திருப்பூரில் பனியன் தொழிலில் பலதரப்பட்ட வேலைகளை செய்துதான் பனியனை உருவாக்குகிறோம்.
அப்படி போனவாரத்தில் ஒருநாள் பனியனுக்கு தேவையான லேபிள்களை மொத்தமாக வாங்கிவந்து தொழிற்சாலைக்கு எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன்.
போகும் வழியில் என் வீடு அமைந்துள்ளதால் மதிய உணவை முடித்துக் கொண்டு செல்லும் உத்தேசத்துடன் வீட்டுக்கு வந்தேன்.
பல்வேறு தொழில்ரீதியான சிந்தனைகளுடன், மதிய உணவு முடிந்தவுடன் வேறு சில வேலைகளுக்காக மீண்டும் டவுனுக்கு சென்று திரும்பியவன், அந்த லேபிள் பார்சலை மறந்துவிட்டு சென்று விட்டேன். கம்பெனிக்கு சென்றபின் தான் ஞாபகம் வந்தது. அது உடனே தேவைப்பட்டது.
வீட்டுக்கு போன் பண்ணினேன். போனை எடுத்த அவுங்களிடம் (மனைவி) ”ஏம்மா, லேபிள் பார்சலை எடுக்க நாந்தான் எடுக்க மறந்திட்டேன். நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்லையா?. இனிமேலாவது சற்று விவரமா இரு” என்று சொல்லிவிட்டு நான்கு கி.மீ திரும்ப வந்து எடுத்து சென்றேன்.
அதற்கு அடுத்த நாள் மீண்டும் பல்வேறு துணிகள், price tag, போன்ற பலவற்றையும் வாங்கி மதிய உணவுக்கு வந்த நான், அவை அவசரமாக தேவைப்படாததாலும், வேறு ஒரு பிரிண்டிங் பட்டறைக்கு போக வேண்டிய காரணத்தினால் அவைகளை வைத்துவிட்டு கிளம்பினேன்.
பைக்கை ஸ்டார்ட் செய்த தருணத்தில் அனைத்து பொருள்களுடன் அவுங்க வந்து நிற்க, ”இப்ப நான் இதையெல்லாம் எடுத்துட்டு வரச் சொன்னேனா? சொன்னால் மட்டும் செய்தாப்போதும்” என்று சற்றே அதிகாரத் தோரணையுடன் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவுங்க அமைதியாக திரும்ப உள்ளே செல்ல எனக்கு உரைத்தது.
ஆமா, ’நேற்று நான் எதா இருந்தாலும் மறக்காம ஞாபகமாக எடுத்துக் கொடு’ என்று சொன்னதால் தான் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நான் சரியாக உணராமல் பேசிவிட்டதை உணர்ந்தேன். சரி இனிமேல் இதுபோன்ற தவறுகள் என்னிடத்தில் ஏற்படாது என உறுதிகொண்டேன்.
நிகழ்காலத்தில் இல்லாததால் முதலில் லேபிளை மறந்து சென்றேன்.
நிகழ்காலத்தில் இல்லாததால் அவுங்க எடுத்தவந்த காரணத்தை உணராமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.
(நம்மோடு வாழ்க்கை துணையாக வாழ்வது என்ன சாதரண விசயமா என்ன ?!?!?!)
அன்றாட வாழ்வில் இது போன்ற நிகழ்வுகளை அடையாளம் கண்டு சரி செய்தாலே போதும் , வாழ்வில் இனிமை பெருகும். நீங்கள் எல்லாம் எப்படி ????