காலை ஒன்பது மணிக்கு நடக்க ஆரம்பித்து பத்துமணி அளவில் சிறிய நீரோடையை அடைந்தோம். காலை 8 மணியில் இருந்து தொடர்ந்த நடை உடலில் வியர்வையையும், களைப்பையும் ஏற்படுத்த, குளிக்கலாம் என்கிற முடிவை எடுத்தோம். நீரில் கால்வைத்தால் ஐஸ்கட்டியாய் ஜில்லிப்பு :)
மூன்று நண்பர்கள் பின்வாங்க.. நானும் இன்னொருவரும் கண்ணை மூடிக்கொண்டு நீரில் விழுந்தோம். அருவிகளில் குளிப்பதற்கும், இது போன்ற நீரோடைகளில் குளிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
அருவிகளில் குளிப்பது ஒரு சுகம். தடதடவென உடலின் எல்லா இடங்களிலும் அடித்து விழும் நீர், அனைத்து வலிகளையும் சமமாக்கி, பரவச் செய்து, உள்ளிருந்து துடைத்துவிட்டாற் போல் சுத்தமாக்கிவிடும்.புத்துணர்ச்சியைத் தரும்,
ஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் :)
உணர்வுகளை மனம் எந்த முயற்சியும் இன்றி கவனிக்க ஆரம்பித்தது. தோலில் இருந்து உள்ளே எலும்பு வரை உள்ள தசைநார் கற்றைகளின் ஒவ்வொரு மில்லிமீட்டரும், ஒவ்வொரு அணுவும், தொடர்ந்து அதிர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அப்படி அதிர்வுகள் வெளியேற, வெளியேற மனமும் உடலும் ஒருசேர களைப்பு நீங்கி புத்துணர்ச்சி ஆவதை படிப்படியாக எளிதில் உணரவும் முடிந்தது. கண்ணை மூடி ஆனந்தமாக நீருக்குள் கிடந்தேன். கொஞ்சநேரம் ஆனதும் பழகிப்போனதாகவோ, மரத்துப்போனதாகவோ தெரியவில்லை.. நீரில் விழுந்த அந்த நொடிமுதல் பலநிமிடங்களும் இப்படியான உணர்வுகளே தொடர்ந்து நிலைத்து இருந்தது.
எங்களுக்குப்பின்னால் வந்தவர்கள் எங்களைத்தாண்டி நடக்க .. வெளியேறி தொடர்ந்தோம்.
பளிங்கு போன்ற நீரோடை... கண்டிப்பாக குளிக்க வேண்டிய இடம்.. ஏனோ பெரும்பாலானோர் கடந்து சென்றனர்.
தொடர்ந்து நீரோடைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. எல்லாம் ஐந்து நிமிட நடை தூரம்தான்........நான்கு நீரோடைகளைத்தாண்டினோம். நேரம் முற்பகல் 11.00
முற்பகல் 11.30
கீழே கண்ட இடத்தை நாங்கள் கடந்தபோது முற்பகல் 11.35, இந்த இடம் பாறைகள் நிரம்பிய நீர்தேங்கி ஓடக்கூடிய பகுதி இடப்புறத்தில் பெரிய பரப்பளவாக விரிந்து இருக்க.. கால் நனையாமல் தாண்டிச் செல்லக்கூடிய நீளம், அகலம் அதிகமான பகுதி.. நாங்கள் சென்ற நாட்களிலும், அதற்கு முந்தய நாட்களிலும் மழை அதிகம் பெய்யாததால் நீரோட்டம் குறைவாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் திரும்ப வரும்போது இதே இடம் ஆறுபோல் பரந்துவிரிந்து இரண்டு அடி உயர நீர் பாய்ந்தோடிக்கொண்டு இருந்தது :)
நிகழ்காலத்தில் சிவா