கடந்த காலத்தில் நமது வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வருந்துவது மனத்திலிருந்து எடுத்தெறிய வேண்டிய தொல்லைகளில் முதன்மையானது.
நம் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒருவகையில் நம் மனதிற்கோ, உடலுக்கோ துன்பம் தரும் நிகழ்வுகள் நடந்திருக்கும்.. நம்மை காத்து வளர்த்த தாய்,தந்தை, நெருங்கிய உறவினர் மறைந்திருக்கலாம்.
தொழில் சூழ்நிலைகளினால், பல்வேறு காரணங்களினால் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். மிகவும் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்,
பிறர் நம்மை புரிந்து கொள்ளாமல் அவமதித்திருக்கலாம்,
இந்த விசயங்கள் எல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாக, ஒரு அனுபவமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அளவில் ஆராய்வதோடு, உணர்ந்து கொள்வதோடு, யோசித்து முடிவெடுப்பதோடு நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
மாறாக நினைத்து நினைத்து வருந்துவது, கவலைப்படுவது என்பது நமது மனம் நிகழ்காலத்தில் இயங்குவதை தடுத்து இறந்தகாலத்தில் சஞ்சரிக்கும் நிலையையே ஏற்படுத்தும்.
விளைவு இனிமேல் நடக்க வேண்டிய செயலில் நம் கவனம் சிதறும். நமது செயல்வேகம் குறையும். உறவுகளில் சிக்கல்கள் நம்மால் வரலாம். பலன் இதிலும் இன்னும் நட்டம், இழப்பு, இந்த நிலை நமக்கு தேவையா? என சிந்திப்போம்.
மீண்டும் மீண்டும் அதை நினைத்து வருந்துவதால் நேரம் வீணாவதோடு மனம் இன்னும் பல்வீனமடைகிறது. அது அதிகமாகிறபோது அது உடல் நோயாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.
ஏனெனில் நடந்து முடிந்த ஒரு செயலை யாராலும் மாற்ற முடியாது. என்ன வருத்தப்பட்டாலும் நடந்தது நடந்ததுதான். போனது போனதுதான். அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய அடுத்த கட்டத்திற்கு நம்மால் முன்னேற முடியாது
இதற்கு மனதை வேறு பல நல்ல வழிகளில் திருப்பலாம். எந்த வழி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..
அருள்கூர்ந்து, நடந்து முடிந்த துன்ப அனுபவங்களை மனதிலிருந்து அகற்றுங்கள். இதுவே பலவழிகளிலும் நாம் முன்னேற வழி.
வாழ்த்துகள்