"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label கவனகர் முழக்கம். Show all posts
Showing posts with label கவனகர் முழக்கம். Show all posts

Friday, May 27, 2011

படித்ததில் பிடித்தது 27/05/2011

செட்டிநாட்டு மண்ணில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பாடல் ஒன்று படித்ததில் பிடித்ததாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.....


நல் ஆவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
நறுமலரின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பழுக்கின்ற கனிமுழுதும் மரத்திற்கில்லை
பண்நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்கு(உ)ழைக்கக் காணுகிறேன்
என்வாழ்வும் பிறர்க்கு(உ)ழைக்க வேண்டும் வேண்டும்!
                                                        --வ.சுப.மாணிக்கனார்






நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ். மே 2011

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

Thursday, June 10, 2010

இருள், மருள், தெருள், அருள்- தொடர்ச்சி

அடுத்து மக்கள் மனத்தெளிவு பெற வேண்டி, ஞானமடைந்த மகான்கள் அளிக்கும் ஆசனம், யோகம், ஞானப்பயிற்சி வழிகள். வயிற்றுப்பசிக்கே வழி காணமுடியாத வறுமையாளருக்கு இந்த வழி பெரிதாக உதவி செய்யாது. பசியை வென்றோர்கே இது பொருந்தும். அதனால்தான் வள்ளலார் போன்ற மகான்கள் முதலில் வயிற்றுப் பசிக்கு உணவிடும் அன்னதானத்தை முதன்மையாகச் செய்தனர்.

சோனியாகாந்தியை உங்களுக்குத் தெரியும் என்பதில் எந்த சிறப்பும் இல்லை. எந்தப் பலனும் இல்லை. ஆனால் சோனியா காந்திக்கு உங்களைத் தெரியும் என்பது சிறப்புநிலை. எல்லோருக்கும் கிடைக்கும் பொதுப்பலன்களை விட உங்களுக்கென்று தனிப்பட்ட முறையில் சிறப்புப் பலன்களை அடையலாம். நியதிக்கு, சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட சிறப்புப் பலன்களையும் அடையலாம் :))

அதேபோல் இறைஆற்றல் இவ்வுலகில் எல்லா உயிர்க்கும் பொதுவான பலன்களைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்பவனுக்கும் அதேதான், இல்லை என்பவருக்கும் அதேதான் :))

உடலை உயிர் இயக்குகிறது. பசித்தால் உண்ணுகிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கிறோம். காற்றை சுவாசிக்கிறோம். இவையெல்லாம் இறையாற்றலால் கிடைக்கும் பொதுப்பலன்கள். ஆனால் இறையாற்றலோடு தனிப்பட்ட முறையில் உங்கள் ஆன்மா தொடர்பு கொள்வது என்பது சிறப்புநிலை. இதை ஞானம் பெற்றவர்கள் அடைகிறார்கள். அறிவுத் தெளிவு பெற்றவர்கள் அடைகிறார்கள்.இதை அடைந்தவர்கள் உண்டும் வாழலாம், உண்ணாமலும் வாழலாம், தூயநீர் குடித்தும் வாழலாம், சாக்கடை நீர் குடித்தும் வாழலாம். விதியை மதியால் வெல்லலாம். உலகநியதிகளை மீறி அவர்களால் வாழ முடியும். இந்நிலையே ’தெருள்’ .

இயம நியம் ஆசன பிராணாயாமம் போன்ற யோக முயற்சிகளின் வழியே தெருள் எனப்படும் தெளிவு பெறும்போது அறிவுடையோர் பட்டியலில் முதன்முதலில் இடம பிடிக்கிறோம்.

இறுதியில் பெற வேண்டியது அருள். தெளிவு பெற்றவுடன் இந்த அருள் கிடைத்து விடாது. தெளிவு பெற வேண்டிப் பாடுபட்டு தேடிய அத்தனை தத்துவங்களையும் குப்பைபோல் தூக்கி எறிந்துவிட்டு. உடல், பொருள், ஆவி என்னும் அத்தனை அம்சங்களையும் இறையாற்றலிடம் ஒப்புக்கொடுத்தால்/சரணடைந்தால் அருளைப்பெறலாம். இதைத்தான் தத்துவ நிக்கிரகம் என்பார் வள்ளல் பெருமான்.

இந்த அருள்நிலையைப் பெற்றவன் இறைவனைத்தவிர யாருக்கும் அடிபணிய வேண்டியதில்ல்லை. அதனால்தான் ’துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்று கூறும் வழக்கம் வநதது. இந்த அருளைப்பெற்ற திருநாவுக்கரசர் ’நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.. !’ என முழக்கமிட்டார்.

இந்த அருள்வழி ஒன்றுதான் இறைவனை அடைவதற்குரிய வழி. மற்ற வழிகளில் இறையருளை அடையலாம் எனக்கூறுவதும், அடைந்ததாக பிதற்றுவதும் வெறும் கூச்சல்களே.

இதைத்தான் திருவள்ளுவர்
’நல்லாற்றால் நாடி அருள் ஆள்க பல்லாற்றால்
தேறினும் அஃதே துணை’ 242

எந்த மார்க்கத்தின் வழியாக இறையாற்றலை நோக்கிப் பயணித்தாலும், இறுதியில் அருள் மார்க்கத்தில் நுழைந்துதான் இறைவனை அடையமுடியும்.

தெளிவு பெறுவோம். இறையருள் அடைவோம். எல்லாம் இன்பமயமாகட்டும்.

நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ் மே 2002

Tuesday, June 8, 2010

இருள், மருள், தெருள், அருள்

கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புவன் முட்டாள் என்பது ஒருபுறம்,

கருப்புசாமி, முண்டகக்கண்ணி, என்ற சிறு தெய்வங்கள் முன்னால் வேப்பிலை கட்டி ஆடுதல், வேல் குத்துதல், உருளுதல்,இருமுடி கட்டுதல், எருமை, ஆடு, கோழி,பன்றி போன்றவற்றை காணிக்கை தரும் பாமரக் கூத்துகள் மறுபுறம்.

நான்தான் கடவுள். நான்தான் இன்றைய தீர்க்கதரிசி, நான் தான் அவதாரம் என பிரமாண்ட கட்அவுட் விளம்பரதாரர்கள் இன்னொரு புறம்.

இயமம்,நியமம்,ஆசனம், பிராணாயாமம், தியானம் என பயிற்சி அளித்து மனித மனங்களை வளப்படுத்தும் குருமார்கள் ஒருபுறம்.

இவர்களின் உண்மை நிலை என்ன? 
நாம் பின்பற்ற வேண்டிய சரியான மார்க்கம் எது? எவற்றை எல்லாம் விடவேண்டும்? இது குறித்து தெளிவு செய்வது கவனகர் முழக்கம் இதழின் கடமை.

நாத்திக வாதம் என்பது ஒரு எதிர்மறை வாதம். எதிர்மறை அணுகுமுறை என்பது ஒன்றை அழிப்பதற்குத்தான் உதவும். பிறப்பின் பெயரால் மக்களைப் பிரித்து வைத்து இழிவு படுத்தும் வருணாசிரம தர்மம் எனும் கொடுமையை அழிப்பதற்காக நாத்திகம் என்ற ஆயுதத்தைத் தந்தை பெரியார் கையில் எடுத்துப் பயன்படுத்தி முடிந்தவரை அழித்தார். தவறான கோட்பாட்டை அழிக்கும்போது சரியான கோட்பாட்டை காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வின் காரணாமாக திருக்குறளை அடையாளம் காட்டி, திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.

நாத்திக வாதத்த்தை ஞானிகள் ‘இருள்’ என்று கூறினர்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் - 243

என்கிறது தமிழ்மறை. இருள் சேர்ந்த இன்னா உலகம்தான் இறை மறுப்பு உலகம்.

’அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெல்லாம்
இருள்நெறி என எனக்கு இயம்பிய சிவமே..’ என்பார் வள்ளல் பெருந்தகை.

அடுத்து கடவுளுக்கு கொடைவிழா என்றும் குலதெய்வ வழிபாடு என விலங்குகளை பலியிட்டு ஆடும் வெறியாட்டம், உடலை வருத்திச் செய்யும் அலகு குத்துதல் போன்ற முரட்டுத்தனமான வழிபாடுகள், எல்லாவிதமான காணிக்கைகள் என அறிவுத் தெளிவு இல்லாத மன உண்ர்வால் செய்யப்படும் மூடச் செயல்கள். மதவாதிகளை வாழவைப்பவை இந்த மூடத்தனமான சடங்குகளே. இதை ஞானிகள் ‘மருள்’ எனக் குறிப்பிடுவார்கள். மருள் என்றால் மயக்கம் எனப்பொருள்.

ஆனால் தப்பித்தவறிக்கூட இந்த மயக்கம் தெளியவிடாமல் வைத்திருப்பார்கள் மடாதிபதிகள் மற்றும் போலிச் சாமியார்கள். அரசியல் நடத்தும் அதிகார வர்க்கமும், அறிவில்லாத செல்வந்தர் கூட்டமும் இதற்கு துணையாய் இருப்பார்கள்.

பொதுவாக வறுமை அதிகம் உள்ள நாட்டில், சமுதாய அமைப்பும் அரசமைப்பும் தன்னைக் காப்பாற்றாத நிலையில் தன்னம்பிக்கையை இழந்து ‘ கடவுளாவது நம்மைக் காப்பாற்ற மாட்டாரா’ என்ற ஏக்கத்தில் கேள்விப்பட்ட வழிகளின் பின்னால், கேள்விப்பட்ட சாமியார்களின் பின்னால் பாமரர்கள் செல்லும் வழிதான் மருள்வழி


( தொடரும் )

நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ் மே 2002

Tuesday, June 1, 2010

பாமழை - வேலூரும் பெரியாரும்

வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் திருக்குறள் இராமையா அவர்களின் அவதான நிகழ்வு

’வேலூர்’ என்று தொடங்கவேண்டும்.; ’பாலாறு’ என முடியவேண்டும்: இடையில் ’தந்தை பெரியார்’ பெயர் வரவேண்டும். வெண்பா பாடுங்கள்” என கேட்டார் புலவ்ர் வே. நாரயணன்.

Tuesday, April 27, 2010

விதியை வெல்ல வேண்டுமா ???

விதியும் மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  அவற்றைப் பிரிக்க முடியாது. மேலோட்டமாய்ப் பார்த்தால் எதிர் எதிர் அம்சங்கள் போல் தெரியும். ஆனால் உண்மையில் அப்படி அல்ல.

Sunday, October 4, 2009

முருகக் கடவுள் தலைமைச் சித்தர்


ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.

தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.

வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்;இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை.

முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

Friday, July 31, 2009

சமயத்தில் ஒத்துழையா - சிலேடை

கோவை வானொலிக்காக நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்.பெ.இராமையா அவர்கள் பங்கேற்றபோது, அவரிடம் ஒரு புலவர், ”மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் சிலேடையாக ஒரு வெண்பாவைப் பாடவேண்டும்” என்றார்.

”ப்ளிச்...” என்று ஆரம்பித்த சிலேடைப் பாடலின் முதல் வரி, அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.


சமயத்தில் ஒத்துழையா
ஷாக்அடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை
ஊட்டும்-நமை உயர்த்தும்
தன்சாரம் குன்றாத
தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சாரமே!


சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.

ஷாக் அடிக்கும் தொட்டால்...’ என்பது அடுத்த வரி, தகராறு செய்யும் சமயத்தில் இரண்டின் மீதும் கையை வைக்காதே. பட்...டென்று அடித்து விடும்.

இமைசிமிட்டும்...’ அதிக அழுத்தம் (ஹீவோல்ட்), குறை அழுத்தம் காரணமாக மின்சார விளக்குகள் ‘ப்ளிச்..’ என எரிவதும், மங்கலாக ஒளிர்வதும் இயற்கை.
அதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பொறுத்து சுறுசுறுப்பாய் இயங்குவதும், மந்தமாய் இருப்பதும் சம்சாரத்தின் இயற்கை.
அதாவது பிறந்த வீட்டுச் சொந்தங்களாகிய அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்று வந்தால் சுறுசுறுப்பாய்ப் ‘ப்ளிச்’சென்று மின்னும். புகுந்த வீட்டுச் சொந்தங்களாகிய மாமியார்,நாத்தனார் என்று வந்துவிட்டால் மந்தமாகி விடும்’.

இன்பமதை ஊட்டும்..’ வீட்டில் மின்விசிறி சுழல, மின் அடுப்பு எரிய,குளிர்பெட்டி குளிர, விளக்குகள் ஒளிர, மின்சாதனப் பொருட்கள் இயங்க என எல்லாவற்றிற்கும் மின்சார ஓட்டம் சீராக இருந்தால் நமக்கு இன்பமான மனநிலை தரும். அதேபோல் ஒரு குடும்பத்தின் அத்தனை இன்பங்களுக்கும் காரணமாய் இருந்து நமக்கு இன்பத்தை தருவது சம்சாரமே.

நமை உயர்த்தும்...’ ஒரு வீட்டின் உயர்வுக்கும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் மின்சக்தி ஓர் அடிப்படைத் தேவை. அதேபோல் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு சம்சாரம் ஓர் அடிப்படைத் தேவை

தன்சாரம் குன்றாத தன்மையால்’ நேரம் கருதியோ, ஆளைக் கருதியோ மின்சாரம் தன் ஆற்ற்லைக் குறைத்துக் கொள்வது கிடையாது.240 வோல்ட் மின்சக்தி என்றால் யார், எப்போது தொட்டாலும் ஒரே மாதிரிதான் மின் அதிர்ச்சி இருக்கும். அதேபோல் இல்லத்தில் எப்போதும் தன் மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்வது சம்சாரத்தின் இயல்பாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மின்சாரமும் சம்சாரமும் ஒரே இயல்புடையவை
என பாடலை முடித்தார்.பதின்கவனகர் திரு.இராமையா பிள்ளை.

எப்படி..?

சுவையாக உள்ளதா சிலேடை..?!!!!!!

நன்றி: கவனகர் முழக்கம் தி.ஆ.2033 வைகாசி வெளியீடு

Tuesday, April 28, 2009

பெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு !

”கடவுள் இல்லை, வேதங்களை கொளுத்து, விநாயகர் சிலைகளை உடை’... ”என்பது போன்ற முழக்கங்களை ஒருபுறம் எழுப்பினாலும் மறுபுறம், ஏதேனும் ஓர் உயர்ந்த ஒழுக்க நெறியையும் மக்களுக்குக் காட்ட வேண்டும்’ என்ற எண்ணம் தந்தை பெரியார் உள்ளத்தில் இருந்தது.

அதனால் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். திராவிடர் கழக மாநாடு நடத்தும்போதெல்லாம் அதற்கு முதல்நாள் திருக்குறள் மாநாடு என ஒன்றை நடத்தித் திருக்குறளின் சிறப்புகளை அறிஞர்கள் வாயிலாகக் கூறச் சொல்லிக் கேட்க வைத்தார்.

வள்ளல் பெருமானின் சமரச சன்மார்க்கக் கொள்கை பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு முறை வடலூர் சென்று சத்திய ஞானசபையை பார்க்கவேண்டும். அவரது கொள்கைகள் குறித்து விளக்கம் கேட்கவேண்டும் என விருப்பம் கொண்டார்.

அதன்படி ஒருமுறை தம் தொண்டர்கள் புடைசூழ வடலூருக்கு வந்துவிட்டார். சத்திய தருமச்சாலையின் அணையா அடுப்பையும், அங்கு நிகழும் அன்னதானப் பணிகளையும் பார்த்து முடித்தபின் சத்தியஞானசபையைப் பார்க்கவேண்டி அந்த வாசலுக்கு வந்தார்.

உடன் வந்தவர்கள் எல்லாம் ’திமுதிமு’வென்று ஞானசபை வளாகத்திற்குள் புகுந்துவிட்டனர். ஆனால் தந்தை பெரியாரோ பொறுமையாக ஞானசபையின் வெளியே உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ச்சி செய்தபடி வாசலுக்கு முன் வந்தார்.

வந்தவர் ஞானசபையின் வாசலில் உள்ள கல்வெட்டில் இருந்த வாசகத்தைத் தம் மூக்கு கண்ணாடியை தூக்கிப் பிடித்தபடி படித்தார். அதில்,

’கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே செல்லவும்

என்ற வாசகம் வள்ளல் பெருமானால் எழுதப் பெற்றிருந்தது. உடனே வழிகாட்டியாளராய் அருகில் நின்றிருந்த ஊரன் அடிகளாரிடம்,”இது என்ன?” என்று கேட்டார் பெரியார்.

"கொலை செய்யாதவர்கள், புலால் உண்ணாதவர்கள் மாத்திரம்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று அய்யாவே எழுதச் சொன்ன வாசகம்” என்று ஊரன் அடிகள் பதில் சொன்னார்

”அப்படியா? அப்ப உள்ளே செல்லும் அருகதை எனக்கில்லை. ஏனென்றால் நான் புலால் உண்ணுபவன்” என்று கூறியபடி அய்யா உள்ளே நுழையாமல் திரும்பினார்.

உடனே ஊரன் அடிகள் ”அதனால் ஒன்றும் தவறில்லை அய்யா. எழுதிப் போட்டிருக்கிறதே தவிர யாரும் அதைப் பின்பற்றுவதில்லை. பேரறிஞர் அண்ணா,கலைஞர் என எல்லோருமே வந்திருக்கிறார்கள். உள்ளே போய்ப் பார்த்திருக்கிறார்கள்.” என்று கூறினாராம்.

உடனே தந்தை பெரியார் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மையான ஒழுக்கம். அவர் வாழும்போது அவர் கட்டளையை அவரது ஒப்புதலுடன் மீறினால் கூடத் தவறில்லை. அவர் இல்லாதபோது அவரது கட்டளையை மீறுவது அறிவு நாணயம் இல்லை. அத்தகைய தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறியபடி சத்திய ஞானசபையை பார்க்கமலேயே புறப்பட்டு விட்டாராம்.

இந்த நிகழ்ச்சியை கோவை ஆர்.எஸ்.புரம் மரக்கடை வசந்தம் அய்யா
கூறியதாக கவனகர் முழக்கம் ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பெரியார் ஒரு உதாரணம். அவர் வழி வருபவர் எப்படி இருக்கக்கூடாது, அல்லது தலைவர் கடைபிடிப்பது பின்னர் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதற்க்கு இந்த விஷயத்தில் மட்டும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும் பிற ஆன்மீக அன்பர்கள் உதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்க்கு இந்நிகழ்ச்சி ஓர் நல்ல உதாரணம்.

நன்றி: கவனகர்முழக்கம் ஏப்ரல் மாத இதழ்