கோட்ஜாக் நகரின் ரப்பிமெண்டல் என்ற அருளாளர் கோயிலுக்குச் சென்றபோது, ஒரு கிராமத்தான் மிக ஆழ்ந்து, கண்ணீர் மல்க, பிரார்த்தனை செய்வதைக் கண்டார். அவன் படிக்காதவன், ஹீப்ரு மொழியை படித்தறியாதவன் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் எதைச்சொல்லி இவ்வளவு ஆழ்ந்து பிரார்த்திக்கிறான் என்று அறிய அவர் ஆவல் கொண்டார்.
பிரார்த்தனை நேரம் முடிந்தவுடன் அவனைப் பார்த்துக்கேட்டார். அந்த கிராமத்தான் சொன்னான்:
‘ஐயா, நான் படிப்பறிவுஇல்லாதவன். அதனால் வேதத்தில் உள்ள பிரார்த்தனைகள் ஒன்றும் எனக்குத் தெரியாது. எனவே ‘அ’ விலிருந்து ஆரம்பித்து எல்லா எழுத்துக்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி, கடவுளை அவருக்கு உகந்த சரியான பிரார்த்தனைக்குரிய வார்த்தைகளை அதிலிருந்து அமைக்கச் சொல்லி வேண்டுகிறேன். எனது அறியாமைக்காக இரங்கச் சொல்லி பிரார்த்திக்கிறேன்’
ரப்பிமெண்டல் திகைத்தார். அக்கிராமத்தானின் களங்கமற்ற திடநம்பிக்கை அவருக்குக் கண்ணீரை வரவழைத்தது.
‘ஆகா, உன்னுடைய பிரார்த்தனையே, என்னுடைய பிரார்த்தனையை விட மிகச் சிறந்தது. ஏனெனில் இதயத்தின் ஆழத்திலிருந்து, நீ மிகுந்த நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறாய். ஆண்டவன் எனது பிரார்த்தனையைவிடவும், உன்னுடைய பிரார்த்தனையை நிச்சயம் கேட்பார்’.
(இஸ்ரேல் நாட்டுக்கதை)
*******************************************************************************
நன்றி—ஞானப்புதையல் – முனைவர் எம்.இராமலிங்கன் – பூர்ணா பதிப்பகம்
*******************************************************************************