"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

Saturday, June 10, 2017

பொழுதுபோக்கு - கடவுள் - ஓஷோ


பொழுது போக்கு

எத்தனை நாளைக்குத்தான் உணவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டு இருப்பது ?

யாருக்குமே அலுப்புத் தோன்றத்தான் செய்யும்.  அப்படி அன்றாட வேலையில் அலுப்புத் தோன்றும்போது மாற்றாக இரண்டு வழி உண்டு.

ஒன்று சும்மா இருப்பது... சும்மாயிருப்பது என்பது தன்னோடேயே மட்டும் இருப்பது. அவரவர் உள்ஆழத்தில் இருப்பதை எதிர்கொள்வது. ஆனால் சும்மா இருப்பது என்பது உன்னை பயப்பட வைக்கின்றது.  முடிவில்லாத, பயத்தை தரக்கூடிய, புரிந்து கொள்ள இயலாத, பரந்திருக்கும் மனதின் அளவே பெரியதொரு நடுக்கத்தை தரக்கூடியதாக அமைந்துவிடுகிறது.

மற்றொன்று... ஏதோ ஒரு முட்டாள்தனமான காரியத்தில் இறங்கிவிடுவது.  அதற்குப் பொழுதுபோக்கு என்று பெயர் வைத்துவிடுவது. எல்லாப் பொழுதுகளும் உன்னிடமிருந்தே உன்னைத் தப்பித்திருக்கச் செய்யும் முயற்சிகள்தாம். பொழுதுபோக்கு என்பதே வேலையின் மற்றொரு பெயர்தான். உண்மையான வேலை உனக்கு இல்லாத நேரங்களில் பொழுது போக்கு என்ற போலி வேலையில் ஈடுபட்டு பொழுதைக் கழிக்கிறாய்.

ஞாயிற்றுக்கிழமைக்கு ஏங்குகிறாய்.. ஏதோ ஒன்றைச் செய்து நாளைக் கழிக்கிறாய். அதற்கு பொழுதுபோக்கு என்று பெயர் வைத்து விடுகிறாய். சம்பளமில்லாத வேலையின் பெயர்தான் பொழுதுபோக்கு.

உனக்கு ஓய்வெடுக்கத் தெரியாது. தளர்வாக இருக்கத் தெரியாது. இதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிப்பார். எப்போதெல்லாம் செய்வதற்கு ஒன்றுமில்லையோ, அப்போதெல்லாம் உன்னோடயே இருந்து பார்.



                                                  ********************



கடவுள் ஒரு முழுமை. முழுவதும் அவரே. இருப்பவரும் அவரே. நாம் அவருடைய பகுதிகள். பகுதிகள் முழுமையைப் பார்த்து பயந்திருப்பது ஏன் ?
முழுமைக்குத் தன் பகுதிகளின் மீது அக்கறை இருக்கின்றது.. பகுதிகள் இல்லாமல் முழுமை இருக்க முடியாது அல்லவா ?
அதனால்தான் முழுமை தன் பகுதிகளை அலட்சியப்படுத்த முடியாது.

இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமையின்மீது விசுவாசம் பிறக்கின்றது. இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமை தன்னை வசப்படுத்தி வைத்துக் கொள்ள, தன்னை ஒப்புக் கொடுக்கிறான். பயங்களை விட்டுத் தொலைக்கிறான். சரண் அடைகிறான். முழுமை இருப்பது சரணாகதியில், விசுவாசத்தில்...

ஓஷோ
தம்மபதம் I
                                                             



Friday, May 31, 2013

பயனற்றதைப் பேசாதே 2...ஓஷோ

பயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே  கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.

எழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு,  தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)

தொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)

சரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

அமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)

அன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.

நம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.

மாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)


Sunday, February 17, 2013

விபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை

விபாஸ்ஸனா என்றால் என்ன ?

விபாஸ்ஸனா என்பதில் ஒரு ஒழுக்கமான வாழ்வை வாழ்வது மொத்தமும் அடங்கும். இதை எந்த மதம், எந்த இனம், எதிர்க்கக்கூடும் ? இப்படிப்பட்ட ஒழுக்கமான வாழ்வை வாழ உங்களுக்குத் தேவை வலிமையான மனம்.. இதற்கு யார் மறுப்புத் தெரிவிக்கக்கூடும்.?

உங்கள் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அதன் விளைவாய் ஒழுக்கம், மன ஒருமைப்பாடு, தூய்மையாக்கும் ஞானம், தெள்ளறிவு இவை நம்மிடம் வந்தடைய வேண்டும். மனதளவில் ஆரோக்கியமானவராகவும், அமைதியான, சலனமின்றி மனநிலை அமைந்து இருக்க,  பழக வேண்டியது விபாஸ்ஸனா தியான முறை..
 

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த முகாம் இருக்கின்ற குறையை நீக்கி, தென் தமிழகத்தில் மதுரை அருகே திண்டுக்கல் செட்டியபட்டியில் அமைந்துள்ள விபாஸ்ஸனா தியான முகாமை ஆர்வமுடையவர்கள் பயன்படுத்திக் கொள்வீர்க்ளாக :)

வருடம் முழுவதும் நிகழ்ச்சி அட்டவணை இருக்கிறது. வசதியான நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இணையம், பேச்சு எதுவும் இல்லாத  10 நாட்கள் அடிப்படை தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். மனம் என்பது என்ன? அதன் செயல்பாடுகள் என்ன என்பதை வெறும் வார்த்தை ஜாலங்கள் இன்றி அனுபவமாக உணருங்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது என் வேண்டுகோள் :)

இருப்பிடம், நிகழ்வுகள் குறித்த அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய இதை சொடுக்கவும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய இதைச் சொடுக்கவும்.

நிகழ்காலத்தில் சிவா

Wednesday, December 19, 2012

பயனற்றதைப் பேசாதே...ஓஷோ

குழந்தையாய் இருக்கையில் மனம் என்ற ஒன்று தர்க்கங்கள் இன்றி இருக்கும். வளர வளர நமது வாழ்க்கைமுறை, கல்வி, சமுதாயச் சூழ்நிலைகள் மனதிற்கு நிறைய சேகரிப்புகளைத் தந்து தர்க்கம் சார்ந்த முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும். இந்த முடிவுகளின் சேகரிப்புதான் நமது தற்போதய மனம். இப்படிச் சேர்த்தவைகள் நல்லவைகளுக்காக நம்மால் சுயவிருப்பத்துடன் பயன்படுத்தப்படுகிறது. நாளடைவில் நமது மன உளைச்சலுக்கும் அமைதி இன்மைக்கும் காரணமாகவும் அமைகிறது என்றால் வியப்பாக இருக்கிறதா ?

மனம் எப்போதுமே முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும், தங்கிக்கிடக்குமே தவிர உரிய கணத்தில் இருப்பதில்லை. அது பயனற்றதைப் பேசிக்கொண்டு இருக்கும். மனம் பேசினால் அது பயனற்ற வார்த்தைகளாக, வெளிப்பட்டு  நம்மை அந்தகணத்தில் இருக்கவிடாமல் செய்துவிடும்.

பயனற்ற பேச்சு, பயனற்ற எண்ணங்களில் மனம் ஓடிக்கொண்டிருக்க எதோ வாழ்கிறோம் என்ற அளவில் வாழலாமே தவிர  வாழ்கையை முழுமையாக வாழ முடியாது:)

கண்ணை மூடி உடல் உணர்வை, சூழலை, ஒலியை கவனிக்க முற்படுங்கள். எவ்வளவு நேரம் முடியும்? சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் கவனிக்க இயலாது. மனம் தாவ ஆரம்பித்துவிடும். இன்னும் என்னென்ன வேலை இருக்கு இப்படி உட்கார்ந்திருக்கே என்றோ., ஆபீஸ், குடும்பம், நட்பு, திரைப்படம் என வெளியேஓடிவிடும். அந்த கணத்தில் நாம் இருக்க உதவி செய்யாது  இந்தமனத்தை சரி செய்ய ஒரே தீர்வு அதை சாட்சி பாவனைக்கு ஆட்படுத்த வேண்டும். அதாவது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைக் கவனிக்கப் பழக்க வேண்டும்.

சாட்சி பாவம் என்பது விலகி நின்று கவனித்தல், வருகின்ற எண்ணங்களோடு தவறான அல்லது தர்க்க ரீதியான அபிப்ராயம் ஏதுமின்றி இருத்தல். இதுவே தியானத்தில் நடப்பது.:)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே நின்று கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதில் அந்தக் கணங்கள் இருக்கின்றன்.

கவனிக்கும் நுட்பம் வாய்த்தால் நான் என்பது வேறு.. தோன்றுகின்ற எண்ணங்களோ, கவலைகளோ, கருத்துகளோ நான் அல்ல என்பது அனுபவமாகும். இது அவைகளுடனான உங்களின் உறவை செம்மைப்படுத்தும்.

தியானத்தில் நடப்பதை வாழ்க்கையாக்க முடிகிறதா... நீங்களே ஞானி வேறு எங்கும் தேடவேண்டாம் :)

Wednesday, May 25, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 7

மே மாதம் முழுவதுமே சட்டசபைத்தேர்தல் முடிவினை எதிர்ப்பார்த்தும், கணிப்புகளும், கருத்துகளுமாக அனைவருமே பரபரப்பாக இருந்தனர் என்றால் அது மிகையில்லை. ஆக பரபரப்புகள் இப்போதைக்கு ஓய்ந்து விட்டது. நாம் அன்றாட அலுவல்களில், வாழ்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய நிதர்சனத்திற்கு வந்துவிட்டோம்.

Friday, April 29, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 6

நோய், மனச்சோர்வு, சந்தேகம் இவைகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைக்கற்கள் ஆகும். தொடர்ந்து பார்ப்போம்...


ஊக்கம் இன்மையும், சோம்பலும் பார்க்க வேறுவேறு ஆகத் தோன்றினாலும் இவைகள் அண்ணன் தம்பிகள்தாம்:) 

Thursday, April 28, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 5

முதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன?

சிலவிசயங்களை மேலோட்டமாகவே தருகிறேன். இவைகள் உங்கள் சிந்தனையைத் தூண்ட மட்டுமே. ஏனெனில் இவை மிக முக்கியமான அம்சங்கள். உங்கள் சிந்தனைக்கு இந்த கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்கும்.

Monday, April 25, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 4

மனம் எதிர்கொள்ளும் எல்லா விசயங்களுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றும். அப்படி எதிர்வினையாற்றுவதே நம்மை அதன் வசத்தில் வைத்திருக்கும் தந்திரம் ஆகும். இதை தெளிவாக உணர்ந்து கொண்டாலே மனம் அடங்க ஆரம்பித்துவிடும்.

Thursday, April 21, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 3

இந்தத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏன் எழுந்தது?  என யோசித்த போது  எனக்குத் தெரிந்தவற்றை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பதற்காகவா?..என்றால் கண்டிப்பாக இல்லை.   ஒரு ஆசிரியரின் மனப்பான்மையோடு நான் எழுதவில்லை.

Thursday, July 15, 2010

தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..

தியானம் செய்தால் என்னென்னமோ நடக்கும் என்கிறார்கள். நமக்கோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. , புரியாத மாதிரியும் இருக்கு. தியானம் செய்தா நம் உடலுக்கும், மனசுக்கும் என்ன நன்மை அப்படின்னு கேள்வி வரும்போது இந்த மனசு இருக்கிறதே அது எதையும் நம்ப மாட்டீங்குது :))

Wednesday, July 7, 2010

நீங்கள் இடது மூளைக்காரரா?, வலது மூளைக்காரரா?

நமது மூளையை முன்மூளை, நடுமூளை,பின்மூளை என பகுக்கலாம். அதில் முக்கியமாக முன்மூளைப்பகுதி எனப்படும் இரு அரைவட்டப் பகுதிகள் உணர்தல், மொழி, சிந்தனை போன்றவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இப்பகுதிகள் இடதுமூளை, வலது மூளை எனவும் அழைக்கப்படுகின்றன.