"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Saturday, January 26, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில் சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும் குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல் பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939

View Larger Map கிளிக் பண்ணுங்க..

விழா நாளை காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.



நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233

Tuesday, December 11, 2012

திருப்பூர் பதிவர் சந்திப்பு 09/12/2012

வெள்ளிக்கிழமை அன்று இந்தத் தகவலை நண்பர் ஜோதிஜி பகிர்ந்து கொள்ள முதலில் தொடர் வேலைகளினால் அப்புறம் பார்ப்போம் என்று விட்டுவிட்டேன். பின்னர் நடக்கிற இடம் உள்ளூரில் என்பதால், கலந்து கொள்வோம் முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காங்கயம் ரோட்டில் அமைந்துள்ள செண்பகம் மக்கள் சந்தை என்கிற டிபார்மெண்டல் ஸ்டோரில் ஆஜராகிவிட்டேன்.

இந்த விழா தொழிற்களம், மக்கள் சந்தை, தமிழ்ச்செடி என்கிற அமைப்புகளின் சார்பில் நடப்பதாக பேனர் தெரிவிக்க சற்று யோசனையோடுதான் இருந்தேன். கடைசியில் MLM வியாபாரமுறையில் கொண்டு நிறுத்தி விடுவார்களோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது. :)

10 மணிக்கு விழா என்ற் உடன் சரியாக விழாவின் சிறப்பு அழைப்பாளார் திரு.சுப்ர பாரதி மணியன் வருகை புரிய இயல்பாக பேசிக்கொண்டிருந்தோம். நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதி இருந்தபோதும் இவரை எனக்கு என் தொழிற்கூடத்திற்கு அருகில் தாய்தமிழ்ப் பள்ளி என்ற ஆரம்பப்பள்ளி நடத்திவருபவர் என்ற வகையில் அறிமுகம். ரூபாய் நூறுக்கும் குறைவான மாதக்கட்டணத்தில் மூன்றாம் வகுப்பிற்கு மேல்தான் ஆங்கிலம் என நடுத்தர, மக்களுக்கு இவரது சேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இவர் வளர்ந்துவரும் எழுத்தாளர் நா.மணிவண்ணனை பாராட்ட பொருத்தமானவர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஒவ்வொருவராக வர அடுத்த கால்மணிநேரத்தில் அரங்கம் உற்சாகமானது :)

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டம் கலந்துரையாடல் போல தொடங்கியது. சுப்ரபாரதி மணியன் பேசும்போது போஸ்ட்மார்டனிசம் என்பதன்படி மையத்தில் இருப்பவர்களுக்காக விளிம்பில் இருப்பவர்கள் எல்லோரும் இயங்க வேண்டி இருக்கிறது. அதுபோல் எழுத்துலகில் சில எழுத்தாளர்கள் ஆட்சி செலுத்தி கொண்டிருந்த போதும், மற்றவர்கள் படிப்பதையும் விமர்சிப்பதையும் தவிர்த்து ஏதும்செய்ய முடியாத சூழலில் புத்தகம் வெளியிட அவசியம் இல்லாது தனது கருத்துகளை உடனுக்குடன் வெளிப்படுத்த இணையம் உதவுகிறது, என்றும் இந்த ஒன்றே விளிம்புநிலை வாசகர்களை மையத்தை நோக்கி பயணிக்கச் செய்து இன்றைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. அந்தவிதமாகவே நா.மணிவண்ணனுக்கான பாராட்டும் பொருந்தும் என்றார்.



அடுத்து பதிவர்கள் சுய அறிமுகமாக நிகழ்ச்சி பயணிக்கத் தொடங்கியதும் அதில் மெட்ராஸ் ப்வன் சிவகுமார் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பை ஒட்டி ஜோதிஜியால் மேடைக்கு அழைக்கப்பட்டு பேச ஆரம்பித்தார். தமிழ் வளர்ச்சியில் தமிழரின் பங்காக தமிழன் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வதையும், தமிழை கிண்டல் செய்வதையும் தவிர்த்தால் போதும். தூய தமிழுக்கு மெனக்கெட வேண்டியதில்லை. மேலும் வரும்காலத்திலும் இப்போதும் ஆங்கிலம் இன்றி சம்பாத்தியம் இல்லை என்று சொல்ல. கோவை மு சரளா ஊடாடிய கருத்துகளை தெரிவிக்க இரு தரப்பின் கருத்துகளும் சந்தேகமின்றி பார்வையாளர்களுக்குத் தெளிவானது. இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு துளிகூட மோதலோ, கடுமையோ, இன்றி இயல்பாக அமைந்ததை உணர்ந்தேன்.

செண்பகம் மக்கள் சந்தை என்ற டிபார்மெண்டல் ஸ்டோரின் உரிமையாளர் திரு. சீனிவாசன் வந்தவர்களுடன் அன்போடு எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாகப் பழகினார். நிகழ்வு நடத்த இடத்தையும் வழங்கி, தேநீர் பிஸ்கெட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

கூட்டத்தில் அவரது கடைக்கு வந்த நண்பர் தம்பதியினரை வர வைத்து பேச வைத்தார். அவர் இணையத்தில் எழுதுபவர்கள் வெறும் கவிதையும், கதையும் எழுதுவதோடு மற்ற்வர்களுக்கு பயன் தரும் கருத்துகள் எழுத வேண்டினார். இதோடு நான் முரண்பட்டாலும் தெரிவிக்கவில்லை.:)

இணையம் என்கிற பொதுவெளியை தன் திறமையினை வெளிக்கொணரும் இடமாகவே பயனாளர்கள் பயன்படுத்தவேண்டும் என்பதே என் அவா. கவிதையோ, மொக்கையோ நகைச்சுவையோ இயல்பாக வெளிப்படுத்திப் பழகி, மெருகேற்றிக்கொள்ள இணையவெளியை பயன்படுத்தவேண்டும். எல்லோரும் அறிவுரை சொன்னால் இணையம் தாங்காது :) வராததை முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை

மணிவண்ணன் எனக்கு பேச வராது என்று யதார்த்தமாக சொல்லி, தனது எழுத்து சிறுமுயற்சிதானே தவிர இன்னும் வளரவேண்டிய இடத்தில்தான் இருக்கிறது என்றார். இன்னும் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள இந்த பரிசு சுட்டிக்காட்டுகிறது என்றார்.

தமிழ்ச்செடி குறித்து இரவு வானம் சுரேஷ் விவரித்தார். ஜோதிஜி கருத்துகளை இணைத்தும் நிகழ்ச்சியை வ்ழிநடத்த இறுதியில் மணிவண்ணனுக்கு நூல் பரிசளிப்பும், நினைவுப்பரிசும் வழங்கப்பட விழா நிறைவடைந்தது. மொத்தத்தில் கூட்டம் கலந்துரையாடல் போல் அமைந்து இயல்பாக சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்த கலந்துரையாடல்,, தேர்ந்த திட்டமிடப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட நிறைவைக்கொடுத்தது.

இந்தக்கூட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விசயங்கள் என்று எதையும் என்னால் குறிப்பிட முடியாத அளவு சிறப்பாக இருந்தது என்றால் மிகையில்லை.