"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label செயல் விளைவு. Show all posts
Showing posts with label செயல் விளைவு. Show all posts

Tuesday, March 19, 2019

இனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ


அலுவலக வேலையாக கோவை கே.ஜி மருத்துவமனை அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் காலை 11 மணி அளவில் நின்று கொண்டிருந்தேன். என் வேலை முடிந்து கிளம்பும் நேரம் அந்தக் கடையின்  இடதுபுற சுவரைத் தடவியபடி முழுமையான பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட இடங்களில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததால் ”பார்த்து வாங்க” என்று கைபிடித்து உள்ளே அழைத்து, கடைக்காரரிடம் இவரின் தேவையினை உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டுகோள் வைத்தேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் அவரது அலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் அந்தக்கடையில் செய்திருக்கின்றார். இன்றுவரை அது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஏதும் வரவில்லை.  மகனிடம் கொடுத்து போனில் பரிசோதித்தேன் என்றார். அவனும் பரிசோதித்து, செய்தி ஏதும் இல்லை அந்தக்கடையில் போய் கேட்கச் சொன்னதாகச் சொன்னர். அவர்களும் 10 நிமிடம் வாடிக்கையாளர் சேவை மையத்தோடு தொடர்பு கொண்டு ரீசார்ஜ் ஆகிவிட்டது என்றார்கள்..என் வேலை முடிந்ததால் நான் கிளம்ப ஆயத்தம் ஆனேன். இவருக்கோ குழப்பமான சூழல் நிலவ என்னிடம் ஒரு நிமிடம் இருங்க பிளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரி என்ற முடிவுடன் நான் ஏனுங்க, அந்த எண்ணில் இருந்து யாருக்காவது கூப்பிட்டுப் பார்த்தீர்களா என்று கேட்க இல்லை என்றார்.
சரி போனைக் கொடுங்க என்று வாங்கிப் பார்த்தபோது மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு போன் .. என்னுடைய எண்ணிற்கே அழைத்துப் பார்த்தேன்..போன் கொஞ்சநேரம் முயற்சி செய்து, பின்னர் ஏரோப்ளேன் மோட்-ல இருப்பதாகவும் அதைச் சரிசெய்யச் சொல்லி குறிப்பு காட்டியது. புரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக அதே மோட்-ல இருப்பதால் செய்தி ஏதும் வரவில்லை. நான் போனை இயல்பு நிலைக்கு சரி செய்தவுடன் ரீசார்ஜ் செய்தியும் வந்து சேர்ந்துவிட்டது. அவரது மகன் போனை கையாண்ட விதத்தில் இருந்த அலட்சியம் புரிந்தது. கடைக்காரர்களோ பார்வை குறைபாடு உடையவர் என்பதால் போனை வாங்கிப் பரிசோதித்திருக்கலாம். அங்கும் கவனக்குறைவுதான். 
.
இதற்கிடையில் ஆதார் அட்டை நகல் எடுக்க, தன்னுடைய கைப்பையை திறந்து தடவித் தடவி பல்வேறு பைகளைத் திறந்து தடவி சரியான பையினுள் இருந்து அதை வெளியே எடுத்தார். எனக்கு அடுத்த வேலைக்கான நேரம் அருகிக் கொண்டே வர நான் கிளம்பத் தயார் ஆனேன். என்னுடைய செய்கைக்கு நன்றி சொல்லிய அவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அழைத்துப் போக வேண்டுகோள் விடுத்தார். தர்மசங்கடமான சூழல். வேலையோ அவசரம். இங்கே ஒரு உயிர் நம்மை நம்பி உதவிக்கரம் நீட்டுகிறது.  சரி நடப்பது நடக்கட்டும்.என கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றேன்.

எதிரே வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கையாக செல்லுமாறு என்னை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார். எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஒன்று காலக்கெடு முதிர்ந்து விட்டதாகவும். அதை எடுக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டே நடந்துவந்தார். அவரது இந்த உடல்நிலையில் தனியாளாக வங்கி, ரீசார்ஜ் போன்ற தேவையான வேலைகளை செய்யும் அவரது மனம் தளரா, ஊக்கமுடைய மனதினை புரிந்து கொண்டேன். இடையில் அவர் எனக்கு டீ வாங்கித் தர விருப்பப்பட்டார்.  நான் மறுக்க , பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் கொடுத்து டீ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவரின் அன்பை/நிலையை புரிந்து கொள்ள முடிந்ததால் புன்சிரிப்புடன் உங்க அண்ணன் மாதிரி நான். கம்முனு வாங்க என்று சொல்லி கூட்டிச் சென்றேன். வாழ்க்கை இப்படித்தான் உதவிகளைச் செய்யவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருத்தருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒரு வழியாக மேல்தளத்தில் உள்ள வங்கிக் கிளையை படியேறி, அடைந்து உள்ளே நுழைந்தேன். அங்கே may i help you என்ற வாசகத்துடன் வரவேற்பு மேசை காத்திருக்க., ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஏர்ஹோஸ்டல் போன்ற அழகான யுவதி ஒருவர் வரவேற்றார். அவரிடம் தெளிவாக இவருக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. நான் இவருடன் வந்தவன் அல்ல.. ஆகவே நீங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் புன்சிரிப்புடன் sure sir  என்று பதிலளிக்க இவரை யுவதியிடம் ஒப்படைத்துவிட்டு.. அண்ணா இந்தப் பொண்ணு கையப் பிடிச்சிக்குங்க.. தேவையான உதவிகளைச் செய்வார் என்று சொல்லிவிட்டு உற்சாகமாய் என் வேலையைத் தொடர வேகமெடுத்தேன்.


Thursday, February 4, 2010

எதிர்காலம் குறித்த அச்சம் (மனதை....பகுதி இரண்டு)

எதிர்காலம் குறித்த அச்சம்

எதிர்காலத்தை எண்ணி எந்த நேரமும் அச்சம் கொள்வது.. அவநம்பிக்கை கொள்வது, மனதை விட்டு அகற்ற வேண்டியது அவசியம்.

எதிர்காலத்தில் நாம் எப்படி வரவேண்டும், வாழவேண்டும் என திட்டமிடுதல், அதன்படி வாழ்தல் என்பது வேறு. ஆனால் எதிர்காலத்தில் எப்படி ஆவோம், அல்லது வாழ்வோமோ என்ற அச்சம் அறவே கூடாது.

இந்த அச்சம் ஏன் வருகிறது?. போதுமான விளக்கமும், விழிப்பும் அறிவுக்கு கிடைக்காததே..

விதியின் பிடியில், மாயையின் பிடியில், மனதின் பிடியில் சிக்கிக்கொண்டு மனம் போன போக்கில் வாழ்கிறோம். எந்தவித திட்டமிடுதலும் இல்லை. ஆனால் வருமானம் வாடகை, வட்டி, தரகு என்றோ அல்லது தொழில் நல்ல முறையில் நடப்பதாலோ வருமானம் வந்து குவியும்.

அப்போது இந்த பணம் ஏன் நமக்கு வருகிறது.? எந்த வழியில் வருகிறது.? இதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லை என்றாலே நாம் விதியின் பிடியில் இருக்கிறோம் என்று பொருள்.

"கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் இவை
எனும் தெளிவும் இலார் " என்பார் பாரதி.. வாழ்வில் துன்பம், கஷ்டம் வரும்போது இது ஏன் வந்தது என சிந்திக்க தெரியாததால்தான் அப்படியே வாழ்கிறோம்.

இதனால் எதிர்காலம் குறித்த அச்சம் நிச்சயம் வரும்.

இதற்கு எந்த கடவுளும் காரணமல்ல..ஜாதகமும் காரணம் அல்ல.

பெரும்பாலும் நாமும், பெற்றோர் வழியிலான வினைப்பதிவு தொடருமே காரணம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் வினைப்பதிவுடன் கூடிய நமது வாழ்க்கை, ஒரு சேமிப்பு வங்கி கணக்குக்கு அப்படியே ஒப்பிடலாம்.

பணம் போட்டால் பதிவு, எடுத்தால் பதிவு, போட்ட பணத்திற்கு வட்டி வந்தால் வரவுப்பதிவு, குறைந்த பட்ச இருப்பு இல்லையென்றால் அபராதக் கட்டணம் பற்று பதிவு.

கற்பனை செய்யுங்கள். சில இலட்சங்கள் இருப்பிலிருந்தால் பணம் எடுத்துக் கொண்டே இருந்தால் கொஞ்சநாள் கழித்து இருப்பு குறைந்து அபராதம் வரும், மாறக குறைந்த பட்ச இருப்புதான் என்றால் ஒரு முறை பணம் எடுத்த உடனே அபராதப்பதிவுதான். இதுதான் வினைப் பதிவு, செயல்விளைவுத்தத்துவம் எல்லாம் :))

ஆக வங்கிக் கணக்கில் என்ன பதிவு செய்ய வேண்டும் என்பது நம் கையில் உள்ளது, நமக்கு வேண்டியது வட்டி வரவா அல்லது அபராதமா என நாம் தீர்மானிப்போம். இதுதான் முயற்சி..

எதிர்காலம்(வினைப்பதிவுகளின் இருப்பு) இயற்கையின் கையில் உள்ளது. அது எந்த அதிசயத்தையும் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிகழத்தலாம். எந்த அற்புதத்தையும் நம் வாழ்வில் உருவாக்கும்.

அதேசமயம் எதிர்காலம் என்பது நமது அறிவு, திறமை, நம்பிக்கை, முயற்சி, இயற்கையின் ஒத்துழைப்பு போன்ற பலவித அம்சங்களால் தீர்மானிக்கப்படும். அற்புதமாக மாறும் என்பதையும் புரிந்து கொள்வோம்.

எதிர்காலம் குறித்து அச்சம் கொள்வதும், அவநம்பிக்கை கொள்வதும் மனதுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாகும்.

நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எண்ண்ங்களை எண்ணுவோம், செயல்களைச் செய்வோம், நல்ல விளைவுகளை அனுபவிப்போம். இதற்கு பெயர் நம்பிக்கை அல்ல. என்னைப் பொறுத்த வரை இதுவே வாழ்க்கை கணிதம், இதுவே வாழ்க்கை அறிவியல்.

வாழும் நுட்பத்தை அறிந்து கொண்டு உங்கள் விருப்பம்போல் அமைத்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும், மனதின்ஆற்றல் பெருகும். உற்சாகமாக இருக்கலாம்.