"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label ஞானதேவபாரதி சுவாமிகள். Show all posts
Showing posts with label ஞானதேவபாரதி சுவாமிகள். Show all posts

Friday, April 24, 2009

கடவுளும்....வியாபார உறவும்...

“கடவுளை இவர்கள் கண்டு கொள்வார்கள். ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை!”

என்னும் இரண்டாம் நிலை உறவே வியாபார உறவு.

இது ஆன்மீக வியாபாரிகளிக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவு.

மடாதிபதிகள், மதபோதகர்கள், போலிச்சாமியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், மாந்திரீகர்கள் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுள் பெயரால் வருமானம் கிடைக்கும் ஒரே காரணத்திற்காகக் கடவுளை விரும்புபவர்கள். சுவரொட்டிகள், ’கட் அவுட்’கள், பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் எனப் பலவழிகளில் மக்களைக் கவர்வார்கள்.

சிலர் நான் தான் கடவுள் அவதாரம் என்பார்கள். சிலர் நான் தான் கடவுள் என்பார்கள். இவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்கள். ஆனால் இவர்கள் சிறுதெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் , துர்தேவதைகளுக்கும் பேய், குட்டிச் சைத்தான் போன்றவற்றிற்கு
மிகவும் விருப்பமானவர்கள்.

அதனால்தான் இவர்களை நம்பிச் செல்பவர்களுக்குச் சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும் சமாதியும் கிடைக்கவே கிடைக்காது.

கடவுள் என்பது ஒரு நாட்டின் பிரதமர் போல. (இந்தியா அல்ல)
தெய்வங்கள் என்பன அமைச்சர்கள் போல
தேவதைகள் என்பன அதிகாரிகள் போல

ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ நாடு நலமாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுபோல்தான் கடவுளும்.

ஆனால் நாடு நாசமாய்ப் போவது யாரால்? அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆசைகளாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் தான்.

அந்த வகையில் இத்தகைய ஆன்மீக வியாபாரிகளுக்கு சில சமயங்களில் தெய்வங்களின் துணையும், தேவதைகளின் துணையும் கிடைப்பதுண்டு.

கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்குக் கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது. எனவே ஆன்மீக வியாபாரிகளிடம் தொடர்பு தேவையா
என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

டிஸ்கி: கடவுளை பிரபஞ்ச ஆற்றலாக இவர் நினைப்பதாக கருதுகிறேன்.
தெய்வங்களும், தேவதைகளும் இருப்பதாக தற்காலிகமாக, இதை படிக்கும்வரை ஒப்புக்கொண்டு பார்த்தால் இவர் சொல்ல வருவது முழுமையாக புரியும்.

தொடரும்....அடுத்து … நல்ஒழுக்க உறவு….

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

Thursday, April 23, 2009

கடவுளும்... நாத்திக உறவும்...

பொதுவாய்க் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை நான்காகப் பிரித்துக் கொள்ளலாம். இந்த நால்வகை உறவில் நம் உறவு எத்தகையது என்பதில் தெளிவாய் இருந்தால் நம் பாதையில் தெளிவு கிடைக்கும். பயணமும் குழப்பமின்றி நடக்கும்.

முதல்வகை உறவு - நாத்திக உறவு

கடவுளும் நாத்திக உறவும்


'கடவுளையும் இவர்கள் கண்டு கொள்வதில்லை.கடவுளும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை’


நாத்திகர்கள், பொதுவுடமைவாதிகள், உலகாயதவாதிகள், பொருள்முதல்வாதிகள் போன்றோர் இந்தப் பட்டியலில் வருவார்கள்.

’கடவுளைக் கண்டுகொள்ளாதோர் அல்லது கடவுளை மறுப்போர்’ என்ற நிலையில் இருக்கும் இவர்களிடம் விருப்பு - வெறுப்பு அற்ற நடுவுநிலை நாயகமாக கடவுள் திகழ்கிறார்.

பொதுவாக ஒருவர் ஆளும் கட்சியை வெறுத்து, விமர்சிப்பவராக இருந்தால் கூட அரசின், மக்களுக்கு கிடைக்கக் கூடிய பொதுவான சலுகைகள் அவருக்கும் கிடைக்காமல் போகாது. ரேசன், தகுதிக்கேற்ப அரசுவேலை, அரசு மருத்துவம் போன்ற நியதிப்படி
கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கத்தான் செய்யும்.(இன்றைய சூழ்நிலை அல்ல)

அதுபோலவே கடவுளை இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கடவுள் படிப்படியாய் ஏற்படுத்தி வைத்திருக்கும் உலக வாழ்க்கை எனும் பஞ்சபூத அமைப்புகள் இவர்கள வெறுக்காது. கண் தெரியும், காது கேட்கும், நாக்கு ருசிக்கும், நியதிப்படியே நடக்கவேண்டிய எல்லாம் முறைப்படி நடக்கும்.

இதைத்தான்


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே


வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே


மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே


நல்லோர்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே


நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம்கொடுக்கும் நலமே


எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே


என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே


என்று வள்ளல் பெருமான் விளக்கமாக வர்ணிப்பார். இதுதான் இறைவனின் விருப்பு வெறுப்பற்ற நடுவுநிலை நிர்வாகம்.

ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு வாய்க்காது.
சாவை வெல்லும் சமாதி, முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லை. இவைகள் எல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோர்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சலுகைகள்.

தற்சோதனை செய்யுங்கள்.

இந்த நாத்திக உறவு என்ற வகையில் நீங்கள் இருந்தால் இதுவே போதுமென்றால், தொடர்ந்து பயணம் செய்யுங்கள். இதை ஒரு வகையில் எதுவமற்ற நடுவுநிலை என்றுகூட சொல்லலாம்.

தொடரும்... அடுத்து......கடவுளும் வியாபார உறவும்

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து