"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label பாம்பு. Show all posts
Showing posts with label பாம்பு. Show all posts

Friday, August 28, 2009

உங்களை பாம்பு கடித்திருக்கிறதா ?

சில்லென்ற காற்று முகத்தில் அறைகிற மாதிரி வீசிக் கொண்டிருந்தது. இங்கு எப்பவுமே இப்படித்தான், நல்ல கிராமம், ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, மெள்ள மெள்ள விவசாயம் குறைந்து பெரிய பெரிய குடோன்கள் முளைத்துவிட்டன. இவை பனியன் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கு வசதியானவை, துணியை தயார் செய்து அதை வேண்டிய வடிவம், அளவுகளில் வெட்டி தயார் செய்வதில் கழிவுகள் ஏதும் வெளியேறாததால் அக்கம்பெனிகளும் வந்துவிட்டன.

நகரத்தில் ஆட்கள் பற்றாக்குறை, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி இயங்கி கொண்டிருக்கின்றன.கிராமத்திற்கு பஸ் அனுப்பி வேலைக்கு ஆள்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் கிராமத்திலேயே இந்த கம்பெனிகள் அமைவதால் பல வசதிகள்., சில சிரமங்கள், அதில் ஒன்றுதான் எனக்கு தினமும் வீட்டுக்கு போவது என்பது, வீட்டுக்கு சுமாராக பன்னிரண்டு கிலோமீட்டர்கள் வரும். பைக்கில் இந்த குளிரில் வீட்டிற்கு செல்வது சற்று சிரமாகத்தான் இருக்கும்.

விளக்குகள் அணைக்கப்பட்டன.வேலை முடிந்தது. வேலை செய்பவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப நானும் வீட்டிற்கு கிளம்பினேன். சட்டென ஞாபகம் வந்தது. மனைவியும் குழந்தைகளும் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்கள். சரி இன்றைக்கு இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான், உணவுக்குத்தான்...ம்ம்சரி

இங்கு பெரிய அளவில் உணவுவிடுதி ஏதும் கிடையாது. அரை கிலோ மீட்டர் சென்றால் ஊர் மையத்தில் மங்கலான குண்டுபல்பு வெளிச்சத்தில் அமைந்துள்ள குடிசைவீடுதான் இங்கு உள்ள ஒரே உணவு விடுதி, கிடைப்பதை வைத்து வயிற்றை நிறைத்துக்கொண்டு இன்று இங்கேயே இருக்கிற ஓய்வறையில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒத்தையடிப்பாதை வழியாக சென்றால் பக்கம், சீக்கிரம் சென்று திரும்பிவிடலாம்.
உணவை முடித்துக் கொண்டு திரும்பினேன். தனியாக வருவதால் பயம் வேறு, அப்பயத்தை துரத்த வேண்டி அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா எனப் பாடிக்கொண்டே நடையை எட்டிப்போடுகிறேன்
சட்டென இருள் சூழ்ந்தது. சரியான நேரத்திற்க்கு எது நடக்குதோ இல்லையோ மின்சாரம் போவது மட்டும் நடந்து விடுகிறது.
தொழிற்சாலை வாசலை அடைந்து, நிதானத்திலேயே கேட்டை உட்புறமாக பூட்டிவிட்டு, ஓய்வறைக்கு நகர்ந்தேன். தொழிற்சாலை கட்டிடத்தை விட்டு தள்ளி உட்புறமாக 200 அடி தொலைவில் அறை, கட்டில், குளிக்கும் வசதிகளுடன் ஓய்வறை,

வழக்கமான பாதைதான், முழங்கால் உயரத்துக்கு செடிகள் கண்டபடி வளர்ந்து பாதையை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கட்டிட வேலை நடந்த போது ஏற்பட்ட குழிகள், மண் மேடும் பள்ளமுமாய், அந்த இடத்தை கடக்க முயற்சிக்கும் போது சட்டென புத்திக்கு ஏதோ உரைக்கிறது, காலுக்கு கீழ் ஏதோ மிதிபடுவதைப்போல் உணர்வு, சற்று உருண்டையாக , கனமாக, வழுவழுப்பாக செருப்புக்கு கீழ் உணர முடிந்தது. அனிச்சை செயலாய் உடல் துள்ள, அந்த இடத்தை விட்டு எட்டிக் குதித்து,எப்படி அறைக்கு வந்து சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது, உடல் நடுங்குகிற நடுக்கம், படபடவென்ற இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் இதெல்லாம்,

கதவை நீக்கினேன், மேசைமீது இருந்த, குளிர்ந்த நீரை சொம்போடு எடுத்து அப்படியே அண்ணாந்து ஒரே மொடக்காக குடித்தேன். தலை சுற்றுவது போல் இருந்தது. அப்படியே கீழே உட்கார்ந்து கொண்டேன்,. கிறுகிறு என்று வந்தது. கண்ணை மூடிக்கொண்டேன்

யார் செய்த புண்ணியமோ, தப்பித்தேன் என நினைத்துக்கொண்டேன்.

பாம்புகள் பலவிதம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், விசமுள்ளது, விசம் இல்லாதது, என்று, நமக்கென்ன தெரியும் எந்த பாம்பு எப்படி இருக்கும், எதில் விசம் இருக்கும் என்று? காற்று வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது, சன்னலை திறந்து வைத்தேன்

அப்போது கால் பாதம் சற்றே ஈரமானது போன்ற உணர்வு, குடித்த தண்ணீர் சிந்திவிட்டதோ, சட்டென மனம் எச்சரிக்கை செய்ய கையால் தொட்டு பார்த்தேன், பிசுபிசுப்பாக இருந்தது, கையில் ஒட்டுவதுபோல் தெரிந்தது,கீறல் இருந்தது. வலிக்கவும் ஆரம்பித்தது.
கையை கிட்டே கொண்டுவந்து பார்த்ததில் இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும், சிவப்பாக தெரிந்தது, இரத்தம் என மனது அலற ஆரம்பிக்க, முகர்ந்து பார்த்தேன், வாடையை வைத்து இரத்தம்தான் என உறுதி செய்தேன்.

அய்யய்யோ ! பாம்பு கடித்து ஒரேடியாக போய்விட்டால் என்ன ஆவது, மனைவி, குழந்தைகள் எல்லாம் வெளியூர் போன சமயத்தில் ஏதாவது ஆகிவிட்டால் ? ஒருவேளை அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்காமலே போய்விட்டால் என்ன ஆகும்?

அட அது எப்படியோ போகட்டும் அக்கம் பக்கத்தில் யாராவது விடிந்தவுடன் எட்டிப்பார்த்து தகவல் சொல்லாமலா போய்விடுவார்கள்.,

இந்த வாரம் அனுப்ப வேண்டிய சரக்கு இன்னும் தைக்க முடியாமல் இருக்கிறது, இந்த நிலையில் இப்படி என்றால் என்ன செய்வது, விடியும் வரை தாங்குமா, இந்த நேரத்திற்கு திருப்பூரில் எந்த ஆஸ்பத்திரி இருக்கும், டாக்டர் யாராவது இருப்பார்களா? இருந்தாலும் விசமுறிவு வைத்தியம் நல்லமுறையில் தெரிந்திருக்குமா

செல்போனை எடுத்தேன், யாரை அழைக்க,? உடனடியாக இங்கு யாராவது வந்தால்தான் நாம் உயிர் தப்பிக்க முடியும். போனை அழுத்த இயங்க மறுத்தது, ச்ச்சே மாலையிலேயே சார்ஜ் குறைந்து இருந்தது, வேலை மும்முரம், மறந்தாயிற்று

இனி ஒரே வழி, எப்படியாவது தொழிற்சாலைக்கு சென்று ஜெனரேட்டர் போட்டுத்தான் ஆகவேண்டும், அப்போதுதான் செல்போன் சார்ஜ் பண்ணமுடியும். அல்லது இருட்டில் சரக்குகளுக்கிடையே சென்று தடுமாறிக்கொண்டே அலுவலகத்தை திறந்து போன் பண்ண வேண்டும்.

எங்கே செல்வது, ஓரேடியாக கோவை சென்றுவிடுவது நல்லதோ?

எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள், இரத்தமே முழுவதாக மாற்ற வேண்டிய அவசியம் வந்தால் கூட செய்ய முடியும், அதுவரை தாங்குவேனா?

குழந்தைகள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
அவர்களுக்கு மரணம் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கும் வயதாயிற்றே? தாங்கிக் கொள்வார்களா? இவர்கள் ஒருபுறம் இருக்க, மனைவியை நினைத்தால் இன்னும் கஷ்டம்..
நீங்க இல்லைன்னா நான் இருக்கமாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாளே இவ, என்ன பண்ணப்போறா? அப்படி ஏதேனும் அவ தவறான முடிவெடுத்திட்டா குழந்தைகளின் கதி?

இருட்டினூடே வெளியேறி தொழிற்சாலைக்கு செல்வதே இப்போதைக்கு ஒரே வழி, இருட்டினுள் துழாவ கட்டிலின் அருகே ஒரு பனியன் துணி நீளமாக கயிறுபோல் கிடந்தது தட்டுப்பட்டது.எடுத்து கணுக்காலோடு சேர்த்து இறுக்க்கிக் கட்டிக் கொண்டேன், விசம் ஏறாமல் இருக்க வேண்டும்.மீண்டும் இருட்டினுள் அதே வழியில் நடக்க வேண்டும், கால் மரத்துப்போக ஆரம்பித்தது. வாழ்வா சாவா போரட்டம் என்றால் என்ன என புரிந்தது.

பயமாக இருந்தது. இன்னும் ஏதேனும் பாம்பு இருந்தால்,? சரி இனி எந்த பாம்பு கடித்தால் என்ன? ஏற்கனவே கடித்துவிட்டதே,, மனதை தைரியப்படுத்திக்கொண்டேன்.

தடுமாறி எழுந்து தொழிற்சாலையை நோக்கி நடந்தேன், இல்லை தவழ்ந்தேன், சரி எப்படியோ சென்றேன். கையில் இருந்த சாவியால் கதவை நீக்கினேன், இதெல்லாம் ஒரு யுகம் போல் தெரிந்தது.

சட்டென முகத்தில் வெளிச்சம் அடித்தது, மின்சாரம் வந்துவிட்டதோ?

கண்ணுக்கு எல்லாமே மங்கலாக தெரிந்தது, யாரோ இருவர் எதிரே நிற்பது போல் தெரிந்தது, உற்றுப்பார்த்ததில் தலையில் கிரீடம் வைத்துக்கொண்டு கொம்புடன்…. குழப்பத்துடன் பார்த்தேன்,ஒன்றுமே தெரியவில்லை, தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கொஞ்சதூரம் நடந்த மாதிரி தெரிந்தது.பின்னர் தேரில் ஏறி பறந்தது தெளிவாக உண்ர முடிந்தது. சொர்க்கமா, நரகமா எங்கே போகிறோம் என்றும் புரியவில்லை,

கண்விழித்துப்பார்த்தேன். வெண்ணிற் ஆடையில் அங்குமிங்கும் தேவதைகள் நடந்து கொண்டிருந்தன.

எதிரே மனைவியும் குழந்தைகளும், மனைவி அழுகையை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். மருத்துவமனையில் படுக்கையில் நான் படுத்திருப்பதை உணர்ந்தேன்

தூரத்தில் அலுவலக நண்பர்கள், அருகில் அம்மா, அப்பா,

எனக்கு என்ன நடந்தது என்று நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. கையில் குளுக்கோஸ் வாட்டர் ட்யூப் வழியாக உள்ளே ஏறிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு மாதிரியாக இருக்க, கண்ணை மூடிப் படுத்துக்கொண்டேன்.

மதியம் மருத்துவர் வந்து எல்லாமே நல்லாயிருக்கு, எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல மாலையில் வீடுதிரும்பினேன். இரண்டுநாள் ஓய்விற்கு பின் தொழிற்சாலைக்கு திரும்பினேன். உடல் முழுவதும் இலேசான வலி,

தொழிற்சாலையில் உள்ளே செல்லும் வழியில் ஏதோ பைப் உடைந்து விட்டது போல. பிளம்பர் வந்து பிரித்து போட்டு ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்.

அருகில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்னுச்சாமி நின்றிருந்தார், என்னைப் பார்த்தவுடன் ”அய்யா வாங்க உடம்புக்கு இப்ப பரவாயில்லீங்களா?” என்று கேட்டவாறே என் பதிலுக்கு காத்திராமல் ”என்னையா உங்கோட ஒரே வம்பாப் போச்சு, தேவையானத கொண்டு வரமாட்ட, இங்க வந்து அதுவேணும், இது வேணும் அப்படின்னுட்டு, இப்ப என்ன, பைப்ப சூடுபண்ண ஏதாவது வேணும் அவ்வளவுதானே?” என்றவாறு அங்கும் இங்கும் துழாவியவர் சட்டென காலில் தட்டுப்பட்ட ஏற்கனவே பாதி எரிந்த கம்பிகள் வெளியே துருத்திக்கொண்டிருந்த, பழைய சைக்கிள் டயரை எடுத்து இந்தா என்று பிளம்பர் கையில் கொடுத்துவிட்டு, என்னிடம் திரும்பி ”அய்யா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு, திடீர்ன்னு நீங்க மயங்கிக் கிடந்ததை காலையில் பார்த்து எனக்கு உசிரே போச்சிங்க, அப்புறம் ஆசுபத்திரில சேர்த்து உங்களுக்கு ஒண்ணுமில்ல அப்படின்னு கேட்ட பொறவுதான் நிம்மதி ஆச்சுங்க… என்றவாறு என் கையை ஆதரவாகப் பிடித்தார். எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

Tuesday, April 21, 2009

தோல் பொருட்களை உபயோகிப்போருக்கு...(18+)

டிஸ்கி;இருதய பலவீனம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
இளவயதினர் தவிர்க்கவும்....

தோல் பொருட்களின் உபயோகத்தை குறைத்துவிடலாமா!!!





















வருகைக்கு நன்றி, மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்