கோவை ராமநாதபுரம் ஏரியாவில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஏறத்தாழ மதியம் 11.30 மணி கடும்வெய்யிலில் திணறினேன். காரணம் தேர்தல் பிரச்சாரம். சாலையின் இரும்ருங்கிலும் டெம்பொ டிராவலர் வேன்கள். சுமாராக 100 எண்ணிக்கையில் இருக்கலாம். சந்துபொந்துகளில் புகுந்து சிங்காநல்லூர் செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆனது
அடுத்து மாலை 4.15 க்கு பவர்ஹவுஸ் பகுதியில் முக்கிய வேலை.. அது முடிந்தபின் 4.45 க்கு கலெக்டர் அலுவலகம் அருகில் வேலை.. பவர் ஹவுஸ்கிட்ட அரசியல் மீட்டிங்.. ரோடு மறிக்கப்பட...... வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றேன். இங்கும் சின்ன வேன்களில் சாரி சாரியாய் மக்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் செய்தபின், உள்ளே அனுப்பி, எண்ணி சரிபார்க்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்
எதற்காக இந்த கூட்டம் சேர்த்தல் என்று புரியவில்லை. யாருக்காக என்றும் புரியவில்லை.. எந்தக்கூட்டணியாக இருந்தாலும் சரி.. மக்களிடையே இந்த மீட்டிங், பிரச்சாரம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதோ எனத் தோன்றியது. எல்லோரின் கையிலும் வாட்ஸாப், ஃபேஸ்புக் வசதியுடன் அலைபேசி. எல்லா ஊழல்களும், அயோக்கியத்தனங்களும் விரல் நுனியில். இருந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை.
சிங்காநல்லூர் நகராட்சி மண்டல அலுவலகத்திற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். வரவேற்புக்கு ஒரு வயதான பெண் அலுவலர். .. வருபவர்களுக்கு தேவையான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் கூட்டம் அதிகமாக இருக்கவே சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு நபர் சொத்துவரி கட்டுவதற்கான பாஸ்புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து. புது புத்தகம் வேண்டும் என்றார். அந்த அம்மா ஏனுங்க இதுக்கு என்ன ஆச்சு ? என்று யதார்த்தமாகக் கேட்டார். உடனே இவர் என்ன ஆச்சா.. ? நல்லாப் பாருங்க தீர்ந்து போச்சு, தீர்ந்து போனாத்தானே வருவாங்க ? வேலையில்லாமலா இங்க கொண்டு வருகிறோம். ? நல்லாப் பார்க்கக் கூட மாட்டீங்கறீங்க என்று மானாங்காணியாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.
அந்த அம்மா சற்றே யோசனையுடன் புத்தகத்தை புரட்டிப் பார்க்க அருகில் நின்ற எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.. சரி என்றைக்குமே அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொங்க வேண்டுமா ? இன்று ஆதரவாக ஓரிரு வார்த்தைகளச் சொல்வோம் என்று எண்ணி “ அண்ணா.. நீங்க வந்து புத்தகத்தை கொடுத்ததில் இருந்து அந்தம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க அவங்க பார்த்துச் சொல்லுவாங்க என்று சொன்னேன்.
ஆனால் அவரோ என்னை சற்று முறைத்துப் பார்த்துவிட்டு.. நீங்க கம்முனு இருங்க என்றார். சிரித்துக் கொண்டே சரி என அமைதியாக நின்று விட்டேன். பெண் அலுவலர் அந்த புத்தகத்தை நன்கு புரட்டிப் பார்த்துவிட்டு, கடைசிப் பக்கத்தில் 2019-2020 என்று பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதைக் காண்பித்து இது இருக்கின்றதே இதுவே போதுமே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்
அவரோ அதெப்படி ஒரு பக்கம் போதுமா ? இந்த வருடம் முழுவதும் கட்ட இது போதுமா புது புத்தகம்தான் வேண்டும் என்று சண்டைக்கு நின்றார். இரண்டு வரி பதிவு செய்ய அந்த கடைசிப் பக்கமே தாரளமாகப் போதும் என்ற நிலைகூடத் தெரியாமல் வந்ததில் இருந்து சண்டைக் கட்டிக் கொண்டே இருந்த அந்த நபரைப் பார்த்ததும் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..
உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான்டா லாயக்கு :)