"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 2, 2009

ஹைய்யா... நானும் வாத்தியாராயிட்டேன்....!!

அன்பு நண்பர்களே

அன்பின் சீனா அவர்களின் ஆதரவினால் வலைச்சரம் வலைப்பதிவிற்கு இந்த வார பொறுப்பு ஆசிரியராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.

வாரம் ஒரு பதிவு என்பது போய், இந்த வாரம் முழுவதும் உத்தரவாதமாக :)
தினம் ஒரு இடுகை பதிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்

வழக்கமான ஆதரவை வலைச்சரத்தில் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Friday, October 23, 2009

விரல் நகம் வெட்டிய போது..

இன்று மாலை சின்ன மகளுக்கு விரல் நகங்களை வெட்டி சீர்திருத்தும் பணி ., தங்களின் மேலே ஏறி ஆட்டம் போடும்போது கீறி விடுகிறாள் என பெரிய மகளும் வீட்டுக்காரி(மனைவி)யும் என்னிடம் புகார் தெரிவிக்க, சரி என அந்த வேலையில் இறங்கிவிட்டேன்.

ஒருவழியாக ஆட்டம் போட்ட சின்னவளை சமாதானப்படுத்தி கைநகங்களை வெட்டி ஒழுங்குபடுத்திவிட்டேன், கால் நகங்களை வெட்ட ஆரம்பித்தேன், வீட்டுக்காரி எனக்குப் பின்னால் நின்று நான் நெகம் வெட்டும் அளகை(*&$%#@) பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.

சின்னவளின் கால் விரல் அமைப்பு என் காலைப்போலவே இருக்கும், எந்த மாற்றமும் இருக்காது, அளவு மட்டும்தான் சிறியதாக இருக்கும்.

”தேனுங்கோ.. யாரவது வந்து இவளை உங்க மக இல்லைன்னா இந்த ஜீனு டெசுடு, இதென்ன....டிஎனேஎ (DNA) டெசுடு எதுவும் எடுக்க வேண்டாம், செலவே பன்ன வாண்டாம்..காலு பெருவிரல காமிச்சா போதும், ஒத்துக்கிட்டு ஓடியே போயிருவாங்கோ.. என்றாள்

மனைவி பொது அறிவை வெளிப்படுத்திய திறன் கண்டு பிரமித்து நின்றேன்

Thursday, October 22, 2009

காதலிப்பதே என் தொழில்

திருநல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் நிகழ்ந்த பதின்கவனக நிகழ்ச்சியின்போது, வெண்பாவுக்கு ஈற்றடி தந்த பேராசிரியர் பா.வளவன் அரசு அவர்கள் நகைச்சுவையாகவும் சிக்கலாகவும் இருக்குமாறு ஓர் ஈற்றடியைக் கொடுத்தார்.

”காதலிப்பதே என் தொழில்’ என்று வெண்பா முடிய வேண்டும். ஆனால் பாடல் அகத்துறைப்பாடலாக அதாவது ஆண்-பெண் காதல் பற்றிப் பாடும் பாடலாக இருக்கக் கூடாது” என்று நிபந்தனையுடன் பாடலைக் கேட்டார்.

அதற்கு கவனகர் திரு.இராமையாபிள்ளை சற்றும் தடுமாறாமல் புன்னகையோடு பாடிய வெண்பா இதுதான்

‘சங்கத் தமிழைத் தடையின்றிக் கற்றறிந்தே
மங்காப் புகழுடனே வாழ்ந்திங்கே-இங்கிதமாய்
ஓதல் உணர்தல் உடைய புலவர்களைக்
காதலிப்ப தேஎன் தொழில்

பாராட்டுகள் குவிந்தன. தந்தையிடம் இராம.கனகசுப்புரத்தினம் வியப்புடன் கேட்கிறார். “எப்படிச் சிக்கலாகக் கேள்வி கேட்டாலும் உடனே உரிய குறளை எடுத்து நீட்டுகிறீர்களே, எப்படி அய்யா முடிகிறது?”

”அப்பா, திருக்குறளை வெறுமனே மனப்பாடம் செய்து வைத்திருக்கவில்லை. என் உயிருடன் உணர்வுடன் கலந்து இருக்கிறது. அது மட்டுமல்ல, திருக்குறளுக்குள் இன்னும் திருவள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மீது அன்பு வைத்து, நம் உயிருடனும் உணர்வுடனும் அவரோடு கலந்து விட்டால் அவையோர் எந்த கேள்வி கேட்டாலும், அவரே பதிலைக் கூறிவிடுவார். நாம் வெறும் கருவியாய் இருந்து வேடிக்கை பார்த்தால் போதும். என்றார்.

Monday, October 12, 2009

ருசியான சிக்கன் வேண்டுமா ?

நோயால் செத்த கோழிகளை விற்கும் கும்பல் : உடுமலை அருகே சிக்கியது

உடுமலை: பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் இறந்த கோழிகளை சேகரித்து அவற்றை ஓட்டல்களுக்கு விற்கும் கும்பலைச் சேர்ந்தவரை உடுமலை பகுதியில் விவசாயிகள் வளைத்து பிடித்தனர்

.பண்ணைகளில் நோய்த் தாக்குதல் மற்றும் இதர காரணங்களால் இறக்கும் கோழிகளை ஆள் நடமாட் டம் இல்லாத பகுதிகளில் வீசுகின்றனர். அவற்றை சேகரித்து, ஓட் டல்களில் குறைந்த விலைக்கு விற்பதை ஒரு கும்பல் தொழிலாக செய்கிறது.

பெதப்பம்பட்டி அருகிலுள்ள மாலக்கோவில் பிரிவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நேற்று அதிகாலை மர்மநபர், இறந்த கோழிகளை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விவசாயிகள் சென்று விசாரித்துள்ளனர். இறந்து பல நாட்களான 200க்கு மேற்பட்ட கோழிகள் சேகரித்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபரை விவசாயிகள் நன்கு "கவனித்தனர்'. இதில், காயமடைந்த நபர், தனது ஊர் பல்லடம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் என்றும், பெயர் பாண்டியன் என்றும் தெரிவித்துள்ளார்.



அவர் விவசாயிகளிடம் கூறியதாவது: உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு இறந்த கோழிகளை சேகரித்து குறைந்த விலைக்கு விற்கிறோம். சேகரிக்கும் இறந்த கோழிகளை தூய்மைப்படுத்தி "பேக்' செய்து ஓட்டல்களுக்கு விற்பனை செய்வோம்.வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறந்த கோழி இறைச்சி கிலோ 20 ரூபாய்க்கு ஓட்டல்களுக்கு "டோர் டெலிவரி' செய்ததால் எங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.இவ்வாறு, பாண்டியன் தெரிவித்துள்ளார். பாண்டியன் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குடிமங்கலம் போலீசுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.


பலத்த டிமாண்ட்: பாண்டியன் சிக்கியவுடன் விவசாயிகள் அவரிடமிருந்த மொபைல்போனை கைப்பற்றினர். அரை மணி நேரத்திற்குள் திருப்பூர், பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளை சேர்ந்த ஓட்டல்களிலிருந்து, "சிக்கன் என்ன ஆயிற்று?' என தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகளையும், இறந்த கோழி இறைச்சிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட ஓட்டல் பெயர்களையும் விவசாயிகள் குறித்துக் கொண்டனர்.

நன்றி; தினமலர் 12.10.2009

Saturday, October 10, 2009

உருவ வழிபாடு ஏன்?

உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.

இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies

இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்


முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.

அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்


ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

---வேதாத்திரி மகரிஷி,

தொடரும்



டிஸ்கி; வேதாத்திரி மகரிஷி அவர்களின் இந்த கட்டுரை எளிமையாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அமைந்துள்ளதாக நான் எண்ணுவதால் இன்னும் சில பகுதிகள் தொடரும்.

Tuesday, October 6, 2009

பணமும் பெரியாரும்... பாரதியும்....

பணம் நமது வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிவிட்டது.,

திறமைகள் இருந்தும், தகுந்த தொழிலோ, வேலையோ செய்தும் போதுமான பணம் வருவதில்லை. ஏன்?

பணம் வரும் வழிதான் என்ன? இதில் நம் பங்கு என்ன?

பணத்தின் மீது பற்றும் அக்கறையும் வைத்துக் கேட்டால்தான் பணம் வரும்.





தந்தை பெரியார் ஒரு மாபெரும் அறிஞர். அவர் இந்த பணவிசயத்தில் மிக சரியாகவும், தெளிவாகவும் சிந்தித்தார். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் அவர் முதலில் கேட்கும் கேள்வி. “ புத்தகம் எத்தனை ரூபாய்க்கு விற்றது?” என்பதுதான்.

மக்கள் அவரிடம் நினைவுக்குறிப்பில் கையொப்பம் கேட்டால்கூட. ‘இருபத்தி ஐந்துகாசு’ இன்றைய கணக்குப்படி இருபத்தி ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம், வாங்கிக்கொண்டுதான் கையொப்பம் இடுவார்.

பணத்தின்மீதும் ஒருகண் வைத்திருந்தார். இன்று அவர் தேடி சேர்த்து வைத்த சொத்து நீங்கள் அறிந்ததுதான்.

நேர்வழியில் பணம் சம்பாதிக்க தொழில் செய்யும்போது பணத்தின் மீதே கண்ணாக இருக்க வேண்டும்,


பாரதியார் பணம் சேர்ப்பது குறித்து கணப்பொழுதேனும் சிந்தித்திருக்கவில்லை. அவரது துணைவியார் பக்கத்துவீட்டில் கடனாக வாங்கி வைத்திருந்த அரிசியையே, “காக்கை குருவி எங்கள் சாதி..” என்று பாடியபடி முற்றத்தில் சிதறவிட்டுக் குருவிகள் தின்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர். ஆனால் எண்ணத்தை முறைப்படி வானத்தில் அனுப்பாமல் வறுமையில் உழன்றார். இதில் தவறேதும் இல்லை என்றாலும் பணம் சம்பாதிக்கும் நுட்பத்தை அவர் கைக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

பணத்தை உணர்ந்து மதிப்போம், வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.