"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label வினை விளைவு. Show all posts
Showing posts with label வினை விளைவு. Show all posts

Monday, May 30, 2016

கிரிவலமும் நாய்க்குட்டியும்

சித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது.  சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு,  நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள்.  குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அழகு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..

அந்த இடத்தில்  ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும்.  காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த  தெரு நாய்க்குட்டி.

இப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம்  மகள்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது..  அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா? அந்த ஃபிரீக்வன்சிதான் அதை  இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..


இப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில்  பிஸ்கட் பாக்கெட் வாங்கி,  அதற்கு கையில் வைத்துக்கொண்டே,  இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில்  அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின..  மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.

பிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.

வீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.

FRACTION DEMANDS, TOTALITY SUPPLIES என்பது இயற்கை நியதி..
தேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி

Sunday, March 24, 2013

விபத்து - விதியின் சதியா

காத்துக்கொண்டிருக்கையில் கண்முன்னே இன்னொரு விபத்து...நான் இருந்த இடமோ நகரத்தின் நடுவில் பழமையின் மிச்சமீதி அடையாளங்களை வைத்து இருக்கும் கிராமம். நகரத்தின் முக்கிய சாலையில் இருந்து பிரிந்து முக்கால் கிலோமீட்டர் வந்து அதன் பின்னர் 20 அடிச் சாலையில் சற்று உள்ளே செல்ல வேண்டும்.

 நகராட்சி பகுதி ஆனதினால் அந்த சாலை காங்கிரீட் சாலையாக, மாற்றம் பெற்றிருந்து. அந்த சாலை முடிவடைந்த இடம் ஊரின் மையப்பகுதி. நான்கு வீதிகள்  சந்திக்கும் இடமாக அமைந்திருந்தது. அந்த இடம் இரண்டு மூன்று லாரிகள் சாதரணமாக நிற்கும் அளவிற்கு இடம் அகலமாகவே இருந்தது.


ஆனாலும் கூட அப்படி இடம் இருப்பது  தெரியாத அளவில் நெருக்கமாக வீடுகள். அந்த இடத்தில் நுழைந்த பின்தான் அதன் விஸ்தீரணம் தெரியும். .. சின்ன சதுரமாக வலதுபுறம் தெரிவது மளிகைக்கடை. அங்கே வயதான பாட்டியுடன் மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று 10 ரூ மதிப்பிள்ள சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு பாட்டியின் கையைப் பிடித்து படி இறங்கியது. படி இறங்கியதுதான் தாமதம் தனது வீட்டுக்கு செல்லும் ஆர்வத்துடன்  பாட்டியின் கையை உதறிவிட்டு,  மேற்குப்புறத்திலிருந்து தென் கிழக்கு வீதிக்காக உற்சாகத்துடன் ஓடத் துவங்கியது.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தென் மேற்குசாலைக்காக சின்ன யானையான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று அதேசமயம் சாதரண வேகத்துடன் வந்தது.
அந்த வாகனம் உள்ளே நுழையவும் ஓட்டுநரின் பார்வையில் காலி மைதானம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்து இருக்கும். சட்டென வலதுபுறத்தில் குழந்தை வர ஆரம்பித்ததை கவனிக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தையின் ஓட்டத்தை விட சற்று அதிகமான வேகம் 20 கிமீ வேகம்தான் வேன் வந்திருக்கும்.

வேனும் குழந்தையும் முக்கோணப்புள்ளியில் சந்தித்துக்கொள்ள குழந்தை வேனின் சைடில் மோதி  வேனுக்குக் கீழ் உள்புறமாக முன் சக்கரத்துக்கு முன்னதாகச் சென்று விழுந்தது. வேன் டிரைவர் ஏதோ மோதிவிட்டது என்று உணர்ந்து பிரேக் அடித்த அதே தருணம் வண்டி நகர்ந்து குழந்தை மீது ஏறி நின்றது.

டயருக்கு முன்னதாக குழந்தை விழுந்தவுடன் அதற்குப்பின் நடப்பதை முன்னதாகவே மனம் யூகித்துக்கொள்ள,  நடப்பதை காணும் சக்தி இல்லாததால் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன. இது பயமோ, கிறுகிறுப்போ இல்லை. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மனம் தன்னை தற்காத்துக்கொள்ள இயங்கியதாகத் தோன்றியது.

வலுக்கட்டாயமாக கண்விழித்துப் பார்த்து  எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும் என்று தெரியாத நிலையில் வேனில் அருகில் ஓடினேன். எல்லாம் முடிந்தது. விஸ்வரூபம் படத்தில் வர்ற மாதிரி இரத்தம் கடகடவென தரையில் விரவி பாய்ந்தது. எந்த வித அசைவும் இன்றி குழந்தை கீழே சிக்கிக்கிடந்த கோணம், அதன் முடிவை, மரணத்தை  தெளிவாகச் சொல்லிவிட்டது. டிரைவர்  நடந்தை புரிந்து கொள்ள முடியாமல் நிற்க.. சத்தம் கேட்டு அருகில் வந்த சிலருடன் சேர்ந்து வேனின் முன் பக்கத்தை தூக்கினோம்.

யாரோ குழந்தையை எடுத்துக்கொண்டு ஓட..மெளனமாக விலகினேன். அடுத்த 20 நிமிடத்தில் சிகிச்சைக்கு வாய்ப்பில்லை.என மரணம் உறுதி செய்யப்பட மனதில் பல கேள்விகள் எழ, அந்த விபத்தை நேரில் பார்த்ததன் தாக்கம், அதிர்வு சற்று மனதைப் பாதிக்க அந்த இடத்திலிருந்து வெளியேறினேன். இயல்புக்கு வர சில மணி நேரங்கள் ஆனது...

Friday, February 22, 2013

விதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன?

விதி வலியதா, மதி வலியதா என்றால் நிச்சயம் விதிதான் வலிது அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இங்கே விதி என்ற வார்த்தை தலைவிதியைக் குறிப்பது அல்ல. அதே சமயம் அதையும் உள்ளடக்கியதுதான். அப்ப முயற்சி என்பது என்ன? அது எப்படி வெற்றி பெறும் என்ற கேள்வி எழுகிறது?

மழைபெய்வதும் வெள்ளம் வருவதும் விதி.. இதை அணை கட்டி தேக்கி நாம் பயன்படுத்துகிறோமே. அது மதி..  மழை தொடர்ந்து பெய்வது விதி....குடையோ மழைக்கோட்டோ போட்டுக்கிட்டு வேலையப் பார்க்கிறது மதி. விதியை அனுசரித்து செயல் செய்து பலனடைவதுதான் மதி :) எதிராக அல்ல..

சரி.. ரொம்ப சூதானமா இருந்தும் மழை நின்னதுக்கு அப்புறம் பார்த்துப் பார்த்துப் போயும் கரண்டுஷாக் அடித்தோ, சாக்கடையில் தவறி விழுந்தோ விபத்தோ சாவோ நடப்பது மதியை மீறிய விதிதான்..இப்படியும் சொல்லலாம். விதியை வெல்ல முடியா மதி :)

ஆக மனதில் இருத்தி வைத்துக்கொள்ளுங்கள்.  மதி என்பது இயற்கைவிதியை அனுசரித்து நம்மால் செய்யப்படும் முயற்சிகள் .. அது வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பல்வேறு காரணிகளால் நடக்கிறது... இருப்பினும் இந்த முயற்சிகள் விதியின் தீவிரத்தை அதிகப்படுத்தவோ, குறைவு படுத்தவோ செய்யும்.

நேர் மாறாக எந்தவித பெரிதான முயற்சிகள் இல்லாத போதும் வெற்றி தேடி வருவதும் அதே பல்வேறு காரணிகளால்தான்.. பல்வேறு காராணிகள் என்று வரும்போதே எதைச் சொல்வது எதை விடுவது என்ற சிக்கலும் கூடவே எழுகின்றது.

இந்தப் பீடிகை எதற்கு....சில புரிதல்கள் நமக்குள் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்,:)

மனித மனத்தைப் பொறுத்தவரை, அல்லது ஆன்மீகம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சாத்தியம் என்பதில் தெளிவாகிக் கொள்ளுங்கள்.

ஒன்று மனம் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளை மட்டுமே ஒத்துக்கொள்ளும். அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது நெருடல் இல்லாமல், இருந்தால் மட்டுமே திருப்தி அடையும்.

நான் சொல்லக்கூடியவற்றை இந்த மாதிரி உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அது உண்மையா, பொய்யா, சாத்தியமா, சாத்தியமில்லாததா என்பதெல்லாம் தேவையில்லை என்பதுவும் உண்மை..:)

 மனம் என்கிற கருவி சமுதாயத்தில் நாம் தொடர்பு கொள்ளும்போது, நாம் பிறந்தபோது இருந்த மனம் போல் இருப்பதில்லை. நம் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப நிறைய சேகரங்களுடன், முன்முடிவுகளுடன் வளர்ந்து இயங்க ஆரம்பிக்கிறது. சேகரங்கள், முன்முடிவுகள் ஏதுமின்றி உங்களால் மனதை விரும்பும்போது இயக்கமுடிந்தால் முதல்நிலை மனதிற்கு நேர் எதிரான மனமாக இந்த மனம் இருக்கும். இந்த இரண்டு விதமான மனநிலைதான் இவ்வுலகில் சாத்தியம்.  ஆனால் இந்த இரண்டாவதாகச் சொல்லப்பட்ட மனநிலை சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே.  இம்மனநிலை கொண்டவரை யோகிகள், ஞானிகள் என்று சந்தேகமின்றி சொல்லலாம்.  இதற்கு சாதி, மதம், இனம், நாடு தடையில்லை. வழிமுறைகளும் முக்கியமல்ல.. இந்த விளைவைத் தருகிற எந்தச் செயல்முறையும் மிகச் சரியானதே....

கடந்த சில நாட்களுக்கு முன் தூரத்து உறவினர் ஒருவர் விபத்தொன்றில் மரணமடைந்துவிட்டார். இத்தனைக்கும் அவருக்குச் சொந்தமான வாடகைகாரை ஓட்டுவதுதான் தொழிலே.. அவ்வப்போது தண்ணியடிப்பதும் உண்டு. சுமார் 25 வருட ஓட்டுநர் அனுபவம் இருந்தும் அவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிரே வேனில் மோதி விபத்து...., மரணம் நிகழ்ந்துவிட்டது:(.

அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.. இவரது மரணம் இவரது அலட்சியத்தால், எங்கோ நேர்ந்த சிறு தவறால் விபத்து எனில் மதியின் தோல்வியே... ஆனால் அந்த மதியை அந்த நேரத்தில் துவளச் செய்வது விதியின் வேலைதான் :(

சரி நாம் இதை நேரில் பார்க்கவில்லை எனினும் அவர் மிகச் சரியாக வாகனத்தை செலுத்தி இருந்தாலும் எதிரே வந்த வேன் டிரைவரின் அலட்சியத்தால், தவறால் விபத்து ஏற்பட்டு இவர் மரணித்து இருந்தால் அது விதி..மதியை மீறிய விதி...இது ஏன்?


இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது. ஏதாவது ஒரு லாஜிக் வேண்டுமே.. தர்க்க ரீதியான காரணம் ஏதும் இருக்கிறதோ இல்லையோ நம் மனதிற்கு தேவையாக இருக்கிறது. நம்மை, நம் வாழ்வை ஒழுங்குபடுத்த இந்த காரணங்கள் உதவுமா?

இந்த துக்கநிகழ்வில் கலந்து கொண்டு இருக்கையில் கண்முன்னே நடந்த இன்னோர் விபத்து இன்னும் பல கேள்விகளை எழுப்பியது......






Saturday, November 21, 2009

பாவ புண்ணியங்களும் அதன் விளைவுகளும்

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயன்களை அனுபவிக்கின்றனர்-இது ஏன்?


செயலுக்குத் தக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது.வராது.

செயலுக்கும் விளைவுக்கும் இடையே உள்ள காலநீளம் பல காரணங்களினால் வேறுபடும். மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயல்களுக்கும் விளைவுகளை இணைத்துப் பார்ப்பதில் பொருத்தமில்லாமல் போகிறது.

ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம்,
மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம்.
இன்னொரு செயல் அதைச் செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து மூன்று அல்லது நான்கு தலைமுறைக்குப் பின்கூட விளைவு வரலாம்.

கணித்து இணைத்துப் பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கைச் சட்டத்தில் என்றுமே தவறு இருக்க முடியாது.

இதனாலேயே நாம் செய்யும் செயல்கள் முடிந்தவரை பிறரின் உடல், உயிர்,மனம் இவற்றிற்கு துன்பம் தருமா என்பதை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். அதே சமயம் நமது உடல்,ம்னம், உயிருக்கு இனிமை தருவதாகவும் அமைய வேண்டும்.

நன்றி - அன்பொளி 1983ம் வருடம் -  வேதாத்திரி மகரிஷி

வருங்கால சந்ததிக்கு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சேர்த்து வைக்கும் சொத்து வினைப்பதிவுகளே. ஆகவே நம் வினைகளை தேர்ந்து செய்வோம்.