\\என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?
முன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது? \\
டிஸ்கி:என்னைச் சார்ந்த மரியாதைக்குரிய புரியாத பொன்னுசாமி அவர்களிடம் இந்த கேள்வியின் விபரம் தரப்பட்டு அதற்கான பதில் வாங்கி இங்கு இடுகையாக வெளியிடப்படுகிறது.:))
“முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை. பின் எப்படி விளைவு வந்தது ? சரிங்களா !!”
இதையே கொஞ்சம் மாற்றிப் பாருங்க..
முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,
எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா
விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.
போதுங்களா., தேவைன்னா இனி சற்று விளக்கமாப் பார்ப்போம்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள், பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.
ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை, அதேசமயம் மனிதனுக்காக வேறு எந்த உயிரினத்தையும் படைக்கவில்லை. :))
பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன்வந்தான்.
இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.
மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.
பிரபஞ்சம் உருவாகி விரிவடைந்து வரும் கோடிக்கணக்காக வருடங்களில் இப்புவியில் நிலம், நீர், காற்று, வெப்பம், விண் முதலான பஞ்சபூதங்கள் முதலியன ஒரு பொருத்தமான கூட்டாக தக்க சூழ்நிலையில் சேர்ந்தது.
அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.
சரி அந்த சாராம்சம் என்ன பறித்துண்ணுதல்
சுருக்கமாக.. ஈரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் பெரும்பான்மையாக, வேறு ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உணவாகக் கொண்டே வாழுகின்றன,
இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன. அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.
பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
பிற உயிரைத் துன்புறுத்தல், கொல்லுதல்,
பிற உயிரின் பொருளைத்திருடுதல் - இதுவே விலங்கின செயல்
உணவாகப் போகிற, உணவாக்கிக்கொள்கிற இரு உயிர்களின் போராட்டத்தில் ஒன்றால் மற்றொன்றுக்கு துன்பம் விளையும்போது அதை சமாளிக்க எழும் வேகம், கோபமாகவும், பயமாகவும், தனது உணவை மற்றவை பறிக்க வரும்போது அதை காப்பாற்றிக்கொள்ள முனைவது (அதிக)ஆசையாகவும், தன்னைத்துன்புறுத்திய உயிரினத்தை எதிர்க்கும் முயற்சி தோல்வியடையும்போது எழும் உணர்வு வஞ்சமாகவும் வளர்ந்து தொடர்ந்து நீடித்து நம்மிடம் வந்துள்ளது.
இதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..
இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.
இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.
தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம்.
அவ்வளவுதான் விசயம். இதை நண்பர் டவுட் தனபாலிடம் சேர்த்து விடுங்கள், இதில ஏதாவது டவுட் வந்தா அதையும் அய்யா கிட்ட சொல்லிடுங்க..
-----புரியாத பொன்னுசாமி.