"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Wednesday, July 5, 2017

பெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை

அழகு மட்டுமல்ல; ஆரோக்கியத்திற்கும்நல்லது!


உள்ளாடை தேர்வில், பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்களை கூறும், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் மகேஸ்வரி:

 உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. மேலும், அது ஒரு தன்னம்பிக்கை காரணியும் கூட.

ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில், தன் மார்பக அளவில், ஆறுமுறை மாற்றங்களைச் சந்திக்கிறாள். பதின்வயதுகளில் ஆரம்பிக்கும் மார்பக வளர்ச்சி, அதன் இறுதி ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். கர்ப்ப காலத்தின் போது அதிகரிக்கும் மார்பக அளவு, குழந்தை பிறந்த பின், பால் சுரப்பிகளின் காரணமாக மேலும் அதிகரிக்கும்.

தாய்ப் பாலுாட்டுவதை நிறுத்திய பின், பழைய நிலைக்குத் திரும்பும் மார்பகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அடுத்ததாக, மெனோபாஸ் காலத்திலும் மார்பக அளவில் மாற்றம் ஏற்படும். வயதான காலத்தில் மார்பகம் சுருங்கும்.

இப்படி, பெண்களின் வாழ்நாள் முழுக்க மார்பக அளவு மாறியபடி இருக்கும். ஆனால், பலர் அதற்கேற்றவாறு, தங்களின் பிரேசியர் அளவை மாற்றுவதில்லை. இந்த அலட்சியம் களையப்பட வேண்டும்.

பொதுவாக, பெண்கள் பிரேசியர் வாங்கும்போது, 32, 34, 36 என, உடற்சுற்றளவின் அடிப்படையிலேயே அதை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதன், கப் அளவே மார்பகத்தின் அளவைக் குறிப்பது. அது, 'ஏ, பி, சி' என, மூன்று அளவுகளில் கிடைக்கிறது.உதாரணமாக, 34ஏ என்பது, உடலில் சுற்றளவு மற்றும் அதையொத்த பெரிய கப் சைஸ் கொண்டது. 34பி, சராசரி கப் சைசும், 34சி, சிறிய கப் சைசும் கொண்டது. எனவே, உடல் சுற்றளவு மட்டுமின்றி, கப் சைசையும் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

அதிக இறுக்கமான அல்லது தளர்வான பிரேசியர் அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமாக அணியும் போது வலி, அரிப்பு, எரிச்சல், பட்டைகள் அழுத்துவதால் ஏற்படும் புண் என்று பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, மார்பகத்துக்குச் சரியான வகையில் சப்போர்ட் கொடுக்கும் உள்ளாடைத் தேர்வு அவசியம்.

பாலுாட்டும் நேரத்தில் உள்ளாடை அணிய வேண்டாம், அணியக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. உண்மையில், அப்போது மார்பகத்தில் உண்டாகும் வலி, கட்டிகள், பால் கட்டும் பிரச்னைகளை தவிர்க்க, கட்டாயம் பிரேசியர் அணிய வேண்டும்.

குழந்தை பிறப்புக்கு பின் சில பெண்கள், பிரேசியர் அணியும் பழக்கத்துக்கு விடை கொடுத்து விடுகின்றனர்; அது மிகத் தவறு. அழகு மட்டுமல்ல, இது ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது. மார்பகத்தின் கீழ்ப் பகுதியில் வியர்வை தங்கி அரிப்பு, புண் ஏற்படுவதைத் தவிர்க்கவும், செல்களின் தொய்வைக் குறைக்கவும், பெண்களுக்கு உள்ளாடை மிக அவசியமாகிறது.

சிந்தெடிக் ரகங்கள் தவிர்த்து, காட்டன் பிரேசியரையே பயன்படுத்த வேண்டும். வெயிலில் அதிகம் செல்வோர், புறஊதாக் கதிர்களை உள்ளிழுக்கும் அடர் நிறங்கள் தவிர்த்து, வெளிர் நிறங்களில் உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

உடல் எடை அதிகமானால், மெலிந்தால் அதற்கேற்ப பிரா அளவையும் மாற்றிப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஒரு பிரேசியரை ஆறு முதல் ஒன்பது மாதம் வரை பயன்படுத்தலாம். எலாஸ்டிக் லுாசாகி, ஹூக் உடைந்த, துணி நைந்து போனவற்றை பயன்படுத்த வேண்டாம்.

நன்றி
தினமலர்
05/07/2017


Wednesday, June 28, 2017

'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா ?


'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகளை பட்டியலிடுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் கங்கா

பெண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது பிறப்புறுப்பைத் தொட்டுக் கொண்டே இருக்கும். இதனால், அந்த இடத்தில் தோலில் அழற்சி - 'டெர்மெடைட்டிஸ்' ஏற்படும். சிறுநீரில் உள்ள யூரியா போன்ற வேறு உப்புகள், குழந்தையின் தோலில் தடிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, பூஞ்சைத் தொற்று - 'டேண்டிடா' ஏற்படுத்தும்.
காற்றோட்டம் இல்லாத ஈரமான இடங்களில் பூஞ்சைத் தொற்று எளிதில் ஏற்படும். பிறப்புறுப்பின் உள்ளே கிருமிகள் சென்று, யூரினரி இன்பெக் ஷனை ஏற்படுத்தக் கூடும். பெண் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.

அதேபோல், ஆண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது விரை பையில் பட்டு, அதிகச் சூட்டை உண்டாக்கும். இந்தச் சூடு அவர்களுக்கு நல்லதல்ல. இதனால், அணுக்கள் பாதிக்கப்படும்; விந்தணு உற்பத்தியாவது குறைகிறது. இந்தப் பாதிப்பு குழந்தையாக இருக்கும்போது தெரியாது; வளர்ந்து பெரியவர்களான பின் தான் தெரியவரும்.

ஜெல் டெக்னாலஜி உள்ள டயாபரில் உள்ள ரசாயனப் பொருட்கள், குழந்தையின் மென்மையான தோலுடன் வினைபுரிந்து, அதிகமான அழற்சியை ஏற்படுத்தும். மேலும், தளர்வான டயாபர்களே சிறந்தவை. பிளாஸ்டிக் இழைகள் கலந்த, இறுக்கி பிடிக்கும் டயாபர், அரிப்பு, வறட்சி மற்றும் தோல் சிவந்து போதல், புண் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.

இரவு நேரங்களில் டயாபர் அணிவிக்கும்போது, குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்தால் அம்மாவுக்கு தெரியாது. ஆனால், குழந்தை அசவுகரியமாக உணரும். கழிவில் உள்ள பாக்டீரியாக்களால் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே அந்தக் குழந்தை அழ ஆரம்பிக்கும்.

வெளியூர் மற்றும் விசேஷங்களுக்கு செல்லும்போது, டயாபர் அணிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இச்சூழ்நிலைகளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கண்டிப்பாக டயாபரை மாற்ற வேண்டும். அத்துடன், டயாபரைக் கழற்றியவுடனேயே அடுத்ததை அணிவிக்கக் கூடாது. அரை மணி நேரம் காற்றுப் பட விட்டு, பின்னர் போடவும். சிறுநீரோ, மலமோ குழந்தை போகவில்லை என்பதற்காக, பயன்படுத்தியதையே திரும்பப் போடக் கூடாது.

ஒன்றரை வயது தாண்டிய குழந்தைகளுக்கு, டயாபரைத் தவிர்த்து, 'டாய்லெட் டிரெயினிங்' கொடுக்க வேண்டும். தொடர்ந்து டயாபர் போடும் குழந்தைகளுக்கு, இந்தப் பயிற்சி அளிப்பது தாமதமாகும்.
டயாபர் போடும்போது, சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், தடிப்பு ஏற்படுவது குறையும் என்பது தவறு. சிறுநீரில் உள்ள யூரியா மற்றும் மற்ற உப்புக்கள், எண்ணெயுடன் வினைபுரிந்து மேலும் பாதிப்பை அதிகரிக்கும்.

டயாபருக்கு மேல் பேன்டீசையும் அணிவிப்பது முற்றிலும் தவறு. இதனால் காற்றோட்டம் சுத்தமாகக் கிடைக்காது. தொடர்ந்து இவ்வாறு அணிவிக்கும்போது, குழந்தைகளின் இரண்டு தொடைகளும் விலகி, அவர்கள் நடையில் மாற்றம் ஏற்படும்.

நன்றி
தினமலர்
28/06/2017