர எங்கள் குழு 5 பேருக்கு, தலைக்கு 500 கட்டிவிட்டு இரசீது பெற்றுக்கொண்டு திரும்பினோம். ஒரு போட்ட்டோவும், அடையாளச் சான்று இரண்டு நகல் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.

நேரில் செல்ல முடியாதெனில் காணிதலத்தில் உள்ள செக்போஸ்டில் போனில் முன்பதிவு செய்து, பயண நாளன்று பணம் கட்டினால் பொதும் என்று பயணம் முடிந்து திரும்பும் போது அந்தப்பகுதி அன்பர் சொன்னார். இத்தகவலின் சாத்தியக்கூறுகள் எனக்குத் தெரியவில்லை.

டிக்க்ட் முன்பதிவின்போது அங்குள்ள ஆபீசரிடம் மலை ஏறி இறங்க எத்தனைநாள் ஆகும் என்று கேட்டதற்கு இரண்டு நாள் போதும். ஏற ஒருநாள் இறங்க ஒருநாள் போதும் என்ன இறங்கும்போது சற்று நேரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது மாலை 5.30 அல்லது 6 மணிக்கு வந்துவிடலாம். என்று சொன்னார். அவருக்கு பொதிகைமலை அடிவாரத்தில் உள்ள பஸ்டைமிங் நிலவரம் தெரியவில்லை. உத்தேசமாக 7 மணிக்கு இருக்கும் நிச்சயம் திருவனந்தபுரம் 9 அல்லது 9.30 க்கு வந்து சேர்ந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.

இதை எழுத வேண்டிய காரணம் பயணம் செல்வது இரயிலில் என்பதால், முன்பதிவு அவசியங்கள், வேலைகளை திட்டமிட்டு முடிக்க வேண்டிய அவசியங்கள் கருதி இந்த தகவல்களைச் சேகரித்து திரும்பினோம்.

இப்படித் தகவல்கொடுத்தது என்னவோ வனத்துறை அதிகாரி என்றாலும் அவர் அதிகாரி ரூபத்திலான அகத்தியர் என்பதை பயண இறுதியில்தான் தெரிந்தது.:)