"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label கவனகர். Show all posts
Showing posts with label கவனகர். Show all posts

Wednesday, June 23, 2010

தமிழ் செம்மொழியும்,.. தனிநாட்டின் அவசியமும்

உலகின் மூல மொழிகள் எனப்பெறும் உயர்தனிச் செம்மொழிகள் ஆறுமட்டுமே. மற்ற மொழிகள் அனைத்தும் இவற்றிலிருந்து பிறந்த சேய்மொழிகளே.

(1) இஸ்ரேல் நாட்டின் யூதர்கள் பேசும் எபிரேய மொழி (ஹீப்ரு மொழி), இயேசுநாதர் பேசிய மொழி
(2) ரோமானியர்கள் பேசிய லத்தீன் மொழி.
(3) கிரேக்கர்கள் பேசிய கிரேக்க மொழி
(4) மத்திய ஆசியாவின் ஆரியர்கள் பேசிய சமஸ்கிருத மொழி
(5) சீனர்கள் பேசும் Mandrine எனப்பெறும் சீனமொழி
(6) நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி

Thursday, June 17, 2010

ஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - மலேசியாவில்...

ஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - நிகழ்ச்சி

பசிப் பிணியற்ற தமிழ்நாடு, 

நோயற்ற தமிழ்நாடு,

வளம் நிறைந்த தமிழ்நாடு,

ஞானம் செறிந்த தமிழ்நாடு.

என்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.


ஆர்வமுடையவர்கள்   கலந்து பயன்பெறுக.. தனிமனித முன்னேற்றம் உடல்நலம், பொருள்வளம்  பெற  பெரிதும்  உதவும்.

Thursday, June 10, 2010

இருள், மருள், தெருள், அருள்- தொடர்ச்சி

அடுத்து மக்கள் மனத்தெளிவு பெற வேண்டி, ஞானமடைந்த மகான்கள் அளிக்கும் ஆசனம், யோகம், ஞானப்பயிற்சி வழிகள். வயிற்றுப்பசிக்கே வழி காணமுடியாத வறுமையாளருக்கு இந்த வழி பெரிதாக உதவி செய்யாது. பசியை வென்றோர்கே இது பொருந்தும். அதனால்தான் வள்ளலார் போன்ற மகான்கள் முதலில் வயிற்றுப் பசிக்கு உணவிடும் அன்னதானத்தை முதன்மையாகச் செய்தனர்.

சோனியாகாந்தியை உங்களுக்குத் தெரியும் என்பதில் எந்த சிறப்பும் இல்லை. எந்தப் பலனும் இல்லை. ஆனால் சோனியா காந்திக்கு உங்களைத் தெரியும் என்பது சிறப்புநிலை. எல்லோருக்கும் கிடைக்கும் பொதுப்பலன்களை விட உங்களுக்கென்று தனிப்பட்ட முறையில் சிறப்புப் பலன்களை அடையலாம். நியதிக்கு, சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட சிறப்புப் பலன்களையும் அடையலாம் :))

அதேபோல் இறைஆற்றல் இவ்வுலகில் எல்லா உயிர்க்கும் பொதுவான பலன்களைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்பவனுக்கும் அதேதான், இல்லை என்பவருக்கும் அதேதான் :))

உடலை உயிர் இயக்குகிறது. பசித்தால் உண்ணுகிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கிறோம். காற்றை சுவாசிக்கிறோம். இவையெல்லாம் இறையாற்றலால் கிடைக்கும் பொதுப்பலன்கள். ஆனால் இறையாற்றலோடு தனிப்பட்ட முறையில் உங்கள் ஆன்மா தொடர்பு கொள்வது என்பது சிறப்புநிலை. இதை ஞானம் பெற்றவர்கள் அடைகிறார்கள். அறிவுத் தெளிவு பெற்றவர்கள் அடைகிறார்கள்.இதை அடைந்தவர்கள் உண்டும் வாழலாம், உண்ணாமலும் வாழலாம், தூயநீர் குடித்தும் வாழலாம், சாக்கடை நீர் குடித்தும் வாழலாம். விதியை மதியால் வெல்லலாம். உலகநியதிகளை மீறி அவர்களால் வாழ முடியும். இந்நிலையே ’தெருள்’ .

இயம நியம் ஆசன பிராணாயாமம் போன்ற யோக முயற்சிகளின் வழியே தெருள் எனப்படும் தெளிவு பெறும்போது அறிவுடையோர் பட்டியலில் முதன்முதலில் இடம பிடிக்கிறோம்.

இறுதியில் பெற வேண்டியது அருள். தெளிவு பெற்றவுடன் இந்த அருள் கிடைத்து விடாது. தெளிவு பெற வேண்டிப் பாடுபட்டு தேடிய அத்தனை தத்துவங்களையும் குப்பைபோல் தூக்கி எறிந்துவிட்டு. உடல், பொருள், ஆவி என்னும் அத்தனை அம்சங்களையும் இறையாற்றலிடம் ஒப்புக்கொடுத்தால்/சரணடைந்தால் அருளைப்பெறலாம். இதைத்தான் தத்துவ நிக்கிரகம் என்பார் வள்ளல் பெருமான்.

இந்த அருள்நிலையைப் பெற்றவன் இறைவனைத்தவிர யாருக்கும் அடிபணிய வேண்டியதில்ல்லை. அதனால்தான் ’துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்று கூறும் வழக்கம் வநதது. இந்த அருளைப்பெற்ற திருநாவுக்கரசர் ’நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.. !’ என முழக்கமிட்டார்.

இந்த அருள்வழி ஒன்றுதான் இறைவனை அடைவதற்குரிய வழி. மற்ற வழிகளில் இறையருளை அடையலாம் எனக்கூறுவதும், அடைந்ததாக பிதற்றுவதும் வெறும் கூச்சல்களே.

இதைத்தான் திருவள்ளுவர்
’நல்லாற்றால் நாடி அருள் ஆள்க பல்லாற்றால்
தேறினும் அஃதே துணை’ 242

எந்த மார்க்கத்தின் வழியாக இறையாற்றலை நோக்கிப் பயணித்தாலும், இறுதியில் அருள் மார்க்கத்தில் நுழைந்துதான் இறைவனை அடையமுடியும்.

தெளிவு பெறுவோம். இறையருள் அடைவோம். எல்லாம் இன்பமயமாகட்டும்.

நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ் மே 2002

Tuesday, June 8, 2010

இருள், மருள், தெருள், அருள்

கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புவன் முட்டாள் என்பது ஒருபுறம்,

கருப்புசாமி, முண்டகக்கண்ணி, என்ற சிறு தெய்வங்கள் முன்னால் வேப்பிலை கட்டி ஆடுதல், வேல் குத்துதல், உருளுதல்,இருமுடி கட்டுதல், எருமை, ஆடு, கோழி,பன்றி போன்றவற்றை காணிக்கை தரும் பாமரக் கூத்துகள் மறுபுறம்.

நான்தான் கடவுள். நான்தான் இன்றைய தீர்க்கதரிசி, நான் தான் அவதாரம் என பிரமாண்ட கட்அவுட் விளம்பரதாரர்கள் இன்னொரு புறம்.

இயமம்,நியமம்,ஆசனம், பிராணாயாமம், தியானம் என பயிற்சி அளித்து மனித மனங்களை வளப்படுத்தும் குருமார்கள் ஒருபுறம்.

இவர்களின் உண்மை நிலை என்ன? 
நாம் பின்பற்ற வேண்டிய சரியான மார்க்கம் எது? எவற்றை எல்லாம் விடவேண்டும்? இது குறித்து தெளிவு செய்வது கவனகர் முழக்கம் இதழின் கடமை.

நாத்திக வாதம் என்பது ஒரு எதிர்மறை வாதம். எதிர்மறை அணுகுமுறை என்பது ஒன்றை அழிப்பதற்குத்தான் உதவும். பிறப்பின் பெயரால் மக்களைப் பிரித்து வைத்து இழிவு படுத்தும் வருணாசிரம தர்மம் எனும் கொடுமையை அழிப்பதற்காக நாத்திகம் என்ற ஆயுதத்தைத் தந்தை பெரியார் கையில் எடுத்துப் பயன்படுத்தி முடிந்தவரை அழித்தார். தவறான கோட்பாட்டை அழிக்கும்போது சரியான கோட்பாட்டை காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வின் காரணாமாக திருக்குறளை அடையாளம் காட்டி, திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.

நாத்திக வாதத்த்தை ஞானிகள் ‘இருள்’ என்று கூறினர்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் - 243

என்கிறது தமிழ்மறை. இருள் சேர்ந்த இன்னா உலகம்தான் இறை மறுப்பு உலகம்.

’அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெல்லாம்
இருள்நெறி என எனக்கு இயம்பிய சிவமே..’ என்பார் வள்ளல் பெருந்தகை.

அடுத்து கடவுளுக்கு கொடைவிழா என்றும் குலதெய்வ வழிபாடு என விலங்குகளை பலியிட்டு ஆடும் வெறியாட்டம், உடலை வருத்திச் செய்யும் அலகு குத்துதல் போன்ற முரட்டுத்தனமான வழிபாடுகள், எல்லாவிதமான காணிக்கைகள் என அறிவுத் தெளிவு இல்லாத மன உண்ர்வால் செய்யப்படும் மூடச் செயல்கள். மதவாதிகளை வாழவைப்பவை இந்த மூடத்தனமான சடங்குகளே. இதை ஞானிகள் ‘மருள்’ எனக் குறிப்பிடுவார்கள். மருள் என்றால் மயக்கம் எனப்பொருள்.

ஆனால் தப்பித்தவறிக்கூட இந்த மயக்கம் தெளியவிடாமல் வைத்திருப்பார்கள் மடாதிபதிகள் மற்றும் போலிச் சாமியார்கள். அரசியல் நடத்தும் அதிகார வர்க்கமும், அறிவில்லாத செல்வந்தர் கூட்டமும் இதற்கு துணையாய் இருப்பார்கள்.

பொதுவாக வறுமை அதிகம் உள்ள நாட்டில், சமுதாய அமைப்பும் அரசமைப்பும் தன்னைக் காப்பாற்றாத நிலையில் தன்னம்பிக்கையை இழந்து ‘ கடவுளாவது நம்மைக் காப்பாற்ற மாட்டாரா’ என்ற ஏக்கத்தில் கேள்விப்பட்ட வழிகளின் பின்னால், கேள்விப்பட்ட சாமியார்களின் பின்னால் பாமரர்கள் செல்லும் வழிதான் மருள்வழி


( தொடரும் )

நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ் மே 2002

Thursday, May 27, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி நான்கு

நம் மனதிற்குப் பிடிக்காத உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் உள்ளிட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து ஆத்திரப்படுதல் சநதிப்பவர்களிடமெல்லாம் அவர்களைப்பற்றி பேசிக் கோபத்தை கொட்டித்தீர்த்தல் என்பது தவிர்க்க வேண்டியதில் நான்காவது ஆகும்.

'நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
'   குறள்-108

என குறள் ஆசான் சொன்னதை நினைவில் கொள்வோம்.

அதோடு மட்டுமில்லாமல்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
’.      குறள் 152

'ஏதோ ஒரு தீயகுணம் அதிகப்பட்டதன் காரணமாக, (அல்லது நமது கர்மவினை காரணமாக) பிறர் நமக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது உயர்ந்த பண்பு.  உடனுக்குடன் அந்த துன்பத்தையும் அதைச் செய்த மனிதரையும் நம் நினைவில் இருந்து அகற்றி விடுவது அதைவிட உயர்ந்த பண்பு'.என்றும் சொல்லி இருக்கிறார்.

பிறரை எச்சரிக்கை செய்யும் பாணியில் சொல்வது என்பது சரிதான், அதுவே நம் மனதைத் தாக்கக்கூடாது என்பதே இதில் முக்கியம்.துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது என்பதே நம் மனதின் சமநிலை பாதிக்காமல் இருக்கத்தான்.

பிடிக்காத மனிதர்களை நினைக்கும் நேரம் எல்லாம் வீணான நேரம். அவர்களைப் பற்றிப் பேச செலவிடும் ஆற்றல் வீணான ஆற்றல்.  திரும்பத்திரும்ப அவர்களை நினைப்பதால் அவர்களைப் பற்றி பேசுவதால் நமக்கு ஏற்படும் மனப்பதிவு,  நமக்கு மன உளைச்சலையும் உடல் உபாதைகளையும் உண்டாக்கும் ஆதலால் இதைத் தவிர்ப்போம் மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்வோம்.


”நமை தூற்றிப் பொறாமையினால் பிறர் பழித்தால்
நம் வினையே வெளிப்படுதலாக எண்ணி
சுமை மனதில் கொள்ளாது அமைதி கொள்வோம்
சொற்சூடு அளிப்பவர்க்கு வாழ்த்து சொல்வோம்
இமை கண்ணைக் காப்பது போல் இறை எவர்க்கும்
எத்துன்பத்துக்குள்ளும் காவலாக
அமை(ந்த) நியதி எப்போதும் மறத்தல் கூடா
அச்சமில்லை அச்சமில்லை அருட்சுடர் நாம்.”

- வேதாத்திரி மகரிஷி ஞானக்களஞ்சியம் பாடல் 602

Tuesday, March 9, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று

வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருள்களை வாங்க நகரில் உள்ள டிபார்மெண்டல் ஸ்டோர்-க்கு மனைவியுடன் சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாகத் தேடித்தேடி எடுத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பில் போடும் இடம் வந்தேன்.

Thursday, October 22, 2009

காதலிப்பதே என் தொழில்

திருநல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் நிகழ்ந்த பதின்கவனக நிகழ்ச்சியின்போது, வெண்பாவுக்கு ஈற்றடி தந்த பேராசிரியர் பா.வளவன் அரசு அவர்கள் நகைச்சுவையாகவும் சிக்கலாகவும் இருக்குமாறு ஓர் ஈற்றடியைக் கொடுத்தார்.

”காதலிப்பதே என் தொழில்’ என்று வெண்பா முடிய வேண்டும். ஆனால் பாடல் அகத்துறைப்பாடலாக அதாவது ஆண்-பெண் காதல் பற்றிப் பாடும் பாடலாக இருக்கக் கூடாது” என்று நிபந்தனையுடன் பாடலைக் கேட்டார்.

அதற்கு கவனகர் திரு.இராமையாபிள்ளை சற்றும் தடுமாறாமல் புன்னகையோடு பாடிய வெண்பா இதுதான்

‘சங்கத் தமிழைத் தடையின்றிக் கற்றறிந்தே
மங்காப் புகழுடனே வாழ்ந்திங்கே-இங்கிதமாய்
ஓதல் உணர்தல் உடைய புலவர்களைக்
காதலிப்ப தேஎன் தொழில்

பாராட்டுகள் குவிந்தன. தந்தையிடம் இராம.கனகசுப்புரத்தினம் வியப்புடன் கேட்கிறார். “எப்படிச் சிக்கலாகக் கேள்வி கேட்டாலும் உடனே உரிய குறளை எடுத்து நீட்டுகிறீர்களே, எப்படி அய்யா முடிகிறது?”

”அப்பா, திருக்குறளை வெறுமனே மனப்பாடம் செய்து வைத்திருக்கவில்லை. என் உயிருடன் உணர்வுடன் கலந்து இருக்கிறது. அது மட்டுமல்ல, திருக்குறளுக்குள் இன்னும் திருவள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மீது அன்பு வைத்து, நம் உயிருடனும் உணர்வுடனும் அவரோடு கலந்து விட்டால் அவையோர் எந்த கேள்வி கேட்டாலும், அவரே பதிலைக் கூறிவிடுவார். நாம் வெறும் கருவியாய் இருந்து வேடிக்கை பார்த்தால் போதும். என்றார்.

Thursday, May 14, 2009

‘டத்து வசவரு டா !’

கோவில்பட்டி நகரின் நூலக வாரவிழா நிகழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருக்குறள் பெ.இராமையா அவர்களின் எண்கவனக சிறப்பு நிகழ்ச்சி. அதில் கொடுக்கப்பட்ட ஈற்றடி என்ன தெரியுமா?

‘டத்து வசவரு டா !’

ஈற்றடியின் பொருள் புரியாமல் அரங்கம் முழுவதும் குழப்பத்தில் அமைதியாய் இருந்தது. ஆனால் திருக்குறள்.இராமையா அவர்கள் தெளிவான புன்னகையுடன். ”ஈற்றடி கொடுத்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவினார்.

”பெரும்புலவர் அங்கப்ப பிள்ளை !” என கூட்டத்திலிருந்து பதில் வந்தது.

”அதானே பார்த்தேன். ஈற்றடியைப் பார்த்தால் சாதரணமாகத் தெரியவில்லையே.. இந்தக் கோவில்பட்டி மண்ணில் இப்படி ஈற்றடி கொடுப்பதற்கும் ஆள் இருக்கிறதா என்று சி்ந்தித்தேன்..! என்றார்.

உடனே அங்கப்பபிள்ளை, “பாடுவதற்குச் சிரமமாய் இருந்தால் வேறு ஈற்றடி தருகிறேன்” என்கிறார்.

திருக்குறளார் சிரித்துக்கொண்டே”ஈற்றடிக்கு மாற்றடி தேவையில்லை. பாடல் சைவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா அல்லது வைணவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா? என்பதை மட்டும் தெரிவித்தால் போதும் !” என்றார்

இப்போது அங்கப்பபிள்ளை ஆடிப்போய்விட்டார். ஏனெனில் அவர்,”சைவக் கடவுளுக்கு மட்டுமே இந்த ஈற்றடியை வைத்துப் பாடமுடியும்’என்ற முடிவில் இருந்தார். தன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,”வைணவக் கடவுளுக்கு எப்படி...இந்த ஈற்றடியை”....என்று இழுத்தார்.

உடனே ”நான் இரண்டு கடவுளுக்கும் பொதுவாகப் பாடிவிடுகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு

”ஆக்கம் அறிவுடைமை

ஆன்ற பொருளுடைமை

ஊக்கம் பெருமை

ஒழுக்கமொடு வீக்குபுகழ்

இத்தரையில் என்றும்

இனிதடைய வேகுக்கு/கரு

டத்து வசவரு டா !”

இந்த வெண்பாவைப் பாடினார்.

”ஆக்கம்,அறிவு,செல்வம்,ஊக்கம்,பெருமை,ஒழுக்கம்,புகழ் என்னும் இத்தனை நன்மைகளையும் எனக்கு அருள வேண்டும் !” என்று கடவுளிடம் வேண்டும் விதத்தில் இந்த வெண்பா அமைந்துள்ளது.

சரி, எந்தக் கடவுளிடம் வேண்டுவது?

சைவ நெறியைப் பின்பற்றுவோர் முருகனிடம் வேண்டுவதாக இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம் . எப்படி?

“குக்குடத் துவச அருள் தா !”

’குக்குடம்’ என்றால் சேவல், ‘துவசம்’ என்றால் கொடி. சேவற்கொடியோனாகிய முருகனே அருள் தா !’ என்பதாக பொருள் வரும்.


அதே சமயம் ’குக்கு’ வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘கரு’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டால் வைணவக் கடவுளான திருமாலுக்கு உரிய பாடலாக மாறிவிடும். ’கருடன்’ என்றால் பருந்து. துவசம் என்றால் வாகனம் ‘கருடனை வாகனமாய் உடைய திருமாலே அருள் தா ! ’ என்பதாகவும் பொருள்தரும் என விளக்கினார்.

இந்த விளக்கத்தைக் கேட்டு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

நன்றி 2002 ஏப்ரல் கவனகர் முழக்கம்

Saturday, May 9, 2009

ஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - நிகழ்ச்சி

பசிப் பிணியற்ற தமிழ்நாடு, நோயற்ற தமிழ்நாடு,

வளம் நிறைந்த தமிழ்நாடு, ஞானம் செறிந்த தமிழ்நாடு.

என்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.

ஞானப்பாதையை நம்க்கு அடையாளம் காட்டும் திருவிழா. கணத்துக்கு கணம் மாறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்தும் விழா. வாய்ப்பிருந்தால் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.


கலந்து கொண்டு பயன் பெறுங்கள். நிச்சயம் வாழ்க்கை குறித்து ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் வரும்.

Friday, April 3, 2009

ஊட்டி போலாம் வர்றீங்களா?

நண்பர்களின் அனுபவங்கள், கருத்துகள், எண்ணங்களை பதிவுலகம் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம்.

அந்த வகையில் வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றமடைய கற்றது கை மண்ணளவு என்கிற உணர்வில் எங்கு, என்ன கிடைக்கும் அது சரியானதா? என்ற தேடுதலோடு இருக்கிறோம்.

அதில் ஒன்றுதான் கவனகர் திருக்குறள் இராம கனகசுப்புரத்தினம் அவர்களின் குன்னூர் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை.

இவருடைய நிகழ்ச்சிகளில் ஏற்கனவே சில முறை பங்கெடுத்துள்ளேன். இதில் நான் பங்கேற்பாளன் மட்டுமே.

உடல்நலம், மனநலம், பொருள்வளம் இவற்றில் நாம் முன்னேற வேண்டிய வழிகளும், அதில் உள்ள தடைகளை நீக்குவது பற்றியும் பயிற்சி (சிறப்பாக) இருக்கும்.

அழைப்பை இணைத்துள்ளேன். வாய்ப்பு உள்ளவர்கள் வரலாம்.

இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

முதல் பக்கம் :



இரண்டாவது பக்கம் :