"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label எண்ணம். Show all posts
Showing posts with label எண்ணம். Show all posts

Wednesday, October 2, 2019

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை. ஏனெனில் எதை எழுதினாலும், அதன் மறுபக்கம் அல்லது நியாயம் கூடவே மனதில் வந்து விடுகிறது. அதை ஒதுக்கி,  ஒன்றை நியாயப்படுத்தி எழுத வேண்டுமா என்ற கேள்வி தோன்றுகிறது.

கடும்கோடையில், பறவைகளுக்கு மொட்டை மாடியில்  சிறு கிண்ணங்களில் தண்ணீரும், சிறுதானியங்களும் வைத்தால், ஆகா அருமையான யோசனை  என, உயிர்களின் மீதான அன்பினை பாராட்டத் தோன்றுகிறது.

கூடவே, அது எங்கோ, தன் முயற்சியால் உணவு தேடி, நீர் அருந்தி, கூடு அடையும் பறவையாக இருப்பதை, நாய் பூனை போன்ற வீட்டு விலங்கு போல மாற்றி, அதன் இயல்பை, வாழும்திறனை ஒழிப்பதற்கு துணை போக வேண்டாம் எனவும் தோன்றுகிறது. இதுவும் அந்த உயிர்களின்  மீதுள்ள அன்பினால்தான் எனும்போது, இதையும் ஏற்க வேண்டியதாக இருக்கின்றது.

ஆக இரண்டு விசயங்களுமே சரிதான். செய்யலாம். ரொம்ப யோசிக்காமல் தோன்றுவதைச் செய்யலாம். இப்படி இருதரப்பு அபிப்ராயங்கள் வரும்போது எனக்கு என்ன விருப்பமோ அதையும், உங்களுக்கு என்ன விருப்பமோ அதையும் செய்ய வேண்டியதுதான்.  உள்ளார்ந்த அர்த்தம் அவரவர் வெளிப்படுத்தினால் அன்றித் தெரியாது.

தீனி வைக்காதவன் கஞ்சன் என்றோ, பிற உயிர்களின்மீது அக்கறை இல்லாதவன் என்று மற்றவனால் பார்க்கப்படலாம். தீனி வைத்தவன் நாயைக் கெடுத்தான்,  பூனையைக் கெடுத்தான், இப்ப குருவியின் வாழ்க்கை முறையை கெடுக்கிறான் என இவனால் பார்க்கப்படலாம். இதுதான் சமூக இயல்பு. இவற்றைக்  கண்டு கொள்ளாமல் உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே நல்லது. ஏன்?

இப்படியான நம் விருப்பத்தில் எது சரி, எது தவறு என்பதெல்லாம் விளைவுகளைப் பொறுத்தே அமையும் என்பதே, என் நிலைப்பாடு. சரி, தவறு என்பதெல்லாம் தர்க்கரீதியாக மனதை வைத்து யோசிக்காமல், சொல் விளையாட்டில் சிக்கிக் கொள்ளாமல், செயலின் விளைவாக என்ன நடந்தது என்று கவனித்தால் போதுமானது. இது மனிதர்களோடு தொடர்ந்து உறவாட உதவியாக இருக்கும்.

அப்படி நடப்பது அல்லது கிடைப்பது மனரீதியாக இருக்கலாம். இல்லை, பொருள்ரீதியாக இருக்கலாம். ஒரு சில ரூபாய் மதிப்புள்ள சிறுதானியங்கள் மூலம், உங்கள் மனதிற்கு ஒரு சந்தோசம், நிம்மதி கிடைக்கிறது. கூடவே குருவிகளின் வயிறும் நிறைகிறது எனில், அதை ஏன் தவிர்ப்பானேன்?  இது ஒரு சுயநலமான யோசனைதான். நான் மறுக்கவில்லை.

சுயநலமின்றி, பொதுநலம் இல்லை. என்னிடம் இரண்டு வேளைக்கான உணவு இருக்கிறது. எனில், அடுத்தவேளையைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம், இப்போது பசியுடன் இருக்கும் ஒருவரோடு பகிர்ந்து கொள்பவன் பாராட்டுக்குரியவனே.

தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என இரு நபர்களுக்கு கொடுப்பவன் தியாகி, தெய்வம், முட்டாள் என்று எப்படிச் சொன்னாலும், ஒரே பொருள்தான்.

இதில், நான் செயல்களை உயர்வு தாழ்வு எனப் பிரிக்கவில்லை.  உங்களின் செயல்கள் உங்களைச் சார்ந்தோருக்கு, குடும்பம், தொழில் நட்புகள் என எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது  என்பதை கவனத்தோடு இருங்கள். குருவி வயிறும் நிரம்பவேண்டும், நம் மனதும் நிரம்பவேண்டும். வீட்டில் இருப்போரை பட்டினி போட்டு, உணவை வெளியே பகிர்வது, இங்கு பாதிப்பு, அங்கு மகிழ்ச்சி என்று அமைந்துவிடும்.

எந்தச் செயலாக இருப்பினும், அதன் பலன் இரு தரப்பிலும் மகிழ்ச்சியை விதைக்குமாறு அமைய, முயற்சிப்போம். மனநிம்மதியைப் பெறுவோம்.

நிகழ்காலத்தில் சிவா

Thursday, June 15, 2017

கவனி.. கவனி.. கவனி - ஓஷோ

கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்

கவனித்திருப்பது.

கவனி.   உன் மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்தையும் கூர்ந்து கவனி.  உன்
ஒவ்வொரு  செயலையும், ஒவ்வொரு அசைவையும்  தொடர்ந்து கவனித்துப் பார்.

நடக்கும்போதும், பேசும் போதும், உணவு உண்ணும் போதும், குளிக்கும் போதும், உன் ஒவ்வொரு அசைவையும் கவனி. அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இரு.

Tuesday, December 11, 2012

திருப்பூர் பதிவர் சந்திப்பு 09/12/2012

வெள்ளிக்கிழமை அன்று இந்தத் தகவலை நண்பர் ஜோதிஜி பகிர்ந்து கொள்ள முதலில் தொடர் வேலைகளினால் அப்புறம் பார்ப்போம் என்று விட்டுவிட்டேன். பின்னர் நடக்கிற இடம் உள்ளூரில் என்பதால், கலந்து கொள்வோம் முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காங்கயம் ரோட்டில் அமைந்துள்ள செண்பகம் மக்கள் சந்தை என்கிற டிபார்மெண்டல் ஸ்டோரில் ஆஜராகிவிட்டேன்.

இந்த விழா தொழிற்களம், மக்கள் சந்தை, தமிழ்ச்செடி என்கிற அமைப்புகளின் சார்பில் நடப்பதாக பேனர் தெரிவிக்க சற்று யோசனையோடுதான் இருந்தேன். கடைசியில் MLM வியாபாரமுறையில் கொண்டு நிறுத்தி விடுவார்களோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது. :)

10 மணிக்கு விழா என்ற் உடன் சரியாக விழாவின் சிறப்பு அழைப்பாளார் திரு.சுப்ர பாரதி மணியன் வருகை புரிய இயல்பாக பேசிக்கொண்டிருந்தோம். நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதி இருந்தபோதும் இவரை எனக்கு என் தொழிற்கூடத்திற்கு அருகில் தாய்தமிழ்ப் பள்ளி என்ற ஆரம்பப்பள்ளி நடத்திவருபவர் என்ற வகையில் அறிமுகம். ரூபாய் நூறுக்கும் குறைவான மாதக்கட்டணத்தில் மூன்றாம் வகுப்பிற்கு மேல்தான் ஆங்கிலம் என நடுத்தர, மக்களுக்கு இவரது சேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இவர் வளர்ந்துவரும் எழுத்தாளர் நா.மணிவண்ணனை பாராட்ட பொருத்தமானவர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஒவ்வொருவராக வர அடுத்த கால்மணிநேரத்தில் அரங்கம் உற்சாகமானது :)

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டம் கலந்துரையாடல் போல தொடங்கியது. சுப்ரபாரதி மணியன் பேசும்போது போஸ்ட்மார்டனிசம் என்பதன்படி மையத்தில் இருப்பவர்களுக்காக விளிம்பில் இருப்பவர்கள் எல்லோரும் இயங்க வேண்டி இருக்கிறது. அதுபோல் எழுத்துலகில் சில எழுத்தாளர்கள் ஆட்சி செலுத்தி கொண்டிருந்த போதும், மற்றவர்கள் படிப்பதையும் விமர்சிப்பதையும் தவிர்த்து ஏதும்செய்ய முடியாத சூழலில் புத்தகம் வெளியிட அவசியம் இல்லாது தனது கருத்துகளை உடனுக்குடன் வெளிப்படுத்த இணையம் உதவுகிறது, என்றும் இந்த ஒன்றே விளிம்புநிலை வாசகர்களை மையத்தை நோக்கி பயணிக்கச் செய்து இன்றைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. அந்தவிதமாகவே நா.மணிவண்ணனுக்கான பாராட்டும் பொருந்தும் என்றார்.



அடுத்து பதிவர்கள் சுய அறிமுகமாக நிகழ்ச்சி பயணிக்கத் தொடங்கியதும் அதில் மெட்ராஸ் ப்வன் சிவகுமார் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பை ஒட்டி ஜோதிஜியால் மேடைக்கு அழைக்கப்பட்டு பேச ஆரம்பித்தார். தமிழ் வளர்ச்சியில் தமிழரின் பங்காக தமிழன் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வதையும், தமிழை கிண்டல் செய்வதையும் தவிர்த்தால் போதும். தூய தமிழுக்கு மெனக்கெட வேண்டியதில்லை. மேலும் வரும்காலத்திலும் இப்போதும் ஆங்கிலம் இன்றி சம்பாத்தியம் இல்லை என்று சொல்ல. கோவை மு சரளா ஊடாடிய கருத்துகளை தெரிவிக்க இரு தரப்பின் கருத்துகளும் சந்தேகமின்றி பார்வையாளர்களுக்குத் தெளிவானது. இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு துளிகூட மோதலோ, கடுமையோ, இன்றி இயல்பாக அமைந்ததை உணர்ந்தேன்.

செண்பகம் மக்கள் சந்தை என்ற டிபார்மெண்டல் ஸ்டோரின் உரிமையாளர் திரு. சீனிவாசன் வந்தவர்களுடன் அன்போடு எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாகப் பழகினார். நிகழ்வு நடத்த இடத்தையும் வழங்கி, தேநீர் பிஸ்கெட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

கூட்டத்தில் அவரது கடைக்கு வந்த நண்பர் தம்பதியினரை வர வைத்து பேச வைத்தார். அவர் இணையத்தில் எழுதுபவர்கள் வெறும் கவிதையும், கதையும் எழுதுவதோடு மற்ற்வர்களுக்கு பயன் தரும் கருத்துகள் எழுத வேண்டினார். இதோடு நான் முரண்பட்டாலும் தெரிவிக்கவில்லை.:)

இணையம் என்கிற பொதுவெளியை தன் திறமையினை வெளிக்கொணரும் இடமாகவே பயனாளர்கள் பயன்படுத்தவேண்டும் என்பதே என் அவா. கவிதையோ, மொக்கையோ நகைச்சுவையோ இயல்பாக வெளிப்படுத்திப் பழகி, மெருகேற்றிக்கொள்ள இணையவெளியை பயன்படுத்தவேண்டும். எல்லோரும் அறிவுரை சொன்னால் இணையம் தாங்காது :) வராததை முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை

மணிவண்ணன் எனக்கு பேச வராது என்று யதார்த்தமாக சொல்லி, தனது எழுத்து சிறுமுயற்சிதானே தவிர இன்னும் வளரவேண்டிய இடத்தில்தான் இருக்கிறது என்றார். இன்னும் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள இந்த பரிசு சுட்டிக்காட்டுகிறது என்றார்.

தமிழ்ச்செடி குறித்து இரவு வானம் சுரேஷ் விவரித்தார். ஜோதிஜி கருத்துகளை இணைத்தும் நிகழ்ச்சியை வ்ழிநடத்த இறுதியில் மணிவண்ணனுக்கு நூல் பரிசளிப்பும், நினைவுப்பரிசும் வழங்கப்பட விழா நிறைவடைந்தது. மொத்தத்தில் கூட்டம் கலந்துரையாடல் போல் அமைந்து இயல்பாக சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்த கலந்துரையாடல்,, தேர்ந்த திட்டமிடப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட நிறைவைக்கொடுத்தது.

இந்தக்கூட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விசயங்கள் என்று எதையும் என்னால் குறிப்பிட முடியாத அளவு சிறப்பாக இருந்தது என்றால் மிகையில்லை.

Tuesday, November 15, 2011

ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?

நாம்  எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை  என்பதே உண்மை.

Saturday, April 4, 2009

இரும்பை பதப்படுத்த......

உங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை
மேலும் தேவைகளுக்கேற்ப கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அது உங்கள் வளர்ச்சியை வேகப்படுத்தும். அதில் முக்கிய பங்கும் வகிக்கும்.

இரும்பை பதப்படுத்த…

அதை உலைகளில் வைத்து சூடாக்கி, பழுக்க வைத்து….

அ) சூடான பழுத்த இரும்பைத் தண்ணீரில் முழுக வைத்து,உடனே குளிரச் செய்தல்..

ஆ) சூடான பழுத்த இரும்பைத் தரையில் போட்டு,தானாகக் குளிரச் செய்தல்.

இ) சூடான பழுத்த இரும்பை மணலில் புதைத்து,மெதுவாக குளிரச் செய்தல்..

இப்படி பல முறைகளில் குளிரச் செய்கிறார்கள்.

இதில் எந்தமுறை சரி, எந்தமுறை தவறு என பிரிக்கவே முடியாது.

காரணம் இரும்பை, கடினப்படுத்துவதற்கு, வளைப்பதற்க்கு, உடைப்பதற்க்கு என்ற தேவைகளுக்கு ஏற்பவே., குளிர வைக்கும் வழிமுறையும் மாறுகிறது.

இப்படி தேவைக்கேற்ப இரும்பை முழுமையாக உபயோகப்படுத்தும் பொருட்டு, அதனை எப்படியெல்லாம் பக்குவப்படுத்துகிறோம்.

அதேபோல் நம் மனதை , நமது தேவைக்கேற்ப பக்குவப்படுத்தி, மாற்றிக்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும். எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனியுங்கள்.பல இடங்களிலும் அலைவதை விட்டுவிட்டு, உங்கள் சொல்படி கேட்க ஆரம்பிக்கும். அதன்பின் சரியான முடிவுகள் எடுப்பது எளிதாகிவிடும்.


நான் இப்படித்தான் என்று இருந்தால் ஏதோ ஒருவிதத்தில் தான் பயனடைவோம். பல இழப்புகள் வரலாம். இரும்பை பாருங்கள். மாற்றத்திற்கேற்ப பலனடையுங்கள்.

மாறாக மனோநிலை பக்குவமானால், நிறைய பலன் அடைவோம், பிறருக்கும் பலன் தருவோம்.

ஆக ஒரு விசயத்தில் முடிவை எடுக்கும் முன், தேவையை தெளிவாகப் புரிந்து கொண்டால், மனதால் நல்ல சரியான, முடிவாக எடுக்கமுடியும்.

தீர்க்கமான உறுதியான முடிவுகளால்... குறிக்கோளை அடையும் வழி எளிதாகிறது

நன்றி: கருத்து, ‘அடுத்த ஆயிரம் நாட்கள்’ நூலில் இருந்து....