நாய், பூனை என செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம், ரொம்ப உயர்ந்தரகம் என்கிற அளவில் நினைத்து விடாதீர்கள்,
சாதரண கிராமத்தில் கிடைக்கக்கூடிய பழகிய நாய், பூனை அவற்றின் குட்டிகளை பார்க்க பார்க்க, வளர்த்த வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு செயலில் இறங்கிவிடுவேன்
இப்போது அல்ல, சின்ன வயதில், 12 அல்லது 13 வயது இருக்கும்,
நாய்க்குட்டி வளர்த்தும்போது அதைப் பராமரிப்பது தனிசுகம்,அது உணவுக்காக நம்மை எதிர்பார்ப்பதும் வாலை ஆட்டிக்கொண்டு நம்மோடு உறவாடுவதால் ஏற்படும் மகிழ்ச்சியும் அலாதியானது. அது ஒரு தனி சுகம்.
எனக்கு கிடைக்கிற உணவு, பால் ஆகியவற்றை அதனோடு பகிர்ந்து கொள்வேன், இதற்கிடையில் கிணற்றில் நீந்தப்போகும்போது நாய்குட்டியை உடன் கூட்டிச்சென்று, அதைத் தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு, அப்புறம்தான் நான் குதிப்பேன்.
நாம் நீச்சல் பழகும்போது, கத்தாளைமுட்டி, என்கிற கத்தாளையின் காய்ந்த தண்டுப்பகுதி, சுரைப்பொரடை என்கிற காய்ந்த சுரைக்காய் ஆகியனவற்றை முதுகில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகியது உண்டு,
நாய்க்குட்டியோ எந்த உதவியும் இல்லாமலே இயற்கையாகவே நீந்தும். அது மட்டுமில்லாமல் இரவு திண்ணையில் நான் தூங்கும்போது , அது அருகிலேயே வாசற்படியில் தூங்கும், அதிகாலையில் பார்த்தால் எனது போர்வைக்குள் படுத்துக்கொண்டிருக்கும்,
அதற்கு ஆரம்பத்தில் பெயர் வைத்ததுதான் வேடிக்கை, எந்தப்பெயரும் தோன்றாமல், ஏனோ எனக்கு பிடித்தது எனத் தோன்றிய மணி என்கிற பெயரை வைத்தேன்
என் தந்தை சற்று கண்டிப்பானவர், எனவே அவர் பணிக்கு சென்ற பின்னர்தான் இந்த நாய்க்குட்டியுடன் கொஞ்சல் எல்லாம்
.
அவர் இருந்தால் அமைதியாக இருப்பேன், நாயும்தான்
மணி,மணி,மணி... என்று அழைத்தால் போதும், எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும், அப்படி ஒருநாள் அழைத்து உணவிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள் பின்னால் வந்து நின்ற என் தந்தையார் ’திமிரப்பாரு..’ என்றபடியே என் முதுகில் ஒரு சாத்து சாத்தினார்,
காரணம் புரியாமல் விழித்தேன்,
அப்புறம்தான் தெரிந்தது. அவரது வேலை செய்யும் இடத்தில் அவரது சுருக்கமான பெயர் மணி என்பது :))
அன்றிலிருந்து நாயின் பெயர் ’ஏய்’ தான்,
அப்போது ஒரு நாய்க்கு பெயர் வைப்பதில் இத்தனை விசயங்கள் அடங்கி உள்ளதா !!!
இந்த சுதந்திரம்கூட நமக்கு வாய்க்கவில்லையே என அந்த வயதில் வருத்தப்பட்டது உண்டு
இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன், காரணம் சிவா என்கிற என்பெயர் குறித்துதான். அவ்வப்போது ஏதோ தகுந்த காரணத்தோடுதான் பெயர் அமைந்திருக்கிறது என நினைத்து கொள்வேன்,
என் நண்பரால் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு அன்றாடம் அழைத்து மகிழும் வகையில் அமைந்தது கண்டு உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.
நண்பர் ஓம்கார் தினமும் என்னை கவனித்துக்கொண்டும், அழைத்து மகிழ்வதும் நான் பெற்றபேறுதான் :) ஏனோ இன்னும் நெருக்கமாக உணர்கிறேன்.
மேலதிக விவரங்களுக்கு
இதை சிவனின் திருவிளையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்கிறேன்.
கண்கள் பனிக்க இதயம் கனக்க
சிவா