"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Friday, May 10, 2019

உங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா ?

சின்ன வயதில் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. யாரேனும் மாந்திரீகம் செய்து வைப்பதாகப் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களிடம் சவால் விடுவதுண்டு. ”உனக்கு என்ன வேணும்?.என்னோட இரத்தம்?, என்னோட முடி?, என்னோட உடை எதுவேண்டுமோ? கேள், தருகிறேன். முடிந்தால் , என்னை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்.ஒரே நிபந்தனை என்ன செய்வேன் என்று சொல்கிறாயோ, அதை கால நிர்ணயம் செய்து நடத்திக் காண்பிக்க வேண்டும்.  காலம் தாழ்த்தி என்னுடைய வாழ்வில் இயல்பாக நடக்கிற ஏற்ற தாழ்வுக்கு உரிமை கொண்டாடாதே”,

இந்த சவாலுக்கு இதுவரை நான் அறிந்த சில மாந்திரீகர்கள் சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள்.எனக்குத் தெரியும் என்னிடம் பருப்பு வேகாது என்று.. ஆனால் அவர்கள் , தங்கள் வாடிக்கையாளரிடம் பாவம்னு விட்டுட்டேன் என்று தன் திறமைக்கு உரிமை கொண்டாடக்கூடும். அதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.  

இயக்கம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை. எந்த ஒரு உயிரும்/பொருளும் சுயமாக இயங்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.. தொடர்பு கொள்ளும் பொருளுக்கு ஏற்ப மாற்றம் அடையும் .  பொருள் மற்றும் தொடர்பு கொள்ளும் பொருள் இரண்டின்  (உறுதித்} தன்மையைப் பொறுத்து நேர்மறையான மாற்றம் அல்லது எதிர்மறையான மாற்றம் நிகழும்

மேலே சொன்னதை மேலோட்டமான உதாரணம் ஒன்றின் மூலம் பார்ப்போம். 

எதிர்மறை விசயங்களையும் அலச வேண்டி இருப்பதால் விஷத்தை உதாரணமாக வைத்துக் கொள்வோம். அதிலும் சையினைடு விசம். இப்போது உங்களிடம் பால் இருக்கின்றது. பாலில் சையினைடினை கலக்கின்றீர்கள் அல்லது கலந்தால். பாலின் நிலை என்ன ? உடனடியாகக் திரிந்து கெட்டுப்போய் கொல்வதற்கு உரிய விசமாக மாறிவிடும். அருந்தினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. ஆக நாம் இதுவரை கேள்விப்பட்டிருப்பதும், பாலில் கலந்த அனுபவமும் சொல்லித் தருவது விசம் குறித்த பயம், எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்பதே. விசத்தை ஒதுக்குவதேதான் ஒரே வழி

சரி நேர்மறையாகப் பார்ப்போம். உங்களிடத்தில் சையினைடு விசம் இருக்கின்றது. கூடவே உங்களிடம் பெருநெருப்பொன்று இருக்கின்றது. ஆம் அதில் சையினைடு வீசப்படுகிறது. இப்பொழுது சையினைடு தீயை என்ன செய்து விடும் ?  தீயில் பஸ்பமாவதைத் தவிர விசத்திற்கு வேறு வழி இல்லை. விசம் குறித்த பயம் நெருப்புக்கு  இருக்குமா ?

விசத்தில் ஒரு விசயமும் இல்லை. விசத்தை எதிர்கொள்ளும் பொருளே விசத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றது.  அதுபோலவே மாந்திரீகம் என்பது ஓரளவிற்கு வேலை செய்யும் என்பதாக  ஒரு பேச்சுக்கு, வைத்துக்கொண்டு பார்ப்போம்.

மந்திரங்களை சுயமாய் , தனக்கெனப் பிரயோகிக்கலாம். பிறர் நலம் பெறவும் பிரயோகிக்கலாம்.. இதனை சம்பந்தப்பட்ட பிறரின் விருப்பப்படியே செய்கிறர்கள். அவர்கள் ஏற்புத் தன்மையுடன் இருப்பதால் பலன் உண்டு

ஆனால் மாந்திரீகம் என்பது தான் கெட்டுப்போவதற்காக செய்யப்படுவதில்லை.. பிறர் கெட்டுப்போகவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு செய்யப்படுவது. அதே சமயம் சம்பந்தப்பட்ட நபரின் நேரடி பங்கேற்பும் இருக்காது. அதனால் பலன்கள் அந்நபரின் மனநிலையைப் பொறுத்தே மிகக் குறைவாகவே தாக்கும்  அதுவும் மன உறுதியின்றி பால்போல் வெள்ளை உள்ளமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

சரி, நம் மனதின் தற்போதய நிலை என்ன ? பால் போன்ற வெள்ளை மனமா ? கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்றதா ? 

வாழ்க்கையில் வெற்றியை குவிக்க, அல்லது வெற்றி தாமதம் ஆகிக் கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டுமானால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று சுயபரிசிலனை செய்து கொள்வது உத்தமம். பாலாக நீங்கள் இருக்கலாம். நெய்யாக உருமாறி சிறப்படைவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பாதையில் விசம் போன்ற சில விஷயங்கள் குறுக்கும் மறுக்கும் வரத்தான் செய்யும்.

உங்கள் மனம் தீயாய் இருந்தால் எல்லாவற்றையும் பஸ்பம் செய்துவிட்டு நினைத்தை அடைந்தே தீரும். இந்தத் தீ இயல்பாய் உங்களுக்குள் இருக்க வேண்டும். கருத்தொடர் வழியே வந்திருக்க வேண்டும்.  சிறு வயது முதல் வளர்ந்த சூழல் அந்தத் தீயை மேலும் தூண்டக்கூடியதாய் அமைந்திருக்கலாம்.

வெற்றிகள் தாமதமானால் மற்றவைகள் மட்டுமே காரணமாய் இருக்க முடியாது. நம் பங்கு என்ன என்று சுய ஆய்வு மேற்கொள்வோம். நாம் பாலா, நெருப்பா என்பதில் தெளிவடைவோம். , நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் மனமே.. நம் விருப்பமும் கூட.

 மகிழ்ச்சி நன்றி
நிகழ்காலத்தில் சிவா







Tuesday, December 31, 2013

கை குழந்தைக்கான சத்தான உணவுகள் !


கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி, தனி குடித்தனமாக குறுகிவிட்ட சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள, பெற்றோர் மிக சிரமப்படுகின்றனர். 

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை, தாய்ப்பாலே போதும். அதன் பின், உடல் வளர்ச்சிக்கு தேவையான கலோரிகள், தாய்ப்பாலில் அதிகம் இல்லாததால், அதற்கு இணையான உணவுகளை, கஞ்சி வடிவில் நன்கு குழைத்து தருவது அவசியம்.

பச்சரிசியை, "மிக்சி'யில் குருணை போல உடைத்து, வெயிலில் காய வைத்து, வறுத்து, பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமியுங்கள். ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, மூன்று ஸ்பூன் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்த பின், தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு சேர்த்து, நன்கு பிசைந்து, நம் கையாலேயே ஊட்டலாம்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு சொட்டு மருந்துகள், தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் தான், உடலுக்கு வளம் சேர்க்கும். தேன்வாழை, ரஸ்தாளி, மலை வாழை போன்றவற்றின் விதைகளை நீக்கி, கைகளால் நன்கு மசித்து கொடுத்தால், உடல் எடை அதிகரிக்கும்.

ஏழாம் மாதத்தில் இருந்து கேரட், உருளைகிழங்குகளை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, மிளகு, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு மசித்து தர வேண்டும். 

ஒன்பதாம் மாதத்திலிருந்து, அதிக நார்சத்துள்ள கீரை உணவுகளை, நன்கு வேகவைத்து, அதை கடைந்து, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து கொடுக்கலாம்.

பெற்றோர், தன் குழந்தைக்கு ஈறு வளர்ந்திருக்கிறதா என, கண்காணிக்க வேண்டும். ஈறு வளர்ந்து விட்டால், அதன் பின், நாம் சாப்பிடும் உணவுகளையே குழந்தைக்கும், கொடுக்க ஆரம்பிக்கலாம்.

எட்டு மாதங்கள் வரை அதிக காரம், இனிப்பு, புளிப்பு உள்ள எந்த பதார்த்தத்தையும் தரக்கூடாது. ஏனெனில், தரப்படும் சுவைக்கு ஏற்ப, அச்சுவைக்கு அடிமையாகி, வேறு எந்த உணவையும், உண்ண விரும்ப மாட்டார்கள். 

இதை பின்பற்றினாலே, குழந்தைகள் போதுமான உடல் எடையுடன், ஆரோக்கியமாக இருப்பர்.

ஆறு மாத குழந்தைகளுக்கு, உணவளிக்கும் முறைகளை சொன்னவர் சித்த மருத்துவர், கு.சிவராமன்: தினமலர்

Thursday, November 5, 2009

மருத்துவ முறைகள் மூன்று

ஒரு குடும்பத்தை மருவி வாழும் மகளுக்கு மருமகள் என்று பெயர், அதுபோல் நம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிர் ஆற்றலோடு மருவி, உந்தும் ஆற்றலுக்கு மருந்து என்று பெயர். மரு+உந்து வழியில் நோய் தீர்க்கும் கலைக்கு மருத்துவம் என்றே பெயர் வந்தது.




மூன்றுவகை மருத்துவம்

1)இரத்தத்தையும் சதைகளையும் இரசாயன முறையில் குறைபாட்டை நீக்கி, சீரமைக்கும் முறை ஒன்று. இம்முறையில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம்,யுனானி,உணவு மாற்றம், உடற்பயிற்சி இவைகள் அடங்கும்.

2)உயிர்துகள்களைப் பெருக்கி அதன்மூலம் ஜீவகாந்த ஆற்றலுக்கு திணிவு ஏற்படுத்தி, அதன் மூலம் நோயை போக்கும் முறை இரண்டாவது. இதில் இதில் இரசம்,கந்தகம்,பாஷாண வகைகளைக் கொண்டு செய்யப்படும். சித்த மருத்துவமும் இதுபோன்ற முறைகளும் இதில் அடங்கும்.

3)சீவகாந்தக்களத்தின் தன்மைகளை மாற்றும் காந்த அலைகளை ஊட்டி, அதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறை ஒன்று. ஓமியோபதி, உளப்பயிற்சி, பிரார்த்தனை இவையும் இவை ஒத்த பிற முறைகளும் இதில் அடங்கும்.

மேற்கண்ட மூன்று வகைகளுமே இன்றுவரை மனித இனத்தில் பழக்கத்தில் இருந்து வரும் முறைகள் ஆகும். அதே சமயம் ஒவ்வொரு மருத்துவத்திலும், மற்ற மருத்துவ வகைகளின் பயன் மறைமுகமாக ஓரளவிற்கேனும் செயல்படும்.

--வேதாத்திரி மகரிஷி

Monday, March 9, 2009

தும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்

உடல் நலம், மனநலம் நன்றாக இருந்தால் நாம் சிறப்பாக செயல்படமுடியும். நமக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, சமுதாயத்திற்க்கு பாரம் இல்லாமல் இருக்கமுடியும். இருக்கவேண்டும். அதாங்க, மருத்துவமனைக்கு அன்றாடம் செல்வது நமக்கு தேவையா? அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம்,வலியை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

சரி வழிதான் என்ன? எண்ணெய் கொப்பளித்தல் !!!

எப்படி செய்வது?

தரமான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் சுமார் 15 மில்லி,வாயில் விட்டுக்கொள்ளுங்கள்.விழுங்கி விடாமல் வாயிலியே வைத்துக் கொள்ளுங்கள். பெரிதும் சிரமப்படாமல் அமைதியாக, மெதுவாக, வாயில் சப்பியவாறு,,வாய் முழுவதும் கலந்து திரியும்படி, வாய் வலிக்காமல் ஒரே சீராக கொப்பளியுங்கள். தாடை சற்று உயர்ந்தே இருக்கட்டும். தொண்டைக்குள் செல்லாமல், பற்களின் இடை வெளிகளுக்கு உள்ளாக எண்ணெய் சென்று வருமாறு பத்து முதல் பதினைந்து நிமிடம் கொப்பளியுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்து, ஐந்து நிமிடத்தில் எண்ணை நீர்த்து, நுரைத்து,வெண்மையாகி, கனம் குறைந்து எளிதாக பல் இடுக்குகளில் அலைந்து திரியும். பத்து நிமிடத்திற்க்கு பின் துப்பி விடுங்கள். பிறகு வாயை நீரால் நான்கைந்து முறை கொப்பளித்து தூய்மை செய்யுங்கள்.

என்ன பலன்?

இப்படி செய்வதால் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் கேடு விளைவிக்கும் கிருமிகள் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. விடியற்காலை,பல் தேய்த்த உடன், எண்ணெய் கொப்பளிப்பது சிறப்பு. அவசியமானால் மூன்று வேளையும் காலிவயிறாக இருக்கும்போது செய்யலாம். இதை நான் ஒரு மாதமாக தொடர்ந்து கடைப்பிடித்து உடல்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைத்ததால்தான் எழுதுகிறேன்.செய்து பார்த்து பலன் அடைந்தால் அதை பின்னூட்டம் இடுங்கள்.

நன்றி:வியத்தகு எண்ணெய் மருத்துவம். தமிழில்:கோ.கிருஸ்ணமூர்த்தி செல்வி பதிப்பகம்

நன்றி: எண்ணை கொப்பளித்தல், தாமோதரன். மனவளக்கலை பேராசிரியர், அன்புநெறி வெளியீடு திண்டுக்கல்

டிப்ஸ் உதவி: கவனகர் இராம.கனக சுப்புரத்தினம்

மெகா டி.வியில் காலை 7.30 முதல் 7.40 வரை பேசுவதை கண்டு பயன் பெறுங்கள்.