நோயால் செத்த கோழிகளை விற்கும் கும்பல் : உடுமலை அருகே சிக்கியது
உடுமலை: பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் இறந்த கோழிகளை சேகரித்து அவற்றை ஓட்டல்களுக்கு விற்கும் கும்பலைச் சேர்ந்தவரை உடுமலை பகுதியில் விவசாயிகள் வளைத்து பிடித்தனர்
.பண்ணைகளில் நோய்த் தாக்குதல் மற்றும் இதர காரணங்களால் இறக்கும் கோழிகளை ஆள் நடமாட் டம் இல்லாத பகுதிகளில் வீசுகின்றனர். அவற்றை சேகரித்து, ஓட் டல்களில் குறைந்த விலைக்கு விற்பதை ஒரு கும்பல் தொழிலாக செய்கிறது.
பெதப்பம்பட்டி அருகிலுள்ள மாலக்கோவில் பிரிவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நேற்று அதிகாலை மர்மநபர், இறந்த கோழிகளை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விவசாயிகள் சென்று விசாரித்துள்ளனர். இறந்து பல நாட்களான 200க்கு மேற்பட்ட கோழிகள் சேகரித்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபரை விவசாயிகள் நன்கு "கவனித்தனர்'. இதில், காயமடைந்த நபர், தனது ஊர் பல்லடம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் என்றும், பெயர் பாண்டியன் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் விவசாயிகளிடம் கூறியதாவது: உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு இறந்த கோழிகளை சேகரித்து குறைந்த விலைக்கு விற்கிறோம். சேகரிக்கும் இறந்த கோழிகளை தூய்மைப்படுத்தி "பேக்' செய்து ஓட்டல்களுக்கு விற்பனை செய்வோம்.வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறந்த கோழி இறைச்சி கிலோ 20 ரூபாய்க்கு ஓட்டல்களுக்கு "டோர் டெலிவரி' செய்ததால் எங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.இவ்வாறு, பாண்டியன் தெரிவித்துள்ளார். பாண்டியன் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குடிமங்கலம் போலீசுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
பலத்த டிமாண்ட்: பாண்டியன் சிக்கியவுடன் விவசாயிகள் அவரிடமிருந்த மொபைல்போனை கைப்பற்றினர். அரை மணி நேரத்திற்குள் திருப்பூர், பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளை சேர்ந்த ஓட்டல்களிலிருந்து, "சிக்கன் என்ன ஆயிற்று?' என தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகளையும், இறந்த கோழி இறைச்சிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட ஓட்டல் பெயர்களையும் விவசாயிகள் குறித்துக் கொண்டனர்.
நன்றி; தினமலர் 12.10.2009