"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label உடன்பாட்டு எண்ணங்கள். Show all posts
Showing posts with label உடன்பாட்டு எண்ணங்கள். Show all posts

Thursday, August 23, 2012

என்ன நடக்குது இங்கே - 4

ஆன்மீகம் என்பதை முழுமையாக புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில், ஏற்கனவே நாம் இந்த வலைதளத்தில் ஆன்மீகம் குறித்து கொஞ்சம் பேசி இருப்போம் அதன் தொடர்ச்சியாகவே இந்த இடுகைகளும் பயணிக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாகப்புரியும்.

இங்கு ஞானமார்க்கத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டு வருகிறது. பக்தி மார்க்கத்தை என்ன செய்வது என்றால் இன்றைய சமூச சூழ்நிலைக்கு ஏற்ப போற போக்கில புரிந்து எடுத்துக்கொள்ள முடிந்தால் கொஞ்சமா எடுத்துக்குங்க. இல்லைன்னா அதை பைபாஸ் பண்ணி போயிருங்க..,  போராட்டம் வேண்டாம், அதிக ஆராய்ச்சி வேண்டாம் என்பதே.,

 பக்தியோ, ஞானமார்க்கமோ மனதைத் தகுதிப்படுத்தாமல் வெற்றி சாத்தியமில்லை. அதற்கு மனதை தயார் படுத்தும் விதமாக மனம் எதுனுடனெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என உணர வேண்டும். இதற்கு விழிப்புடன் இருந்து தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை குறை கூறாமல், ஏன் வந்ததுன்னா.... அப்படின்னு தீர்ப்பு ஏதும் சொல்லாமலும்,  வந்த எண்ணத்தை கருமம் வந்துட்டுதேன்னு திட்டாமலும் ஒவ்வொரு எண்ணத்தையும் தொடர்ந்து சாட்சியாய் இருந்து கவனித்துவர வேண்டும். எழுதுவது எளிது. ஆனால் சிலநிமிடங்கள் கூட தொடர்ந்து செய்ய இயலாது என்பதுதான் உண்மை., மனம் தளராமல் முடிந்தவரை கவனித்து கவனித்து பழகவேண்டும்.

அப்போது கண்ணாடியின் மீது படர்ந்து பனித்திவலைகளைத் துடைத்துப்பார்ப்பது போல தன் மனதின் ஆழத்தில் மறைந்து இருக்கும் குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை  போன்றவைகளைக் கண்டு கொள்ள முடியும். இவற்றிற்கும் பக்திக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

 உடனடி விளைவாக இவைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் நம் மனதின் ஆற்றலை இழந்துகொண்டேதான் வருவோம். உபரியாக உடலும் பாதிக்கப்படும். மனம் இவற்றின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கிப் போராடிக்கொண்டு இருக்கும். இதைச் சரிசெய்ய, இயல்புக்கு வர உற்றுக்கவனித்தல் உதவும். மனதின்  உள்வாங்கும் திறன்,  பாராபட்சமின்றி அணுகும் திறன எல்லாமே சமநிலைக்கு வரும்.

மனதின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்துமுன் அதன் ஓட்டைகளை அடைத்து அதை செப்பனிடவேண்டியது அவசியம். தற்போதய ஆன்மீகரீதியான, யோகா சார்ந்த வழிமுறைகள் பெரும்பாலும்  இதை அதிகம் வலியுறுத்துவதில்லை.  பக்திவழியோ, ஞான வழியோ அவர்கள் தரும் குறிப்புகளுடன் நடக்கும்போது மனம் சக்தி பெற்று அமைதி அடைவதும், அதன் பின் இயல்பு வாழ்க்கையில் வழக்கம் போல சோர்வுற்று இருப்பதும் இதனால்தான்..

நம்முடைய அபிப்ராயங்கள், நம்பிக்கைகள் முடிவுகள் அனுபவங்கள் பிம்பங்கள் ஆகியவைகளை கொண்டுதான் நாம் அனைத்தையும் பார்த்து வருகிறோம். இவைகள் உண்மைநிலையை அவ்வாறே காட்டாமல் திரித்து ஒரு பொய்யான தோற்றத்தை உண்மை என தவறாககாட்டி வருகின்றன. உண்மைநிலையை நம்மால் கண்டுகொள்ள முடியாதபோதுதான் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுகின்றன். கூடவே குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றன.

உண்மைநிலையை மறைப்பதில் மனதின் தன்மைகள் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என உணருங்கள். ஆக ஒவ்வொன்றாக சரி செய்ய முயன்றால் கோபத்தை எப்படி தவிர்ப்பது? கவலையை எப்படி ஒழிப்பது, ? என்று தனித்தனியாக முயற்சித்தால் தற்காலிக வெற்றி மட்டுமே கிட்டும். நிரந்தரமான வெற்றி வேண்டுமானால் மனதை தன் அடையாளங்களில் இருந்து விலகி இருக்கப் பழக்கினால் கிடைக்கும்.

எழுதுவது போரடிக்கிறதா நண்பர்களே., நாலு ஜென்கதைகளைச் சொல்லி சம்பந்தமில்லாம இரண்டு நல்ல விசயங்களையும் சொன்னால் கட்டுரை சுவரசியமாகப் போகும். இவைகள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் என் தளத்தில் பகிரப்படும் விசயங்கள் சொற்பமாக சில இடங்களில் காணப்படலாம். ஆகவே புரியாதமாதிரி தோன்றினால் மீண்டும் மீண்டும் படியுங்கள்.,

தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

Monday, August 20, 2012

என்ன நடக்குது இங்கே - 3

ஆன்மீகம் பற்றி அதில் உள்ளவர்களே போதுமான தெளிவில் இல்லை. தாம் தெளிவில்லாமல்  இருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாத அப்பாவிகள் அநேகர். இவர்களைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு எனக்கு அந்த சக்தி இருக்கிறது. இது இருக்கிறது என அவர்களிடம் காசு பார்க்கும் கூட்டமும் இதே ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி பிழைத்துக்கொண்டு இருக்கிறது ஆன்மீகத்தை கெடுத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த சூழ்நிலைதான் கம்மெனு போறாவங்களையும் திரும்பி நின்னு காறித்துப்பச் செய்துவிடுகிறது. (விதிவிலக்குகள் இருக்கும்)

இந்தநிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஆன்மீகப் பாதையில் பயனிப்பதன் பலனை அனைவரும் பெறமுடியும். ஆன்மீகம் என்பது வெறும் அற்புதங்கள் செய்வது மட்டுமோ,  குறை தீர்ப்பது மட்டுமோ அல்ல. இதெல்லாம் பக்க விளவுகள்தான். உண்மையில் ஆன்மீகம் என்பது எவ்வகையிலாவது உடலைப் பேணி நம் மனதிற்கு தெம்பூட்டுவதுதான். உடல்,உயிர்,மனம் இவற்றிற்கான ஒத்திசைவை, இணக்கத்தை அதிகப்படுத்துவதுதான்.

இதற்கு முதல்படி தன்னை உணர்வது மட்டும்தான். இதை ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்தால்தான் சமுக முன்னேற்றம் என்பது கிடைக்கும். அப்படி தன்னை உணர்வது பற்றி எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரிந்து இருக்கலாம். எனக்கும் தெரியும் என்பது முக்கியமல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்தோம் என்பதே முக்கியம்.

நாம் இந்த தொடரில் நம்மை (தன்னை) உணர்வதில்,அதன் வழிமுறைகளில் சிலவற்றைப் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். இவை எல்லாம் தனித்தனியானது அல்ல. ஒவ்வொன்றுமே முக்கியமானதுதான். .

முதலில் நம் மனதில் உள்ள அடையாளங்களை இனங்கண்டு கொள்ள வேண்டும். நான் இன்ன சாதி.எனது கட்சி இது. எனது மதம் இது என் தலைவன் இவர் என் கடவுள் இது, கடவுளே இல்லை, என் வாழ்க்கை முறை இப்படித்தான். என எல்லோருக்கும் தெரியும் வண்ணம் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருப்போம். இதுதான் ஊர்உலகத்துக்கே தெரியுமே என்கிறீர்களா? இங்கே உங்கள் மனம் இவற்றோடு எந்த அளவு பிணைக்கபட்டிருக்கிறது என்பதை நீங்கள்  கண்டுபிடிக்கவேண்டும் எனபதுதான் முக்கியம்.

உதாரணமாக நம் சாதியைப் பற்றி ஒருவர் குறை கூறும்போது எனக்குக் கோபம் வந்தால் மிக இறுக்கமாக இதனுடன் என மனம் அடையாளப்படுத்தப்படுகிறது. மாறாக ஏன் சொல்றாங்க, அப்படி சொல்லும்படி நாம் என்ன தவறு செய்தோம். அடுத்த முறை சொல்லாத அளவிற்கு நம்மால் நடக்கமுடியுமா என மனம் சிந்தித்துக்கொண்டு எதிராளியின் மீது பாயாமல் இருந்தல் மனம் கொஞ்சூண்டுதான்  இதில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் :)

மனம் எந்த ஒன்றோடும் எந்த அளவு பிணைக்கப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்வதே, அடையாளம் கண்டு கொள்வதே மனதை அறிவதன் முதல்படி.இதை யோசித்துப்பார்க்க ரொம்ப எளிதாகத் தோன்றும். எனக்கு எல்லாச் சாதியும் ஒண்ணுதான். இப்படி நினைக்கச் சுகமாத்தான் இருக்கும். ஆனால் தகுந்த சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான் உங்களுக்கு மட்டும் தெரியும். நீங்கள் எந்த அளவு இதில் தீவிரமாக இருக்கின்றீர்கள் என. இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அஸ்திவாரமே இதுதான் :)

வெளியுலகிற்கு தெரியும் வகையில் உள்ள அடையாளங்கள் எவை? நம் மனதிற்கு மட்டுமே தெரிந்தவை எவை? என அடையாளம் கண்டு அவைகளுடனான பிணைப்பை, அதன் தன்மையை, தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது அனுபவத்தால் மட்டுமே வரும். சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்க்ளா? இதோ வர்றேன்.

குடும்பம் ஆகட்டும், தொழில் செய்யுமிடம் ஆகட்டும், ஆன்மீக முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும், அல்லது சமுதாய முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும் நீங்கள் அதில் குறிப்பிடத்தக்கவராக., சாதனையாளராக, எதிர்ப்பில்லாதவராக, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா என்று ஒதுங்காதவராக மாற வேண்டும்.இது ஒன்றே பத்தோடு பதினொன்றாக நாம் வாழவில்லை, ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்ற நிறைவைக் கொடுக்கும். இதை வேண்டாம் என்று சொல்பவர் யார்?

இதற்கு முதலில் மனதை தகுதிப்படுத்தவேண்டும். அப்படி தகுதிப்படுத்த மனதைப் பற்றிய புரிதல் நடைமுறையில் அது இயங்கும் தன்மைகளை அறிந்து அதற்கேற்றவாறு இயங்கவேண்டும்.மனதின் ஏற்கும்தன்மையை முழுமையாகப் பயன்படுத்த அதை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு
நம்மிடம் உள்ள நமக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் குணங்களை அடையாளம் காண வேண்டும். இந்த குணங்கள் நம்மிடம் எப்படி தீவிரமடைகின்றது என்பதை கண்டுபிடிக்கத்தான் எதனோடு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்று ஆராய்கிறோம்.


மேலோட்டமாக மனதில் உள்ள பொறாமை, ஆசை, கவலை, கோபம்...போன்ற குணங்களை அறிய முடிந்தாலும். எனக்கு இவைகள் இல்லை எனச் சிலர் சொல்லக்கூடும். இந்த குணங்கள் குறைந்த அளவில் நம் மனதில் அடி ஆழத்தில் மறைந்து கிடந்தால் அவற்றை அறிவது கடினம்.... இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டு திரிவோம் :) ஆனால் அடையாளம் கண்டுகொண்டால்தான் இவற்றை கையாள்வது எளிதாகும்.

தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

Thursday, August 16, 2012

என்ன நடக்குது இங்கே - 2

ஒருநாள் காலையில் ஜீ தொலைக்காட்சியில் ஆன்மீக பேச்சாளர் ஒருவர் முருகனைப் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். எந்நேரமும் கடவுள் சிந்தனை வேண்டும். தனியா உட்கார்ந்து முருகனை நினைக்கமுடியலையா, பரவாயில்லை ரசத்துக்கு புளி கரைக்கும்போது முருகான்னு நினைங்க.. புளி ரசம் பக்தி ரசமா மாறிடும் அப்படின்னார் :)

இப்படித்தான் நமது ஆன்மீகம், பக்தி ரசமாக போய்க்கொண்டு இருக்கிறது, ஆன்மீகம் குறித்து தெளிவு நம்மிடம் இன்னும் தேவை. தேவை.:) நமது வாழ்க்கை நாம் நினைத்தவண்ணம் இல்லாது, எந்தவிதமாகவேனும் நகரும்போது  அதை பக்குவமாக எதிர்கொள்ளும் விதத்தை  கற்றுக்கொடுப்பது எல்லாம் ஆன்மீகம்தான் :)

Tuesday, August 14, 2012

என்ன நடக்குது இங்கே..1

 ஒருவரோடு ஒருவர் பேசுவதில் தன் மனதில் உள்ளதை அப்படியே எதிரே இருப்பவருக்கு முழுமையாக தான் உணர்ந்தவாறு சொற்களால் உணர்த்தவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

பொருள் சார்ந்த விசயம் எனில் இப்படி செய். இன்ன லாபம் கிடைக்கும். சாட்சிக்கு அவரைப் பார் என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் ஆன்மீகத்தில் அப்படி இல்லை.ஆன்மீகம் என்பது மனம் சார்ந்த விசயம்.

முதலில் ஆன்மீகம் என்றாலே இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது நமது தமிழ்சமூகம். ஆன்மீகம் என்பதே மந்திரங்களும் பூசைகளும்  நம்பிக்கைகளும் அதிசயங்களும்  என்றாகிவிட்டது. விசேச நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே நமது குறைகள் நீங்கிவிடும் கேட்டது கிடைக்கும் என்பதன் விபரமும் ஆன்மீகத்துள் அடக்கம்.ஆன்மீகத்தின் மிகச்சிறிய பகுதிதான் இவைகள் என விளங்கிக் கொள்ள விரும்புவதும் இல்லை.

இங்கே கூர்ந்து கவனித்தால் நமக்குப் புரியவருவது எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி நமது மனதில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது? எந்தவிதமாகவோ அமைதி ஏற்பட்டது என்பதுதான்:) இதே போல எனக்கு இந்த அமைப்பின் /  யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது அந்த அமைப்பின் யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது, இந்த மதத்தின் வழிபாட்டு முறைகளினால் நன்மை என்பதின் மனோநிலையும் ஏறத்தாழ ஒன்றுதான்.

மனம் அமைதியாக, உற்சாகமாக, நேர்மறையாக இருக்கிறது என்பதுதான் கூட்டிக்கழித்தால் கிடைக்கிற முடிவு.

பக்தி மார்க்கத்தில் கிடைக்கும் அமைதி, சில நாட்கள் அல்லது குறைந்த நாட்கள் என்றால் ஞானமார்க்கத்தில், தியான வழிமுறைகளில் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் அமைதி கிடைக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் அதை நீடித்துக்கொண்டதாக யோகப்பாதையில் பயணிப்போர் சொன்னாலும், அவர்களைப் பார்க்கின்ற நம்மைப்போன்ற சாதாரணமானவர்களுக்கு பெரும்பாலும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.

ஏதோ போறார். பரவாயில்லை என்று சொல்லுமளவில்தான் பலரும் இருக்கின்றனர்.இந்த நிலை ஏன். பக்தி சார்ந்த ஆன்மீகப்பாதையோ, யோகப்பாதையோ, இவரைப்போல் பண்பட்ட மனிதன் இல்லை என்று சொல்லுமளவிலோ, அவருடைய வார்த்தைக்கு மாற்றோ எதிர்ப்போ இல்லாத தன்மை எவரிடத்திலாவது இருக்கிறதா என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணுமளவிற்குக்கூட இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த பண்பு எவரிடத்தில் இருப்பினும் அவர் வந்தவழி, அவர் கடைப்பிடித்த வழி மிகநிச்சயமாய் சரியானது.

என்னைப்பொருத்தவரை இவை மட்டுமல்ல எல்லா விசயங்களும் மனதினுள் அடக்கம்.  விதை ஒன்று வீட்டில் கழனிப்பானையில் கிடக்கும்வரை அதற்கு காலமும் கிடையாது. செயல்பாடும் கிடையாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி., ஆனால் அதே விதையை எடுத்து மண்ணில் போட்டு, தண்ணீர் பாய்ச்சினால், ஒளியின் உதவியோடு முளைவிட்டு செயல்பாட்டுக்கு வரும். அதன் பின்னர் அதன் வளர்ச்சி குறித்து நிறைய பேசிக்கொண்டு இருக்கலாம். இதற்கு முன்னர்வரை எதுவும் பேச முடியாது.

அதே போலத்தான் இயற்கையில் இருக்கின்ற   இந்த பிரபஞ்சத்தில் நாம் வந்து பிறந்திருக்கிறோம். நம்மைப் பொருத்தவரை நாம் உயிரோடு இருக்கும்வரை இதைப்பற்றி பேசலாம். நாம் இறக்கும்போது நம்மோடு பிரபஞ்சமும் மறைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் இருக்கிறது.:)

இதில் நாம் அறிந்தவை/ அறிந்ததாக மனம் நம்புபவை சொற்பமே., அந்த அறிந்தவைகளும் ஒவ்வொருவரின் மனதிற்கேற்ப ஒவ்வொருவிதமாகவே புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது :) இதுவே கருத்துவேறுபாடுகளுக்கும், சச்சரவுகளுக்கும் அடிநாதமாக அமைந்துவிடுகிறது. இவற்றை தவிர்க்க, களைய என்ன வழி? நாம் எந்த விதமாக மாற்றம் பெற வேண்டும்?


தொடர்ந்து சிந்திப்போம்

Friday, April 20, 2012

போடா வெண்ணை.....

நம்பிக்கை என்பதன் மீதுதான் நமது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. உயிர் பயம் நமக்கு இல்லை என்று மார்தட்டினாலும்  கூடி வாழும் சமுதாய விலங்கு என்ற வார்த்தைக்கு பொருத்தமாக பாதுகாப்பை முன்னிறுத்தியே கூடி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழுவாய் இருக்கிறோம் என்ற உணர்வே தைரியமாய் நம்மை வாழ வைக்கிறது.

பாதுகாப்பு என்ற அம்சத்தை உள்ளடக்கியே என் மதம், என் சாதி, என் கட்சி, என் இனம், என் நாடு என்று இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இதன்பொருட்டு பிறரை இம்சை பண்ணும்போதுதான் இவையெல்லாம் அவசியமா என தோன்றுகிறது.  என் மதம், என் சாதி, என் இனம், என் கட்சி என இவற்றை நான் நிறுவ முனையும்போது பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க முடிவதில்லை.

Thursday, July 22, 2010

ஆழ்மனமும்.. வெளிமனமும்..

மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

Tuesday, December 15, 2009

உடன்பாட்டு எண்ணங்கள்

இந்த பிரபஞ்சத்தில் எண்ண அலைகள் எங்கும் நிறைந்துள்ளன. நமது மனதிலிருந்து புறப்படும் எண்ண அலைகளுக்கு ஏற்ப, பிரபஞ்ச மனதிலிருந்து எண்ண அலைகள் நம்மை நோக்கியும் வருகின்றன.

பிரபஞ்சமனதின் மிக முக்கியமான செயல்களுள் ஒன்று  நமது எண்ண அலைகளுக்கு அதிக உணர்வூட்டி, வலுவூட்டி அதை நாம் இவ்வுலகில் நிறைவேற்றக் காரணமாக அமைவதே.

பிரபஞ்ச எண்ண அலைகள் ஒரு கடல் போன்றது. அதிலிருந்து அமுதமும் எடுக்கலாம், ஆலகால விசமும் எடுக்கலாம். நமக்கு எது வேண்டுமோ அதைத் தரும் அட்சயப்பாத்திரம் அது. உடன்பாட்டு (நேர்மறை) எண்ணமுடையார்க்கு அதே அளவு வலுவூட்டி அமுதை அளிக்கும்.  எதிர்மறை எண்ணமுடையவருக்கும் அதே அளவு வலுவை ஊட்டி ஆலகாலத்தை அளிக்கும்.

ஏனெனில் இறையருள் என்பது நமது மனநிலையைப் பொறுத்ததே.  நெல் விதைத்து முள் கொள்வாரில்லை. முள் விதைத்து நெல் கொள்வாருமில்லை.

ஏழை ஏழ்மையைப் பற்றி சிந்திக்க சிந்திக்க ஏழ்மையே பெருகும். நோயாளி நோயைப் பற்றிச் சிந்திக்க சிந்திக்க நோய் தீவீரமாகும். செல்வந்தன் செல்வம் பற்றிச் சிந்திக்க சிந்திக்க செல்வம் சேரும்.

ஏழை செல்வம் வருதல் பற்றி சிந்திக்க வேண்டும், நோயாளி உடல்நலம் பெறுதல் பற்றிச் சிந்திக்க வேண்டும். இருளினின்று ஒளிக்குச் செல்ல வேண்டும். இதுவே உடன்பாட்டுச் சிந்தனை. இத்தகைய நலம் பயக்கும் வார்த்தைகளைப் பேசப்பேச, சிந்திக்க சிந்திக்க சூழல் மாறும். இது நம் வாழ்வை உயர்த்தும்.

நீங்கள் பேசும், சிந்திக்கும், எழுதும் வார்த்தைகளை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.....நண்பரே :))

வாழ்த்துகள்