இன்றைய இளைஞர்கள் எதிர்மறையாகச் சிந்திக்கின்றார்கள்.
வாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கை வாதம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது.
எதிர்மறைச் சிந்தனை நம்மை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.
எந்த ஒரு முயற்சியிலும் சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றையும் மீறி நல்ல விசயங்களைப் பார்ப்பது என்பது நம்மைச் சுகமாக வைத்திருக்கின்ற ஒரு செய்தி.
எல்லாவற்றிலும் தேடிப்பிடித்தாவது குறையைச் சொல்வது என்பது நாளடைவில் நம் உடல்நலத்தைக் கூடப் பாதிக்கும்.காரணம், நம் மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது.
மனம் சரியாக இல்லாவிட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது.
மனதில் மகிழ்ச்சி இருந்தால், பசியைக்கூட மறந்துவிடுகிறோம்.
ஆனால், தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உடலில் அதிக அமிலம் சுரக்கின்றது.முகத்தில் சுருக்கம், உடல் தளர்வு ஏற்படுகிறது. எனவே நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்க வேண்டும்.
இன்னொரு மனப்பான்மை இருக்கின்றது.
எதைப் பார்த்தாலும் இதை விடச் சிறந்தது ஏற்கனவே எனக்குத் தெரியும் என்று சொல்லிக் காட்டுகிற மனப்பான்மை.
அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கான ஒரு உபாயமாக இருக்கிறது.
ஆனால், நம்மிடம் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
பாரத பிரதமர் என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு பள்ளி ஆசிரியர் (உதாரணத்திற்காகத்தான்) விலாவாரியாக சொல்கிறார்.ஆனால் அவர் பள்ளி ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென்பதை மறந்துவிட்டுப் பாரத பிரதமருக்கு அறிவுரை கூறுகிறார் !
நிறையப் பேர் அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் கடமைகளை மட்டும் செளகரியமாக மறந்து போகிறார்கள்.எங்கேயாவது ஏதாவது பிசகு நடந்தால்கூட, அதைப் பெரிது படுத்துகிறார்கள்.
பூதக் கண்ணாடியால் பூங்கொத்துகளைப் பார்க்கிறார்கள்.
எங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
யாரை வேண்டுமானாலும் எளிதில் குறை சொல்லலாம் என்று நினைக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.
கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.
இன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனஇளைஞர்கள் அனைவரும் புன்னகையோடு உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்கள்மீது பூக்கள் சொரியும்.
நன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து