"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, November 18, 2009

பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

சென்னை : "விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின்
விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது;

விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என,
முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர்


நிதானம், பொறுமை என்ற வார்த்தைகளின் பொருள் தெரியாதவராக இருந்திருக்கிறார் பிரபாகரன்.

காலம், விஞ்ஞானமும் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், எவ்வளவு அதிமுக்கிய முல்லைப்பெரியார், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம், ஈழத்தமிழர் மீதான தாக்குதலின்போதும் பொறுமையாகவும், அவசரமின்றியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கலஞைர் காத்திருக்கவில்லையா?

தமிழ் ஈழம் என்பது தமிழக மத்திய மந்திரி பதவியைவிட உயர்ந்ததா, நேரில்  சென்று தங்கி வாங்கிவர..?

கலைஞரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று பிரபாகரன் உயிரோடும், சுகமாக இருந்திருக்கலாம், பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

Tuesday, November 17, 2009

பிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)

கொஞ்ச நாளா மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.. சரி இன்னும் வலுப்பெறட்டும் என விட்டுவிட்டேன்.


மனதில் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்


கலவிக்கு சற்றுமுன்...
கலவியின்போது...
கலவிக்குப் பின்....

அதன் பின் அடுத்த நாள்...

உங்கள் மனநிலை என்ன?

உங்கள் துணையோடு(ஆண், பெண் இருபாலருக்கும் மன உறவு எப்படி இருந்தது.?

பின்னூட்ட நிபந்தனைகள்

1)இதில் அங்குபடித்தது, இங்கு கேட்டது இது எல்லாம்  எழுத வேண்டாம்

2)முழுக்க முழுக்க உங்களது சொந்த மனம் குறித்தான அனுபவங்களை மட்டும் எழுதுங்கள் (உடல் அனுபவத்தை நான் கேட்கவே இல்லைங்க சாமிகளா)

3)திருமணமானவ்ர்கள், திருமணம் ஆகாதவர்கள், குறுக்குத்தொடர்பு உள்ளவர்கள் எல்லோருமே பின்னூட்டமிடலாம்.

4)கூச்சமா இருக்கா.

கவலையே படவேண்டாம், முழுக்க முழுக்க அனானி என்ற பெயரிலேயே பின்னூட்டமிடுங்கள், அந்த வசதி இந்த இடுகைக்கு  மட்டும் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

5)நான் இடையில் கருத்து தெரிவிக்கமாட்டேன்.

6)ஆபாசம் தொனிக்காமல் தகவல் தெரிவிக்கும் இயல்பான தொனியில் பின்னூட்டங்கள் இருத்தல் வேண்டும்,

7)வக்கிரமான பின்னூட்டங்கள் வந்தால் நீக்கப்படும்.

இது கலவி குறித்த விழிப்புணர்வுக்கான இடுகை

ஓட்டுப்போடுங்கள், கூடவே உங்கள் நண்பர்களையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள்


கலவி  என்றால் என்ன என தெரியாதவர்கள் வெளியேறவும் , நன்றி

காத்திருக்கிறேன்......உங்களுக்காக

***************************************************

டிஸ்கி: இந்த இடுகையின் நோக்கம் கலவி நம் மனதில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.? கலவியில் மனம் நிறைவு பெறுவது எப்படி?,  இதில் துணை தவிர்த்து நம் பங்கு என்ன? இது சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற சிந்தனையைத் தூண்டுவதே
****************************************************

Saturday, November 14, 2009

வலையுலகில் தேவையான பண்பாடு

வலையுலகம் பல்வேறு துறையைச் சார்ந்த அன்பர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் இடமாக உள்ளது

எந்த வித செலவும் இல்லாமல் எது குறித்தும் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் இடமாகவும் இருக்கிறது.

ஆனால் சிலசமயம் நாம் வீதிகளில் நேருக்குநேர் சண்டை கட்டிக்கொள்வதைப்போல் இங்கும் சிலர் கருத்து மோதல்களில் கடுமையாக ஈடுபடுகின்றனர். இவர்களின் நோக்கம் பலரின் பார்வையில் பட்டு அதன்மூலம் பிரபலம் ஆவது என்றே தோன்றுகிறது.

நேரில் சந்தித்து அறியாத பல பதிவர்களும் மானசீகமாக நமக்கு நண்பர்களே, இங்கு நட்பையே முக்கியப்படுத்த வேண்டும்,

ஒருவரின் கருத்தை மறுத்து எதிர் கருத்து கூறும்போது, அவரது மனம் வருந்தாமல் அவரும் ஆர்வத்தோடு நம் கேள்விகளுக்கு பதில் கூறும் வண்ணம் ஆரோக்கியமான வகையில் வார்த்தைகளை பயன்படுத்தும்போது இருவருக்கும் மனமகிழ்ச்சிதான்.

மாறாக வலைத்தளத்திற்கு வந்து தரமற்ற, முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகள், என்னோடு மோதிப்பார் என்ற வசனங்களை வீசி நீங்களும் மன உளைச்சல் அடைந்து, நம் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏன் உண்டாக்க வேண்டும்.?

தமிழனின் பல்வேறு சிறப்புக்குணங்களில் இதுவும் ஒன்று:)

வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.


இது மனதின் ஆராவாரம், அடக்கமின்மை என்பதை உணருங்கள், எல்லோரும் நல்லவரே, மனதிடம் சிக்கி நட்பை இழ்க்காதீர்கள் என்பதே என் அன்பு வேண்டுகோள்!

நீங்கள் மிகுந்த உணர்ச்சிகரமானவராகவும் சமுதாய மாற்றத்தை விரும்புகிறவராக இருந்தால் நேரடியாக களத்தில் இறங்கி செயல்படுங்கள். பலராலும் கவனிக்கப் படுவீர்கள்.

இதோ கீழே கொடுத்த சுட்டிகளைப் பாருங்கள்.

எதிர்வினையாற்றிய நண்பர் சின்னஞ்சிறுகதைகள் பேசி அவர்களின் இடுகையில் ஏதேனும் தாக்குதல் இருக்கிறதா?

பண்போடு மறுத்திருக்கிறார். அவரை நான் பாரட்டுகிறேன். இப்பண்பு இப்பதிவுலகம் முழுமையும் பரவட்டும்


சிவத்தமிழோன் என்பவர் 'திருக்குறள் ஒரு சைவசமய நூலே' என்பதாக எழுதிய பதிவிற்கான எதிர்வினை



வாழ்த்துக்கள் நண்பர்களே   

Tuesday, November 10, 2009

மனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது?

மனிதன் அசைவம் சாப்பிடலாமா கூடாதா இது இன்னும் தீர்வு இல்லாத கேள்வி, இது தவறு என நான் நினைக்கிறேன்.

ஒரே ஒரு கருத்துதான் நான் சொல்ல விரும்புவது

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆறாவது அறிவு

அதென்ன ஆறாவது அறிவு?

தோல், கண், காது, மூக்கு, வாய் என்ற புலன்கள் மூலமான ஐந்து உணர்வு, அறிவு பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொது,

ஆறாவது அறிவு, என்பது சிந்தனை, மனம்

சிந்தனை மலர்ந்து அதன் விளைவு

1)பிற உயிர்களின் இன்பதுன்ப உணர்வுகளை உணரும் ஆற்றல், (எனக்கு வலிப்பதுபோல் அவனுக்கும் வலிக்கும்)

2)உடலின் கருவிகளுக்கு சூழ்நிலைக்கேற்ப உதவ உபகருவிகள் செய்து பயன்படுத்துதல், (காலுக்கு உதவியாக வாகனங்கள்,)

3)செயற்கையாக இயற்கையானவற்றை அருவி,ஏரி,தீவு போன்று உருவாக்கும் ஆற்றல்

4)குகைகளைப்போல் அல்லாது விருப்பப்படி வாழும்வகையில் வீடுகளை உருவாக்கி அதில் வாழும் ஆற்றல்

5)உணவுக்கு தேவையானவற்றை உணவுதானிய, தாவர வகைகளை இயற்கை நமக்கு வழங்குவதை விட பலமடங்கு விவசாயம் செய்து பெருக்கும்
ஆற்றல்.

இத்தனையும் நமக்குஇருக்கிறது ஆறாவது அறிவாக

புலி வீடும் கட்டாது, விவசாயம் பண்ணாது, புலி உயிரினம் தோன்றிய காலம்தொட்டு பிற உயிரினங்களை கொன்றுதான் சாப்பிடும்,
நமக்கு வலிப்பதுபோல் அதற்கும் வலிக்கும் என சிந்திக்க தெரியாது. அதனால் அது செய்வது சரியே

ஒரு நெல்லை பல நெல்லாக்கும் வித்தை தெரிந்த நாமும் புலி செய்வதையே செய்தால் மனிதன் அல்ல, ........@#$$$%^& .தெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும்

துருவப் பிரதேசத்தில், பாலைவனத்தில் இருப்பவன் என்ன செய்ய? என்றால் அவனுக்கு முடிந்தால் நீங்கள் உணவுப்பொருள்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
அல்லது அவன் சாப்பிட்டுவிட்டு போகிறான், உணவுப்பயிர்கள் விளையும் இடத்தில் இருக்கும் நீங்கள் ஊர்வன, பறப்பன இவற்றில் கப்பல், விமானம் மீதி
அனைத்தையும் ஏன் சாப்பிட வேண்டும்?

குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.

இந்தத் தகவலை முஸ்லீம் நண்பர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. மகான்களின் வாழ்க்கையைப் பின்பற்றினாலே போதும்.

அவர் விதிவிலக்காக சொன்னது நம் செளகரியத்தை முன்னிட்டு அத்தியாவசியமாகி விட்டது.

மனிதன் மனதிற்கும், நாக்குக்கும் அடிமை, இதுதான் உண்மைகாரணமே தவிர பிற உயிரை மதிக்க வேண்டும் என நினைத்தாலே நமது உணவுப் பழக்க வழக்கம் மாறிவிடும். மதங்களும், சாதியும் இந்த விசயத்தில் சப்பைக்கட்டுகளே :))

சந்திப்போம், சிந்திப்போம்

Monday, November 9, 2009

பிதற்றல்கள் - 1 (09/11/2009)

முதலில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த காரணம்...

மனதின் ஓட்டங்களை கூர்ந்து கவனிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் அது மாறுகிறது, நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்கிறது, பல்வேறு விசயங்களில் சமரசம் செய்து கொள்கிறது, நடிக்கிறது. கெளரவம் பார்க்கிறது, மானம், ரோசம், வெட்கம் பார்க்கிறது.

முக்கியமாக நான் எப்படி வாழவேண்டும் என நினைக்கிறேனோ அதற்கு முரணாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது, அறிவு சில சமயங்களில் விழித்து கொண்டு மனதை அடக்கினாலும் தன் வேலையைக் காண்பிக்கிறது,

என் மனதை ஒழுங்குபடுத்தவேண்டும், அதற்கு அடக்கினால் அடங்காது, அறிய நினைத்தால் அடங்கும். அப்படி அறிய வேண்டுமானால் மனதில் தோன்றுவதை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் நான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் தெரியும். என் மன அழுக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் பதிவு செய்யவே விரும்புகிறேன்.

இது ஒரு சோதனை முயற்சி, உங்களுக்கும் இது ’சோதனை’ தான் :))

மிக கண்டிப்பாக, நட்போடு பழகுவதில் இந்த தலைப்பில் ஏதேனும் கருத்துகள் வந்தால் இவரா இப்படி என்று நினைத்து விடாதீர்கள்.

பிரித்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், உள்ளொன்று புறமொன்று இருக்கக்கூடாது என நினைப்பதால் இதையும் குறிப்பிடுகிறேன்.

இன்று..


காலையில் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு வீட்டுக்காரி(மனைவி)யுடன் சென்றேன், அங்கு ஒரு பெரியவர் வயது எழுபதுக்கு மேல் இருக்கலாம், கையில் சிறு பாலீதீன் பையுடன் மெதுவாக கீழ் நோக்கி பார்த்துக் கொண்டே வந்தார், பையில் சில வெங்காயங்கள், வெண்டைக்காய், கத்திரிக்காய் முதலியன மொத்தமாகவே கால்கிலோ கூட தேறாது.

மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக இருக்கவே, சந்தையின் நடைபாதை இன்னும் மற்ற இடங்களிலும் கீழே சிதறிக் கிடக்கும் காய்கறிகளில் தேர்ந்தெடுத்து சிலவற்றைப் பொறுக்கி பையில் போட்டுக்கொண்டே வந்தார்,

மனம் ஓட ஆரம்பித்தது,

அடடே எதுக்காக பொறுக்குகிறார்?

ஒருவேளை தனது உணவுக்காக பொறுக்குகிறாரா? பணமில்லா வறுமை என்ன பாடுபட வைக்கிறது?

ஆகா.. பரவாயில்லை பிச்சை எடுக்காமல் சுகாதாரம் இல்லாவிட்டாலும் உழைப்பின் வழி  வாழ்கிறாரே!!

ஒருவேளை பொறுக்கி சின்ன கடையாப் பார்த்து விற்றுவிடுவாரோ? பார்த்தா அப்படி தெரியவில்லையே?

ஒருவேளை அப்படி கடைக்கு விற்றால் அதை தின்கிறவன் கதி?

இதுக்கு நாம எதாவது பண்ணலாமா?


வேணுமின்னா எண்ணத்தை உள்ள போட்டுவச்சுக்கோ., நீ முதல்ல ஒழுங்கா வீட்டு வேலையச் செய்யி, அப்புறம் பார்க்கலாம்!

Thursday, November 5, 2009

மருத்துவ முறைகள் மூன்று

ஒரு குடும்பத்தை மருவி வாழும் மகளுக்கு மருமகள் என்று பெயர், அதுபோல் நம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிர் ஆற்றலோடு மருவி, உந்தும் ஆற்றலுக்கு மருந்து என்று பெயர். மரு+உந்து வழியில் நோய் தீர்க்கும் கலைக்கு மருத்துவம் என்றே பெயர் வந்தது.




மூன்றுவகை மருத்துவம்

1)இரத்தத்தையும் சதைகளையும் இரசாயன முறையில் குறைபாட்டை நீக்கி, சீரமைக்கும் முறை ஒன்று. இம்முறையில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம்,யுனானி,உணவு மாற்றம், உடற்பயிற்சி இவைகள் அடங்கும்.

2)உயிர்துகள்களைப் பெருக்கி அதன்மூலம் ஜீவகாந்த ஆற்றலுக்கு திணிவு ஏற்படுத்தி, அதன் மூலம் நோயை போக்கும் முறை இரண்டாவது. இதில் இதில் இரசம்,கந்தகம்,பாஷாண வகைகளைக் கொண்டு செய்யப்படும். சித்த மருத்துவமும் இதுபோன்ற முறைகளும் இதில் அடங்கும்.

3)சீவகாந்தக்களத்தின் தன்மைகளை மாற்றும் காந்த அலைகளை ஊட்டி, அதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறை ஒன்று. ஓமியோபதி, உளப்பயிற்சி, பிரார்த்தனை இவையும் இவை ஒத்த பிற முறைகளும் இதில் அடங்கும்.

மேற்கண்ட மூன்று வகைகளுமே இன்றுவரை மனித இனத்தில் பழக்கத்தில் இருந்து வரும் முறைகள் ஆகும். அதே சமயம் ஒவ்வொரு மருத்துவத்திலும், மற்ற மருத்துவ வகைகளின் பயன் மறைமுகமாக ஓரளவிற்கேனும் செயல்படும்.

--வேதாத்திரி மகரிஷி