ஒரு விஞ்ஞானி, எலிகளை ஆராய்ச்சி செய்பவர். தன் ஆராய்ச்சிக்காக பல எலிகளை வைத்து, பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
எலிகளை மனிதன் தன் கட்டளைப்படி கேட்கச் செய்யமுடியும் என தீவீரமாக நம்பினார். அது சம்பந்தமாக அவருடைய ஆய்வின் போக்கு அமைந்திருந்தது.
முதலில் அதை உணவு விசயத்தில் பழக்க முடிவு செய்தார். அதற்கு பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பி, எலியை, அந்த கட்டளைக்கு கீழ்படியப் பழக்கினார். ஒன்றும் பலன் இல்லை. அது தன் இஷ்டப்படி, அவ்வப்போது கூண்டை விட்டு வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தது.
சரி இது ஆகாது என முடிவு செய்து, உணவு கொடுக்கும் நேரங்களை மாற்றி அமைத்துப் பார்த்தார்.சில சமயங்களில் எலி வந்து உணவை எடுத்துக் கொண்டது. சில சமயங்களில் உணவு சாப்பிடவில்லை.
சரி இதுவும் ஆகாது, என முடிவு செய்து தானியங்கி ஒலி எழுப்பும் மணி ஒன்றை நிறுவினார்.உணவுநேரத்திற்கு முன் மணியை ஒலிக்க செய்தார். மணி சப்தம் கேட்டவுடன் எலிக்கு தவறாமல் உணவு வைத்தார். ஓரிரு நாட்களில் எலி கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொண்டது. பின்னர் தொடர்ந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது.
கிட்டதட்ட ஒரு மாத காலம் இதற்கு ஆனது. இறுதியாக தனது ஆராய்ச்சி குறிப்பில் விஞ்ஞானி இவ்வாறு எழுதினார்.
எலி எந்த சப்தத்திற்கும் கீழ்படியாது. மணி சப்தத்திற்கு மட்டுமே கீழ்படியும். இதுவே நான் கண்ட உண்மை என நிறைவு செய்தார்
அன்று இரவு புதிதாக வந்த எலி ஒன்று நமது எலியிடம், என்ன அண்ணே! எப்படி இருக்குது இந்த வாழ்க்கை, விஞ்ஞானி நல்லவரா? எனக் கேட்டது.
அட அத ஏன் கேட்கிற? ஒரு மாசமா இந்த ஆள்கிட்ட நா பட்டபாடு, ! பசிக்கிற நேரத்துக்கு ஒழுங்கா சாப்பாடு வைக்கத்தெரியல. ஒரு வழியா மணி அடித்தவுடன் சாப்பாடு வைக்கிற மாதிரி பழக்கறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்து போச்சு போ! என்றது.
நண்பர்களே பலசமயங்களிலும் நாம் எலியாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ இருக்கிறோம்.
உலகத்தை நாம் புரிந்து கொள்வதும், உலகம் நம்மை புரிந்து கொள்வதிலும் இந்த நிலைதான் இருக்கிறது.
சரி இதற்கும் ஓம்காருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
இப்போதைக்கு நான் எலி, ஓம்கார் விஞ்ஞானி
மீண்டும் அவசியம் சந்திப்போம்.
அடுத்த இடுகையின் தலைப்பு
உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)